வியாழன், 23 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 12 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

கண் பெற்ற பயனன்றோ கார்த்திகை பிரம்மோத்சவம்


‘லஷ்மி நாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்’
கூரத்தாழ்வானின் அற்புதமான சுலோகம் இது. நாராயண ஸமாரம்பாம் என்பதுதான் அர்த்தம். ஆனால் நாராயணனின் பெருமை பிராட்டியினாலே என்று சொல்லாமல் சொல்வதற்காக லக்ஷ்மிநாத என்று (லக்ஷ்மிக்கு நாதன் - திருமகள் கேள்வன்) சுலோகம் செய்திருக்கிறார்.


வேதஸாரமான பக்தர்களுக்கு அமுதுண்ணச் சொன்ன சொல் மாலையான திருவாய்மொழியில் த்வயார்த்தமாக சரணாகதி செய்யும் போது, நம்மாழ்வார் காட்டிக் கொடுத்த மரபு இது. “அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா” என்று பிராட்டியையிட்டே சரணம் புகத்துவங்குகிறார். திருமகளை புருஷகாரமாகக் கொண்டு திருமாலின் திருவடியைச் சரணம் புக வேண்டும்.


பொதுவாகப் பிராட்டிக்கு மூன்று முக்கியமான குணங்களைச் சொல்வார்கள். “புருஷகாரம், உபாயம், உபேயம்” என்று மூன்று குணங்களை பிராட்டியின் குணங்கள் என்று சிறப்பாகச் சொல்வது வழக்கம்.

நடாதூர் அம்மாள் என்று ஓர் ஆசாரியர். பிராட்டியினுடைய இந்த மூன்று குணங்களையும் வைத்துக் கொண்டு ஒரு அழகான சுலோகம் செய்திருக்கிறார்.


“ஆகார த்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாசினீம்” என்பது அந்தச் சுலோகத்திலே இருக்கக்கூடிய ஒரு முக்கியமான தொடர்.


அதிலே "ஆகாரத்ரய சம்பன்னாம்" என்றால் மூன்று விதமாக உயர்ந்த குணங்களை தன்னுடைய சொத்தாகப் பெற்றவள். அந்த மூன்று குணங்கள் தான் புருஷகாரம், உபாயம், உபேயம். அதாவது அவள் தான் எம்பெருமானிடத்திலே சேருகின்ற வழியைக் காட்டுகின்றாள். சேர்த்தும் வைக்கிறாள். சேர்த்தவுடன் பெறும் பேறாகவும் விளங்குகின்றாள்.


உரை ஆசாரியர் ஓர் நயம் சொல்கின்றார். “அரவிந்த நிவாசினீம்....” அரவிந்தம் என்றால் தாமரை. அந்தத் தாமரையிலே வசிக்கின்றவள் யார்? சாட்சாத் அலர் மேல் மங்கைத் தாயார். இதிலே புருஷகாரம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். சிபாரிசு. அன்பர்கள் (சேதனர்கள்) தவறு செய்து விட்டு வருகின்ற எம்பெருமானிடத்திலே அவன் செய்த குற்றங்களையெல்லாம் பொறுக்கச் சொல்பவள் பிராட்டி.


நம்மை விட்டால் வேறு யாரிடத்திலே சென்று இவன் கடைத்தேற முடியும் என்று பரிந்துரை செய்து தகவுரை கூறி பெருமானின் கருணைக்கு இலக்காகும் வண்ணம் செய்கிறாளே... அந்த குணத்துக்குத்தான் புருஷகாரம் என்று பெயர். இதன் வழியாக நாம் பெறுவது என்ன? கைங்கர்யம் (பேறு).


கைங்கர்யமாகிய தொண்டினை எங்கே செய்ய வேண்டும். எம்பெருமானுக்கு மட்டும் தொண்டு செய்தால் போதுமா? இல்லை.



எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்து இருக்கக் கூடிய அந்த சேர்த்தியிலே தொண்டு செய்ய வேண்டும்.

அப்படி தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் அவனுடைய மார்பை விட்டு அகலாமல் எப்பொழுதும் உறைகின்றாள் அன்னை. அகல்வதே கிடையாது.


தனிக் கோயில் நாச்சியார் சன்னதி என்று இருந்தாலும் கருவறையிலே எம்பெருமானுடைய மார்பிலே பிராட்டி எப்பொழுதும் இருப்பாள்.


வாமனன் மாவலியினிடத்திலே தானம் கேட்க ஒரு பிராமணச் சிறுவனாகப் போன வேளையிலே கூட பிராட்டியை விட்டுப் பிரியவில்லையாம். தன்னுடைய மார்பிலே உள்ள பிராட்டியை மான் தோலால் மறைத்துக் கொண்டு சென்றானாம். ஆழ்வார்கள் எப்பொழுதுமே முதலில் பிராட்டியைத் தான் பார்ப்பார்கள். எம்பெருமானுக்கு அவள் தானே முதல். முதலில்லாமல் எப்படி அவன் லோக வியாபாரத்தைச் (அலகிலா விளையாட்டு) செய்ய முடியும்.


முதல் மூன்று ஆழ்வார்கள் அன்பை விளக்காகவும் வையத்தை விளக்காகவும் வைத்துக் கொண்டு அக இருளையும் புற இருளையும் விலக்கிவிட்டு எம்பெருமானுடைய காட்சியைக் கண்ட பொழுது "திருக்கண்டேன்.... பொன்மேனி கண்டேன்..." என்று முதலிலே தாயாரைத் தான் கண்டார்கள்.


பெரியாழ்வார் ஒரு பாசுரத்திலே தன்னுடைய மனதிலே எம்பெருமான் வந்து எழுந்தருளி இருக்கின்ற ஒரு நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றார்.


"அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் 
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து 
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்ளும் பிரான்" எப்படி இறைவன் வந்தானாம்?


ஆதிசேஷன் மீது சாய்ந்த வண்ணம் அப்படியே பாற்கடலோடும் பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமித் தாயாரோடும் ஆழ்வார் மனதிலே கோயில் கொண்டான்.


பெருமாள் தனியாக வந்து எந்தப் பலனும் இல்லை.


கொடுக்கச் செய்பவள் அந்த தாயல்லவா... அந்த அரவிந்தப் பாவைதான் பத்மாவதித் தாயார்.


எம்பெருமான் உயர்ந்தவன். உயர்வர உயர்நலம் உடையவன். அவனுடைய சிறப்புக்களைச் சொல்லி மாளாது. உலகம் உண்ட பெருவாயன். மூன்று உலகங்களையும் அளந்தவன். கீர்த்தி பல மிகுந்தவன். எங்கும் நிறைந்தவன். மூவுலகுக்கும் முதல்வன். எல்லாவித பெருமைகளையும் படைத்தவன். ஒப்பாரும் மிக்காரும் இலையாய மாமாயன்.


அவனுடைய அழகு அற்புதமான அழகு. அவனுடைய எழில் தோற்றம் அற்புதமான தோற்றம். அவனுடைய கருணை மகத்தானது.


எல்லாம் சரி. ஆனால் இந்த குணங்களுக்கும் இந்த அழகுக்கும் காரணம் அவன் அருகிலே எப்பொழுதும் திருமகள் இருப்பதினால்தான் அவன் குறைவொன்றும் இல்லாத கோவிந்தனாக இருக்கின்றான். வைணவ மரபிலே “ஸ்ரீ” என்கிற சப்தம் திருமகளைக் குறிக்கின்ற சப்தம். திரு என்று தமிழிலே சொல்வார்கள். திரு என்கிற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்க்க வேண்டும். மங்கலச் செல்வம் என்றொரு மகத்தான பொருள் உண்டு. எல்லாவிதமான செல்வங்களையும் அள்ளித் தருகின்ற அந்த அன்னை - எம்பெருமானுடைய செல்வங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவள். எனவே செல்வமான இறைவனின் செல்வம் அவள். ஆசார்யனை பகவான்தான் காட்டிக் கொடுக்கிறான். ஆனால், அந்த ஈஸ்வரனைக் காட்டிக் கொடுப்பவள் பிராட்டி. எனவே தான் சொன்னார்கள். ஆசார்ய லாபம் - ஈஸ்வரனாலே. ஈஸ்வர லாபம் - பிராட்டியாலே என்று சொன்னார்கள். அந்த ஈஸ்வர லாபத்தை - திருமலையப்பனின் பெருங்கருணையை பெற்றுத் தரும் - தயாபரி - பத்மாவதித் தாயார்.


பிராட்டியை முன்னிட்டுச் செய்யாத சரணாகதி பலிக்காது. பொல்லாத பாவத்தை - பிராட்டியிடம் செய்தான் காகாசுரன். பகவானின் பாணத்தைப் பொறுக்க முடியாமல் மூவுலகும் திரிந்து ஓடினான்.
வித்தகனே! இராமா! ஓ! அபயம் என பிராட்டியைப் புருஷகாரமாகச் சரணாகதி செய்தான். உயிர் பிழைத்தான். இராவணன் அப்படி சரணாகதி செய்யாததால் உயிரிழந்தான். பிராட்டியின் கருணைக்கு இராவணன் பாத்திரமாகவில்லை. தயை இழந்ததால் தலை இழந்தான்.


பிராட்டியின் கருணை அபாரமானது. பத்து மாதம் தன்னைச் சித்திரவதை செய்து துன்புறுத்திய அரக்கிகளைக் கொன்றுவிட எண்ணி அனுமன் அனுமதி கேட்டபோது, பிராட்டி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?


இவர்கள் பாவம் செய்தவர்கள். தண்டிக்க வேண்டும். இல்லையா மாருதி. நான் கேட்கிறேன். உலகில் பாவம் செய்யாதவர்கள் யார்? அபராதம் செய்யாதவர்கள் யார்? தனக்கு உரிய அறிவோ, ஞானமோ இன்றி இராவணன் கட்டளைக்குப் பயந்து தங்கள் கடமைகளைச் செய்தவர்கள் இவர்கள். எனவே இவர்களைத் தண்டிக்கக் கூடாது! பிராட்டியின் அன்பைப் பெற்றால் தான் பெருமாளின் அன்பு கிடைக்கும்.


கருட புராணம் இதைக் கோடிட்டுக் காட்டுகிறது. புருஷர்கள் தன்னைச் சேர்ந்தவர்களைவிட, மனைவியைச் சேர்ந்தவர்களை அதிகம் அபிமானிப்பார்கள். காரணம் மனைவியின் அன்பைப் பெற! ஆழ்வார்கள் இந்த கலி விசேஷத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.


பரம புருஷனாகிய எம்பெருமானுக்கு உரியவன் என்று சொன்னால் பகவானிடம் எடுபடுமோ எடுபடாதோ! ஆனால் பிராட்டியைச் சேர்ந்தவன் என்றால், அவனுக்கு அருள் தந்து ஆதரிப்பதைவிட அவனுக்கு வேறு வழி கிடையாது.


ஆழ்வார் இந்த உளவியலை ஓர் பாசுரத்தில் அப்படியே வெளிப்படுத்துகிறார். திருமணம் செய்து கொண்டு வரும் போது, பெண் வீட்டுச் சீதனமாக நாமும் அவள் கூடவே பெருமானின் சந்நிதிக்கு வந்தவர்கள் எனக் கருதி ஏற்றுக் கொள்வானாம்!


“என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே” என்று ஆழ்வார் பாடுகிறார். நான் திருமகள் அபிமானம் பெற்றவன் என்பது இதன் சாரமான பொருள்.


இராமாயணத்திலே ஒரு காட்சி.


திருவடி (அனுமன்) சீதையின் தவக் கோலத்தை கண்டான். உடனே.. ஆகா.. இந்தத் தவம் செய்த தவமாம் தையலைக் காண இராமன் தவம் செய்து கொடுத்து வைத்திருக்கவில்லையே என குறைபடுகிறான்.


கம்பனின் அருமையான பாட்டு.


பேண நோற்றது மனைப்பிறவி, பெண்மை போல் 
நாணம் நோற்றுயர்ந்தது, நங்கை தோன்றலால் 
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எல்லாம் 
காண நோற்றிலன் அவன் கமலக்கண்களால்!


அந்தக் குறை எம்பெருமானுக்கு இருந்ததால்தான் இங்கே திருச்சானூரிலே (திருச்சுகனூர்) 12 ஆண்டுகள் - ஒரு நாளைக்கு 3000 தடவை லக்ஷ்மி மந்திரத்தை உருவேற்றி 300 தடவை நீரால் தர்ப்பணம் செய்து - 1000 மலர்களால் அர்ச்சனை செய்து பால் மட்டுமே உணவாக அருந்தி - தாயாரை தன் பட்ட மகிஷியாக அடைந்தானாம். திருமலையப்பனே தவம் செய்து பெற்ற தாயாரை தரிசிக்கும் பேறு பெற்ற நம்மைப் போன்றவர்கள் செய்த தவம் தான் என்ன? பேறு தான் என்ன? புண்ணியம் தான் என்ன? வாருங்கள் தாயாரை கார்த்திகை பிரம்மோற்சவத்திலே தரிசித்து கண் பெற்ற பேற்றினைப் பெறுவோம்.


வாழ்க்கை நெறிகள் வளரும்.....


நன்றி - சப்தகிரி டிசம்பர் 2018


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக