நல்லவர்கள் வெள்ளறை நின்றாய்! ஞானச்சுடரே!
பொங்கு நீள்முடி அமரர்கள் தொழுது எழ
அமுதினைக் கொடுத்தளிப்பான்
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி! நின்
அடிமையை அருள் எனக்கு,
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்
தையலார் குழல் அணைவான்,
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை
திருவெள்ளறை நின்றானே!
இந்தப் பாசுரம் திருமங்கையாழ்வார் படைத்த தேன்தமிழ்ப் பாசுரம். மயக்கும் சொற்கள் மட்டுமல்ல மதிமயங்குகிற அளவிற்கு வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார் ஆழ்வார். திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ள இந்தக் கோயில் அமைந்த ஊர் திருவெள்ளறை ஆகும். திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது. திருவரங்கத்திற்கு முற்பட்ட இடம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். திரு என்பது உயர்வைக் குறிக்கும். வெள்ளறை என்பது வெண்மையான பாறைகளாலான மலையை உடையதாக கருதப்படுகிறது. மார்க்கண்டேயரின் வேண்டுகோளின்படி சிபிச் சக்கரவர்த்தி கட்டிய கோயில் என்கிறார்கள். பின்னாளில் பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் இக்கோயிலின் கட்டிடப் பணியில் தன் கலையம்சத்தை காட்டி திருக்கோயிலை அழகுபடுத்தியிருக்கிறான். வைணவ உலகம் மறக்க முடியாதவராக திகழ்பவர் நாதமுனிகள்.
அந்த நாதமுனிகளின் முதன்மைச் சீடரான உய்யக் கொண்டார், எங்களாழ்வான் ஆகியோர் அவதரித்த அற்புதத் திருத்தலம் இது. இந்தத் தலத்தின் எம்பெருமானின் திருநாமம் தாமரைக்கண்ணன், தாயாரின் திருநாமம் செண்பகவல்லி பங்கயச் செல்வி இதைவிட தூய தமிழை நாம் எங்கே தேடினாலும் கிடைக்குமா? சரி பாசுரத்திற்கு வருவோம். ஆழ்வார் பாசுரம் படைத்த காலத்தில் இந்த ஊர் எப்படி இருந்தது தெரியுமா? திங்கள் தோய் சென்னி மாடம் என்கிறார் அதாவது, சந்திரன் நிலவைத் தொடுகிறளவிற்கு ஓங்கி வளர்ந்த மாடங்களை உடைய ஊர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இத்தனைக் காலத்திற்குப் பிறகும் இந்த ஊர் இன்னும் மிகவும் கம்பீரமாகத்தான் இருக்கிறது. கோயில் கோபுரமும் சுற்றியிருக்கிற மதிற் சுவர்களும் பழைய பெருமையெல்லாம் தனிப்பட்ட சிறப்புகளை எல்லாம் ஞாபகப்படுத்துகின்றன.
பாசுரத்தில் ஜீவனான இடம் எனும் கருதுமளவிற்கு நின் அடிமையை அருள் எனக்கு என்கிறார். உன்னிடம் நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. உனக்குச் சேவை செய்கிற பாக்கியத்தைக் கொடு. அடிமை என்றால் நம்முடைய முழுச் சுதந்திரத்தையும் தந்து விடுவது என்பதுதான். நாம் யார்யாருக்கோ நம் சுதந்திரத்தை பறிகொடுத்துவிட்டு படாதபாடாய் பரிதவித்து நிற்கிறோம். திருமங்கை ஆழ்வாரோ முழுமுதற் பொருளான பரம்பொருளான எம்பெருமானிடத்தில் தன்னையே பறிகொடுத்து விட்டார். இதுதான் பரிபூரண சரணாகதி. வைணவத்தின் மூல தாரக மந்திரமே பிரபத்தி என்கிற சரணாகதிதான். இந்த அடிப்படையில்தான் நான் உனக்கு அடிமை செய்ய வேண்டும்; அதற்கு உன் திருவருள் வேண்டும் என்று மன்றாடுகிறார்.
அங்கு இருக்கும் எம்பெருமான் எப்படிப்பட்டவனாம் தெரியுமா? நம்மைவிட உயர்ந்தவர்கள் தேவர்கள் அதாவது அமரர்கள், அவர்களே இந்தப் பெருமானை தொழுது எழ வரிசையில் காத்து நிற்கிறார்களாம். எதற்கு நிற்கிறார்கள் தெரியுமா? தேவர்களுக்கு அமுதினைக் கொடுத்து அளிப்பதற்குத்தான். பூவில் இருக்கும் மகரந்தத்தை உண்டு களிக்கும் ஆண் வண்டு தன் இணையோடு சேர்ந்து மாட மாளிகையின் மேல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதாம். இப்படி வளமுள்ள நல்ல எழிலும் பொழிலும் அமைந்திருக்கிற ஊர் திருவெள்ளறை என்று படம் பிடித்துக் காண்பிக்கிறார், திருமங்கையாழ்வார். தன்னுடைய பெரிய திருமொழியில். இதே திருவெள்ளறை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் திருமங்கை ஆழ்வாருக்கு முற்பட்டவரான பெரியாழ்வார் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியில் மிக அற்புதமாகக் கூறியுள்ளார். கிருஷ்ணானுபவத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட பெரியாழ்வாரின் ‘காப்பிடல்’ பகுதியில் அமைந்துள்ள இந்தப் பாசுரத்தை பார்ப்போம்...
இந்திரனோடு பிரமன்
ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு
மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும்
சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது ஆகும்
அழகனே காப்பிட வாராய்
திருவெள்ளறையில் இருந்து கொண்டு அருள் பாலிப்பவனே! நீ எப்படிப்பட்டவன் தெரியுமா? பிரம்மன், சிவன், இந்திரன் இவர்களெல்லாம் மாமலர் என்று சொல்லக்கூடிய அழகிய தாமரை மலர்களை கையில் எடுத்துக்கொண்டு உன்னைப் பார்ப்பதற்கு வந்து நிற்கிறார்கள். எப்படி நிற்கிறார்கள் தெரியுமா? சாதாரணமானவர்களின் கண்களுக்குப் புலப்படாமல் வந்து நிற்கிறார்களாம். அதைத்தான் ‘மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றனர்’’ என்கிறார், பெரியாழ்வார். திருவெள்ளறையில் இருக்கிற மாட மாளிகைகள் நிலவைத் தொடுகிற அளவிற்கு ஓங்கி வளர்ந்தது என்கிற ரீதியில் திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே! என்கிறார் திருமங்கை ஆழ்வார். பெரியாழ்வாரும் இந்தப் பாசுரத்தில் சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் என்கிறார்.
நான் மறை வேதமும் படித்த ஞானியர்கள் வேதவித்துகள் அதன் வழியாக உன்னை அறிய முயலுகிறவர்கள் வந்து நிற்கிறார்கள். ஆனால், உன்னை அவ்வளவு சீக்கிரம் யாராலும் அறிய முடியுமா? அந்தியம் போது என்றால் பொன்மாலைப் பொழுது ‘இந்தப் பாசுரத்தில் என்ன பெரிய சிறப்பு என்னவென்றால் எம்பெருமான் நாராயணனே மிகவும் ரம்மியமானவன் குளிர்ச்சி பொருந்தியவன். அவன் எங்கு இருக்கிறான் என்றால் நிலவு அதாவது, சந்திரன் ஜொலிக்கும் பிரகாசிக்கிற ஊர் அதாவது, முழுமதி தோன்றுகிற ஊர் ஊரிலுள்ள பெருமான், குளிர்ச்சி பொருந்தியவன் உன்னைக் காண வருபவர்கள் குளிர்ச்சி பொருந்திய தாமரை மலர்களை எடுத்து வருகிறார்கள்.
ஊரிலுள்ள உன் பக்தர்கள் மிகவும் மென்மையானவர்களாக ஈர மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லாம் ஒத்துப் போகிறது. இரண்டு ஆழ்வார்கள் வேறுபட்ட காலங்கள் அவர்கள் வாழ்ந்து இந்தப் பெருமாளை துதித்துப் போற்றி மங்களாசாசனம் செய்திருக்கும் பெருமாளையும் இந்த ஊரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறார்கள் என்றால் அந்த ஊரின் மகிமை எப்படி இருக்கும்? இந்த ஊரைப் பற்றி பெரியாழ்வாரின் பத்து பாசுரங்களும் சுத்த மலைத் தேனாக இருக்கிறது அதனால்தான் நம்மையும் மலைக்க வைக்கிறது.
நல்லவர்கள் வெள்ளறை நின்றாய்!
ஞானச்சுடரே!
கண்ணனே வெள்ளறை நின்றாய்!
முப்போதும் வானவர்கள் ஏத்தும்
முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்படிச் சொல்லிக் கொண்டு வருகிற பெரியாழ்வார் இந்தப் பெருமாளை சென்று வணங்கினால் என்ன நன்மை ஏற்படும் என்பதையும் ஆணித் தரமாகச் சொல்கிறார்.
போதமர் செல்வக் கொழுந்து புணர்திரு வெள்ளறை யானை
மாதர்க் குயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன்கொள்ள வல்ல விட்டுசித் தன்சொன்ன மாலை
பாதப் பயன்கொள்ள வல்ல பத்தருள்ளார் வினை போமே.
இங்கே வந்து இந்த இறைவனை வணங்குபவர்களின் வினைகள் அவரைவிட்டு அகலும். அதாவது, அவர்களின் துயர்கள் துடைக்கப்படும் மகிழ்ச்சி ஆரம்பமாகும் இது சத்தியம் என்கிறார். திருமங்கை ஆழ்வாரோ ஒருபடி மேலே போகிறார்.
மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய,
அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை,
நஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும்,
எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே
இந்த எம்பெருமானை வணங்குபவர்கள் தேவர்களுக்கு தலைவனாகும் தகுதியைப் பெறுவார்கள் அது மட்டுமல்ல இங்கும் சரி, அங்கும் சரி, அரசை ஆளும் தகுதி பெறுவார்கள் என்கிறார். நீங்கள் இன்றைக்குகூட சென்று திருவெள்ளறைக்குச் சென்று தரிசியுங்கள். ஆழ்வாரின் அமுத வாக்குகள் எத்துணை சத்தியம் என்பதை உணர்வீர்கள். இந்தப் பெருமானை புண்டரீகாட்சன் அதாவது, தாமரைக்கண்ணனை தாமரை மலர் கொண்டு வணங்குவோம். வாழ்வில் வளம் பெறுவோம்!
நன்றி - தினகரன்