சீதை சிறையில் கிடந்த இடமும் அரக்கன் இருந்த தேசமும் சம்பாதி சொல்ல வானரர்கள் தெரிந்து கொண்டார்கள். ஆயினும் சுக்ரீவனிடம் போய்ச் சொல்லுவதற்கு இது போதாதல்லவா? தாங்களே பார்த்தறியாமல் பிறர் சொன்னதை எடுத்துக் கொண்டு, தேடும் காரியத்தை நிறுத்தி விடுவது சரியல்ல. நேரில் கண்டு சம்பாதி சொன்னதெல்லாம் உண்மையென்று காண வேண்டும்; அதன்பின் தானே ராம காரியத்தைச் செய்து தீர்க்க முடியும்? கடலைத் தாண்டினால் அல்லவோ நேரில் பார்க்க முடியும்? இதற்கென்ன செய்வது என்று தெரியாமல் அங்கதன் திகைத்தான்.
கடலோரம் சென்று வானரர்கள் “இந்தக் கடலை நாம் எவ்வாறு தாண்டி இலங்கைக்குள் பிரவேசித்துச் சீதையைக் கண்டு திரும்புவது?” என்று மறுபடியும் கவலையிலும் பயத்திலும் மூழ்கினார்கள்.
அங்கதன் சொன்னான்- “எந்தக் காரியம் எப்படிச் சாதிக்க வேண்டியதானாலும் தைரியத்தை இழக்கலாகாது. தைரியமே முயற்சிக்கு அடிக்கட்டு. அதைரியம் எந்தவித முயற்சிக்கும் சத்ருவாகும்.”
பிறகு தன் படையிலுள்ள வீரர்களையெல்லாம் அவரவர்களுடைய தாவும் சக்தியைப் பற்றி உண்மையைச் சொல்லும்படி வேண்டினான்.
“வானர வீரர்களே! உங்களுடைய சாமர்த்தியத்தைப் பற்றி சுக்ரீவன் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் தேஜஸும் வீரியமும் நிறைந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் காரியத்தை நாம் முடித்தே தீரவேண்டும். சீதையைக் காணாமல் நாம் ஒருநாளும் கிஷ்கிந்தைக்குத் திரும்ப முடியாது. அரசனால் அவமானத்தோடு கொல்லப் படுவதைவிட இவ்விடமே நாமாக உயிர் நீப்பது நலம். ஆனபடியால், சொல்லுங்கள் ஒவ்வொருவராக, எவ்வளவு தூரம் தாண்டும் உறுதியும் நம்பிக்கையும் உங்களுக்கு இருக்கிறது?” என்றான்.
*
கஜன் “நான் பத்து யோஜனை தாண்டுவேன்'” என்று அடக்கத்துடன் சொன்னான். கவாக்ஷன் “நான் இருபது யோஜனை தாண்டுவேன்” என்றான். “நான் முப்பது யோஜனை தாண்டுவேன்” என்றான் மற்றொரு வானரத் தலைவன்.
இவ்வாறே பலர் முன் வந்தார்கள். ஒருவர் மேல் ஒருவர் உயர்ந்து கொண்டே போனார்கள். கடைசியாக எல்லாரையும் விட முதிய வீரனான ஜாம்புவான் பேசலானான்.
“நான் விருத்தாப்பிய தசை அடைந்திருக்கிறேன். ஒரு காலத்தில் கொஞ்சம் பலம் எனக்கு இருந்தது. இப்போது அசக்தனாக இருக்கிறேன். ஆயினும் இது அரசன் கட்டளையிட்ட வேலை. ராம காரியமாகவும் இருக்கிறது. கிழ வயதிலும் ஏதாவது செய்யலாம் என்று ஆசைப்படுகிறேன். தொண்ணூறு யோஜனை தாண்டுவேன். அதற்கு மேல் முடியாது. லங்கை போய்ச் சேர இது போதாது போலிருக்கிறதே! என் வாலிபப் பருவத்தை நினைத்து இப்போது கிழவனாகி விட்டேனே என்று வருத்தமாக இருக்கிறது” என்றான்.
இதைக் கேட்ட யுவராஜன் நான் நூறு யோஜனையும் தாண்டி லங்கை போய்ச் சேருவேன். சந்தேகமில்லை. ஆனால் அவ்விடத்திலிருந்து திரும்பி வர அவ்வளவு தூரம் மறுபடி தாண்டும் சக்தி எனக்கு இருக்குமோ இருக்காதோ சொல்ல முடியாது என்றான்.
ஜாம்புவான் சொன்னான்: “அரசகுமாரா! அதைப் பற்றி நீ சந்தேகப்பட வேண்டியதில்லை. வாலிக்கு இருந்தது போலவே உனக்கும் அளவற்ற சக்தி உண்டு. ஆயினும் இந்தக் காரியத்தை அரசனாகிய நீ வகித்தல் சரியாகாது. மற்றவர்களைக் கொண்டு அரசன் வேலை வாங்க வேண்டும். தானே நேரில் காரியங்களைச் செய்யப் போவது ராஜ நீதியாகாது. அபாயமாகும். பிரஜைகளைக் காத்து ஆளவேண்டியவன் பின்னால் நிற்க வேண்டும். அபாய காரியங்களில் தானே நேரில் பிரவேசிக்கக் கூடாது. நான் சொல்லும் யோசனை என்னவென்றால், அதோ தூரத்தில் மெளனமாக உட்கார்ந்திருக்கிறானே வாயு குமாரன், அவன்தான் இக்காரியத்தைச் செய்து முடிக்குந் திறமையும் சக்தியும் பெற்றவன்.”
இவ்வாறு சொல்லிவிட்டு ஜாம்புவான் ஹனுமானிடம் சென்று அவனை அழைத்து வந்தான்.
*
துயரத்தில் மூழ்கி நின்ற லக்ஷக்கணக்கான வானரர்களுக்கெதிரில் ஜாம்புவான் ஹனுமானைப் பார்த்துச் சொன்னான்:
“வீரனே, எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த சிரேஷ்டனே, தனியாக ஏன் பேசாமல் உட்கார்ந்திருந்தாய்? அரசனான சுக்ரீவனுக்குச் சமமல்லவோ நீ? தேஜஸிலும் பலத்திலும் நீ நம் அனைவரையும் தோற்கடிப்பாயல்லவோ? ராம லக்ஷ்மணர்களுக்குங் கூட நீ சமானமானவன் அல்லவோ? பக்ஷி சிரேஷ்டனான கருடன் கடலைத் தாண்டிப் பறப்பதை நான் பார்த்திருக்கிறேன். வினதையின் குமாரன் கருடனுடைய சிறகுகளின் பெரும் பலம் உன் தோள்களுக்கும் உண்டு. பராக்கிரமத்திலும் வேகத்திலும் கருடனுக்கு நீ குறைந்தவனல்ல. உன்னுடைய பலமும் புத்தியும் உனக்குத் தெரியவில்லை. உலகத்தில் உனக்குச் சமம் யாரும் இல்லை. உன் தாயார் அஞ்ஜனை தேவலோகத்து அப்ஸரஸ்; ரிஷியின் சாபத்தால் வானரியாகப் பிறந்தாள். அவள் மலைச் சாரலில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருந்த போது ஒரு நாள் வாயுதேவன் அவள் அழகைக் கண்டு காம பரவசமாகிப் போய் அடக்கம் இழந்து அவளைத் தழுவினான். தருமத்துக்குப் பயந்த அவள் ‘யார் பதிவிரதையாகிய என்னை, அவமானப் படுத்துவது, துஷ்டனே’ என்று கோபம் கொண்டு கேட்க, வாயுதேவன் சொன்னான்? “கோபிக்க வேண்டாம்! உன் தேகம் மாசுபடவில்லை. ஆசையால் தூண்டப்பட்டு நான் இந்தக் காரியம் செய்துவிட்டேன். தூர நிற்கிறேன். மனத்தாலேதான் நான் உன்னை ஆலிங்கனம் செய்தது. உன் உடல் என்னால் தீண்டப்படவில்லை. ஆயினும் என் மானஸ ஸ்பரிசத்தால் உனக்கு உண்டாகும் மகன் எனக்குச் சமமான வீர்யமும் பலமும் பெற்றவனாயிருப்பான். நிகரற்ற பராக்கிரமமும் புத்தியும் கொண்ட வானரன் ஆவான். இவ்வாறு வாயு பகவான் வினயமாகச் சொல்லி அஞ்ஜனையைச் சமாதானப் படுத்தினான்.
ஹனுமானே! நீ சிறு குழந்தையாக இருக்கும் போதே ஆகாயத்தில் கிளம்பிக் கிழக்கில் உதித்த சூரியனை ஒரு பழம் என்று எண்ணி அதைப் பிடிக்கச் சென்றாய். நீ கிளம்பித் தடையின்றி பயமின்றிச் செல்வதைப் பார்த்து தேவராஜன் கவலை கொண்டவனாய், ‘இது யார் சூரியனைப் பிடிக்கவே போகிறான்’ என்று வஜ்ராயுதத்தை உன் பேரில் வீசினான். இடியால் அடிபட்டு நீ விழுந்தாய். மலையின் மேல் விழுந்தபடியால் உன் வலது கன்னம் உடைந்தது. உன் தந்தை வாயுபகவான் உனக்கு நேரிட்டதைக் கண்டு பெருங்கோபம் கொண்டு தன் சலனத்தை நிறுத்தி விட்டான். அதன் பயனாக ஜீவகோடிகளனைத்தும் பிராண ஸ்தம்பம் அடைந்து வருத்தப்பட்டுத் தத்தளித்தன. தேவர்கள் வாயு பகவானைக் கோபம் தணிய வேண்டிக் கொண்டு இறைஞ்சினார்கள். பிரம்மனும் இந்திரனும் அச்சமயம் உனக்கு வரம் தந்தார்கள். உனக்கு எந்த ஆயுதத்தாலும் அழிவில்லை. நீ இஷ்டப் பட்டபோது உன் மரணம் வரும், அதுவரையில் இல்லை என்று நீ அவர்களிடம் வரம் பெற்றுச் சிரஞ்சீவியானாய். அஞ்ஜனை வயிற்றில் நீ வாயு பகவானுடைய மானஸ புத்திரனாகப் பிறந்தவன். வாயு பகவானுக்குச் சமமான தேஜஸும் புத்தியும் பராக்கிரமமும் பலமும் பெற்றிருக்கிறாய். இந்த பலத்தை நீ மற்ற துஷ்டர்களைப் போல் துர்விநியோகம் செய்யாமல் அடக்கமாக இருக்கிறாய். ராம காரியத்தை முடித்துத் தரக்கூடியவன் நீயே. சமுத்திரத்தைத் தாண்டுவது உனக்கு ஒரு கஷ்டமல்ல. பெருந்துயரக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வானரப் படையை நீ காப்பாற்ற வேண்டும். கடலைத் தாண்டும் சக்தியைப் பெற்றிருக்கும் நீ சும்மா இருக்கலாகாது. உன் வடிவம் பெருகுக. கருடனுக்கு நிகரானவன் நீ. நானும் ஒரு காலத்தில் பலம் பெற்றிருந்தேன். இந்த பூமண்டலத்தை இருபத்தோரு தடவை சுற்றி வந்திருக்கிறேன். பாற்கடலைக் கடைந்த காலத்தில் தேவர்கள் சொன்னபடி நான் நான்கு திசைகளிலிருந்தும் ஓஷதிகளைக்கொண்டு வந்து கடலில் சேர்த்தேன். ஆனால் இப்போது நான் விருத்தாப்பியம் அடைந்து விட்டேன். நீதான் வானரர்களுக்கு இப்பொழுது கதி. ஆஞ்சனேயா, உன்னைச் சரணம் அடைந்தோம். தெய்வீக சக்தியைப் பிதுரார்ஜிதமாகப் பெற்றிருக்கும் உத்தமனே, இனித் தாமதிக்க வேண்டாம். உன்னுடைய உண்மை பலத்தை அறிந்து கொண்டு கிளம்புவாய். திரிவிக்கிரமனைப்போல் ஒரே தாவுத் தாவி இந்தச் சமுத்திரத்தைத் தாண்டுவாய். நம்முடைய துயரத்தைத் தீர்ப்பாய்!”
இவ்வாறு விருத்தனான ஜாம்புவான் ஹனுமானைத் துதித்து, அவனுக்குள்ள பலத்தை அவனுக்கு எடுத்துக் காட்டித் தூங்கி நின்ற பராக்கிரமத்தை எழுப்பினான்.
உடனே பருவ காலத்துச் சமுத்திரம் போல் ஹனுமானுடைய வடிவம் வளர ஆரம்பித்தது. வானரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாயு புத்திரன் வளர்ந்து வளர்ந்து தேகமும் தேஜஸும் விருத்தியாகி திருவிக்கிரமனைப் போல் நின்றான். அவன் உடலினின்று வீசிய சுடரொளியைக் கண்டு அங்கதனும் மற்ற வானரர்களும் வியந்து ஆனந்த பரவசமானார்கள்.
இனி, ராமாயணத்தில் ஹனுமானே கதாநாயகன். விஷ்ணு பக்தர்கள் அவனைச் ‘சிறிய திருவடி’ என்று பெயரிட்டு அன்போடு சொல்வார்கள். பெரிய திருவடி கருடன். கருடன் எப்போதும் பெருமாளிடமே இருப்பதால் அவனுக்கு அந்தப் பெயர். இளைய திருவடி பிராட்டியின் துக்கத்தைத் தீர்த்து, ராவணனுடைய நகரத்தைக் கொளுத்தி அழித்துத் தன் நாதனிடம் சென்று 'கண்டேன் சீதையை' என்று தெரிவித்த வரலாறு இனிச் சொல்லப்படும்.
கருத்துரையிடுக