வெள்ளி, 24 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 14 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் 6

अल्पापि मे न भवदीयपदाब्जभक्तिः शब्दादिभोगरुचिरन्वहमेधते हा।
मत्पापमेव हि निदानममुष्य नान्यत् तद्वारयार्य यतिराज दयैकसिन्धो ॥ (6)

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜபக்தி: 
ஸப்தாதி போக ருசிரந்வஹமேத தேஹா |
மத்பாபமேவ ஹி நிதாநம் அமுஷ்ய நாந்யத் 
தத்வாரயார்ய யதிராஜ தயைகஸிந்தோ || (6)

தயா ஏக ஸிந்தோ - தயையே ஓர் கடலாக உள்ள யதிராஜரே! அடியேனுக்கு அனுக்ரஹிக்க வேண்டும். கொஞ்சமானும் ஒரு நல்லதுகூட என்னிடம் இருக்கவில்லை.

ஒரு துளிகூட அடியேனுக்கு தேவரீரிடம் ஈடுபட்ட மனது என்னிடத்து இல்லை. அல்பமாகக் கூட அந்த நன்மை இல்லை. (திருவடித் தாமரைகளில் ஆசையானது துளிகூட வரவில்லை) நேற்றுவரை நாம் எப்படி இருந்தோம் என்ற உண்மையைச் சொல்லிவிட்டோம். அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம் என்றெல்லாம் சொல்லாமல் உண்மையையே உரைத்தாகிவிட்டது. இன்று ஒருவர் பெரிய மனிதர் ஆகி இருப்பார். அவரிடம் பேட்டி எடுக்க ஒருவர் வருவார். முன்னால் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேட்டால் அனேகமாக அவரால் சொல்லிக் கொள்வது மாதிரி இருக்காது. பெரிய திருடனாகக் கூட இருந்திருக்கலாம். அதையெல்லாம் சொல்லவா முடியும். ஆனால் இங்கே பகவானிடம் வரும்போது பழசைச் சொல்லமாட்டேன் என்று மறைக்க முடியாது. நேற்றுவரை எப்படி இருந்தேன் என்பதைப் பட்டுன்னு போட்டு உடைக்கத்தான் வேண்டும். 

ஆர்ய – மிக உயர்ந்தவராய், தாழ்ந்தவனைக் கண்டு பின்வாங்காமல் அவனையும் சேர்த்துக் கொண்டு உயர்த்தும் உயர்வு உடையவர். ரக்ஷணத்துக்கு உதவியான ஞானம், பலம், ஐஸ்வர்யம் அனைத்தும் இருக்கிற,

யதிராஜ – இந்திரியங்கள் அனைத்தும் ஜயித்திருக்கிறவரே எம்பெருமானாரே,

மே – என்னுடைய மனது இதர விஷயங்களிலேயே ஓடிக் கொண்டு இருக்கிறது. உம்விஷயத்தில் இருந்ததே இல்லை. வேற்று விஷயங்களிலேயே மனதுள்ள எனக்கு, 

பவதீய பதாப்ஜ பக்தி: அல்ப அபி ந அஸ்தி - தேவரீருடைய திருவடிகளில் பக்தி அல்பம் கூட இருந்ததில்லை. ஏன்? அவைதான் இதர விஷயங்களிலே போய்விட்டதே.

ஸப்த ஆதி போக ருசி: – தேவரீருடைய திருவடிகளின் அநுகூலத்துக்கு விரோதமாக இருக்கிற ஸப்தம், ஸ்பர்ச, ரூப, ரச, கந்த ஆகியவற்றை அநுபவிப்பதில் ஆசையானது, என் மனதில் இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கிறது. நமக்கு இருக்கிறதே இரண்டு இன்பம். ஒன்று இந்திரிய விஷயங்களான தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றவற்றை அனுபவிப்பது., இரண்டாவது பேரின்பம், பகவதனுபவம். இதில் விஷய ஸுகத்தை நாடுபவன் மனது பகவதனுபவத்தை நாடாது, பகவதனுவத்தில் போகும் மனது விஷய ஸுகத்தை நாடாது. இரண்டையும் வைத்துக் கொண்டு இருக்க முடியாது. குடும்ப அனுபவமும், பகவத் அனுபவமும் ஒன்றுக்கொன்று போட்டியில்தான் இருந்து கொண்டிருக்கிறது. 


அந்வஹம் ஏததே – விஷய ஸுகங்களில் ருசி தினப்படி வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

ஹா – கஷ்டம், ஒரே வருத்தம் என்னவென்றே சொல்ல முடியவில்லை. அந்தஹோ! ஐயோ! என்று சொல்வது போல ஸம்ஸ்க்ருதத்தில் ஹா.

அமுஷ்ய – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு,

நிதாநம் – மூலகாரணம், 

மத்பாபமேவ அந்யத் ந - (பவதி) அடியேனுடைய அநாதியான பாபமே ஆகும். வேறொன்றுமன்று, படுகின்றபாட்டிற்கு ஈஸ்வரன் காரணம் என்று சொல்லிவிடுவோம், அல்ல அதற்குக் காரணம் நான் செய்த பாபங்களே காரணம், வேறெதுவும் இல்லை.

ப்ராப்த விஷயத்தில் ப்ராவண்யம் இல்லாமை. பகவான் ப்ராபகன், ஆசார்யர்கள் ப்ராபகர். இந்த விஷயத்தில் ஆசையில்லை. எதற்கும் நமக்கும் தொடர்பே இல்லையோ அந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு இருக்கிறது. தேவையில்லாததில் ஈடுபாடும், தேவையுள்ளதில் ஈடுபாடில்லாமையும், இரண்டு குற்றங்கள் நம்மிடம் உள்ளது. இந்த இரண்டுக்கும் காரணம் என்னுடைய பாபமே. வேறு எதுவுமில்லை, ஈஸ்வர ஸ்வாதந்த்ரியம், இயற்கை, விதி என்பது எதுவும் காரணமில்லை. 

தயைக ஸிந்தோ – கருணைக் கடலான எம்பெருமானாரே! ஏன் தயா ஸிந்து என்று சொல்லாமல் தயைக ஸிந்தோ என்று சொல்லியிருக்கிறார்? கடலில் ஜலம் நிறைய இருக்கிறது ராமானுஜரிடம் தயை என்ற ஜலம் நிறைய இருக்கு. ஆனால் கடல் ஜலத்தில் உப்பு இருக்கிறது. ஆனால் ராமானுஜரின் தயையில் உப்பு இல்லையே. வெறும் தயை என்றால், தண்ணீரும் இருக்கும், கூடவே கடல் நீரில் உப்பு இருக்கிறமாதிரி கோபமும் இருக்கும். தயைக ஸிந்து என்றால் வெறும் தயை மட்டும், உப்பில்லாத நல்ல ஜலம்போல இருக்கிறார் என்பதற்காகவே.

தத் வாரய – அந்த பாபத்தை போக்கியருளவேணும். 

இதுவரை ப்ரார்த்தித்தது உம்மிடத்தில் ஈடுபாடு வரணும், உம் பக்தர்களிடத்தில் ஈடுபடணும். என்னிடம் பாபம் இருக்கிறது என்றார். இந்த ஸ்லோகத்தில் ஈடுபாட்டை தடை செய்யும் காரணமான பாபத்தை போக்கியருள் என்று பிரார்த்திக்கிறார். நோய்க்கு மருந்து சாப்பிடுவதை விட நோய்க்குக் காரணத்தைக் கண்டு அதற்கு மருந்து சாப்பிடுவது எவ்வளவு அவசியமோ அதுபோல பகவானிடம், பாகவதர்களிடம் ஈடுபாடு கொடு என்று கேட்பதை விட ஈடுபாடு வராமல் தடுக்கும் காரணமான அனாதிகால பாபமாகிய நோயைப் போக்குவதற்கு இந்த ஸ்லோகத்தில் மருந்து கேட்டுப் பிரார்த்திக்கிறார்.

வேதாந்த தேஶிகர் சாதித்தார், “நான் யாரிடமும் போய் நிற்கமாட்டேன். என் தலையில் இருக்கிற எழுத்தை மாற்றுகிற சக்தி யாரிடமாவது இருந்தால் சொல் அவன் கால்களில்போய் விழுகிறேன்” என்று ஹயக்ரீவர் ஸ்தோத்திரத்தில் சொல்கிறார். இந்திரனோ, பிரம்மாவோ, ஜோசியரோ மாற்ற முடியுமா? யாருக்கும் இல்லை. ஆனால் ஹயக்ரீவருடைய திருவடித்தாமரைகளின் துகழ் ரஜஸ்ஸுக்குத்தான் இருக்கு. அங்க போய் நிற்பேனே தவிர வேறு எவன் காலிலும் நிற்கமாட்டேன். அந்த உறுதி வரவேண்டுமில்லையா. அந்த உறுதி பகவானிடம் வந்திருக்கிறது. இன்னும் பாகவதோத்தமரான ஆசார்யரிடமும் வந்திருக்கிறதென்றால் நிஷ்டை கொஞ்சம் கஷ்டமான நிஷ்டை.

இந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயமே சில விஷயத்தில் மேலோட்டமாகப் பார்த்தால் ரொம்ப சுலமான ஸம்ப்ரதாயம் என்று தோன்றும். ஆனால் உள்ளூற புகுந்து பார்த்தோமானால், அனைத்தையும் விட்டுத் தொலைத்தலே, இதில் மேல் எழுந்து வருவது மிகவும் கடினம். ஆகவே அந்த துஷ்கர்மத்தினை, அனாதிகால பாபத்தை தேவரீர் தான் போக்கியருளவேண்டும். உன் திருவடிகளில் பக்தி இல்லாமல் இருப்பது எனக்கு வந்த வியாதி. அதற்கு உள்ளூர மூல காரணம் எது? அனாதிகால பாபம். அதையும் தேவரீர் தான் போக்கிக் கொடுக்க வேண்டும். காமாதி தோஷத்தைப் போக்கிக் கொடுத்தீர். அதுபோல இந்த அனாதிகாலப் பாபத்தையும் நீர்தான் தொலைத்துக் கொடுக்கணும். 

அருள்கொண்டாடும் அடியவர் இன்புற*
அருளினான் அவ்வறுமறையின் பொருள்*
அருள் கொண்டு ஆயிரம் இந்தமிழ் பாடினான்*
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே.          கண்ணிநுண் சிறுத்தாம்பு. 7

நம்மாழ்வாரின் பெருமையைப் பற்றி மதுரகவி ஆழ்வார் சொல்ல வந்தார். 

“பண்டை வல்வினை பாற்றியருளினான்* 
எண்திசையும் அறிய இயம்புகேன்* 
ஒண்தமிழ் சடகோபன் அருளையே!” 

எட்டுத்திக்கிலும் நம்மாழ்வாரின் பெருமையைச் சொல்லப்போகிறேன். ஏன் என்றால் பண்டை வல்வினையை போக்கிவிட்டான். அனாதிகாலமாக என்னிடம் இருக்கும் பாபத்தையெல்லாம் நம்மாழ்வார் தொலைத்தார். நம்முடைய ஆசார்யரிடம் பக்தியோடு இருந்தோமென்றால், அதனால் ஆனந்தப்பட்ட பகவானும் ராமானுஜரும் நம் பண்டை வல்வினைகளைப் தொலைத்து விடுகின்றனர்.

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: ॥ கீதை 18 - 66

நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன் என்று கண்ணன் உறுதி கொடுத்திருக்கிறார் அல்லவா? நேராகவும் செய்கிறார். ராமானுஜர் மூலமாகவும் செய்கிறார். இரண்டும் நடக்கக் கூடியதுதான். 

உய்ய ஒரே வழி உடையவர் திருவடி

ஆதிஶேஷன் அல்லவா அவதரித்திருக்கிறார். ஆதிஶேஷனை ஏன் அனந்தன் என்கிறோம் என்றால் எல்லைக்குட்படாத பகவானை தன் படுக்கையாக்கி தனக்குள் அடக்கிக் கொண்டுள்ளாரல்லவா? அனந்தாழ்வான் படுக்கையில் நம்பெருமாள் சயனித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா? பெரிய பெருமாள் 16 அடி, அனந்தபத்மனாபர் 18 அடி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் 22 அடி. இவர்கள் எல்லோருக்கும் படுக்கையாக உள்ள அனந்தன் எல்லையற்ற சக்தி, பலம் எல்லாம் கொண்டவர். 

ஆதிஶேஷ அவதாரம் ராமானுஜர் என்றால் இவருக்கும் அனந்த சக்தி. அவருக்கு உள்ள சக்தியனைத்தும் உமக்கும் உண்டு. உபய விபூதிகளையும் எம்பெருமான் உம்மிடம் கொடுத்துவிட்டார். ஸர்வ சக்தியும், ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் இருக்கிறது. ஆதலால்தான் எல்லோரும் உடையவரைப் பற்றுகிறோம். உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என்று சொல்வதும் அதனால்தான். “ஆதிஶேஷனைப் போல ஜகத்தையே தேவரீர்தான் (ராமானுஜர்தான்) தாங்குகிறீர். ஆகவே என் பாபங்களைப் போக்கிவிடும்.” என்று மணவாள மாமுனிகள் பிரார்த்திக்கிறார். 

தயைக ஸிந்தோ 

யோநித்யமச்யுத பதாம்புஜயுக்மருக்ம      
வ்யாமோஹதஸ் - ததிதராணி த்ருணாய மேநே । 
அஸ்மத்குரோர் பகவதோ(அ)ஸ்ய தயைகஸிந்தோ: 
ராமானுஜஸ்ய சரணௌ ஶரணௌ ப்ரபத்யே॥   

என்று கூரத்தாழ்வான் பாடி வைத்தரல்லவா! அதுபோலவே இங்கு பெரிய ஜீயரும் ஸாதிக்கிறார்.

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜபக்தி: 
ஸப்தாதி போக ருசிரந்வஹமேத தே ஹா |
மத்பாபமேவ ஹி நிதாநம் அமுஷ்ய நாந்யத் 
தத்வாரயார்ய யதிராஜ தயைகஸிந்தோ! 6

தயைக ஸிந்தோ – தயையாவது – தனது பயனொன்றையும் எதிர்பாராமல் பிறர்துன்பம் கண்டால், தானும் ‘ஐயோ இப்படி துன்பப்படுகிறானே’ என்று துன்பப்படுகை. கருணையே கடலாக உருவெடுத்த யதிராஜரே, கடலில் நீர் வற்றினாலும் வற்றும், உம்மிடம் தயை எனும் நீர்மை வற்றாது. இந்த அனாதிகால பாபத்தைப் போக்கியருள வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார். 

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக