வெள்ளி, 24 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 15 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 7 

7, 8, 9, 10 ஸ்லோகங்களில் மூர்க்கத்தனத்தாலே எனக்கு எவ்வளவு தாழ்ச்சி இருக்கு என்று புரிந்துகொள்ளாமல் உம் முன்னாடி வந்து நின்றுவிட்டேன். நீர் என்ன பார்க்கணும், அந்த மூர்க்கத்தனத்தைப் பார்க்காமல் உம் முன்னாடி வந்தேனே என்று பாரும். மூர்க்கன் வந்தானே என்று பாராதிரும். இந்த மட்டும் வந்தானே என்று சேர்த்துக் கொள்ளும் என்பதே இந்த நான்கு ஸ்லோகங்களில் ப்ரார்த்திக்கிறார். அடியேனுக்கும் நல்லது. உமக்கும் ஆள்கிடைப்பா.

என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து* எண்ணில் பல்குணத்த 
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் *

என் இயல்வைப் பாரும். தாழ்ந்தவன் என்று பார்க்கவேண்டாம். தாழ்ந்தவனை மேலே தூக்கி விடுவதுதானே உமக்குப் ப்ரபாவமே! இது உமக்கு வேண்டாமா? எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள். அப்படிப்பட்ட இவனை நான் கைபிடித்து தூக்கிவிடுகிறேன் என்பதே உமக்குப் பெருமை. நீரும் கைவிட்டு விட்டீர் என்றால் வேறு எங்குதான் போக முடியும். தன் குற்றங்களை கூறிக் கொள்கிறார். 

व्रुत्या पशुर्नरवपुस्त्वहमीद्रुशोSपि श्रुत्यादिसिद्धनिखिलात्मगुणाश्रयोSयम् ।
इत्यादरेण क्रुतिनोSपि मिथः प्रवक्तुम् अध्यापि वन्चनपरोSत्र यतीन्द्र! वर्ते ॥ (7)

வ்ருத்த்யா பஷுர் நரவபு: து அஹமீத்ருஷோSபி
ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் |
இத்யாதரேண க்ருதிநோSபி மித:ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சநபர: அத்ர யதீந்த்ர! வர்த்தே || (7)

யதீந்த்ர அத்ர வர்த்த – யதிராஜரே, இங்கேயும் நான் அப்படித்தான் இருக்கின்றேன். இப்பவும் அப்படித்தான் இருக்கின்றேன்.

வஞ்சநபர: – ஊரை ஏமாற்றுவதிலேயே பற்றுடையவனாயிருக்கின்றேன், திருந்தி வந்துட்டேன் என்று நீர் சந்தோஷப்பட்டிட வேண்டாம். இப்ப என்ன ஏமாற்றுகிறீர். திருந்தி வந்துவிட்டேன் என்று சொன்னீரே. இப்ப ஏமாற்றுவது வேறயா?.

சூதனாகி கள்வனாய் தூர்த்தரோடு இசைந்த காலம் 
மாதரார் கடைக் கண் எனும் வலையுள்பட்டு அழுந்துவேனை 
போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருகவைத்த அழகனூர் அரங்கமன்றே! (திருமாலை)

சூதன் – ஊரை ஏமாத்தினேன், கள்வன் – பகவானை ஏமாற்றினேன், ஏமாற்றுவதற்கு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வழி வைத்திருக்கின்றேன். பண்டிதற்கு வேறு, பாமரர்க்கு வேறு வழியில் ஏமாற்றுவேன். இப்படியே ஆராய்ச்சி பண்ணி ஏமாற்றுவேன். இதைப் பாடிக்கொண்டிருக்கிற ஒருத்தருக்கும் இந்த குற்றம் எதுவுமில்லை. நம்ம சார்பில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். நாம தானே இந்த பாசுரங்களைச் சேவிக்கப் போகிறோம். 

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முன்னால் கிடாம்பியாச்சான், வடுகநம்பி முதலானோர் பெருமாள் சேவிக்கப் போய் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்ப அநந்தழ்வான் என்ற மகாசாரியார் சென்றார். ஆளவந்தார் பாடிய ஸ்தோத்திர ரத்னம். அதில் தம் குற்றத்தையெல்லாம் பட்டியல் போடுகிறார். 

அமர்யாத: சரமதீ: சலமதி:அஸூயாப்ரவஸபூ:
க்ருதக்நோ துர்மாநி ஸ்மர பரவஶோவஞ்சநபர:
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட:கதம் அஹமிதோ துக்க:ஜலதே:
ஆபராததுத்தீர்ண:தவ பரிசரணேயம் சரணயோ: ॥       ஸ்தோத்த்ர ரத்னம் 62

ஒன்று பாக்கியில்லாமல் எல்லா துர்குணங்களையும் பட்டியலிட்டு எல்லாவற்றுக்கும் தாம்தான் இருப்பிடம் என்று சொல்கிறார். இந்த ஸ்லோகத்தை பெருமாள் முன் சொல்லி இப்படி இருக்கிற நான் எப்படித்தான் உன் திருவடிக்கு வரப்போகின்றேனோ என்று அழுகிறார். இந்த ஸ்லோகத்துக்கு முன் ஸ்லோகம் வரை அநந்தாழ்வான் பெருமாள் முன் பாடிக்கொண்டே வந்தார். அதுவரை சொல்லிக் கொண்டுவந்தவர் நிறுத்திவிட்டு, அதை விட்டுவிட்டு அடுத்த ஸ்லோகத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆளவந்தார் முற்பட்ட காலம், அநந்தாழ்வான் பிற்பட்ட காலம். ஏன் நிறுத்திவிட்டீர் அந்த 62 வது ஸ்லோகத்தைச் சொல்லாமால் என்று கேட்டதற்கு இது ஆளவந்தார் பாடியிருக்கிறார். இந்த ஸ்லோகத்தைப் பாடினால் இந்த பத்துக் குற்றமும் அவரிடம் இருந்திருக்குமோ என்று எனக்குத் தோணினாலும் தோணும். இப்படியெல்லாம் நான் நினைத்துவிட்டால் எனக்கு இருக்கிற பாவம் போறாதா? இன்னும் ஆசார்யனைப் பற்றி தவறாக நினைத்த பாவம் வேறு வேண்டுமா என்று கேட்டார். ஆகவே அவர் சொல்லாமலே விட்டுவிடுவார் என்று பூர்வாசார்யர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். 

அவர்களிடம் அந்தக் குறையில்லை. நமக்கெல்லாம் புரியவேண்டும் அல்லவா? அவர்கள் ஏன் சொல்லிக் கொள்கிறார்கள் என்றால் இந்த ஜன்மத்தில் இல்லை. வேறு முன் ஜன்மங்களில் இருந்திருந்தால். அதனால் சொல்லிக் கொள்கிறார்களோ என்னவோ? 

மனோவாக் காயை: அனாதிகால ப்ரவ்ருத்த அநந்த அக்ருத்ய 
கரண க்ருத்யா கரண பகவதபசார பாகவதாபசார 
அஸஹ்யாபசார ரூப நாநாவித அநந்தாபசராந் ஆரப்த 
கார்யாந் அநாரப்த கார்யான் க்ருதாந் க்ரியமாணாந் 
கரிஷ்யமாணாம்ச ஸர்வாந் அஶேஷத: க்ஷமஸ்வ |

என்று அபராத க்ஷமணம் செய்கின்றோமல்லவா? பண்ண ஆரம்பித்துவிட்ட பாவம், நாளைக்கு பண்ணலாம் என்று ஒத்திவைத்திருக்கிற பாவம் என்று பல என்னிடம் இருக்கின்றதல்லவோ அனைத்து பாவங்களையும் தேவரீர்தான் பொறுத்து அருளவேண்டும். 

ஸர்வாந் அபராதான் – ஸாஸ்த்திரம் செய் என்று சொன்னதை செய்யாமல் விட்டது. செய்யாதே என்று சொன்னதைச் செய்தது, பகவானிடம் அபசாரம், பாகவதர்களிடத்தில் அபசாரம் .. எவ்வளவு – போதுமே. இத்தனையும் பண்ணியிருக்கிறேன். அதை தேவரீர்தான் க்ஷமித்து அருளவேண்டும். 

ராமானுஜர் கேட்டார். இதற்கு ஒரு ஸ்லோகமா? ஏதோ பகவத் குணத்தைச் சொல்லும் கேட்டுக்கிறேன். ஆசார்யன் குணத்தைச் சொல்லும் உம் குற்றத்தைச் சொல்லிக்கொள்ள வேண்டுமா என்றால் இரண்டும் ரொம்ப முக்கியம், பகவத் குணாநுஸந்தானம் எத்தனை முக்கியமோ தோஷங்களைச் சொல்லிக் கொள்வதும் அவ்வளவு முக்கியம். 

பராசரபட்டருடைய காலக்ஷேப கோஷ்டி. காலக்ஷேபம் முடிந்தது. மிகவும் நன்றாக இருந்தது. யாரோ இரண்டு பேர் வந்து பராசர பட்டரை வசவு பாடினர். சிஷ்யர்கள் தாக்கப் போயினர். அவர்களை நிறுத்திவிட்டு அவர்களை அருகில் கூப்பிட்டு, தான் அணிந்திருந்த மாலை, தங்கசங்கிலி அகியவற்றைக் கழற்றி அவர்களுக்குப் பிரஸாதமாக அணிவித்து அனுப்பிவைத்தார். பக்கத்திலிருந்தவாளுக்கு தூக்கிவாரிப் போட்டது. இது பண்ணினால்தான் பிரஸாதம் கிடைக்கும்னு தெரியாமல் போய்விட்டதே என்று சொல்லிக் கொண்டனர். உம்மைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமே. எதுக்கு இப்ப வைதவர்களைப் போய் வாழ்த்திக் கொண்டிருக்கின்றீர் என்று பட்டரிடம் கேட்டனர். நான் நித்யம் இரண்டு காரியம் பண்ணனும் பகவத் குணங்களைச் சொல்லணும். என் தோஷத்தையும் சொல்லிக்கணும். இருக்கிற அறுபது நாழிகைக்குள் பகவானது குணங்களைச் சொன்னாலே காலம் போய் விடுகிறது. என் தோஷங்களைச் சொல்ல இயலவில்லை. நான் பண்ணவேண்டிய கடமையை எனக்காக அவர்கள் அந்தக் குறையை நீக்கினர் அல்லவா? அதற்காகத்தான் கொடுத்தேன் என்று அந்த ஸ்வாமி சொல்லி இருக்கவேண்டுமென்றால் தோஷத்தையும் அநுஸந்தானம் பண்ணவேண்டும். ஆனால் தோஷத்தை நினைத்துக் கொண்டே இருந்தால் பயம் வந்துவிடும். நம் தோஷத்தை விக்யாபனம் பண்ணிவிட்டு அப்புறம் பகவத் குணங்களைத்தான் அநுஸந்தானம் பண்ணவேணும். 

பிள்ளைலோகாசாரியார் ஸாதிக்கிறார். “ஸ்வதோஷத்தை நினைக்க நினைக்க பயம் வந்துவிடும். பகவத் குணத்தை நினைக்க நினைக்க பயம் தொலையும்.” அப்ப பயம் தொலைவதுதான் முக்கியமே தவிர பயத்தை வரவழைத்துக் கொள்வது முக்கியமல்லவே? சொல்லவேண்டியதைச் சொல்லித் தானே ஆகவேண்டும். ஆகவேதான் சொல்கிறார்:

வ்ருத்த்யா பஷுர் நரவபு: து அஹமீத்ருஷோSபி
ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் |
இத்யாதரேண க்ருதிநோSபி மித:ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சநபர: அத்ர யதீந்த்ர! வர்த்தே || (7)

ஹே யதீந்த்ர! அஹம் வ்ருத்த்யா பஷு: - அடியேனுடைய செயலினாலே, நடத்தையாலே விலங்காகவே இருக்கிறேன். 

நரவபு: - ஆனால் ஆளைப் பார்த்தால் மனித உடல் கொண்டிருக்கிறேன். இந்த இரண்டில் எது என்று என்னைச் சொல்வது? அதுதான் எனக்கு இருக்கிற சாமர்த்தியமே. என்னை யாருன்னு முடிவுபண்ண உம்மை விடவே மாட்டேனே! உமக்கு ஆதிஶேஷன் அளவுக்கு சக்தி இருக்கும். ஆனால் நான் யார் என்று உம்மால் கண்டுபிடித்துவிட முடியாது. ஏனெனில் நான் மனுஷ்ய ரூபத்தில் இருக்கிறேன் அல்லவா? மனுஷ்யன் என்று நினைப்பீர். ஆனால் என் செய்கைகளோ விலங்கின் செய்கைகளாக இருக்கிறதனாலே இவன் விலங்கோ என்று கருதுவீர். விலங்குன்னு நினத்து கட்டிவைத்து புல்லைப் போடுவோம் என்று முயன்றால் நான் மனிதனாச்சே என்பேன். நீர் என்னதான் பண்ணுவீர்? இப்படி வைத்துக் கொள்ளலாம் இரண்டுகால் மாடு. ஆசார அநுஷ்டானம் ஒரு ஞானமிருக்காது. 

“ஞானேனஹீந: பஷுபி:ஸமாந:” ஆத்ம தத்துவக்ஞானம், பரமாத்வ ஞானம் இல்லையென்றால் பசுவுக்குச் சமானம்தான் என்று சொல்கிறது ஸாஸ்திரம். 

ஆகவே என்னுடைய வியாபாரத்தாலே நான் பசு. “ஜன்ய ஜனக வ்யபாகமற வர்த்திக்கும் பசு” பசுவுக்கு ஒப்பர். அது எத்தையோ சாப்பிடும். யாரோடும் வாழ்ந்துக்கும். ஒரு நியமும் இல்லை. அப்படித்தான் இருந்திருக்கிறேன் நானும். ஆனால் நரவபு: எடுத்திருக்கிற உடம்பைப் பார்த்தீரென்றால் நன்றாக ஸாஸ்திரம் சொன்னபடி நடக்கவேண்டிய மனித ஶரீரம். மனுஷ்ய ஸரீரம் என்று சொல்லிவிட்டால் வேதத்தைக் கற்றுக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும் அல்லவா? நடப்பாரா என்றால் இல்லை. மாடு பண்ணுவது போல நடந்துகொள்வார். 

ஈத்ருஸ: அபி – இப்படிப்பட்டவனாக ஒரே தோஷத்தோடு இருந்த போதிலும், என்னமா ஊரை ஏமாத்தி இருக்கிறேன் தெரியுமா? ராமானுஜரை சுத்தி சுத்தி வருகிறார். யதிராஜ விம்ஶதி எல்லாம் பாடியிருக்கிறார். தன்னைப் பற்றி எவ்வளவு எல்லாம் சொல்லிக் கொள்கிறார் பாருங்கள். இதைபோல பெரிய மனிதர்கள் யாராவது தன்னை தாழ்த்திச் சொல்வார்களா? நான் உடம்பால தான் மனுஷ்யன். என்னிடம் ஆசார அநுஷ்டானங்கள் எல்லாம் கிடையாது. எல்லாம் அவரிடம் இருக்கும். நான் தாழ்ந்தவனாகத் தான் இருக்கின்றேன். ஆனால் ஊர் என்ன சொல்லும் இவரைப் போல தன்னைத் தானே தாழ்த்திச் சொல்லிக்கொள்ளும் மஹானுபாவர் இருப்பாரோ? இவர்தான் ராமானுஜருடைய மறு அவதாரம் என்று அவர்கள் சொல்லுமளவுக்கு அவர்களை வஞ்சித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். நான் நேற்று வரை ஊர் விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டு உம்மிடம் வராமல் இருந்தேன். ஆனால் இன்றொ உம்மிடம் வந்துட்டேன். 

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக