தருமம், புருஷனுடைய நினைவு இவை இரண்டையும் பற்றிக்கொண்டு துக்கப் பெருங்கடலில் மிதந்து கொண்டு உயிரை வைத்திருந்த சீதையைப் பார்த்து ராவணன் சொன்னான்.
“அழகியே! ஏன் கூச்சப்பட்டுத் தேகத்தை மறைத்துக் கொள்கிறாய்! உன்மேல் எனக்கு உண்டாகியிருக்கும் அன்பை நீ அறியாயோ? உன் அன்பை நான் பிச்சை கேட்கிறேன். நீ பயப்பட வேண்டியதில்லை. என்னிடத்தில் உனக்கு உள்ளுறப் பிரியம் உண்டாகும் வரையில் உன்னை நான் தொடமாட்டேன். நீ பயப்பட வேண்டாம். என் விருப்பத்துக்குச் சமமாக உனக்கும் என்பேரில் விருப்பம் உண்டாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. உண்மையான அன்போடு நீ என்னை ஒப்புக் கொள்ள வேண்டும். வீணாகத் துக்கத்துக்கு ஏன் உன் உடலை இரையாக்கி வருகிறாய்? அழகியே, உனக்குச் சமமான சௌந்தரிய ஸ்திரீ உலகத்தில் இல்லை. நீ இப்படி ஆபரணமின்றி, நல்ல வஸ்திரமின்றித் தரையில் படுப்பதும் தலை மயிரை வாரிப் பின்னாமல் விட்டு உபவாசம் இருப்பதும் வேண்டாம். பெண் ரத்தினமே! இப்படி உன் அழகையும் வயதையும் வீணாக்காதே. என்னிடம் வந்து சேர்ந்து விட்டாய். இனி நீ கஷ்டப்படலாகாது. சகல போகங்களையும் அனுபவிக்கலாம். பூரண சந்திரனைப் போன்ற உன் முகத்தைப் பார்த்தால் என் கண்களை வேறு திக்கில் செலுத்த முடியவில்லை. உன் உடலில் எந்த அங்கத்தைப் பார்த்தாலும் என் திருஷ்டி அங்கேயே பற்றி நிற்கிறது. இந்த அழகைப் பெற்ற நீ இப்படித் துக்கப்படுவது தகாது. என்னைப் புருஷனாக அடைந்து, சகல போகங்களையும் அடைந்து அனுபவித்து மகிழ்ச்சி அடைவாய். பயப்படாதே! யோசிக்காதே! நீயே பட்டமகிஷியாக இருப்பாய். என் அந்தப்புரம் முழுவதும் உனக்கு அடங்கி நீ ஆள்வாய். என் செல்வம், ராஜ்யம் அனைத்தும் பெற்றுக் கொண்டு அனுபவிப்பாய். இந்த லங்கையும் நானும் உன் சொத்தாவோம். இந்தப் பூமண்டலம் முழுதும் உனதாகும். என் பலம், வீரம், தைரியம் இவற்றை தேவாசுரர்கள் அறிவார்கள். அவர்கள் என்னால் அடிபட்டுத் தோற்றுத் தலை வணங்கி நிற்கிறார்கள்.
உன் அழகுக்குத் தகுந்த ஆபரணங்களும் வஸ்திரங்களும் கொண்டு உன்னை அந்தப்புர ஸ்திரீகள் அலங்கரிப்பார்கள். அலங்கரிக்கப்பட்ட உன்னைப் பார்த்து நான் மகிழ்வேன். உன் இஷ்டப்படி நீ தான தருமம் செய்யலாம். அனைவர் பேரிலும் அதிகாரம் செலுத்துவாய். என் பிரஜைகளும் பந்துக்களும் உன்னை அண்டி சந்தோஷமாக இருப்பார்கள். காட்டில் அலைந்து திரியும் ராமனை ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? ஊரை விட்டு, பதவியை விட்டு மரவுரி தரித்து அலையும் ஒருவனையா நீ விரும்புவது? நம்புவது? அவனால் என்ன செய்ய முடியும்? ராஜ்யலக்ஷ்மியும் ஜயலக்ஷ்மியும் அவனை விட்டு விலகினது உனக்குத் தெரியுமே. அவன் இப்போது பிழைத்திருப்பதே சந்தேகம். உன்னை ராமன் இனிக் கண்ணால் பார்க்கவுங்கூட முடியாது.
கருடன் சர்ப்பத்தைப் பிடிப்பதுபோல், நீ என் உள்ளத்தை அபகரித்து விட்டாய். நான் தப்ப முடியாது அலைகிறேன். ஆபரணமும் நல்ல வஸ்திரமுமின்றி நீ இப்போது இருக்கும் நிலையிலும்கூட உன்னைப் பார்த்த பிறகு, சுந்தரியே! என் மனைவிகளுடன் கலந்திருக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்வேன்? அந்தப்புரத்தில் கணக்கில்லாத அழகிகள் இருக்கிறார்கள். உன்னைப் பார்த்தபின் அவர்கள் எனக்கு வேண்டியிருக்கவில்லை. அவர்களுக்கெல்லாம் நீயே அரசியாக இருந்து, அவர்களுடைய சேவையைப் பெற்றுச் சுகமாக இருப்பாய். எந்த விதத்தில் ராமன் எனக்குச் சமம் ஆவான்? தவத்திலும் பலத்திலும் புகழிலும் செல்வத்திலும் எல்லாவற்றிலும் நான் அவனுக்கு மேம்பட்டவன் என்பது உனக்குத் தெரியவில்லையா? பயத்தை அகற்றிக் கொள்வாய். உலகம் முழுவதும் நாம் இருவரும் சமமாகத் திரிவோம். சகல ஐசுவரியமும் என்னுடன் அனுபவிப்பாய். ஆனந்தமாகக் காலம் கழிப்பாய் சுந்தரியே! மனம் இரங்கு! கடற்கரை வனங்களில் சந்தோஷமாக விளையாடுவோம். ஒப்புக்கொள்.”
இவ்வாறு ராவணன் தன் அடங்கா ஆசையை வெளியிட்டுச் சீதையை இறைஞ்சினான்.
ராவணன் பேசி நிறுத்தினதும், ஒரு துரும்பைக் கிள்ளித் தனக்கும் அவனுக்கும் இடையில் வைத்து, களங்கமற்ற நகை நகைத்து மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.
“என்னைப் பற்றிய எண்ணத்தை உடனே விலக்குவாய். என்னை நீ விரும்புவது தகாத காரியம். உன் மனைவிகளை விரும்பி அவர்கள்பால் மனத்தைச் செலுத்து. நீ சொல்லுவதை என்னால் ஒரு நாளும் செய்ய முடியாது. நான் பிறந்த குலத்தையும் நான் புகுந்த குலத்தையும் தெரிந்து கொள்வாய். இத்தகைய யோசனை என்னிடம் செல்லுமா? தகாத எண்ணத்தை வைத்து வளர்த்துக் கொண்டு துயரப்படாதே.”
இப்படி அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டு, வேறு திசை முகத்தைத் திருப்பி மேலும் பேசலானாள்:
“வேறொருவன் மனைவியாகிய நான் உனக்கு மனைவியாக முடியாது. தருமத்தைப் புறக்கணிக்காதே. அயோக்கிய மார்க்கத்தில் செல்லாதே. நல்லவர்கள் போகும் வழியில் செல்வாய். நான் சொல்வதைக் கேள். உன் மனைவிகளை நீ எவ்வாறு காத்து வருகிறாய், யோசித்துப் பார். அப்படியேயல்லவா மற்றவர்களும் தங்கள் மனைவிகளைக் காக்கப் பார்ப்பார்கள்? மற்றவர்களும் உன்னைப் போலவே என்பதை நினைவில் வை. பிறத்தியாருடைய ஸ்திரீகளை விரும்பாதே. உன் மனைவிகளுடன் சுகம் பெற்றுத் திருப்தி யடை. இது உனக்கு நன்மையாகும். உனக்கு உரிமையான ஸ்திரீகளுடன் திருப்தியடையாமல் மற்றவர்கள் பேரில் மனத்தைச் செலுத்தினாயானால் அவமானமும் துக்கமும் அடைவாய். நிச்சயம்.
“உனக்கு நல்ல புத்தி சொல்லுகிறவர்கள் யாரும் இல்லையா? ஏன் இவ்வாறு கெட்டகாரியங்களில் புகுந்து நீயும் கெட்டுப் போகிறாய், உன் ஜனங்களுக்கும் நாசம் தருவித்துக் கொடுக்கிறாய்? அரசன் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்திக் கொள்ளாமற் போனால் அவனுடைய நாடும் நகரமும் செல்வமும் எல்லாம் அழிந்து போகும். இந்த லங்கையும் அதனுடைய பெருஞ்செல்வமும் உன் ஒருவனுடைய குற்றத்தால் முற்றிலும் நாசமாகப் போகிறது, அறிவாய். உன்னுடைய பொறுப்பைத் தெரிந்து கொண்டு உன் துஷ்ட எண்ணத்தை விட்டு விட்டு, உன்னுடைய நாட்டையும் ஜனங்களையும் ராஜதானியையும் காப்பாற்றுவாய். இல்லையேல் நீ அழிவாய். உன்னால் வருத்தப் பட்டவர்கள் 'கொடியவன் போனானே' என்று சந்தோஷமடைவார்கள். எனக்கு நீ சொல்லும் ஐசுவரியங்களும் போகங்களும் ஒன்றும் வேண்டியதில்லை. அவற்றை வைத்து எனக்கு நீ ஆசை காட்ட வேண்டாம். பயனில்லை. ராகவனை மணந்த நான் அவனை விட்டு விலக மாட்டேன். அவன் கையைப் பிடித்த நான் வேறு ஒருவன் கையைத் தீண்ட மாட்டேன், முடியாது. சக்கரவர்த்தித் திருமகனுக்கு நான் உரியவள். வேதம் படித்து விரதம் தீர்த்த பிரம்மச்சாரிக்கு வேதம் எப்படி உரிமையோ அவ்விதம் நான் ராமனுக்கு உரியவள். என்னை வேறொருவன் கண் எடுத்துப் பார்த்தல் தகாது.
உனக்கு நான் நல்லுபதேசம் சொல்லுகிறேன், கேள். ராமனிடம் மன்னிப்புக் கேட்டு அவன் கோபத்தினின்று தப்பித்துக் கொள். வீணாக உன் நாசத்தைத் தேடிக்கொள்ளாதே. ராமன் நிச்சயமாக மன்னிப்பான். சரணமடைந்தவர்களைக் கைவிட மாட்டான். அவனுடைய மன்னிப்பைச் சம்பாதித்துக் கொள். அதற்கு வழிதேடு, உன்னுடைய நாசத்துக்கு வழி தேட வேண்டாம். அதோ ராமனுடைய வில்லின் ஓசை கேட்கிறது. அதனின்று தப்ப மாட்டாய். யமன் பக்கத்தில் நிற்கிறான், உன்னைத் தூக்கிப் போக வந்து விட்டான். தெரிந்து கொள். ராம லக்ஷ்மணர்களுடைய பெயர் எழுதிய பாணங்கள் சீக்கிரமே வந்து இந்த லங்கையை எரித்து அழிக்கப் போகின்றன. ஜனஸ்தானத்தில் இருந்த ராக்ஷசர்களை அடையாளத்துக்கு ஒருவன் இல்லாமல் என் வீர ராமன் ஒழித்து விட்டதைக் கண்டு பயந்து நீ திருடனைப் போல் வந்து ராம லக்ஷ்மணர்கள் ஆசிரமத்தில் இல்லாத காலம் பார்த்துப் புகுந்து என்னைக் கொண்டு வந்தாயல்லவா? நீ அவர்கள் எதிரில் ஒரு கணம் நிற்க முடியுமா? புலியிருக்குமிடம் சிறு நாய் போக முடியுமா? அந்த வாசனையைக் கண்டே. அஞ்சித் தூர விலகும். ஈரத் தரையிலிருந்து நீரைச் சூரியன் உறிஞ்சி விடுவதுபோல் உன் உயிரை ராமனும் லக்ஷ்மணனும் உறிஞ்சிவிடப் போகிறார்கள். ஓடி மலையில் ஒளிந்து கொள்வாயா, அல்லது கடலில் மறைந்து கொண்டு தப்பித்துக் கொள்ளப் பார்ப்பாயா? அதுவும் முடியாது. அழிய வேண்டிய முகூர்த்தத்தில் மரம் இடி விழுந்து அழிவது போல் நீ அவர்களால் கொல்லப்படுவாய். தப்ப மாட்டாய்” இவ்வாறு சீதை கடினமான மொழிகளோடு முடித்தாள்.
ராவணன் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னான்: “சீதையே, தாபச வேஷம் பூண்ட ஒரு பொய்யனைக் கட்டிக் கொண்டு நீ என்னென்னவோ பேசுகிறாய்! உன் பேரில் எனக்குள்ள பிரியத்தை நான் விட்டுவிட முடியவில்லை. உன் பேச்சுகளைக் கேட்டு எனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டேன். உன் பேரில் எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரியமே உன்னைக் காத்தது. இல்லையேல் நீ இப்போது மாண்டிருப்பாய். நான் உனக்கிட்ட தவணையில் இன்னும் இரண்டு மாத காலமே இருக்கிறது. அதற்குள் நீ உன் மனத்தைத் திருத்திக் கொள். என் மனைவியாகி என் படுக்கையறைக்கு வருவாய். அதற்கு இஷ்டமில்லாவிடில் என் சமையல் சாலைக்கு அனுப்பப்படுவாய். அங்கே என் வேலைக்காரர்கள் உன் உடலை வெட்டித் திருத்திப் பலகாரமாகச் செய்வார்கள். அறிவாய்!” என்றான்.
அரக்கர்கள் உணவில் மானிட மாமிசம் சேரும் என்பது பிரசித்தம். ஆனபடியால் ராவணனுடைய இந்த மிரட்டல் வெறும் முரட்டு பாஷையல்ல, நிஜமாகவே நடக்கக் கூடிய நிகழ்ச்சியைப் பற்றி எச்சரிக்கை.
ஆயினும் சீதை மிகத் தைரியமாக அவனுக்குச் சொன்னாள்:
“ஐயோ! யாரும் இல்லையா உனக்கு நல்ல உபதேசம் சொல்ல? இந்தப் பாவத்திலிருந்து உன்னைத் தப்புவித்து நல்வழியில் உன்னைச் செலுத்தும் நண்பர்கள் யாரையுமே நீ பெறவில்லையா? நீ ராமனுடைய தண்டனையிலிருந்து தப்பப் போவதில்லை. என்ன எண்ணி இந்தப் பாவத்தில் புகுந்து வருகிறாய்? காட்டு யானையைப் போன்ற ராமனுடைய விரோதத்தை முயலைப் போன்ற நீ சம்பாதித்தாய். அவன் பக்கத்தில் இல்லாத சமயம் பார்த்து என்னைத் திருடி வந்த அற்பனே, உனக்கு வெட்கம் இல்லையா? உன்னுடைய விநாசம் நிச்சயம். விதியே உன்னை இவ்வாறு செய்யச் செய்திருக்கிறது. குபேரனுக்குத் தம்பியாகிய நீ, சூரன் என்று பெயர் பெற்றவனாகிய நீ, சதுரங்க சேனையுடைய நீ, ஏன் இந்த நீச காரியத்தை நீச வழியில் செய்தாய்?”
இவ்வாறு சீதை சொன்னதைக் கேட்ட ராவணன் கண்களை உருட்டிப் பயங்கரப் பார்வையோடு சீதையைப் பார்த்துப் பாம்பைப் போல் சீறினான்.
ராவணனுடைய கோபம் வர வர அதிகரித்ததைப் பார்த்து அங்கிருந்த அவனுடைய இளைய மனைவி தான்யமாலி என்பவள் பக்கத்தில் வந்து அரக்கனைத் தழுவி, “அரசனே! உம்மை விரும்பாத இந்த அற்ப மானுட ஸ்திரீயைப் பற்றி ஏன் கஷ்டப்படுகிறீர்? இவளுக்கு உம்மை அடையும் பாக்கியமில்லை. அவ்வளவே. இவளுக்கு என்ன அழகு இருக்கிறது? இந்த அவலக்ஷணப் பூச்சியைப் பார்த்து ஏன் மோகித்து அலைகிறீர்? போகலாம் வாரும், நாம் சந்தோஷமாக விளையாடலாம்” என்று அவனை மிகப் பிரியமாக இழுத்துக் கொண்டு போய் விட்டாள். அரக்கனும் சிரித்துக் கொண்டு அவளுடன் சென்றான்.
*
காவல் அரக்கிகளுக்கு “இவளை எப்படியாவது நீங்கள் வழிக்குக் கொண்டு வரவேண்டும்!” என்று உத்தரவிட்டு, பூமி அதிரத் தன் பரிவாரத்துடன் ராவணன் அசோக வனத்தை விட்டுப் போய் விட்டான். அவன் போனவுடன் ராக்ஷசிகள் சீதையைச் சுற்றிக் கொண்டார்கள். ராவணன் முன் தைரியமாக இருந்த ஜானகி பயங்கர வடிவங்களான இந்த அரக்கிகள் தன்னைச் சுற்றி நின்று பேசுவதைக் கண்டு நடுங்கினாள்.
“உயர்ந்த குலத்தில் பிறந்து உலகம் புகழும் வீரனான ராவணன் உன்னை இவ்வளவு விரும்பும்போது நீ இல்லையென்றா சொல்லுவது, மூடப் பெண்ணே? ராவணனை யார் என்று எண்ணுகிறாய்? பிரம்மாவினுடைய வமிசத்தில் நேராகப் பிறந்தவன் என்று தெரிந்து கொள். பிரம்மாவின் புத்திரனான புலஸ்த்ய பிரஜாபதியினுடைய சொந்தப் பேரன் ராவணேசுவரன். அநேக யுத்தங்களில் சத்துருக்களையெல்லாம் வென்று புகழ் பெற்ற வீரன். இவனையா நீ புத்தியில்லாமல் அலட்சியம் செய்கிறாய்?” என்றாள் ஒருத்தி.
“கர்வப்பட்டுக் கெட்டுப் போகாதே! விச்ரவஸ் ரிஷியின் குமாரன் ராவணன். யாரோ என்று எண்ண வேண்டாம். அவனை நீ விரும்பி சந்தோஷமாயிரு. இவ்வளவு அவன் வேண்டிக் கொள்ள நீ மாட்டேன் என்பதா?” என்றாள் மற்றொருத்தி.
“தேவர்களையெல்லாம் யுத்தம் செய்து துரத்தியடித்து ஜயமடைந்த நம்முடைய ராக்ஷசேசுவரன் உன்னை 'வா' என்கிறான். அவனுக்கு நீ மனைவியாகத் தான் போகவேண்டும். ஏழைப் பெண்ணே, இல்லாவிட்டால் பிழைக்க மாட்டாய்!” என்றாள் இன்னொருத்தி.
“தன் மற்ற மனைவிகளையெல்லாம் உதாசீனம் செய்து உனக்கு அப்புறம் அவர்கள் என்று உன்னை ராவணன் விரும்புகிறான். மிக உத்தம ஸ்திரீகளையெல்லாம் விட்டு நீதான் அழகி என்று உன்னிடம் அரசன் வந்து பிரார்த்திக்கிறான். நீயே பட்ட மகிஷியாய் இரு என்று உனக்கு வாக்கு அளிக்கிறான். நீ ஏன் மூர்க்கத்தனம் செய்கிறாய்?” என்றாள் மற்றொருத்தி.
“ராவணேசுவரனுக்குச் சமம் உலகத்தில் வேறொருவர் உண்டா? இது உனக்குத் தெரியவில்லையே! தானாக நல்ல பாக்கியம் வந்து உன்னை வேண்டுகிறது, நீ வேண்டாம் என்கிறாய்! உன் மடத்தனத்தை என்னென்று சொல்லுவது!” என்றாள் வேறொருத்தி.
“தேவர்களும், சூரியனும் வாயுவுங்கூட பயப்படும் ராக்ஷசேந்திரன் வந்து உன்னை வரிக்கிறான். அவனுக்குப் பிரிய பாரியையாக இருக்கும் அதிருஷ்டம் உனக்கு வந்திருக்கிறது. கர்வம் கொண்டு ஏமாந்து போகாதே! வந்த பாக்கியத்தை வேண்டாம் என்று தள்ளாதே!” என்றாள் ஒருத்தி.
“நாம் சொல்ல வேண்டியதைச் சொன்னோம். இனி உன் இஷ்டம். நீ ஒப்புக் கொள்ளாவிட்டால் நீ சாக வேண்டியதுதான்” என்றாள் இன்னொருத்தி.
கருத்துரையிடுக