அடக்கத்தால் மறந்து கிடக்கும் தன் சக்தியை ஜாம்புவான் சொல்லத் தெரிந்துகொண்டு, ஹனுமான் ராம காரியத்தைச் செய்து முடிக்கச் சங்கற்பம் செய்து விட்டான். உடனே ஆவேசமாகத் தன் திட நிச்சயத்தையும் நம்பிக்கையையும் எடுத்துச் சொன்னான்.
“நீர் சொன்னபடியே ஆகுக. நான் குதித்துக் கிளம்பி ஆகாய மார்க்கமாகச் சென்று லங்கையில் இறங்கி ஜானகியைக் காண்பேன். நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். நான் திரும்பும் வரையில் இவ்விடமிருங்கள். கடலைத் தாண்டுவதற்குப் பூமியை மிதித்துத் தாவ வேண்டும். அந்த மிதியைத் தாங்குவதற்குத் தகுந்த இடம் இந்த மலை” என்று கூறி மகேந்திர மலையின்மீது ஏறினான்.
அங்கே தன் முழு பலமும் செலுத்திக் கொஞ்ச நேரம் காலால் தரையை மிதித்து நடந்து உலாவினான். அதுவே அந்த மலையிலிருந்த சகல பிராணிகளுக்கும் சங்கடமாகி விட்டது. மலையை விட்டு வெளியேறிவிட்டன. மலை மேலிருந்து ஹனுமான் கடலைப் பார்த்தான். மனத்தை ஏகாக்கிரப்படுத்தி லங்கைக்குச் செலுத்தினான்.
‘ராவணன் எடுத்துப் போன சீதா தேவியைத் தேடிக் காண்பேன். ஆகாய மார்க்கம் சென்று இந்தக் கடலைத் தாண்டுவேன்’ என்று மனத்தில் சங்கற்பம் செய்து சூரியனையும், இந்திரனையும், வாயுவையும், பிரம்மாவையும், பூத கணங்களையும் தியானித்து நமஸ்கரித்தான். பிறகு கிழக்கு முகமாக நின்று தன் அவுரஸ பிதாவாகிய வாயு பகவானை மறுபடி தியானித்து அஞ்சலி செய்து விட்டுத் தன் உடலை இன்னும் பெருக்கிக் கொண்டு தெற்கு முகம் நோக்கினான்.
மலையைத் தன் கால்களால் மிதித்துக் கைகளால் அடித்தான். அப்படி அடித்ததால் மலையிலிருந்த மரங்களினின்றெல்லாம் புஷ்பங்கள் உதிர்ந்து மலையெல்லாம் மலர் மயமாகிவிட்டது. அவன் மலைமேல் நடந்ததால் அந்த அழுத்தத்தைத் தாங்க மாட்டாமல் யானையின் கன்னத்திலிருந்து மதம் பெருகுவதுபோல் மலையிலிருந்து நீர் ஊற்றெடுத்துப் பெருகிற்று. பல நிற தாதுக்கள் மலையினின்று கிளம்பித் தெறித்து விழுந்தன. குகைகளினின்று மிருகங்கள் மிருகங்கள் கத்திக் கொண்டு வெளியே ஓடின. பாம்புகள் படமெடுத்துக் கொண்டு விஷம் கக்கிக் கொண்டு கற்களைக் கடித்தன. அதனின்று நெருப்புப் பொறிகள் பறந்தன.
மயிர் சிலிர்த்து நின்று ஹனுமான் பெரும் கர்ஜனை செய்தான். வாலைத் தூக்கித் தரையையடித்து உடலின் பின் பாகத்தைச் சுருக்கி, மூச்சையடக்கிக் கால்களை நன்றாக ஊன்றிக் காதுகளை மடக்கித் தன் பலத்தை விருத்தி செய்து கொண்டு வெற்றி கர்ஜனை செய்து கிளம்பி, கருடனைப்போல் ஆகாய மார்க்கமாக ராமபாணத்தின் வேகத்தோடு சென்றான்.
அவன் தாவிச் சென்ற வேகத்தால் பல மரங்கள் வேரோடு பறிக்கப்பட்டு அவன் கூடவே சென்றன. பிரயாணம் போகும்போது பந்துக்கள் கொஞ்ச தூரம் கூடச் செல்வதுபோல் அந்த மரங்கள் புஷ்பங்களை உதிர்த்துக்கொண்டே ஆஞ்சனேயன் கூட ஆகாயத்தில் சென்றன.
முன்காலத்தில் இந்திரனால் துரத்தித் தாக்கப்பட்ட மலைகள் சிறகு வெட்டப்பட்டுக் கடலில் விழுந்ததுபோல், வானர வீரனைத் தொடர்ந்து சென்ற மரங்கள் கடலில் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தன. பல நிறப் புஷ்பங்கள் சிதறி விழுந்த கடலானது ஆகாயம் நட்சத்திரங்களுடன் ஜொலிப்பது போல் பொலிவடைந்து பிரகாசித்தது.
வான வீதியில் வேகமாகச் சென்ற ஹனுமானுடைய கைகள் ஐந்து தலை நாகம் போல் விளங்கின. ஆகாயத்தை விழுங்கிக் கொண்டே போவது போல் சென்றான். அவனது கண்கள், மலையில் காடு பற்றி எரிவது போல் ஜொலித்தன; சிவந்த மூக்கு, சந்தியா சூரியனைப் போல் பிரகாசித்தது. நீண்ட தூமகேதுவைப் போல் ஆகாயத்தில் விளங்கிற்று, ஹனுமானுடைய பெரும் வடிவம்.
செல்லும் வேகத்தால் காற்று கர்ஜித்தது. ஆஞ்சனேயனுடைய நிழலானது ஒரு கப்பல் போல் ஜலத்தின்மேல் அவன் கூடச் சென்றது. ஆகாயத்தில் ஒரு பெரிய மலை சிறகுகள் கொண்டு பறப்பது போல் காணப்பட்டான். மேகங்களிடையில் மறைந்தும் தோன்றியும் சந்திரனைப்போல் பிரகாசித்தான். கந்தர்வர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள். தேவ ரிஷிகள் ஆசீர்வதித்தார்கள். வால்மீகி பகவான் சித்திரித்திருக்கிற இந்த சமுத்திரம் தாண்டும் காட்சியைத் தற்கால ரீதியில் சொல்ல வேண்டுமானால், ஆகாயத்தில் கிளம்பி மேகக் கூட்டத்தைக் கீழாக்கி மேலே பறந்து மிக வேகமாகக் கர்ஜித்துக்கொண்டு செல்லும் ஆகாய விமானத்தைப்போல் பறந்து சென்றான் என்றும் சொல்லலாம்.
சந்தர்ப்பத்துக்கேற்ற தைரியமும், அறிவும், ஆலோசனை சக்தியும், சிந்தனை வேகமும், நிகரற்ற சாமர்த்தியமும், வினைத் திட்பமும் கொண்ட ஹனுமானுக்கு வழியில் சில சோதனைகள் ஏற்பட்டன. அவற்றையெல்லாம் மிகத் திறமையாகச் சமாளித்துச் சென்றான்.
ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த சமயம் கடலில் மூழ்கி நின்ற ஒரு பெரிய பர்வதம் திடீரென்று மேலே வானளாவிக் கிளம்பிற்று. இதுவென்ன நடுவே வழியடைக்கிறது என்று அதைத் தன் மார்பால் தாக்கினான். காற்றால் அடிக்கப்பட்ட மேகம் போல் அந்த மைனாக மலை அசைந்தது.
“அப்பனே! நான் மைனாக பர்வதம். சமுத்திரராஜன் சகரர்களுடைய குலத்தில் உதித்த ராமசந்திரனுக்கு உதவ வேண்டுமென்று என்னை ஏவினான். சகர குலத்தாலல்லவோ சமுத்திரம் விருத்தி அடைந்தது? அந்தத் தொடர்பைக் கவுரவித்து நீ என்மேல் கொஞ்ச நேரம் இறங்கி நின்று தங்கிப் போவாய். இளைப்பாறிச் சென்றாயானால் ராம காரியத்தை நன்கு முடிப்பாய். இந்திரன் மலைகளையெல்லாம் வஜ்ஜிராயுதத்தால் அடித்துத் துன்புறுத்திய காலத்தில் பறந்து சமுத்திரத்தில் மூழ்கி மறைந்து இன்னும் உயிருடன் இருக்கிறேன். எனக்குச் சரணம் தந்த சமுத்திரம் உனக்கு உதவும்படி ஏவியதனால் நான் வந்தேன். சமுத்திரத்துக்கும் சகரன் குலத்துக்கும் தொடர்பு உண்டல்லவா? உன் தந்தை வாயுவால் அல்லவோ நான் இந்திரனுடைய வஜ்ராயுதத்தினின்று தப்பிப் பறந்து கடலில் ஒளிந்து கொள்ள முடிந்தது? விருந்தினனாய்க் கொஞ்ச நேரம் இளைப்பாறிச் சென்றாயானால் எனக்கும் சமுத்திர ராஜனுக்கும் சந்தோஷமாக இருக்கும்” என்று மைனாக மலை வருந்திற்று.
ஹனுமான், “அப்பா! நான் நிற்க முடியாது. காலதாமதம் ஆகும். ராமகாரியத்தில் நான் செய்திருக்கும் சங்கற்பம் இதற்கு இடம் தரவில்லை. நீ உபசரித்துச் சொன்ன மொழிகளே போதும், நான் மகிழ்ச்சியடைந்தேன்” என்று வினயமாகச் சொல்லி மலையைக் கையால் பிரியமாகத் தடவிக் கொடுத்து விடைபெற்று அங்கே நிற்காமல் சென்றான்.
பிறகு வழியில் ஒரு பெரிய ராக்ஷஸ வடிவம் “நீ என் வாய்க்குள் பிரவேசிப்பாய். வெகு காலமாக ஆகாரமின்றி உனக்காகவே காத்திருக்கிறேன்” என்று பெரும் குகையைப் போல் வாயைத் திறந்தது. “ராம காரியமாக நான் போய்க் கொண்டிருக்கிறேன். தடுக்காதே” என்றான் ஹனுமான்.
“முடியாது. என் வாய்க்குள் புகுந்தே தீருவாய்” என்றது அந்த ராக்ஷஸ உருவம்.
உடனே ஹனுமான் இன்னது செய்ய வேண்டுமென்று தீர்மானித்து வரவரத் தன் தேகத்தை வளரச் செய்து கொண்டான். சுரஸை என்கிற நாகமாதாவானவள் பூண்ட அந்த அரக்க வடிவமும் வாயை அதற்குத் தகுந்தபடி பெரிதாகச் செய்து கொண்டே போயிற்று. இப்படி மிகப் பெரிதாக வாய் திறந்ததும் திடீர் என்று ஹனுமான் தன் தேகத்தை அணுவளவாகச் சிறிதாக்கிக் கொண்டு அந்தப் பேய் வாய்க்குள் புகுந்து அவள் உடலினின்று வெளிப்பட்டு விட்டு மறுபடியும் தன் பெரிய உருவம் தரித்துக் கொண்டான்.
“உன் தீர்மானம் நிறைவேறிவிட்டது. தாயே! உன் வாய்க்குள் நான் பிரவேசித்து ஆய் விட்டது. இனி உனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை” என்று ஹனுமான் சிரித்துக்கொண்டு சொன்னான்.
அதைக் கேட்ட அந்த நாகமாதாவும், “உன் காரியம் வெற்றியுடன் முடியும். தேவர்கள் உன்னைச் சோதிக்கவே இந்த வடிவத்தை எடுத்து இதைச் செய்யச் சொல்லி நானும் செய்தேன். நீ போகும் ராம காரியம் நிச்சயமாக வெற்றி பெறும்” என்று ஆசீர்வதித்து அனுப்பினாள்.
இந்தச் சோதனையுடன் ஹனுமானுடைய கஷ்டம் தீரவில்லை. ஆகாய மார்க்கமாக மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது காரணம் ஏதும் தெரியாமல் தன் வேகம் தடைப்பட்டு எதிர் காற்றில் சிக்கிய கப்பல் போல் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டான். ஏதோ பெரும் சக்தி தன்னைப் பிடித்துக் கொண்டு இழுப்பதாக உணர்ந்தான்.
நான்கு பக்கமும் மேலும் கீழும் பார்த்தான். அப்போது காரணத்தைக் கண்டான். கடலில் ஒரு பெரும் பூதத்தைக் கண்டான். அது வானர வீரனுடைய நிழலைப் பிடித்து அதன் மூலம் அவனுடைய வேகத்தைத் தடுத்து அவனை இழுத்துக் கொண்டிருந்ததைக் கண்டான்.
“உனக்காகவே காத்திருக்கிறேன். வா! எனக்குப் பொறுக்க முடியாத பசி” என்று சொல்லி அந்த நிழல் பிடி பூதம் தன் வாயைப் பெருங்குகை போல் திறந்தது. உடனே ஹனுமான் அந்த அரக்கியின் வாய்க்குள் புகுந்து உள்ளே தன் நகங்களால் அவளுடைய உயிர் நிலைகளைக் கிழித்துக் கொண்டு வெளி வந்து விட்டான். பூதம் உயிரிழந்து கடலில் மூழ்கிற்று. கிரகணம் தீர்ந்த சந்திரன் போல் மறுபடியும் ஹனுமான் ஆகாயத்தில் விளங்கிச் சென்றான்.
இப்படிப் பல சோதனைகளைத் தாண்டித் தன் நுட்பமான அறிவு, தைரியம், பலம், திறமை இவற்றைக் கொண்டு வெற்றியுடன் கடலைத் தாண்டிப் பறந்து வாழையும் தென்னையும் நிறைந்து விளங்கிய லங்கைக் கரைக்கு அருகே வந்து விட்டான். லங்கா தீவின் கடற்கரைச் சோலைகளையும் மலைகளையும் ஆறுகள் கடலில் சேரும் இடங்களையும் வனங்களையும் கண்டான்.
ராவணனுடைய தேசத்தின் வளத்தையும் அமராவதி நகரத்துக்குச் சமமான அழகையும் ஹனுமான் கண்டான்.
“போக வேண்டிய இடம் சேர்ந்து விட்டேன். இனி அரக்கர்களுக்கு நான் யார், எத்தகையவன் என்பது தெரியாதபடி சீதை இருக்குமிடத்தைத் தேட வேண்டும்” என்று யோசித்துத் தன் விசுவ ரூபத்தைச் சுருக்கிக் கொண்டு, சாதாரண வடிவத்தோடு ஹனுமான் லங்கையில் ஒரு மலைமேல் இறங்கினான்.
கருத்துரையிடுக