ஶ்ரீமத் பாகவதம் - 75

மூன்றாவது ஸ்கந்தம் – முப்பதாவது அத்தியாயம்

(வைராக்யத்தை விளைவிக்கும் பொருட்டு ஸம்ஸாரத்தின் கொடுமையை நிரூபித்தல்)

கபிலர் சொல்லுகிறார்:- வாராய் மாதாவே! இங்ஙனம் காலம் பகவத் ஸ்வரூபமாயிருக்குமென்றும், மிகுந்த வலிவுடையதென்றும் உனக்கு மொழிந்தேன். மேல் ஸம்ஸாரிகளின் கதிகளைச் சொல்லுகின்றேன் கேட்பாயாக. உலகத்திலுள்ள ஜனங்கள் இங்ஙனம் சொல்லப்பட்ட காலத்தினால் தூண்டப்பெற்று கடப்பவராயினும், மேகங்களின் வரிசை காற்றினால் தள்ளுண்டு சிதறிப் போகின்றதாயினும் அந்த வாயுவின் வலிமையை அறியாதிருப்பது போல், அத்தகைய காலத்தின் பராக்ரமத்தை அறிகிறதில்லை. இந்த ஜீவாத்மாவானவன் ஸுகத்தின் பொருட்டு மிகவும் ப்ரயாஸப்பட்டு எந்தெந்தப் பொருளை ஸம்பாதிக்கிறானோ, அவற்றையெல்லாம் காலஸ்வரூபியான பகவான் பாழ் செய்கின்றான். தான் ப்ரயத்னப்பட்டு ஸம்பாதித்த பொருளெல்லாம் பாழானமை கண்டு ஜீவன் சோகிக்கின்றான். அங்ஙனம் சோகிப்பதற்குக் காரணம் என்னென்னில், சொல்லுகிறேன் கேட்பாயாக. 



கெடுமதியனாகிய இந்த ஜீவன் பிள்ளை பெண்டிர் முதலிய அனுபந்தங்களோடு கூடினதும் நிலை நில்லாததுமாகிய தேஹத்தைச் சேர்ந்த வீடு நிலம் பணம் முதலியவற்றை நிலைநிற்பதாக நினைக்கின்றான். அதற்குக் காரணம் அஜ்ஞானமே. ஆகையால் அவை தெய்வாதீனமாய்ப் பாழாகையில் வருந்துகிறான். இந்த ஸம்ஸாரத்தில் ஜீவன் தேவ மனுஷ்யாதி ஜன்மங்களில் எந்தெந்த ஜன்மங்களைப் பெறுகின்றானோ, அந்தந்த ஜன்மங்களில் எதிலும் ஸுகத்தை அனுபவிக்கிறதில்லை. ஆயினும், அவன் அந்த ஸம்ஸாரத்தில் வைராக்யம் உண்டாகப் பெறுகிறதில்லை. ஆ! இதென்ன ஆச்சர்யம். இந்த ஜீவன் நரகத்திலிருப்பினும், பகவானுடைய மாயையினால் மதிமயங்கி நரகத்தில் கிடைக்கக் கூடிய ஆஹாரம் முதலியவற்றால் ஸுகமடைந்து நரகானுபவத்திற்காக ஏற்பட்ட பாபிஷ்ட தேஹத்தையும் விட விரும்புகிறதில்லை. தேஹம் பார்யை புதல்வன் க்ருஹம் பசு பணம் பந்துக்கள் ஆகிய இவற்றில் வேரூன்றின மனமுடையவனாகித் தன்னை ஸ்லாகித்துக் கொள்கிறான். இந்த தேஹம் முதலியவற்றைப் போஷிப்பதிலும் பாதுகாப்பதிலும் சிதையுற்று அதனால் ஸமஸ்த அங்கங்களும் பரிதபிக்கப்பெற்றுச் செய்யவேண்டிய செயல் இன்னென்று தெரியாமல் மனம் கலங்கி எப்பொழுதும் பாபங்களையே செய்கின்றான். க்ருஹஸ்தாஸ்ரமத்தில் இருப்பவன், பரமபுருஷனைப் புணர விரும்புகின்ற அஸத்துக்களான மாதர்கள் ஏகாந்தத்தில் செய்யும் ஸம்போகாதி ரூபமான மாயையாலும் மழலைச் சொற்களைப் பேசுகின்ற சிசுக்களின் பேச்சுக்களாலும் மனம் முதலிய இந்த்ரியங்களெல்லாம் பறியுண்டு, எவ்விதத்திலும் போக்க முடியாத பலவகைத் துயரங்கள் நிறைந்த க்ருஹத்தில் சிறிதும் சோம்பலின்றி அவ்வப்பொழுது சேரும் துக்கங்களுக்குத் தடை செய்வதாக நினைத்து ஏதோ சில செயல்களைச் செய்துகொண்டு ஸுகம் அனுபவிப்பதாக நினைக்கின்றான். இங்கும் அங்கும் திரிந்து பெரும்பாலும் ப்ராணிகளை ஹிம்ஸித்து அவ்வழியால் பணம் முதலியவற்றை ஸம்பாதித்து அவற்றால் பிள்ளை பெண்டிர் முதலானவர்களைப் போஷித்துக் கொண்டிருக்கின்றான். அவர்கள் அனுபவித்து ஏதேனும் சிறிது மிகுதியாயின், அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருந்து கடைசியில் நரகத்தில் போய் விழுகின்றான். ஜீவனத்திற்காக அடிக்கடி ஏதேனும் ஒரு வ்யாபாரத்தை ஆரம்பிக்கையில், அது தெய்வ தோஷத்தினால் வீணாகக்கண்டு வருந்தி லோபம் மிகுந்து மேல் வ்யாபாரம் செய்ய சக்தியற்றவனாகிப் பிறருடைய சொத்தில் விருப்பம் கொள்கின்றான். குடும்பத்தைப் போஷிக்க வல்லமையற்று, பாக்யஹானியால் அதற்காகத் தான் செய்யும் ப்ரயத்னமெல்லாம் வீணாகப் பெற்று நற்கார்யம் ஏதும் செய்யாமல் தீனனாகி வீண் சிந்தைகள் நிறைந்து மதிமயங்கி வஸிக்கின்றான். இங்ஙனம் அவன் தன்னைத் தான் ரக்ஷிக்கவும் வல்லமையற்றிருக்கையில், பயிர்வேலைக்கு உபயோகப்படாத கிழ எருதை உழவர் உபேக்ஷிப்பதுபோல், அவனை அவனுடைய பார்யை முதலியவர் முன்போல், ஆதரிக்கிறதில்லை. அவர்கள் அங்ஙனம் அனாதரிக்கினும், மனவெருப்பு சிறிதும் உண்டாகப் பெறுகிறதில்லை. தான் முன் போஷித்துக் கொண்டிருந்த பார்யை முதலியவர்களால் போஷிக்கப் பெற்றுக் கிழத்தனத்தினால் உடம்பெல்லாம் சதை சுருங்கவும் மயிர் நரைக்கவும் பெற்று விரூபமுடையவனாகியும் மனத்தில் பரிதாபம் உண்டாகப் பெறுகிறதில்லை. மற்றும், கிழத்தனத்தினால் சரீரம் தளர்ந்து வெளியில் எங்கும் நடந்து போக முடியாதவனாகி வீட்டிலேயே இருக்கின்றான். பசி எடுத்து ஆஹாரம் வேண்டினும் பார்யை முதலியவர் அவமதித்து “நீ ஸம்பாதித்ததற்குச் சோறும் இடவேண்டுமோ? இதற்குள் என்ன பசி? நீ சாகலியா? உன் தொந்தரவு தீராதா?” என்று பல பருஷங்களைப் பேசிக் கடைசியில் அன்னம் இடுகையில், அதை நாய்போல் திண்பான். கிழத்தனம் வந்தவுடனே பற்பல ரோகங்களும் தலைகாட்டும். வயிற்றில் அக்னி புஷ்டியும் தொலையும். ஆகையால் ஆஹாரம் சிறிதே உட்கொள்வான். வ்யாபாரங்களெல்லாம் ஒடுங்கிப்போகும். நாடிகளில் ச்லேஷ்மம் வந்தடைத்துக் கொள்ளும். அதனால் தேஹத்தில் வாயுஸஞ்சாரம் தடைபடுகையில் அவ்வருத்தத்தினால் கண்விழிகள் புதுங்கிப்போம். இருமலாலும் ஸ்வாஸத்தினாலும் ஆயாஸமுற்றுக் கண்டத்தில் கருகுருவென்று சப்தம் செய்வான். எழுந்திருக்கவும் உட்காரவும் சக்தியில்லாமல் தன்னுடைய துர்த்தசையைப் பார்த்து வருந்துகின்ற பந்துக்களால் சூழப்பட்டவனாகி ம்ருத்யு பாசத்திற்குட்பட்டு “அண்ணா” என்று அழைக்கப்பெறினும் ஏதும் பேசமுடியாதிருப்பான். இப்படி யௌவனத்தில் பல வருத்தங்களும் கிழத்தனத்தில் பல வருத்தங்களும் உண்டாகுமென்பதை மொழிந்தேன். இனி மரணதுக்கத்தைச் சொல்லுகிறேன். கேட்பாயாக. 

இங்ஙனம் குடும்பத்தைப் போஷிப்பதில் தேஹத்தையும் இந்திரியங்களையும் உபயோகப்படுத்தி அவற்றை வெல்லாமல் அவை போனவழியே விட்டுத் திரிந்த ஜீவன் கடைசியில் மஹத்தான மரணவேதனையால் மதிமயங்கப் பெற்றுத் தன் பந்துக்கள் அழுதுகொண்டிருக்கும் பொழுது மரணம் அடைகின்றான். அந்த மரண ஸமயத்தில் கோபம் நிறைந்த காட்சியுடையவரும் பயங்கரர்களுமான இரண்டு யமதூதர்கள் வரக் கண்டு அந்த ஜீவன் பயந்து மலமூத்ரங்களை விடுவான். மரணம் அடைந்தவன் பரலோகத்திற்குப் போகும் வழிகள் இரண்டு. அவற்றில் புண்யம் செய்தவன் போகும் வழி ஒன்று; பாபம் செய்தவன் போகும் வழி மற்றொன்று. முதலில் பாபஞ்செய்தவன் போகும் வழியைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. 

அங்ஙனம் மரணம் அடைந்த ஜீவனை அந்த யமதூதர்கள் யாதனா சரீரத்தில் அடைத்துக் கழுத்தில் பலாத்காரமாகப் பாசங்களால் கட்டி, தப்புசெய்தமையால் தண்டிக்கவேண்டிய புருஷனை ராஜபடர்கள் கட்டியிழுத்துக் கொண்டுபோவதுபோல், நெடுந்தூரம் இழுத்துக்கொண்டு போவார்கள். அந்த யமதூதர்கள் இவனை வழியில் விரட்டிக்கொண்டு செல்லுவார்கள். அவற்றைக் கேட்டு இந்தப் பாபிஷ்டனாகிய ஜீவன் பயந்து ஹ்ருதயம் பிளவுண்டவன் போன்று சரீரம் நடுங்கப்பெற்று வழியில் நாய்களால் கடியுண்டு வருந்தி தான் செய்த பாபத்தை நினைத்துக்கொண்டே நடப்பான். மற்றும், பசி தாஹங்கள் நிறைந்து வருந்துவான். அன்றியும், வழியில் கால் பாவமுடியாமல் மணல் கொதித்துக் கொண்டிருக்கும். ஸூர்யன் பொறுக்கமுடியாமல் வெயில் காய்வான். வழியெல்லாம் காட்டுத்தீ எரியும். காற்று நெருப்புபோல் மிக்க வெப்பத்துடன் வீசும். இவைகளால் பரிதபிக்கப் பெற்று, பின்புறத்தில் வாரால் இயற்றின சாட்டையால் அடிக்கப்படுவான். இங்ஙனம் வருந்தி ஒரு அடி எடுத்து வைக்கவும் முடியாதிருப்பான். அவ்வழியில் சிறிதும் ஒதுங்க நிழல் அகப்படாது. சிறிது இளைப்பார இடமும் புலப்படாது. குடிக்கத் தண்ணீர் சிறிதும் அகப்படாது. இத்தகைய வழியில் மிக்க ப்ரயாஸத்துடன் நடந்து செல்வான். இருள்மூடப் பெற்றிருப்பதும் தாமஸகர்மங்களைச் செய்பவர்க்குக் கிடைக்கக் கூடியதுமாகிய பாபிஷ்ட மார்க்கத்தினால் இந்த ஜீவனை வெகு வேகத்துடன் யமனுடைய கடம் நிதானத்திற்கு இழுத்துக்கொண்டு போவார்கள். வழியில் ஆங்காங்கு வருந்தி நடக்கமுடியாமல் கீழே விழுவான்; இளைப்புறுவான்; மூர்ச்சை அடைவான்; மீளவும் மூர்ச்சை தெளிந்து எழுந்திருப்பான். தொண்ணூற்றொன்பது யோஜனை தூரமுள்ள வழியை மூன்று முஹூர்த்தங்களுக்குள் கடக்குமாறு வேகத்துடன் இவனை இழுத்துக்கொண்டு போவார்கள். பாபம் அதிகமாயிருந்தால் இரண்டு முஹூர்த்தங்களுக்குள் மிக்கவேகத்துடன் இழுத்துக் கொண்டுபோவார்கள். இங்ஙனம் யமலோகத்திற்குப் போனபின்பு பலவகை நரக பீடைகளை அனுபவிப்பான். நெருப்புத் தணல்களை உடம்பு முழுவதும் நிறைத்துக் கொளுத்தப் பெறுவான். ஒரு ஸமயம் தன் சரீரமாம்ஸத்தைத் தானே அறுத்துச் சாப்பிடுவதும், பிறர் அறுத்துக்கொடுக்கச் சாப்பிடுவதும் செய்வான். அந்த யமலோகத்தில் இவன் ஜீவனோடிருக்கும்பொழுதே இவன் குடலை நாய்களாலும் கழுக்களாலும் பிடுங்கச்செய்வார்கள். ஸர்ப்பங்களை விட்டுக் கடிக்கச் செய்வார்கள். இவற்றால் மஹத்தான வேதனையை அனுபவிப்பான். மற்றும் கைவேறு கால்வேறு தலைவேறென்று அவயவங்களையெல்லாம் தனித்தனியே சேதிப்பார்கள். யானை முதலிய வலிய ஜந்துக்களைக்கொண்டு இவனை இரண்டாகக் கிழிக்கச் செய்வார்கள். மலைச் சிகரங்களினின்று கீழ் விழத் தள்ளுவார்கள். ஜலத்தில் அமிழ்த்துவார்கள். பள்ளம் வெட்டிப் புதைப்பார்கள். இப்படிப் பட்ட நரகபாதைகளை அனுபவிப்பான். மற்றும், தாமிஸ்ரம் அந்ததாமிஸ்ரம் ரௌரவம் முதலிய பலவகை நரகங்கள் உண்டு. ஸ்த்ரீயாவது புருஷனாவது ஒருவர்மேல் ஒருவர் வழி கெட்டு மோஹம் கொண்டு புணர்ந்த பாபத்தின் பலனாக அத்தகைய நரகங்களை அனுபவிக்கப் பெறுவார்கள். தாயே! “இப்படிப்பட்ட நரகங்களும் உண்டோ?” என்று ஸந்தேஹிக்க வேண்டாம். 

ஸ்வர்க்கமும் நரகமும் இவ்வுலகத்திலேயே உண்டென்று சொல்லுகிறார்கள். நரகத்திலுள்ள பாதைகள் எவ்வெவை உண்டோ அவை இவ்விடத்திலும் புலப்படுகின்றனவல்லவா? தெய்வமொன்று உளதென்று தெரிந்துகொள்ளாமல் குடும்பத்தைப் போஷிக்கையே புருஷார்த்தமென்று குடும்ப போஷணம் செய்கின்றவனும் தன் வயிற்றை மாத்ரமே நிறைத்துக்கொண்டு ஜீவிப்பவனும் அங்ஙனம் தாம் போஷித்துக்கொண்டு வந்த குடும்பத்தையும் தன்தேஹத்தையும் துறந்து பரலோகம் சேர்ந்து இங்ஙனம் தான் செய்த பாபங்களுக்குப் பலனாக ஏற்பட்டவைகளும் கீழ்ச் சொன்னவைகளுமான நரக துக்கங்களை அனுபவிப்பார்கள். ப்ராணிகளை ஹிம்ஸித்து ஸம்பாதித்த பணத்தினால் எவன் தன் தேஹத்தைப் போஷித்துக்கொண்டு வருவானோ, அவன் அங்ஙனம் தான் போஷித்துவந்த தன் தேஹத்தை இவ்விடத்திலேயே துறந்து புண்யத்தைக் காட்டிலும் வேறுபட்ட பாபத்தையே (வழி நடக்கிறவன் வழியில் உட்கொள்வதற்காகக் கொண்டு போகும் ஆஹாரம்) பாதேயமாய் வழியிற்கொண்டு தானொருவனாகவே நரகமார்க்கத்தை அடைகின்றான். தான் பிறர்க்கு த்ரோஹம் செய்து பணம் ஸம்பாதித்துப் பிள்ளை பெண்டிர் முதலிய குடும்பத்தையும் தேஹத்தையும் போஷிப்பவன் மரணம் அடைந்து நரகத்திற்குப் போகும்பொழுது அவன் செய்த பாபம் ஒன்றுமாத்ரமே அவனைப் பின்றொடர்ந்து போமன்றி அவன் போஷித்து வந்த பிள்ளை பெண்டிர் முதலிய குடும்பமாவது தேஹமாவது அவனைப் பின்றொடரமாட்டா. ஒருவன் பாபம் செய்து ஸம்பாதித்த பணத்தினால் பலர் ஜீவிப்பினும், அந்தப் பாபத்தின் பலனை அவன் ஒருவன் மாத்ரமே அனுபவிக்க வேண்டுமன்றி அவனை அடுத்து ஜீவித்தவர் அதற்காக அவனுடன் நரகம் செல்லமாட்டார்கள். பிறர்க்கு த்ரோஹம்செய்து குடும்ப போஷணம் செய்தவன் மரணம் அடைந்து நரகம் போகையில், அவனுடைய பாபத்தை ஈஸ்வரன் அவனிடம் கொண்டுபோய்ச் சேர்க்கின்றான். அந்தப் பயத்தை அவன், பணத்தை இழந்தவன் வருந்துவதுபோல், மிக்க வருத்தத்துடன் அனுபவிக்கின்றான். “குடும்பத்தைப் போஷிக்கவேண்டுமென்று சாஸ்த்ரம் சொல்லுகின்றதே. ஆகையால் அது எப்படி பாபமாகும்” என்னில் சொல்லுகிறேன், கேள், சிறிதும் தர்மம் கலக்காமல் வேகலம் அதர்மத்தினால் குடும்பபோஷணம் செய்கிற ஜீவன் நரகத்தில் கடைசி ஸ்தானமாகிய அந்ததாமிஸ்ரமென்னும் நரகத்தை அடைகின்றான். (ஆகையால் தர்மம் தவறாமல் குடும்ப போஷணம் செய்வது அவச்யமே). கேவலம் அதர்மத்தினால் குடும்ப போஷணம் செய்பவன் நரகமே சேருவான். யமலோகத்தில் எத்தனை நரகங்கள் உண்டோ , அவற்றையெல்லாம் க்ரமத்தில் அனுபவித்துப் பாபங்களெல்லாம் கழித்தமை பால் பரிசுத்தனாகி இவ்வுலகத்தில் மீளவும் மனுஷ்ய ஜன்மம் பெறுவான். 

முப்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை