பேரின்பம் பெறுவதே மகிழ்ச்சி அம்மகிழ்ச்சிக்கே திருப்பள்ளியெழுச்சி
"அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே"
திருப்பள்ளி எழுச்சி பத்தாவது பாடலின் கடைசி அடி இது! ஸ்ரீவைஷ்ணவத்திலே நாம் அடைகின்ற பொருள், பயன், இன்பம் எல்லாமே அடியார் தொண்டு எனப்படும் பாகவத கைங்கர்யம் தான்.
இறைத்தொண்டை விட இறையடியார் தொண்டே உயர்ந்தது. அது இறைவனையும் திருப்திபடுத்தக் கூடியது. தொண்டரடிப்பொடியாழ்வார்! பெயரையே பாருங்கள். “தான் அடைகின்ற இன்பத்தின் எல்லை நிலம் இது தான்” என்று அறுதியிட்டு உரைக்கும்படியாகத் தனது பெயரையே அதற்கு ஒரு பிரமாணமாக ஆக்கிக்கொண்டார். அரங்கனிடமும் அதைத் தான் இறைஞ்சுகிறார். “அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே!” என்பது அவரது வேண்டுகோள்.
கதிரவன் குண (கீழ்) திசை வந்து நிற்கிறான். தேவர்கள் வந்து நிற்கிறார்கள். வைகறை கூர்ந்தது. ஆயர்கள் மாடு ஓட்டிச் செல்ல, அந்த மாடுகளின் மணிக்கழுத்து அசைய, மணியோசை கலகல என ஒலிக்க, விடியா விடியலில் விடிய வேண்டும் என்று இரவியர், இறையவர், மருவிய மயிலினன், அந்தரத்து அமரர்கள், அருந்தவ முனிவர்கள் இப்படி ஏராளமானோர் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு நோக்கமுண்டு. ஏதேனும் ஒரு பலன் அடைய விரும்பி அவர்கள் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். இது அவர்கள் நிலை.
ஆனால், அரங்கா! எனக்கு எதுவும் வேண்டாம். அடியார் பாத தூளி நான். உன்னைப் பள்ளி எழுப்புவதன் நோக்கம் வேறொன்றுமில்லை. நீ எழும் போது உன் தாமரைக் கண்கள் மலருமே. உன் செவ்வாயில் புன்னகை விரியுமே. மொத்தத்தில் உன் முகம் மலர்ச்சியடையுமே. அது போதும்! நான் திருப்பள்ளியெழுச்சி பாடுவதன் நோக்கம் அதுதான்." இது தொண்டரடிப்பொடியாழ்வாரின் நிலை.
முதல் பாடலிலே குணதிசைச் சிகரம் வந்தணைந்தான் என்று சொல்லி, “அரங்கா எழுந்தருள வேண்டும். உன்னைச் சேவிக்க இதோ சூரியன் வந்திருக்கிறான். அவனை நலம் விசாரித்தருள வேண்டும். உன் கண்மலர்ப் பார்வையால் அவன் என்றென்றும் உயிர் பெற்று உலவுகின்றான்” என்கிறார் ஆழ்வார்.
பெருமாள் எழுந்திருப்பதாக இல்லை. ஆழ்வாரின் தமிழில் அல்லவா அவன் ஆழ்ந்திருக்கின்றான். பாடுகின்ற வரை பாடட்டும் பார்த்துக் கொள்வோம் என்றிருப்பவனல்லவா! ஆழ்வார் என்ன, விட்டுவிடுவாரா? அடுத்த அஸ்திரத்தைப் போடுகிறார். இது பெருமாளைக் கொஞ்சம் அசர வைக்கிற அஸ்திரம் தான்.
காரணம் எளிமையின் எல்லை நிலமாக விளங்கிய கிருஷ்ணாவதார நிகழ்ச்சியில் அவன் மனதை விட்டகலாத ஓர் நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறார். கிருஷ்ணாவதார காலம். யமுனை ஆற்றங்கரை, கண்ணனின் குறும்பு எல்லை மீறிய நேரம். கோழியழைப்பதன் முன் குடைந்து நீராட வேண்டும் என்று அவசரம் அவசரமாக ஆற்றங்கரை வந்தடைகின்றனர் கோபிகைகள்.
இவர்களுக்கு முன் அவன் அங்கே வந்திருக்கிறான். வந்து இவர்களுக்காகவே காத்திருக்கிறான். அவர்களின் உடைகளை அபகரித்துக் கொண்டு குருந்த மரம் ஒன்றின் மீது ஏறிக்கொள்கிறான்.
இங்கே அந்த நிகழ்ச்சியை நாசுக்காக பெரிய பெருமாளுக்கு நினைவூட்டுகிறார். “சூழ்புனல் அரங்கா எழுந்தருள்க! ஸ்ரீகிருஷ்ணாவதாரச் சுறுசுறுப்பு இங்கே இல்லையே: துடியிடையார் சுரிகுழல் பிழிந்து உதறிக் குளித்துவிட்டு, கருமையான நீண்ட சுருள் சுருளான தங்கள் தலைமுடியை ஈரப் பசைபோகப் பிழிந்து உதறி விட்டு, தாங்கள் கரையிலே வைத்திருந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு கரையேறி விட்டனர்” என்கிறார்.
“இவர்கள் கரையேறுகின்ற அளவும் நீ பள்ளி கொண்டிருக்கலாமா?”
“சூழ்புனல் அரங்கா” என்று விளிக்கும் போது, பொன்னி நதிக்கு ஓர் ஏற்றத்தை தஞ்சை மண்ணில் உதித்த ஆழ்வார் கொடுக்கிறார். “பரமபதத்திலே விரஜை! பிருந்தாவனத்திலே யமுனை! ஆனால் அத்தனைச் சுகங்களையும் மீறிய சுகம் இந்த பொன்னிசூழ் திருவரங்கம்.
அந்தச் சுகத்திலல்லவா அரங்கன் சொக்கிப் போயிருக்கிறான். முதல் நான்கு வரிகளிலே பெருமாளைச் சொன்னவர் அடுத்துத் தம்மைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்.
தன் தகுதியைச் சொல்லியாக வேண்டும். அப்படியாவது அசைகிறானா அரங்கன் என்று எண்ணுகின்ற ஆழ்வார் அடியேன் “தொண்டர் அடிப்பொடி” என்று விநயமாக விண்ணப்பிக்கிறார்.
இதே நிலைதான் நம்மாழ்வாருக்கும்,
“குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார், அடியார்தம் அடியார் எம் அடிகளே”
இன்னும் தனது அடியார்க்காட்படும் தன்மையே ஆவேசமாக அடுத்தத் திருவாய்மொழியில் சொல்லுவார்.
''........... எம்பிரான் தனக்கு அடியார் அடியார்
தம் அடியார் தமக் கடியார் அடியார்
தம் அடியாரடி யோங்களே"
திருவாய்மொழியிலே நம்மாழ்வார் தம்மை கடை நிலை அடியாராகக் காட்டிக் கொள்வார். பயிலும் சுடரொளி முழுக்க அடியார்க்கு அடியார் எனத்தானே பேசுகிறார்.
அடியார்க்குத் தொண்டனாக இருப்பது தொண்டின் எல்லை நிலம் என்று கூறும் வைணவ மரபு!
இதனை “சரமோபாயம் அல்லது சரமோபாய காஷ்டை” என்பார்கள். இந்த நிஷ்டையைத் தான் கடைசி வரியிலேதான் வைக்கிறார் ஆழ்வார்.
“அடியனை அளியனென் றருளியுன் னடியார்க்கு ஆட்படுத் தாய்பள்ளி யெழுந்தருளாயே”
ஆண்டவனுக்கு ஆட்படுவதல்ல ஆழ்வாரின் நோக்கம். அடியார்க்கு ஆட்படுவதுதான் அவர் எண்ணம்.
ஸ்ரீவைஷ்ணவத்திலே எம்பெருமான் திருவடிகளே சரணம் என்பது முதல் நிலை. எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்பதுதான் கடைசி நிலை.
இறைவனுக்கு அடிமை முதல் நிலை. திருமாலடியாருக்கு அடிமை நிறைவு நிலை.
இறைவனை வேண்டிப் பெறும் பயன் அவனல்ல. அவன் அடியார் தொடர்பே! உனக்காட்பட்டு நின்கண் பெறுவது எது? என்று நம்மாழ்வார் தனக்குத்தானே கேட்டுக்கொள்வது போல் தொண்டரடிப்பொடியாழ்வார் இல்லை.
வெட்டு ஒன்று. துண்டு இரண்டு என்று தெளிவான முடிவோடு இருக்கிறார். திருமந்திரத்தின் முடிந்த முடிவை திருமங்கையாழ்வார் பேசுகின்ற பொழுது,
“நின் திரு எட்டெழுத்து கற்றும் உற்றது உன் அடியார்க்கு அடிமை” என அடியார்க்கு ஆட்படுதலையேயல்லவா கூறுகிறார்.
அதுதான் பேரின்பம், பெறக்கரிய வாழ்வியல் பேறு! எல்லையற்ற மகிழ்ச்சி. இதனைச் சொல்வதுதான் தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி!
மலர்ந்திருக்கும் மார்கழியில் திருப்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் பாடி அப்பேரின்ப அனுபவத்தை நுகர்வோம். வாரீர்.
வாழ்க்கை நெறிகள் வளரும்.....
நன்றி - சப்தகிரி ஜனவரி 2019
நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963