அதிகப் பார்வை

62. சம்பாதி (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

கடற்கரையைச் சேர்ந்ததும் வானரர்கள் சுற்றிப் பார்த்தார்கள். வசந்த காலம் ஆரம்பித்து விட்டது என்பதைக் கண்டார்கள். அங்கதன் பேசலானான்:


“ஐயோ! காலவரை தாண்டிப் போயிற்று. சீதையைக் காணாமல், ஏதொரு துப்பும் அறிந்து கொள்ளாமல் கிஷ்கிந்தைக்குத் திரும்பினோமானால், அரசன் எனக்கு மரண தண்டனை விதிப்பான் என்பது நிச்சயம். என் மேல் சுக்ரீவனுக்கு அன்பு கிடையாது. ராமனுடைய ஆணைக்குப் பயந்தேதான் எனக்கு யுவராஜ்யப் பட்டம் தர சுக்ரீவன் ஒப்புக் கொண்டானேயொழிய, என்மேல் சிற்றப்பனுக்கு அன்பு கிடையாது. அங்கே போய் உயிர் விடுவதைவிட இங்கேயே பிராயோபவேசம் செய்து இறப்போம்” என்றான் அங்கதன்.


அங்கதன் சொன்னதே சரி என்றார்கள் பல வானரர்கள்.


தாரன், “அது சரியல்ல. நாம் ஏன் உயிர் நீத்து மாள வேண்டும்? தபஸ்வி சுயம்பிரபையினுடைய குகைக்குள் மறுபடியும் சென்று அங்கேயே சுகமாக உயிர் கழிப்போம். அவ்விடம் நமக்கு வேண்டியதெல்லாம் இருக்கிறது. அங்கே சுக்ரீவனாவது வேறு யாராவது பிரவேசிக்க முடியாது. நாம் சந்தோஷமாக ஆயுள் முழுதும் காலம் கழிக்கலாம்” என்றான்.


ஹனுமானுக்கு இந்த யோசனை சரியென்று தோன்றவில்லை.


“இதுவென்ன தகாத பேச்சுப் பேசுகிறாய்? நம்முடைய குடும்பங்களைக் கிஷ்கிந்தையில் விட்டு விட்டுக் குகைக்குள் உண்டு குடித்துத் தூங்கி உயிருடன் வாழ்வதில் என்ன சந்தோஷம்? சுக்ரீவனுக்கு அங்கதன் பேரில் துவேஷமில்லை. சுக்ரீவன் மிக நல்லவன். நாம் அவனைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. உண்மையில் சுக்ரீவனுக்கு நம் பேரில் கோபம் உண்டாகி நம்மைத் தண்டிக்க எண்ணம் கொண்டானானால் இந்தக் குகையில் நாம் எப்படி க்ஷேமமாக இருக்க முடியும்? லக்ஷ்மணனுடைய கோபத்தை அந்தக் குகை தாங்குமா? அதைப் பொடிப் பொடியாக்கி நிர்மூலம் செய்து விடுவான். ஆனபடியால் இந்த யோசனையில் நான் ஒன்றும் நன்மை காணவில்லை. நாம் திரும்பிப் போய் சுக்ரீவனிடம் உள்ளதைச் சொல்லி அவன் தயவைக் கேட்டு க்ஷேமம் அடையலாம்” என்றான் ஹனுமான்.


“ஹனுமான் சொல்லுவது சரியல்ல” என்றான் அங்கதன். “சுக்ரீவனுக்கு என் பேரில் கொஞ்சமும் இரக்கம் கிடையாது. என்னை அவன் கொல்லுவது நிச்சயம். அவன் மகா குரூர சுபாவம் கொண்டவன். வாலியை எப்படிக் கொன்றான், யோசித்துப் பாருங்கள். நான் உயிருடன் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது ஏதோ காரணம் வைத்து என்னை ஒழிப்பதே அவன் எண்ணம். அவனும் அவனுடைய மக்கள்மாரும் வானர ராஜ்யத்தை அடைந்து இடையூறின்றி வைத்துக் கொண்டு ஆளுவதற்கு நான் ஒரு தடை என்றே அவன் எண்ணுவான். செய்த பிரதிக்ஞையை மறப்பதே அவன் சுபாவம். சீதையைத் தேடித் தருவேன் என்று ராமனுக்குச் சொல்லி விட்டு அந்த வாக்குறுதியை மறந்தவன் அல்லவா? பிறகு லக்ஷ்மணனுடைய வில்லுக்குப் பயந்தல்லவா எங்களை அனுப்பினான்? என் தாயோ தன் பர்த்தாவை இழந்து துக்கப்பட்டும் கஷ்டப்பட்டும் சுக்ரீவனைக் கண்டு பயந்து அவனுடைய வசத்தில் அடங்கிப் போயிருக்கிறாள். என் மேல் தன் பிராணனை வைத்திருக்கிறாள். நான் இறந்தேன் என்று அவள் அறிந்தால் உயிரை நீப்பாள். எனக்காகத்தான் அவள் உயிரை வைத்திருக்கிறாள். ஐயோ, நான் என்ன செய்வேன்? மறுபடியும் கிஷ்கிந்தை திரும்பினாலும் என் மரணம் நிச்சயம். இங்கே உயிர் நீப்பதே மேல். பிராயோபவேசம் செய்து உயிர் நீப்பதே நலம்” என்று தீர்மானமாகச் சொல்லித் தரையில் தருப்பைப் புல் முறைப்படி பரப்பி, தெய்வங்களையும் பெரியோர்களையும் வணங்கி விட்டு, உயிர் நீக்கும் சங்கற்பம் செய்து, கிழக்கு முகம் பார்த்து உட்கார்ந்தான்.


யுவராஜனான அங்கதன் இவ்வாறு பிராயோபவேச விரதம் பூண்டதும் மற்ற வானரர்கள் எல்லாம் “ஓ!” என்று கதறியழுது அவர்களும் அப்படியே உயிர் நீத்துவிட நிச்சயித்து உபவாச சங்கற்பம் செய்து கிழக்கு நோக்கி உட்கார்ந்தார்கள்.

*

‘இப்படி நம் கதியாயிற்றே’ என்று உட்கார்ந்த வானரர் கூட்டத்தைக் கழுகரசனான சம்பாதி, பக்கத்தில் ஒரு மலைமேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். இறகுகள் இழந்து பறக்க முடியாமல் வெகு காலம் பட்டினியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சம்பாதி, ‘இத்தனை வானரர்கள் ஒரே இடத்தில் இறந்து போகப் போகின்றனர். எனக்கு உணவு சுலபமாகக் கிடைத்துவிட்டது’ என்று எண்ணிச் சந்தோஷமடைந்தான்.


அதே சமயம் வானரர்கள் மரணத்தை எதிர்பார்த்துத் தங்கள் துக்கத்தை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். “கைகேயியினால் அல்லவோ தசரதன் இறந்தான். தசரதன் இறந்து விட்டதால் அல்லவோ ராமன் காட்டில் இருக்க வேண்டியதாயிற்று. ராமன் காட்டில் இருந்ததாலன்றோ சீதையை ராவணன் தூக்கிப் போனது. வீரனான ஜடாயு சீதைக்காக உயிர் நீத்தான். இன்னும் கொஞ்ச நேரம் ஜடாயுப் பறவைக்குச் சக்தி இருந்து யுத்தத்தை நடத்தியிருந்தால் ராம லக்ஷ்மணர்கள் வந்து விட்டிருப்பார்கள். சீதையை மீட்டிருப்பார்கள். ஆனால் விதி இப்படியெல்லாம் செய்து விட்டது. முடிவில் நாம் மரணமடைய வேண்டியதாயிற்று.” இப்படித் தங்களுடைய துக்கத்தை ஒருவரோடொருவர் பேசிக் கொண்டும் பிரலாபித்துக் கொண்டும் இருந்தார்கள்.


இதைக் கேட்ட சம்பாதி, “என்ன என் அருமைத் தம்பி ஜடாயு இறந்தானா?” விஷயத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான்.


சம்பாதி மிகக் கிழப் பறவை. கருடனும் அருணனும் அண்ணன் தம்பிகள். அருணனுக்கு இரண்டு குமாரர்கள். ஜடாயுவும் சம்பாதியும். ஜடாயுவும் சம்பாதியும் சிறு வயதில் தாங்கள் பெற்ற அபாரசக்தியை அனுபவித்துக் கொண்டு ஒரு நாள் ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு உயரக் கிளம்பினார்கள். சூரியனை நெருங்க நெருங்க, வர வர வெப்பம் அதிகரித்து ஜடாயுவைக் கொளுத்தி விடும் போலிருந்தது. சம்பாதி தன் சிறகுகளை விரித்து ஜடாயுவை சூரியனுடைய நெருப்பின் வேகத்திலிருந்து காப்பாற்றினான். இதனால் ஜடாயு பிழைத்தான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போயிற்று. சம்பாதி பறக்க முடியாமல் கீழே மலைமேல் விழுந்தான். அதுமுதற் கொண்டு பறக்க முடியாமல் ஒரே இடத்தில் பசியினால் வாட்டப்பட்டான். ஆயினும் உயிரிழக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.


“அன்புக்குரிய என் தம்பி ஜடாயுவைப் பற்றித் துக்க சமாசாரம் யார் இங்கே பேசுவது? வானரர்களே! ஜடாயு இறந்தானா? சக்கரவர்த்தி தசரதனுடைய குமாரன் ராமன் ஏன் காட்டுக்குப் போனான்? எப்படி மனைவியை இழந்தான்? ஜடாயு ராவணனால் கொல்லப் பட்டானா? எனக்கு விவரம் சொல்லுங்கள்” என்று வருந்திக் கூக்குரலிட்டது.


வானரர்கள் பிராணனை நீப்பதற்கு உபவாசம் இருக்கவும், அந்த வானரப் பிணங்களைக் கஷ்டமில்லாமல் உணவாக அடைவேன் என்று சிறகு இழந்த கிழக்கழுகு ஆசைப்படவும் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியானது முடிவில் வேறுவிதமாக வடிவம் எடுத்தது.


வானரர்கள் எழுந்து சம்பாதியை அணுகி மெதுவாக அந்தக் கிழப் பறவையைக் கீழே நடத்தி வந்தார்கள். பிறகு விஷயங்களை ஒருவருக்கு ஒருவர் சொல்லி அறிந்தார்கள்.


சம்பாதி தன் கதையைச் சொன்னான். அங்கதன் கிஷ்கிந்தை வரலாற்றைப் பூரணமாகச் சொல்லி எப்படி ராமனுக்கு உதவலாம் என்று கேட்டான். சம்பாதிக்குத் தன் கண்களின் தூர திருஷ்டிச் சக்தி குறையவில்லை. இலங்கையில் சீதை சிறையிலிருப்பதை, தான் அங்கிருந்து பார்க்க முடியும் என்றும், தான் காணும் காட்சியையெல்லாம் விவரமாகச் சொன்னான்.


இலங்கையைப் பற்றியும் ராவணனுடைய ஐசுவரியத்தைப் பற்றியும் ஜானகி ராக்ஷசிகளின் காவலிலிருப்பதைப் பற்றியும் எல்லாம் கண்டு சொன்னான்.


வானரர்களுக்கு உற்சாகம் உண்டாகி “சீதையைப் பற்றி அறிந்து விட்டோம். இனி நமக்குப் பிராண பயமில்லை. ராம காரியம் வெற்றி பெறும்” என்று மகிழ்ச்சி பரவசமாகத் துள்ளிக் குதித்தார்கள்.


சம்பாதிக்கு ஏற்பட்ட கஷ்டமும் நீங்கிற்று. “ராம காரியத்தில் நீ உதவுவாய். அப்படி உதவியபோது உன் சிறகுகள் மறுபடி முளைக்கும்” என்று தான் பெற்ற வரம் அப்போது உண்மையாயிற்று. பேச்சு நடக்கும்போதே இளஞ்சிறகுகள் உடலில் முளைக்க ஆரம்பித்து, சம்பாதி மிக அழகுடன் பிரகாசித்தான். சிறகுகளை மறுபடி அடைந்த சம்பாதி, ஜடாயுவுக்குச் சமுத்திரத்தில் ஜலக்கிரியையும் செய்து திருப்தியடைந்தான்.



Post a Comment

புதியது பழையவை