குடந்தையில் கிடந்த மாயக்கூத்தன்
பக்தியில் பல வகை உண்டு. ஆண்டாள் நாச்சியாரைப்போல நாராயணனே நமக்கு பறை தருவான் என்று முதலிலேயே மூலமூர்த்தியான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களை பற்றிக் கொள்வது என்பது இயற்கையிலேயே அமைந்த ஒன்று. மற்றொரு பக்தி என்பது இடம் மாறி தடம் மாறி தனக்கேற்ற பரம்பொருளை கண்டுபிடித்து அதனோடு ஐக்கியமாவது. இடம் மாறினாலும் தடம் மாறினாலும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தனி முத்திரை பதித்தவர் திருமழிசை ஆழ்வார். பூந்தமல்லிக்குப் பக்கத்தில் உள்ள திருமழிசையில் அவதரித்தவர் அவர். நான்முகன் திருவந்தாதி தூய வெண்பாக்களால் ஆனது. திருச்சந்தவிருத்தம் கலிவிருத்தப் பாடல்களைக் கொண்டது. காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாசுரங்களை எளிய இனிய தமிழில் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் படைத்திருக்கிறார்.
இவர் வைணவத்தில் ஈடுபட்டு திருமால் மேல் காதல் கொள்வதற்கு முன்பு ஜைனம், பெளத்தம், சைவம் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார். திருவல்லிக்கேணியில் பல காலம் வசித்தார். மதங்கள் மாறினாலும் இவர் மனம் மாறினாலும் மனம் அமைதியடையாமல் குழம்பிய குட்டையாகவே இருந்திருக்கிறது. இப்படி இருந்தவரை மனமாற்றம் செய்து மடைமாற்றம் செய்தவர். தமிழினத் தலைவர் என்று பெயர் பெற்ற பேயாழ்வார் ஆவார். பேயாழ்வார்தான் திருமழிசை ஆழ்வாரின் பரமகுரு. திருமழிசை ஆழ்வார் முதலாழ்வார்கள் காலத்தைச் சேர்ந்தவர். பல்வேறு மதங்களில் பல்வேறு விதமான அனுபவத்தைப் பெற்றவர். ஆதலால் அதனுடைய வெளிப்பாடாக தன்னுடைய எண்ண ஓட்டங்களை மன உணர்வுகளை மிகவும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்வதுபோல் ஒரு பாசுரம் படைத்திருக்கிறார்.
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாயமாயவனை மாலவனை மாதவனை ஏத்தார் னவரே யாதலால் இன்று என் அறியாமையால் எங்கெங்கோ பயணம் செய்தேன் மாலவன் திருவடிதான் உயர்ந்தது என்று திருமால் பெருமையை குறிப்பிடுகிறார். பேயாழ்வாரால் மனமாற்றம் செய்யப்பட்ட பின் திருமழிசை ஆழ்வார் அதி அற்புத பாசுரங்களை தந்திருக்கிறார். பரம்பொருளே கதி என்று உடலும் உள்ளமும் உயிரோட்டமாகக் கலந்தால்தான் இப்படிப்பட்ட பாசுரங்களை படைக்க முடியும். இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்நின்றாக நின்னருளென் பாலதே, நன்றாகநானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே நீயென்னை யன்றி யிலை இன்றைக்கோ நாளைக்கோ இன்னும் சிறிது காலம் சென்றோ என்றைக்கு ஆனாலும் அருளுக்கு பாத்திரமான அன்புடைய தலைவனான உன் அருட்பார்வை என்மீது படும்.
காலதாமதம் ஆகலாம். ஆனால், உன்னால் ரொம்பவும் காலம் கடத்த முடியாது என்பது எனக்குத் தெரியும். உன் அருள் எனக்கு கிடைக்கும் வரை நான் பொறுமையோடு காத்திருப்பேன். காத்திருக்கும் சமயத்தில் உன் நினைவுகளோடு மட்டுேமதான் இருப்பேன். உன்னையொழிய வேறு புகல் இல்லாதவன்.
இப்படி சொல்லிக் கொண்டே வந்த திருமழிசை ஆழ்வார் உடையவனான நீ உடமையாகிற என்னை ஏற்றுக் கொண்டால் ஒழிய நிறைவாளனாக மாட்டாய் என்கிறார் ஆழ்வார். இது எப்படி இருக்கிறது என்றால் கொண்டான் இருந்தால்தானே கொடுப்பவனுக்கு மரியாதை இருக்க முடியும். ஒரு ஊரில் பெரிய செல்வந்தர் இருக்கிறார். அவரிடம் பத்து இருபது பேர் இரவல் கேட்டு, யாசகம் கேட்டு, உதவி கேட்டு சென்றால்தானே வள்ளல் தன்மை கொண்ட அந்தச் செல்வந்தருக்குப் பெருமை.
அப்படி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் ஒட்டுமொத்த செல்வத்தையும் வைத்துக் கொண்டிருப்பவன், அந்த செல்வத்தை வைத்து அவனும் அவன் குடும்பம் மட்டும் எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடுவார்கள். அதனால், அவனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் என்ன ஒரு பெரிய பெருமை வந்துவிட முடியும்? அந்த உணர்வில்தான் நான் உன்னை அன்றி இலேன் கண்டாய். நீ என்னை அன்றி இலை என்கிறார். எந்த அளவிற்கு இந்த ஜீவாத்மாவுக்கும் அந்த பரமாத்மாவிற்கும் நெருக்கமும் உருக்கமும் இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்து வாழ முடியும். இன்னும் பச்சையாக கொச்சையாக சொல்வதென்றால் உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை. அதைப்போல என்னைவிட்டாலும் உன்னை பூஜிப்பவர்கள் வேறு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம்தான் திருமழிசை ஆழ்வாரின் சிந்தனையை ஒட்டு மொத்தமாக ஆக்கிரமித்து இருக்கிறது. நான் உனக்கு என்றைக்கும் அடிமை. வைணவத்தின் ஜீவ ஊற்றே திருமாலின் திருவடிதான் பிரதானம். சரணாகதி தத்துவம்தான்.
திருமங்கையாழ்வார் இதையே ஒரு பாசுரத்தில்,
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திருநீர்மலை நித்திலத் தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர்தமக்குக்
கதியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே
அதேபோல ஆழ்வார்களின் தலைமகனாக விளங்கும் நம்மாழ்வார்,
உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்பெற்றேன் ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய்கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்குஅற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே சிவவாக்கியர் என்று பெயர் எடுத்த ஆழ்வார் திருமழிசையில் அவதரித்தால் திருமழிசை ஆழ்வார் என்ற திருநாமம் ஏற்படலாயிற்று. திருமழிசை ஆழ்வார் திருவேங்கடம் காஞ்சிபுரம் என்று பல தலங்களில் உள்ள பெருமாளை எம்பெருமானை பாடிப் பரவசப்பட்டாலும் கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள் மீது ஒரு தனி மாளாக் காதல் அவருக்குண்டு. கும்பகோணத்தை அவர் அதிகம் நேசித்ததால்தான் அந்த கோயில் நகரமாம் திருக்குடந்தையிலேயே பிருந்தாவனமாகிவிட்டார். இன்றைக்கும் கும்பகோணத்தில் உள்ள சாத்தாரத் தெருவில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளையும் பொருளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
குடந்தை சார்ங்கபாணி பாசுரத்தைப் பார்ப்போம். நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்கிடந்தவாறெழுந்திருந்து பேசுவாழி கேசனே. காவிரிக் கரையில் பள்ளிகொண்டிருக்கும் ஆபத்பாந்தவனே! நீ உலகம் அளந்ததனால் ஏற்பட்ட அயர்ச்சியா? வராக அவதாரமெடுத்து நற்பணிகள் புரிந்தாயே அதனால் ஏற்பட்ட களைப்பா? என்ன அயற்சி உனக்கு? எதனால் ஏற்பட்டது இந்தக் களைப்பு படுத்துக் கிடக்கிறாயே. எனக்கு அருள்மழை பொழிய வேண்டாமா? உடனே எழுந்திரு என்று ஆண்டவனுக்கு அன்புக் கட்டளை போடுகிறார். ஆழ்வாருக்கு ஆண்டவனிடம் அன்பின் பிழிவு ஏற்பட்டால் ஒழிய இப்படிப்பட்ட பாசுரங்களை படைக்க முடியுமா? இப்படிப்பட்ட தெய்வீக வார்த்தைகள்தான் வந்து விழுமா? அடடா... என்ன அற்புதம்! அங்கே எம்பெருமான் சார்ங்கபாணி எனும் திருநாமத்தோடு சேவை சாதிக்கிறார். தூங்கி எழுவதுபோல் மிக அற்புதமாக இயல்பாக தத்ரூபமாகக் காட்சி அளிப்பார்.
அதனால் கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே என்று அன்பின் மிகுதியால் வார்த்தைகளைப் போடுகிறார் ஆழ்வார். குடந்தைக் கிடந்த மாமாயன் அல்லவா அவன்! திருமழிசை ஆழ்வாரின் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்ததுபோல் ஆண்டாள் நாச்சியார் தன்னுடைய நாச்சியார் திருமொழியில் ‘‘கோலால் நிறைமேய்த்தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி என்று அந்த குடமாடு கூத்தனை கொண்டாடுகிறார். நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும், ஸ்ரீஆண்டாள் நாச்சியாரும் கொண்டாடிய குடந்தை சார்ங்கபாணியை சென்று பாருங்கள். அன்றைக்கு அவர்கள் பரவசப்பட்டு பாடியதுபோல் இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார், பெருமாள். கோயில் நகரமாம் குடந்தைக்குச் செல்லுங்கள். அந்த மாயக்கூத்தனை மனதார வழிபடுங்கள் வாழ்வில் அனைத்து ஏற்றத்தையும் பெறுங்கள். திருமழிசை ஆழ்வாரின் மிக அழகான மயக்கும் தமிழில் அளித்துள்ள ஒரு பாசுரத்தைப் படித்துக் களியுங்கள்.
அன்புஆவாய் ஆர்அமுதம் ஆவாய் அடியேனுக்கு
இன்புஆவாய் எல்லாமும் நீஆவாய் பொன்பாவை
கேள்வா கிளர்ஒளிஎன் கேசவனே கேடுஇன்றி
ஆள்வாய்க்கு அடியேன்நான் ஆள்.
நன்றி - தினகரன்