65. எங்கும் தேடினான் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

லங்கையில் ஹனுமான் இறங்கினான். மிக உற்சாகமாகவும் மகிழ்ச்சி கொண்டவனுமாக இறங்கினான். பிறகு நிதானமாக யோசிக்கலானான்.


“கடலைத் தாண்டி விட்டேன். உண்மைதான். ஆயினும் அதனால் வேலை முடிந்து போகவில்லை. திரிகூடமலை மேல் ராவணனுடைய பெரிய நகரம் ஆகாயத்தில் தொங்குவதுபோல் காணப்படுகிறது. ஆஹா! எவ்வளவு அழகு! எவ்வளவு செல்வம்! எவ்வளவு ஆயுதக் காப்பு! அமராவதி, போகவதி நகரங்களுக்குச் சமானமான நகரமும் கோட்டையுமாக இருக்கிறது. வனங்களின் வனப்பும் மாளிகைகளின் அழகும் மதிற்சுவர்கள், காவல் யந்திரங்கள், அகழிகள் இவற்றையெல்லாம் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இந்த ராவணனை எவ்வாறு எதிர்த்து ஜெயிப்போம்? நான் தாண்டிய கடலை நம்முடைய சேனை எப்படித் தாண்டிவர முடியும்? தாண்டி வந்தாலும் இந்தக் கோட்டையை எப்படித் தாக்கி வெற்றியடைவோம்? ஆயுதபாணிகளாக நிற்கும் அரக்கர்களால் காக்கப்படும் இந்த நகரத்தை சாமம், பேதம், தானம், யுத்தம் எதனாலும் தகர்க்க முடியாது போலிருக்கிறது. ஆயினும் சீதை உயிரோடிருக்கிறாளா, இல்லையா என்பதை முதலில் காண வேண்டும். பிறகு மற்ற யோசனையெல்லாம்! ராவணனால் காக்கப்படும் இந்த நகரத்துக்குள் நான் எவ்வாறு எப்போது பிரவேசித்தல் நலம்? ஓரிடம் விடாமல் தேடினால் அல்லவோ சீதையை மறைத்து வைத்திருக்கும் இடத்தைக் காண முடியும்? யோசனை செய்யாமல் தவறான முறையில் நான் ஏதேனும் இப்போது செய்து விட்டேனானால் முதல் பிழை முற்றும் பிழையாகிப் போய், ராம காரியம் என்னால் கெட்டுப் போனதாகும். பகலில் பிரவேசித்தால் இந்த அரக்கர்கள் எளிதில் என்னைக் கண்டுகொள்வார்கள். இரவிலே தான் நகரத்துக்குள் நான் புகவேண்டும். எந்த உருவத்தை எடுத்து நான் பிரவேசிக்கலாம்? அரக்கர்கள் என்னைக் கண்டு சந்தேகப்படாத மிகச் சிறிய அற்ப உருவம் எடுத்துச் செல்ல வேண்டும்.”


இவ்வாறு யோசித்து ஒரு பூனையளவான சிறு குரங்கு உருவம் எடுத்துக் கொண்டான். நகரத்துக்குள்ளும் மாடமாளிகை உபவனம் முதலிய எல்லா இடங்களிலும் பிரவேசித்துத் தேடுவதற்கு அதுவே சவுகரியம் என்று தீர்மானித்தான். தீர்மானித்த உடனே வாயுபுத்திரன் தன் இயற்கை உருவத்தைச் சுருக்கிக் கொண்டு விட்டான். பிரம்மாண்ட பெரிய வடிவமாகிக் கடலைத் தாண்டிய ஹனுமான் ஒரு சிறு குரங்கானதை யாராவது கண்டிருந்தால் மிக வியந்திருப்பார்கள்.

*

இப்படி ஆஞ்சனேயன் சிறு குரங்கு வடிவம் எடுத்த சமயம் சூரியன் அஸ்தமித்து விட்டான். ஹனுமான் கோட்டை வாயில் நோக்கிச் சென்றான். அச்சமயத்தில் சந்திரன் தோன்றி எங்கும் நிலா நிறைந்தது. தேடும் வேலைக்குச் சகாயமாகவே சந்திரன் தோன்றியிருக்கிறான் என்று எண்ணி, ஹனுமான் உற்சாகத்தோடு சென்றான்.


மதிலால் காக்கப்பட்ட ராவணனுடைய நகரத்தின் அழகும் செல்வமும் போகமும் தூரத்திலிருந்து பார்க்கும்போதே ஹனுமான் மிகவும் வியந்தான். வீதிகள், மாளிகைகள், தோரணங்கள், அலங்காரங்கள், கொடிகள், எல்லாம் பொன் வெள்ளி ரத்தின மயமாக ஜொலித்தன. சமுத்திரக் சமுத்திரக் காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. இந்திரனுடைய அமராவதியும் குபேரனுடைய அளகாபுரியும் போல் ராவணனுடைய நகரம் ஐசுவரியத்தின் உச்சியை அடைந்திருந்ததைக் கண்டான். வியப்பு ஒரு பக்கம், மற்றொரு பக்கம் இவ்வளவு பலமாகக் காக்கப்பட்டு ஐசுவரியம் நிறைந்த இந்தக் கோட்டையையும் நகரத்தையும் இதைப் பரிபாலித்து வரும் அரக்கனையும் எவ்வாறு வெல்வது என்கிற கவலை ராம தூதனுக்கு வளர்ந்தது.


இப்படி வியந்தும் கவலை கொண்டும் பார்த்துக் கொண்டே சென்றபோது அந்த நகரத்து அதிதேவதை பயங்கர வடிவத்துடன் ஹனுமானுக்கு எதிரில் நின்று, “யார் நீ குரங்கு? இங்கே எவ்வாறு வந்தாய்? ஏன் வந்தாய்? உண்மையைச் சொல்” என்று அதட்டிக் கேட்டாள்.


“நான் குரங்கு தான். இந்த அழகிய நகரத்தைப் பார்த்துப் போக வந்திருக்கிறேன். எல்லாம் சுற்றிப் பார்த்து என் ஆசையைத் தீர்த்துக் கொண்டு திரும்பிப் போவேன்” என்றான் ஹனுமான்.


லங்காதேவதை கோபங் கொண்டு “குரங்கே!' என்று ஹனுமானை ஒரு அறை அறைந்தாள். 


ஹனுமானும் தன் இடது கையால் லங்காதேவியை ஒரு குத்துக் குத்தினான். கோர வடிவம் கொண்ட தேவதை அந்தக் குத்தைத் தாங்க முடியாமல் கீழே சுருண்டு விழுந்தாள்.


விழுந்த லங்கா தேவதை எழுந்து “ஒரு வானரத்தால் அடிபட்டு எந்த நாளில் நீ தோற்றுக் கீழே விழுவாயோ அன்று உன் நகரத்துக்கு முடிவு என்கிற வாக்கு உண்மையாகும் போலிருக்கிறது. ராவணனுடைய பிழைகள் முற்றிப் போயிற்று. இனி லங்கை அழிய வேண்டிய காலம் வந்து விட்டது. தேவர்கள் சொன்னது நிறைவேறப் போகிறது” என்று சொல்லி விட்டு ஒதுங்கி நின்றாள்.


லங்கா தேவதை ராவணனுக்குக் கீழ்ப்படிந்த ஆள் அல்ல. அந்த நகரத்தின் விதியே இந்தச் சொரூபம்.


குரங்காகிய ஹனுமான் மதில் ஏறி உள்ளே குதித்துப் பிரவேசித்தான். விரோதிகளுடைய கோட்டைகளுக்குள் சாதாரண வாயில் வழியாகச் செல்லல் ஆகாது, வழியில்லாத வழியில் செல்லவேண்டும் என்பது பழைய யுத்த நீதி சாஸ்திரம். அரக்கர்கள் அழிய வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டு ஹனுமான் லங்கா நகரத்துக்குள் இடது காலை முன் வைத்துப் பிரவேசித்தான்.

*

அழகிய புஷ்பங்கள் உதிர்ந்து மிகப் பொலிவடைந்திருந்த ராஜவீதியில் சென்றான். மேகங்களுக்கு இடையில் மின்னல் வீசிப் பிரகாசிப்பது போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன மாட மாளிகைகளெல்லாம். அவற்றின்மேல் ஏறிச் சென்றான். மாளிகைகளின் சௌந்தரியத்தை அனுபவித்துக் கொண்டே சென்றான்.


சொல்லுக்கு அடங்காத அழகுடன் அரக்கர்களின் மாளிகைகளும் அலங்காரங்களும் தெருக்களும் பிரகாசித்தன. சங்கீத சாஸ்திரோக்தமாகப் பாடிய பாட்டுக்கள் கேட்டன. அழகிய பெண்டுகளும் அவர்கள் கால்களின் ஆபரணங்களுடைய சப்தமும் நிறைந்த மாளிகைகளைக் கண்டான். எங்கும் குதூகல ஆரவாரங்கள். சில வீடுகளில் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டிருப்பதைக் கேட்டான். சில வீடுகளில் அரக்கர்கள் வேதம் ஓதிக் கொண்டிருப்பதைக் கேட்டான். சில வீடுகளில் ராவணனை ஸ்துதி செய்து கொண்டிருக்கும் சப்தத்தைக் கேட்டான். யுத்த வீரர்களும் சாரர்களும் நிறைந்திருந்த வீதிகளைப் பார்த்தான். வைதீக முறையில் விரதம் பூண்டிருந்த பலரையும் இன்னும் அநேக காட்சிகளையும் கண்டான். கோரமான வடிவங்களும் குரூர வடிவங்களும் கண்டான். வில்லும், கத்தியும், பெருந்தடிகளும், கல் வீசும் கவண்டையுறிகளும், சூலாயுதங்களும், எறியும் வேல்களும், இன்னும் பல யுத்தப் படைகள் வைத்துக் கொண்டு நிற்பவர்களைக் கண்டான். வீரர்கள் எல்லாரும் கவசங்கள் பூண்டிருந்தார்கள்.


சிலர் மிக அழகாக இருந்தார்கள். சிலர் மிக கோரமாக இருந்தார்கள். சிலர் வெளுப்பு, சிலர் மிகக்கருப்பு, சிலர் சிவப்பு, சிலர் சாதாரண வடிவம், சிலர் மிகக் குள்ளம், சிலர் மிக உயரம். இவ்வாறு நானாவித வடிவங் கொண்ட ஜனங்களைக் கண்டான்.


மாளிகை மாளிகையாகப் பார்த்துக் கொண்டே ஹனுமான் சென்றான். மகோன்னத அழகைக் கொண்ட பல ஸ்திரீகளைக் கண்டான். நாயகர்களுடன் சந்தோஷமாக இருப்பவர்களைக் கண்டான். உருக்கி விட்ட தங்கத்தைப் போன்ற நிறம் கொண்ட யௌவனப் பெண்மணிகள் பலரைக் கண்டான். சிலர் உப்பரிகையில் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் விளையாடிக் கொண்டும் பாடிக் கொண்டுமிருந்தார்கள். இவ்வாறு கணக்கற்ற ஸ்திரீகளைக் கண்டான். ஆனால் துக்கப் பட்டு இளைத்துப் போய் ராமனையே தியானம் செய்து கொண்டிருக்கும் சீதையைக் காணவில்லை. சௌந்தரிய வடிவங்களையெல்லாம் கண்ட ஹனுமானுடைய உள்ளத்தில் துக்கமே நிறைந்து நின்றது.

பல அரக்க வீரர்களுடைய மாளிகைகளில் ஒவ்வொன்றாகப் பிரவேசித்துப் பார்த்தான். யுத்த யானைகளும் ஜாதிக் குதிரைகளும் தேர்களும் ஆயுதசாலைகளும் எங்கும் நிறைந்திருந்தன. எங்கும் வீரர்கள் ஆயுதபாணிகளாய் நின்றார்கள். ஸ்திரீகளும் விளையாட்டுக்களும் பாட்டும் சங்கீத வாத்திய முழக்கமுமாக ஆனந்த மயமாயிருந்த மாளிகை வரிசைகளையும் தோட்டங்களையும் பார்த்து விட்டுப் பிறகு மலை போல் உயர்ந்து நின்ற ஒரு மிகப் பெரிய அரண்மனையைக் கண்டான். அதன்முன் நின்ற யானை, குதிரை, காலாட் படைகளையும் அதைச் சுற்றியிருந்த மதிலையும் மாளிகையின் அபார அழகும் ஆபரண தோரணங்களும் பார்த்து இதுவே ராவணனுடைய அந்தப்புரம் என்று தெரிந்து கொண்டு செல்வ மயமான லங்கா நகரத்துக்கே ஒரு சுடர்விட்டு ஜொலிக்கும் ஆபரணம் போலிருந்த அந்த அரண்மனைக்குள் பிரவேசித்தான்.


பூவுலகத்தில் ஒரு சுவர்க்கம்போல் அந்த அரண்மனை விளங்கிற்று. ராவணனுடைய நிகரற்ற பராக்கிரமத்துக்கும் பலத்துக்கும் தகுந்த அரண்மனையாகவே இருந்தது. தோட்டமும் தோட்டத்தில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த பறவைகளும் அங்கங்கே மனத்தைக் கவரும் சித்திரங்களால் சித்திரிக்கப்பட்ட விஹார ஸ்தலங்களும் கண்டு ஹனுமான் ஆச்சரியத்தில் மூழ்கினான்.


“ஆகா! என்ன செல்வம்! என்ன அற்புத சுகம்!” என்று வியந்தான். உடனே வியப்பு கலைந்து, “ஜானகியைக் காணவில்லையே! வந்த காரியம் முடியவில்லையே! அற்புதங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போவதில் என்ன பயன்?” என்று ராம காரியக் கவலையில் மூழ்கினான்.

அந்த மாளிகைகளுக்கிடையில் ராவணனுடைய பிரத்தியேக அரண்மனைக்குள் சென்று அங்கே எல்லா பாகங்களிலும் நுழைந்து பார்த்தான். 'இது சுவர்க்கமோ? இது தேவலோகமோ?' என்று ஆச்சரியமடையும்படியான அலங்காரங்களும் தங்கமும் வெள்ளியும் தந்தமும் ரத்தினங்களும் முத்தும் மிக நுண்ணிய சிற்ப வேலை செய்த கம்பங்களும் சித்திர வேலைப் பண்டங்களும் கண்டான். மத்தியில் புஷ்பக விமானத்தைப் பார்த்தான்.


அது பிரம்மாவிடம் குபேரன் அடைந்த அற்புத விமானம். குபேரனை ஜெயித்து ராவணன் அதை லங்கைக்குக் கொண்டு வந்து வைத்திருந்தான். வசிஷ்டருடைய பசுவைப்போல் எதை வேண்டினாலும் தரும் அந்த அற்புத விமானத்தைப் பார்த்தான்.


ராவணனுடைய அந்தப்புரத்தில் நுழைந்தான். அது ஒரு போக சமுத்திரமாகவே இருந்தது. எண்ணற்ற அழகிய ஸ்திரீகள் தூங்கிக் கொண்டிருந்த அந்த விஸ்தாரமான இடம் பல நிறப் பூங்கொடிகள் நிறைந்த வனம்போல் பிரகாசித்தது. வந்த காரியத்தை அனுசரித்து ஹனுமான் படுத்திருந்த ஸ்திரீகளையெல்லாம் பார்த்தான். படுத்துத் தூங்கியிருந்த அவர்கள் ஒருவரைக் காட்டிலும் ஒருவர் சௌந்தரியமாகவும் காம மயக்கத்தில் ஈடுபட்டவர்களாகவும் காணப்பட்டார்கள். எல்லாருமே சந்தோஷமாகவும் சம்மதமாகவும் இருந்த காட்சியை மாருதி அங்கே பார்த்தான். ராவணனுடைய காம ரூபச் சக்தியும் பௌருஷமும் அந்த திவ்விய சௌந்தரிய ஸ்திரீகளை முற்றிலும் வசப்படுத்தியிருந்ததைக் கண்டான்.


“இந்த மாதர் கூட்டத்தில் சீதை இல்லையென்பது நிச்சயம். அவள் ஒருநாளும் அரக்கனுக்கு வசப் பட்டிருக்க மாட்டாள் அல்லவோ? அவளை இங்கே நான் தேடுகிறேனே. நான் எவ்வளவு பைத்தியக்காரன்! சீதை இவர்களுக்குள் ஒருத்தியாக இருக்க முடியாது” என்று தீர்மானித்தான்.


பிறகு பார்த்துக்கொண்டே சென்றான். ஒரு அறையில் அநேக சிறந்த சயனாசனங்களைக் கண்டான். தந்தமும் தங்கமும் வைடூரியங்களும் இழைத்த பல அழகிய மஞ்சங்களுக்கிடையில் ஒரு மிகச் சிறந்த மஞ்சத்தைக் கண்டான். அதன்மேல் மேருமலை படுத்துத் தூங்குவதைப் போல் படுத்திருந்தான் ராவணன். அந்த அரக்கனுடைய வடிவத்தின் கம்பீர அழகும் பொலிவும் ஹனுமானை ஒரு கணம் நடுங்கச் செய்தன.


ஒதுங்கி நின்று பார்த்தான். யானைத் துதிக்கைகளைப் போன்ற கைகளும், மார்பில் ஐராவத யானையின் தந்தத்தால் குத்தப்பட்ட காயக்குறியும் உடம்பில் இந்திரனுடைய வஜ்ராயுதத்தாலும் விஷ்ணு சக்கரத்தாலும் உண்டான வடுக்களும் பார்க்கப் பார்க்க அரக்கனுடைய கம்பீர அழகு மாருதியின் மனத்தைக் கவர்ந்தது.


அதன்மேல் அங்கே சுற்றிலும் படுத்துத் தூங்கும் பல ஸ்திரீகளைப் பார்த்தான். கீதம் பாடிக் கொண்டே தூங்கிப்போன பல ஸ்திரீகள் அவரவர்களுடைய வாத்தியச் சாமான்களைக் கட்டிக் கொண்டு அப்படியே கிடந்தார்கள்.


அப்பால் ஒரு திவ்விய மஞ்சத்தின்மேல் ஒரு ஸ்திரீ படுத்திருந்ததைக் கண்டான். அந்தப்புரத்துத் தலைவியாக விளங்கினாள். அவளுடைய அவயவ அழகும் முக லக்ஷணமும் கண்டு இவளே சீதை என்று ஹனுமான் ஒரு கணம் சந்தேகித்தான். முகத்தில் உத்தம குணங்களைக் கண்டான். ‘கண்டு விட்டேன் சீதையை' என்று குதித்தான். அடுத்த கணம் “சீ! இது என்ன மடமை! சீதை இப்படிச் சுகமாகத் தூங்குவாளா? இப்படி ஆபரணங்கள் பூண்டு அன்னிய புருஷனுடைய அறையில் படுப்பாளா? இப்படி நான் எண்ணியது பெருங்குற்றம்” என்று தனக்குள் சொல்லித் துயரத்தில் மூழ்கினான்.


பிறகு, “தனக்குச் சம்மதிக்காதபடியால் சீதையை இந்த அரக்கன் கொன்றுவிட்டேயிருப்பான், நான் தேடித் தேடிச் செல்வதில் என்ன பயன்?” என்று எண்ணினான்.

*

ராவணனுடைய அந்தப்புரம் முழுதும் பார்த்து விட்டான். படுக்கும் இடம், சாப்பாட்டுச்சாலை, பான சாலை, சங்கீத சாலை, இன்னும் பல இடங்களும் நன்றாகத் தேடிப் பார்த்தாயிற்று. எங்கும் சீதையைக் காணவில்லை.


“சீதையைத் தேடிக் காண்பதற்காக நுழையக் கூடாத இடமெல்லாம் நுழைந்து பார்த்தேன். ஸ்திரீகள் படுத்திருக்குமிடம் புகுந்து தருமத்தைக் கூட ஓரளவு புறக்கணித்து விட்டேன். காரியம் சித்தியாகவில்லை”யென்று துயரப்பட்டு பானசாலையை விட்டு வெளியே தோட்டத்துக்குள் சென்று அங்கே பற்பல கொடிகளால் பின்னப்பட்ட பந்தல்களிலும் கொட்டகைகளிலும் விஹார ஸ்தலங்களிலும் தேடினான். எங்கும் காணவில்லை.


“லங்கா நகரம் முழுவதும் பார்த்தாய் விட்டது. ராவணன் அரண்மனை முழுதும் தேடியாய்விட்டது. இனி என்ன இருக்கிறது? சீதையைக் காணாமல் திரும்புவதா? இங்கேயே என் உயிரைத்தான் விடவேண்டும். அதுவே நான் செய்யக் கூடியது” என்று தீராத துக்கத்தில் மூழ்கினான்.

*

மறுபடியும் “சீ! சீ! இப்படி மனத்தாழ்ச்சி அடையலாகாது. தீரனுக்கு இது தகுந்த லக்ஷணமல்ல” என்று கிளம்பி மறுபடியும் ஒரு அங்குலம் மிச்சமின்றி எல்லா இடங்களையும் நன்றாகக் கவனித்துத் தேடிப் பார்த்தான். மூடியிருந்த கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து பார்த்தான். கோர ரூபமான ராக்ஷஸப் பெண்களையும், மிக சவுந்தரியமான பல மானுடப் பெண்களையும் நாக கன்னிகைகளையும், அரக்கன் அபகரித்து வந்த பல அழகிகளையும் கண்டான். சீதையைக் காணவில்லை.


இன்னது செய்வது என்று தோன்றாமல் ஹனுமான் மனம் மிகத் தத்தளித்தது. “காரியம் கைகூடவில்லையென்று கிஷ்கிந்தைக்குத் திரும்பினால், கேட்போருக்கு நான் என்ன சொல்லுவேன்? சீதையைப் பற்றி இனி ஆசையில்லையென்றால் ராமன் கதியென்ன வாகும்? உயிரை விடுவான். அதற்குப் பிறகு மற்றவர்கள் கதியென்ன? என் முயற்சி வீணாயிற்று என்று சுக்ரீவனிடம் சொல்வதை விட இங்கேயே நான் காட்டிலும் சமுத்திரக் கரையிலும் வாழ்நாளைக் கழித்து விடுவது மேலாகும். அதுதான் ஏன்? தற்கொலை செய்து கொள்வதே நலம். சீதை லங்கையில் இருக்கிறாள் என்று சம்பாதி சொன்ன சொல் பொய்யா? அல்லது இவ்விடத்தில் இருந்தவள் துஷ்ட ராக்ஷசனால் கொல்லப்பட்டாளா? அவளை அரக்கிகள் தின்று விட்டுமிருக்கலாம். ஒன்றும் தோன்றவில்லையே. என்ன செய்வேன்!” என்று இப்படி ஹனுமான் பலவாறாகச் சிந்தித்துச் சிந்தித்துக் கவலைக் கடலினின்று கரையேற வழி தெரியாமலிருந்தான். அச்சமயம் உயர்ந்த மதிலால் சூழப்பட்ட ஒரு விஹார வனத்தைக் கண்டான்.


“ஆஹா! இந்த இடம் நான் தேடவில்லை. இங்கே கட்டாயம் சீதையைக் காண்பேன்!” என்று. வாயு புத்திரன் ராமன், லக்ஷ்மணன், சீதை, சுக்ரீவன் இவர்களைத் தியானித்தான். ருத்ரன், இந்திரன், யமன், வாயு, சந்திரன், சூரியன், மருத்கணங்கள் இவர்களை மனத்தால் வணங்கிப் பிரார்த்தனை செய்தான்.


“இது ஒரு தனி நந்தவனமாக இருக்கிறது. நன்றாகக் காக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்திலே சீதை வைக்கப் பட்டிருக்கிறாள் என்பது நிச்சயம்” என்று ஹனுமானுடைய உள்ளத்தில் ஒரு நம்பிக்கை தோன்றிற்று.


மறுபடியும் தேவர்களையெல்லாம் நமஸ்கரித்து விட்டு அந்த அசோகவனத்துச் சுவர்மேல் குதித்து ஏறி நின்றான். மிக அழகிய ஒரு உத்தியான வனம் கண்டான்.



Post a Comment

புதியது பழையவை