66. அசோகவனத்தில் சீதை (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

அந்த வனத்து மதில் சுவரின்மேல் நின்றதும் ஹனுமானுடைய உள்ளத்திலும், சரீர அவயவங்கள் முற்றிலுமே ஒருவித ஆனந்த உணர்ச்சி ஊடுருவிப் பாய்ந்தது. சீதை இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டபடியால் தன்னையும் அறியாமல் இந்த மகிழ்ச்சி உற்பவமாயிற்று.


வசந்த காலத்துத் துவக்கத்தில் மலரும் புஷ்பங்கள் எல்லாம் பூத்து மரங்களும் கொடிகளும் மிக ரம்மியமான காட்சி தந்தன. அடர்த்தியாக மரங்கள் இருந்த ஒரு இடத்தைப் பார்த்து அங்கே ஹனுமான் தாவிச் சென்றான். அந்த அதிர்ச்சியினால் எழுப்பப் பட்ட குயில்களும் மயில்களும் மதுரமாகச் சப்தித்தன. மான்களும் வேறு மிருகங்களும் நடமாடிக்கொண்டிருந்தன. மரங்களினின்று மலர்கள் உதிர்ந்து ஹனுமானுடைய உடல் முழுதும் போர்த்து அவன் உருவம் புஷ்பமயமாகக் காணப்பட்டது. நந்தவனத்திலிருந்த பிராணிகள் மலர் மயமான ஹனுமானுடைய அழகிய சிறு குரங்கு உருவத்தைப் பார்த்து வசந்த தேவதையே வனத்துக்கு அதிகாலையில் வந்து விட்டது என்று எண்ணின.


அந்தத் தோட்டத்தின் ரமணீயம் யார் மனத்தையும் கவரத்தக்கதாக இருந்தது. அழகிய வாவிகள், தங்கம், வெள்ளி, தந்தம், முத்து, பவழம் இவற்றால் அலங்கரிக்கப்பட்ட தளங்கள், படிகத் தள வரிசைகள், செய்குன்றுகள், ஆறுகள், பூங்கொடிகள், அருவிகள், அவற்றில் விளையாடிக் கொண்டிருந்த அழகிய பறவைகள் - இந்தக் காட்சி ஹனுமானுடைய உள்ளத்தில் ஆனந்தம் உண்டாக்கிற்று. சில மரங்களைச் சுற்றி அழகிய தங்க மேடைகளும் வெள்ளி மேடைகளும் கட்டப்பட்டிருந்தன. மரங்களில் கட்டித் தொங்கிய சிறு மணிகள் காற்றால் அசைக்கப்பட்டு மெதுவாகத் தொனித்துக் கொண்டிருந்தன. தங்க மேடையால் அலங்கரிக்கப்பட்டு உயர்ந்து பரவி நின்ற ஒரு மரத்தின் மேல் ஏறி இலை மறைவில் ஹனுமான் உட்கார்ந்தான்.


“உயிரோடிருப்பாளானால் சீதை நிச்சயம் இந்த அழகிய நந்தவனத்துக்கு வருவாள். ராமனைத் தனியாக இருந்து தியானிக்க இந்த ரமணீயமான இடத்தையே அவள் விரும்புவாள். மரங்களும் கொடிகளும் நிறைந்த வனத்தில் நடமாடுவதில் ஜானகிக்கு மிகப் பிரியம் என்று சொன்னார்கள் அல்லவா? காலைச் சந்தியா காலத்தில் தேவியை உபாசித்துப் பிரார்த்தனை செலுத்த இங்கே நிச்சயமாக வருவாள்.”


இவ்வாறு யோசித்துக் கொண்டும், சுற்றிப் பார்த்துக் கொண்டும், இலைகளின் மறைவில் அந்த மரத்தின் மேல் ஹனுமான் உட்கார்ந்து கீழே பார்த்தான். கண்ணைக் கூசும்படி பிரகாசித்துக் கொண்டிருந்த அழகான, நிர்மலமான அந்த மரத்தடி மேடையின் பேரில் ஒரு மானுட ஸ்திரீ இருப்பதைக் கண்டான்.


கசங்கிப் போய்த் தூசி தங்கிய ஒரு மஞ்சள் வஸ்திரம் உடுத்தியிருந்த அந்த ஸ்திரீயின் முகத்தில் புகையால் மூடிய சுடரைப் போல் அழகும் துக்கமும் கலந்து நின்றதைக் கண்டான். அடிக்கடி பெருமூச்செறிந்து உபவாசத்தால் உபவாசத்தால் நலிந்து முதல் நாள் பாலசந்திரனைப் போல் கண்டும் காணாமலுமாக இருந்தாள். அவளைச் சுற்றிச் சில அரக்கிகள் உட்கார்ந்திருந்தார்கள்.


பெருந்துக்கத்தால் பீடிக்கப்பட்ட அந்தப் பெண்ணுருவத்தைக் கண்டதும் இவளே சீதை என்று ஹனுமான் நிச்சயித்தான்.


தெய்விக காந்தி வீசிய முகத்தில் தீராத துயரத்தைக் கண்டான். கொடிய அரக்கிகளால் சூழப்பட்டு, வேட்டையாடப்பட்டுத் தன் கூட்டத்திலிருந்து பிரிந்து போய், பயந்து நாலா பக்கமும் விழித்துத் தவிக்கும் ஒரு மானைப் போல் காணப்பட்டாள். கருத்து நீண்ட தலைமயிர் பின்னப்படாமல் தொங்கிற்று. துக்கம் என்பதே அறியாத ஒருத்தி பெருந்துயரத்தில் சிக்கிப் போய் இன்னது செய்வது என்று தெரியாமல் அலைந்தவளாகக் காணப்பட்டாள். துக்கத்தாலும், உணவின்றியும் இளைத்துப் போய் அழுக்குப் படிந்த ஆடை உடுத்தி ராக்ஷஸிகளுக்கிடையில் உட்கார்ந்திருக்கும் இந்த அழகி சீதையே என்று ஹனுமான் நிச்சயித்து விட்டான்.


ஆபரணங்கள் அணிய வேண்டிய அழகிய தேகமாக இருந்தது. ஆனால் ஆபரணமின்றியிருந்தது. மேகம் மூடிய சந்திரனைப் போலிருந்தது அவள் முகம். பார்க்கப் பார்க்க அந்தத் தங்க மேடையின்மேல் ஆபரணங்களின்றிக் கவலையும் பயமும் நிரம்பிய முகத்தோடு உட்கார்ந்திருந்த அந்த ஸ்திரீயின் தோற்றம் மெய்ப்பாடுகள் எல்லாம் கவனித்து அவளே சீதை என்பதாக உறுதி கொண்டான்.


ராமனுக்காக பூமண்டலம் முழுதும் வானரர்களால் தேடப்பட்ட சீதையைக் கண்டு விட்ட மகிழ்ச்சி பெரிதாயினும், கண்ட உருவத்தின் கடல் போன்ற துயரமானது அந்த மகிழ்ச்சியைக் கரைத்து இல்லாமற் செய்து விட்டது.


பார்க்கப் பார்க்க ஹனுமானுடைய கண்களுக்கு அந்த ஸ்திரீயின் தெய்விகத் தோற்றத்தின் அழகும் தேஜஸும் வளர்ந்தன. ‘ராமனுடைய பெருந் துக்கத்தின் காரணத்தை இப்போது கண்டேன். இவளை இழந்த எவன்தான் துயரப்பட மாட்டான்? ராமன் தன் உயிரை வைத்திருப்பதே அற்புதம். எத்தகைய தேவி! எத்தகைய புருஷன்!’ என்று எண்ணி எண்ணி ஹனுமானுடைய உள்ளம் அந்தச் சமயம் சமுத்திரத்துக்கு வடக்கேயிருந்த ராமனிடம் சென்றது.


அப்போது நீல வானத்தில் நிர்மலமான நீர் நிறைந்த ஏரியில் அழகிய அன்னம் மெதுவாகச் செல்வதைப்போல் சந்திரன் வாயு புத்திரனுக்கு உதவி செய்வதற்காகவே வந்ததுபோல், உயரக் கிளம்பிப் பிரகாசித்தான்.


ஹனுமான் இலைகளிடையில் மறைந்து பார்த்துக் கொண்டும், இன்னது செய்வது என்று யோசித்துக் கொண்டும், கடல் மத்தியில் ஒரு பெருங் காற்றடித்து ஆடி அலையும் ஒரு பாரம் ஏற்றிய கப்பலைப் போல் கவலைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சீதையின் முகத்தை நன்றாகப் பார்த்தான். சுற்றிக் காவலிருந்த ராக்ஷஸிகளின் வடிவங்களோ பார்த்துப் பொறுக்க முடியாத கோர அவலக்ஷண வடிவங்கள். ஒருத்திக்கு ஒரே கண்; ஒருத்திக்கு ஒரே காது.


சிலருக்குக் காதுகளே கிடையாது. சிலருக்கு மூக்கு இல்லை. சிலருக்கு மூக்கு ஊர்த்துவம் நோக்கி நின்றது. சிலருக்குத் தலையில் மயிரே கிடையாது. சிலருக்கோ விபரீதமான ஜடை; சிலருக்குக் கீழே தொங்கும் பெரிய வயிறு; சிலருக்கு ஒட்டகம் போன்ற உதடுகள். சிலர் கூனிகள். சிலர் குள்ளமானவர்கள்; சிலர் பனைமரம் போல் நீண்டு உயர்ந்து வளர்ந்தவர்கள். சிலருக்குப் பன்றி முகம், சிலருக்குப் புலி முகம், சிலருக்கு எருமை முகம், சிலருக்கு நரி முகம், சிலருக்கு ஆட்டு முகம். இப்படி இன்னும் பல பயங்கர அவலக்ஷண சொரூபங்களாக, சூலங்கள் முதலிய ஆயுதங்களோடு அரக்கிகள் இருக்க, அவர்களுக்கு இடையில் தன் சீலம் ஒன்றாலேயே ரக்ஷிக்கப்பட்டவளாக, தரையில் ஆதரவற்றுப் படர்ந்து கிடக்கும் பூங்கொடி போல் ஜானகி வாடிய முகத்தோடு நடுங்கிக்கொண்டிருந்தாள்.


இப்படிக் காட்சி தந்த சீதா தேவியைப் பார்த்து, ‘காணாமற் போனவளைக் கண்டு விட்டேன்’ என்று ஹனுமான் மகிழ்ச்சியடைந்தான். கூடவே, அவள் நிலையைப் பார்த்துத் துக்கப்பட்டான். அவளுக்காக வெகு தூரத்தில் அலைந்து துயரப் பட்டுக்கொண்டிருக்கும் ராம லக்ஷ்மணர்களை நினைத்தான்; அவர்களைத் தியானித்து நமஸ்கரித்தான்.

*

அச்சமயம் இன்னும் இருள் தீர்ந்து நன்றாக விடியவில்லை. வேத கோஷங்களாலும் இனிய சுப்பிரபாத கீதங்களாலும் ராவணன் படுக்கையிலிருந்து எழுப்பப் பட்டான். எழுந்தவுடன் சீதையை நினைத்துக்கொண்டு அவளை வைத்திருந்த நந்தவனத்துக்குக் கிளம்பினான்.


பரிவாரம் சூழ அந்தப்புரத்து நந்தவனத்துக்கு வந்தான். வாசனை வீசும் தீபங்களும், சாமரங்களும், குடையும் பிடித்துச் சென்ற பெண்கள் கூட்டத்துக்கிடையில் தானும் ஆபரணங்கள் பூண்டு பரிசுத்தமான வெள்ளை உத்தரியம் ஒன்று தரித்துக் கண்ணைக் கவரும் இரண்டாவது மன்மதனைப் போல் ராவணன் வந்தான். வாயிலண்டை வந்த பரிவாரத்தின் கோஷமும், கூட்டமாக வந்த பெண்களின் பாதநூபுர ஓசையும் மாருதியின் காதில் விழுந்தன.


கொஞ்ச நேரத்தில் ராக்ஷச மன்னன் வருவதைக் கண்டான். உடனே ஹனுமான் அடர்ந்த இலைகளுக்குள்ளே முன்னை விட நன்றாக மறைந்து கொண்டான். ராவணன் சீதையிருக்குமிடம் வந்தான். ராவணனுடைய பலமும் பராக்கிரமமும் வீரியமும் தேஜஸும் அற்புதக் காட்சியாக இருந்தன. அவன் வருவதைக் கண்டவுடனே சீதையின் தேகம் சுருங்கிப் போய் விட்டது. பெருங் காற்றில் வாழைமரம் நடுங்குவது போல் நடுங்கினாள்.



Post a Comment

புதியது பழையவை