மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 13 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் 5

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த 
நிஷ்டாம் மமாத்ர விதராத்ய யதீந்த்ரநாத |
ஸிஷ்டாக்ரகண்யஜநஸேவ்யபவத்பதாப்ஜே 
ஹ்ருஷ்டாSஸ்து நித்யமநுபூய மமாஸ்ய புத்தி: || (5)

நம்முடைய புத்தியை எப்படியும் ராமானுஜரிடம் கொண்டு செல்ல முடியும். அவரே அதற்குண்டான நன்மைகளைச் செய்துவிடுகிறார். பதத்ரயத்தில் சொல்லப்பட்ட அர்த்தத்தை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும். பதத்ரயம், ரஹஸ்யத்ரயம், அக்ஷர த்ரயம் என்று மூன்று மூன்றாகச் சொல்வர். ரஹஸ்யத்ரயம் என்றால் திருமந்திரம், துவயம், சரமஸ்லோகம். பதத்ரயம் என்றால் திருமந்திரத்தில் உள்ள ஓம் நம: நாராயணாய. அக்ஷரத்ரயம் என்று சொன்னால் ஓம் இல் இருக்கிற அ+உ+ம. அதில் சொல்லப்பட்ட மூன்று அர்த்தங்கள்: அநந்யார்ஹ ஶேஷத்வம், அநந்ய ஶரணத்வம், அநந்ய போக்யத்வங்கள். (எம்பெருமானொருவனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, எம்பெருமானையே போக்யமாக – அநுபவிக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.) இந்த மூன்றையும் இப்படியே தேவரீரிடத்து அடியேனுக்கு ஏற்படுத்தவேண்டும். 

“திருவெட்டெழுத்தும் கற்று நான் கண்ணபுரத்து அம்மானே உற்றதும் உன் அடியார்க்கு அடிமை” திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் பாடுகிறார். திருமங்கையாழ்வாரைப் பாடவைத்த திவ்யதேசம் திருக்கண்ணபுரம். சவரிப்பெருமாள். திருக்கண்ணபுரம் பெருமாள்தான் மந்திரத்தையும் அதன் அர்த்தத்தையும் உபதேசம் பண்ணினார். திருநறையூர் நம்பி ஸ்ரீனிவாசப் பெருமாள் மந்திரத்தை உபதேசம் பண்ணினார். 

திருக்கண்ணபுரம் சவரிப் பெருமாள் அதன் அர்தத்தை உபதேசம் பண்ணினார். உபதேசம் எல்லாம் முடிந்தது. சவரிப் பெருமாள் திருமங்கையாழ்வாரிடம், “உபதேசம் எல்லாம் கேட்டீரே. நீர் கொஞ்சம் சொல்லும். நீர் எப்படிச் சொல்கிறீர் என்று பார்க்க ஆவலாயுள்ளேன்” என்றார். இதை அந்த நாளில் பண்ணியிருக்கிறார்கள். இந்த நாளில் பண்ணினால் ஒருத்தரும் உபன்யாசம் கேட்க வரமாட்டார்கள். நீங்கள் எல்லோரும் இவ்வளவு நாழிகை உபன்யாசம் கேட்டீர்கள் அல்லவா? முடிந்தவுடன் உங்கள் ஒவொருவரையும் ஒரு ஐந்து நிமிடம் இதுவரை கேட்டவற்றில் சில சொல்லவும் என்றால் யாராவது முன் வருவீர்களா? கேட்கவேயில்லை என்று கிளம்பிப் போய்விடுவீர்கள். 


திருமங்கையாழ்வார் என்ன சாதாரண மனிதரா. நாலுகவிப் பெருமாள் என்றே விருது வாங்கியவர். (சித்ரகவி, மதுரகவி, ஆசுகவி, வித்தாரகவி) உடனே பகவானுக்குப் பதில் கூறினார். “உன் திருமந்திர உபதேசத்தில் இருந்து ஒன்றே ஒன்றுதான் தெரிந்துகொண்டேன். அடியேன் உனக்கு அடிமையில்லை. உன் அடியார்க்கு அடிமை என்று தெரிந்துகொண்டேன்” என்றார். பெருமாள் இவ்வளவு உபதேசம் செய்தபின் இவன் எனக்கடிமையில்லை என்று சொல்லிவிட்டானே என்று வருத்தப்பட்டிருக்க மாட்டாரா?

நஞ்சீயர் ஆசார்யர், நம்பிள்ளை சிஷ்யர். இப்படிப்போய் திருமங்கையாழ்வார் சொல்லிவிட்டாரே. பெருமாள் வருத்தப்பட்டிருக்கமாட்டாரா என்று ஆசார்யர் நஞ்சீயர் வருத்தப்பட்டார். அப்பொழுது அவரது சிஷ்யர் நம்பிள்ளை, “பெருமாள் வருத்தப் பட்டாரோ இல்லையோ தேவரீர் வருத்தப்படுவதுபோல் தெரிகிறது. இதற்கு ஒரு அர்த்தம் சொல்லலாம் என்றால் அடியேன் விண்ணப்பிக்கிறேன். இப்ப பெருமாள் முகம் எப்படியிருந்திருக்கும் தெரியுமா? அல்லிக் கமலக் கண்ணனாய் இருக்கும்.” என்று சொன்னார். பகவானுக்கு தன்னைப் பற்றிப் பேசினால் கமலக்கண்ணன், தன் பக்தனைப் பற்றிப் பேசினால் அல்லிக்கமலக் கண்ணன். எங்கிருந்து கண்டுபிடித்தீர் என்று ஆசார்யர் கேட்டார்.

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த 
அல்லிக் கமலக்கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்லபதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே.       திருவாய்மொழி 8-10-10.

நம்மாழ்வார் சொல்கிறார், “பகவானுக்குத் தன்னைப் பற்றிக் கேட்பதில் ஆசையில்லை. பக்தர்களைப் பற்றிக் கேட்டால் அவ்வளவு இன்பப்படுகிறார் என்றார். இந்த ரகசியம் தெரிந்துள்ள திருமங்கையாழ்வார் சட்டென்று உன் அடியார்க்கு அடிமை என்று சொல்லிவிட்டார். உற்றதும் உன் அடியார்க்கு அடிமை. ஆக எட்டெழுத்துக் கற்றுகொண்டதன் ஆழ்ந்த அர்த்தம் என்ன என்றால், நம: பதத்தில் சொல்லப்பட்ட உனக்கு அடிமை என்பதைவிட உன் அடியார்க்கு அடிமை என்பதே பகவானுக்கும் உகக்கும்.

மற்றுமோர் தெய்வம் உளதென்றிருப்பாரோடு
உற்றிலேன் உற்றது முன் அடியார்க்கடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின்திருவெட்டெழுத்தும்
கற்று நான் கண்ணபுரத்துறையம்மானே.       பெரிய திருமொழி

திருவரங்கத்தமுதனார் ராமானுச நூற்றந்தாதியில் (100)

போந்ததென்னெஞ்சன்னும் பொன்வண்டு* உனதடிப்போதில்ஒண்சீ
ராந்தெளிதேனுண்டு அமர்ந்திடவேண்டி* நின்பாலதுவே
ஈந்திடவேண்டும் இராமானுச! இதுவன்றி ஒன்றும் 
மாந்தகில்லது* இனி மற்றொன்று காட்டிமயக்கிடலே.

ராமானுசரின் திருவடிகளில் இருந்து தேன் பெருகுகிறதாம். அந்தத்தேனைக் குடிப்பதற்கு பொன் வண்டுகள் போல நம் மனது ஓடுகிறதாம். பகவானுடைய திருவடிகளில் தேன் ஊறுகின்றது என்று ஆளவந்தார் ஸ்தோத்திர ரத்னத்தில் பாடினார். இங்கு ஆசார்யன் திருவடிகளில் தேன் பெருகுகிறது இதை விட்டுவிட்டு மனது வேறு எங்காவது போகுமா? அப்படியே தேவரீர் அநுக்ரஹிக்க வேண்டும். திருமந்திர நிஷ்டை, (தேவரீரே பரதத்வம், தேவரீரே மோக்ஷோபாயம், தேவரீரே புருஷார்த்தம்) என்பது அடியேனுக்கு தேவரீர் விஷயத்தில் வரவேண்டும். அதற்கு அநுக்ரஹிக்கவேண்டும் என்று ஐந்தாவது ஸ்லோகத்தில் பார்த்துவிட்டோம்.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை