மயக்கும் தமிழ் - 10 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்

‘‘கல்லால் கடலையணைகட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மண்ணிய நாங்கூர்
செல்வா, திருவெள்ளக் குளத்துறைவானே
எல்லா இடரும் கெடுமா றருளாயே!’’

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வாரால் படைக்கப்பட்ட மிக அற்புதமான பாசுரம் இது. கலியன், பரகாலன், மங்கை மன்னன் ஆலிநாட்டு அரசன் என்று பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வாரின் ஆன்மா குடிகொண்டிருக்கும் இடம்தான் திருவெள்ளக்குளம் என்று அழைக்கப்படுகிற அண்ணன் பெருமாள் கோயில். திருப்பதியில் லட்சக்கணத்தில் வருகிற பக்தர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கிற ஸ்ரீநிவாசனை அந்தக் கோவிந்தனை அண்ணா என அன்போடு அழைத்து மகிழ்ந்தவர் திருமங்கை ஆழ்வார். அதன்பிறகு இந்த ஊர்ப் பெருமாளைத்தான் ‘அண்ணா அடியேன் இடரைக் களையாயே’ என்று உள்ளம் உருகி அழைக்கிறார். மொத்தம் பத்து பாசுரங்கள். பத்தும் முத்துக்கள். நூற்றியெட்டு திவ்ய தேசங்களிலேயே திருமலையில் நித்ய வாசம் செய்யும் எம்பெருமான் கோவிந்தனையும் அண்ணன் கோயில் பெருமாளையும்தான் அண்ணா என்று அழைப்பதால் இருவருக்கும் உள்ள ஒருவித நெருக்கத்தையும் உருக்கத்தையும் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார்.


திருப்பதியில் சேவை சாதித்துக்கொண்டு வருகிற பக்த கோடிகளுக்கு வேண்டிய வரங்களைத்தரும் பகவானை அங்கே சென்று அவனை தரிசிக்க முடியாதவர்கள் அண்ணன் கோயிலுக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை செலுத்தலாம் என்பது காலம் காலமாக தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. திருவெள்ளக்குளம் என்கிற அண்ணன் கோயிலைப் பற்றி ஏன் இவ்வளவு செய்திகள் என்றால் ஒரு பெரிய விஷயம் அடங்கி இருக்கிறது.  நிலன் என்ற பெயரில் சோழ அரசனிடம் படைத்தளபதியாய் குறுநில மன்னனாய் இருந்து வந்த மங்கை மன்னனை ஆழ்வாராக மாற்றி மடை மாற்றம் செய்யப்பட்டதற்கு வித்திட்ட ஊர்தான் இந்த அண்ணன் கோயில். திருமங்கை ஆழ்வார் காதலித்து கைபிடித்த குமுதவல்லி நாச்சியார் அவதரித்த ஊர்.  குமுதவல்லி நாச்சியார் இல்லையென்றால் வீரதீரம் பொருந்திய மங்கை மன்னன் நமக்கு கிடைத்திருப்பாரா என்ன? 

படைத்தளபதியாக இருந்தவரை பாட்டுடைத் தலைவனை திருமாலின் அடியவராக்கி அவருக்கு பாசுரங்களை அள்ளி வழங்கச் செய்த பெருமை திருமங்கையாழ்வாரின் தர்மபத்தினி குமுதவல்லி நாச்சியாரையே சாரும்! பன்னிரு ஆழ்வார்களில் தர்மபத்தினி சகிதம் காட்சியளிக்கும் ஆழ்வார் திருமங்கை ஆழ்வார்தான். குமுதவல்லி நாச்சியார்தான் நீலனாக இருந்தவரை வைணவராக்கி, அதன் பெருமைகளை உணரச் செய்து அவரை திருமால் அடியாராக்கி அவர் மூலம் அதாவது, திருமங்கை ஆழ்வார் மூலம் கற்கண்டுப் பாசுரங்களை கிடைக்க வழிவகை செய்தார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வாரின் பங்கு மிக மகத்தான ஒன்றாகும்! ஆயிரத்து எண்பத்து நான்கு பாசுரங்களை படைத்திருக்கிறார்.

பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை ஆகிய ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்தார். இவை எல்லாம் தேன் சொட்டும் பாசுரங்கள். இவருடைய ஆறு பிரபந்தங்களும் வேதத்தின் ஆறு அங்கங்களுக்குச் சமம். ‘ரதபந்தம்’ என்னும் சித்திரக்கவி பாடியுள்ளார். இவர் பாடிய திருநெடுந்தாண்டகத்தைக் கேட்டு மகிழ்ந்த அரங்கன் திருமங்கை ஆழ்வாருக்கு மிகவும் உகந்த ரங்கநாதன் உமக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, நாமாக இருந்தால் பங்களா, பதவி, பட்டம் போன்ற அழியக் கூடியவைகளின் பட்டியலை கொடுத்திருப்போம். ஆனால் தமிழ் மீதும் திருமால் மீதும் மாளாக் காதல் கொண்ட நம் கலியனோ, வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் படைத்த நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நான் கேட்டு இன்புற வேண்டும் எனக் கேட்டாராம். கற்றாரைக் கற்றாரே காமுறுவர். அன்று தொடங்கியது திருவரங்கத்தில் பகல் பத்து ராப்பத்து கொண்டாட்டம்.

இன்றைக்கும் தமிழ் உயிரோட்டமாக இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஆழ்வார்களின் அமுதத்தமிழான நாலாயிர திவ்ய பிரபந்தம்தான். இதில் மாறுபட்ட கருத்திற்கே இடமில்லை. ஒரு குமுதவல்லி நாச்சியாரால் நமக்கு ஒரு ஆழ்வார் கிடைத்திருக்கிறார். அவருக்கு பஞ்ச சமஸ்காரம் செய்த பெருமாள் யார் தெரியுமா? திருமங்கை ஆழ்வார் மொழியிலேயே சொல்ல வேண்டுமென்றால், ‘தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை நாடி நான் கண்டுகொண்டேன் நறையூரிலே.’ இன்றைக்கு நாச்சியார் கோயில் என்று வழங்கப்படுகிற திவ்ய தேசம்தான் அது. இங்குதான் உலகப் புகழ்பெற்ற கல்கருடன் தரிசனம்.

தன்னுடைய ஆச்சார்யனான நாச்சியார் கோயில் பெருமாளுக்கு ஸ்ரீநிவாசனுக்கு பாசுரங்களால் பெரிய விருந்தே படைத்திருக்கிறார்.

யார் யாரெல்லாம் இறை பணியில் ஈடுபட்டிருந்தார்களோ அவர்களைப்போற்றி புகழும் பண்பு திருமங்கை ஆழ்வாரின் தனிச் சிறப்பு. சோழ நாயனார் என்ற பெயர் கொண்ட கோச்செங்கணான் என்ற சோழன் மிகச் சிறந்த சிவபக்தன். அப்பரடிகள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் நினைப்பவர் மனம் கோயில் ஆக கொண்டவன் என்பார்களே அதைப்போல அந்த அரசனுக்கு சிந்தையெல்லாம் சிவன்தான். அப்படிப்பட்ட அரசன் பெருமாளுக்கு நாச்சியார் கோயிலை பெரிய அளவில் கட்டினான். அவனுடைய மகத்தான சேவையை மனதில் கொண்ட திருமங்கை மன்னன்,

‘‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
தெய்வ்வாள் வளங்கொண்ட சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே!’’ 

என்று சோழப் பேரரசனை மனமாறப் பாராட்டியிருக்கிறார்.

நாச்சியார் கோயிலில் ஆசார்ய பஞ்ச சமஸ்காரம் பெற்ற திருமங்கை மன்னனுக்கு திருக்கண்ணபுரத்து செளரிராஜப் பெருமாள் மந்திர உபதேசம் செய்தார். இதனால் திருக்கண்ணபுர பெருமாளுக்கு நூறு பாசுரங்களை கற்கண்டு பாகாக தந்திருக்கிறார் திருமங்கை ஆழ்வார்.

‘‘கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை
எம்மானை, எம்பிரானை, ஈசனை, என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.’’

கஜேந்திரன் என்னும் யானையின் துன்பத்தை போக்கியவனே! கருநிற மேனியனே! எம்பெருமானே மரகதமணி போன்று சிறப்பானவனே! என் மனதில் வாழ்கின்ற ஈசனே! இறைவனே, நான் உன்னைப்பற்றி உய்ந்து போனேன் என்கிறார் உருக்கமாக. அவர் மட்டுமா? அவரால் அவர் படைத்த அற்புத பிரபந்தங்களால் நாமும்தானே இறைவனின் திருத்தாளினை படித்து உய்ய வழிவகை காண்கிறார். மற்றொரு பாசுரத்திலே இறைவனிடம்
மன்றாடுகிறார். 

‘‘பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே’’  
  
உலக பந்தங்களிலே அதிக ஈடுபாடு இல்லை. பொருள் மீதும் மற்ற ஏனைய விஷயங்கள் மீதும் எனக்கு பெரிய நாட்டம் இல்லை. எவரிடத்திலும் எனக்கு எந்தப் பற்றுக்கோடும் கிடையாது. ஆதலால், உன்னையே சரண் புகுந்தேன். இவன் நமக்கு மிகவும் வேண்டியவன் என்று எனக்கு உன் அருளைத்தா. மாறாக என்னை நட்டாற்றில் விட்டுவிடாதே. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாறிவிடப் போகிறது என்று அரசனாக இருந்த ஆழ்வாரே ஆண்டவனிடம் செளரிப் பெருமாளிடம் மண்டியிடுகிறார். நாமெல்லாம் எம்மாத்திரம்? தை மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் சீர்காழிக்குப் பக்கத்தில் உள்ள திருநாங்கூர் சென்று பன்னிரெண்டு கருட சேவையை தரிசியுங்கள். அங்கே ஹம்ச வாகனத்தில்  குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கை மன்னன் பவனி வருவதைப் பார்க்க கோடிக் கண்கள் வேண்டும்.


இன்றைக்கும் குமுதவல்லி நாச்சியார் அவதரித்த அண்ணன் கோயிலுக்கு சென்றால் திருமங்கை ஆழ்வாருக்கு தனி மரியாதைதான். நாச்சியார் கோயிலிலும் திருக்கண்ணபுரம் செளரிராஜ ஆழ்வார் காட்டியபடி வருகின்ற பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார்கள். இந்த ஊர்களுக்குச் சென்று வாருங்கள். அனுபவத்தில் தெரிந்து கொள்வீர்கள். பக்திக்கும் மனஅமைதிக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள். திருமங்கை ஆழ்வாரை நமக்கு உருமாற்றித் தந்த குமுதவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்... சரணம்.

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை