மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்தொன்பதாவது அத்தியாயம்
(கீழ்ச் சொன்ன பக்தியோகத்தின் பிரிவுகளையும் காலஸ்வரூபத்தையும் கூறுதல்)
தேவஹூதி சொல்லுகிறாள்:- வாராய் பகவானே! மூலப்ரக்ருதி அதன் கார்யமான மஹத்து முதலிய தத்வங்கள் ஜீவாத்மா பரமாத்மா இவர்களின் உண்மையான ஸ்வரூபத்தை அறிவிக்கும்படியான லக்ஷணத்தை நீ எனக்கு மொழிந்தனை. ஸித்தாந்தங்களில் இந்த ப்ரக்ருதி முதலியவற்றின் உண்மையை அறிவது எந்த பக்தியோகத்திற்கு மூலமென்று சொல்லுகிறார்களோ, அந்த பக்தியோகத்தின் பிரிவுகளை எனக்கு விவரித்து மொழிவாயாக. நீ இதையெல்லாம் மொழியவல்லனல்லவா? மோக்ஷத்தை விரும்பும் புருஷன் இஹபரலோகங்கள் இரண்டிலும் எதைக் கேட்டமாத்ரத்தில் வைராக்யம் உண்டாகப் பெறுவானோ, அத்தகைய ஜீவலோகத்தின் ஸம்ஸாரகதிகளை எனக்கு மொழிவாயாக. அவை பற்பல வகைப்பட்டிருக்கும் அல்லவா? பகவானுக்குச் சரீரமாயிருப்பதும் மேன்மையுள்ள ப்ரஹ்மாதிகளையும் தன்வசப்படுத்தி ஆள்வதுமாகிய காலத்தின் ஸ்வரூபத்தை எனக்கு மொழிவாயாக. இந்தக் காலத்தினால் விளையும் ஜன்ம ஜரா மரணாதிரூபமான ஸாம்ஸாரிக தர்மங்களைக் கடக்கும் பொருட்டல்லவா எவ்விதத்திலும் கெடுதியில்லாத நிவ்ருத்தி தர்மத்தைப் பெரியோர்கள் ஆசரிக்கின்றார்கள். அத்தகைய காலத்தின் ஸ்வரூபத்தை எனக்குச் சொல்லவேண்டும். தேஹமே ஆத்மாவென்றும் தானே ஸ்வந்த்ரன் என்றும் ப்ரமித்து ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறியாமல் ஸ்வர்க்க நரகாதிகளை ஸாதித்துக் கொடுப்பவைகளான புண்ய பாப ரூப கர்மங்களில் தொடர்ந்த புத்தியால் இழுக்கப்பட்டு வருந்தி எல்லையற்றதாகிய ஸம்ஸாரமாகிற காடாந்தகாரத்தில் உறங்குகின்ற உலகத்தை எழுப்பும் பொருட்டு ஜ்ஞானயோகாதிகளை உபதேசிக்கின்ற நீ பாஸ்கரன் (ஸூர்யன்) போல் அவதரித்தாயல்லவா?
மைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் விதுரனே! இங்ஙனம் மதுரமாய் மொழிந்த மாதாவின் வசனத்தைக் கேட்டு அபிநந்தித்து மாமுனிவராகிய கபிலர் கேள்விகள் அழகாயிருந்தமையால் ஸந்தோஷம் அடைந்து தாயிடத்தில் நிரம்பவும் மனவிரக்கம் உண்டாகப் பெற்று அவளைப் பார்த்து இங்ஙனம் மொழிந்தார்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறார்:- வாராய் மடந்தையர் மணியே! பக்தியோகத்தின் வழிகள் பலவாயிருக்கையாலே பக்தியோகமும் பலவாறாயிருக்கும். ஸத்வாதி குணங்களின் வ்யாபாரபேதத்தினால் புருஷர்களின் (மனக்கருத்து) மனோவ்ருத்தியும் பேதித்திருக்கும். அந்த மனோவ்ருத்தி பேதத்தினால் பக்தியோகம் பலபிரிவுகளைப் பெறுகின்றது. புருஷர்களின் மனோவ்ருத்தி தாமஸமென்றும் ராஜஸமென்றும் ஸாத்விகமென்றும் மூன்றுவகைப்பட்டிருக்கும். பக்தியோகமும் அங்ஙனம் பேதித்திருக்கும். ஹிம்ஸை ஜம்பம் மாத்ஸர்யம் இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது இரண்டையாவது மூன்றையுமாவது மனத்தில் ஸங்கல்பித்துக்கொண்டு மனத்தில் கோபமுடையவனும் ப்ரஹ்மஸ்வரூபமல்லாத ஸ்வதந்த்ரவஸ்து உண்டென்று நினைப்பவனுமாகி ஸர்வேச்வரனான என்னிடத்தில் பக்தி செய்வானாயின், அம்மூன்று வகைப்பட்ட பக்தியும் தாமஸ பக்தியோகமென்று கூறப்படும். (அவற்றில் ஹிம்ஸையை உத்தேசித்து நடத்து பக்தியோகம் அதமமாம். (உபயோகமற்றதாம்). ஜம்பத்திற்காகச் செய்யும் பக்தியோகம் மத்யமம். மாத்ஸர்யத்தினால் செய்யும் பக்தியோகம் உத்தமமென்றுணர்க). சப்தாதி விஷயங்கள் யசஸ்ஸு ஐஸ்வர்யம் இவற்றில் ஒவ்வொன்றையாவது இரண்டையாவது மூன்றையுமாவது விரும்பி என்னைப் பரமாத்மாவென்றும் தனக்கு அந்தராத்மாவாய்த் தன்னைச் சரீரமாகவுடையவனென்றும் அறியாமல் கேவலம் ஒரு தேவதையாக நினைத்து எவன் என்னை அர்ச்சாதிகளில் பூஜிக்கிறானோ, அவனுடைய பக்தியோகம் ராஜஸமென்று கூறப்படும். தன் பாபங்கள் கழியவேண்டுமென்றாவது, பரமபுருஷனிடத்தில் கர்மஸமர்ப்பணம் செய்து அதனால் விளையக்கூடிய அவனுடைய முகமலர்த்தியை உத்தேசித்தாவது ஸர்வேஸ்வரனுடைய ஆஜ்ஞையாகையால் நாம் இதை அவச்யம் செய்யவேண்டும். செய்யாவிடின் பகவானுடைய விக்ரஹத்திற்குப் பாத்ரமாவோமென்றாவது தான் ஈஸ்வரனுக்குச் சரீரமென்றும் ஈஸ்வரன் தனக்கு அந்தர்யாமியென்றும் அவனைத் தவிரத் தனக்கு நிலைமையில்லையென்றும் தெரிந்துகொண்டு என்னைப் பூஜிப்பானாயின், அந்த பக்தியோகம் ஸாத்விகமென்று கூறப்படும். இந்த ஸாத்விக பக்தியோகமும் உத்தமம் மத்யமம் அதமம் என்று மூன்று வகைப்பட்டிருக்கும். பகவானுடைய ஆஜ்ஞையாகையால் நாம் இதை அவச்யம் செய்யவேண்டுமென்று நடத்தும் பக்தியோகம் உத்தமமாம். பகவானிடத்தில் தான் செய்யும் கர்மங்களை அர்ப்பணம் செய்து அதனால் அவன் திருவுள்ளம் உகந்து அவ்வழியால் தன் விருப்பம் நிறைவேற வேண்டுமென்று நினைத்துச் செய்யும் பக்தியோகம் மத்யமமாம். தன் பாபங்கள் தீரவேண்டுமென்று நடத்தும் பக்தி யோகம் அதமமாம். ஸமஸ்த ப்ராணிகளின் ஹ்ருதயத்திலும் வாஸம் செய்கின்ற புருஷோத்தமனான என்னிடத்தில், என் குணங்களைக் கேட்ட மாத்ரத்தினால், கங்கா ஜலம் இடையில் எங்கும் தங்காமல் ஸமுத்ரம்போய்ச் சேருவது போல், வேறு நினைவுகளால் மறைக்கப்படாமல் எவ்வகைப் பயன்களையும் விரும்பாமல் வேறு உபாயங்களின் ஸம்பந்தமின்றி ப்ரீதி செய்கையே பக்தியோகத்திற்கு முக்ய லக்ஷணம். இது ஸத்வாதி குணங்களால் வரும் தோஷங்களைப் போக்கி மோக்ஷத்தை நிறைவேற்றிக் கொடுக்கும். இத்தகைய பக்தியோகத்தை ஆசரிப்பவர் என்னைப் பணிந்திருக்கையொழிய, ஸாலோக்யம் ஸார்ஷ்டி ஸாமீப்யம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம் இவைகளை நான் வேண்டிக் கொடுக்கிலும் விரும்பமாட்டர்கள். இனி ஸம்ஸாரிக பலன்களை விரும்பமாட்டார்களென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ. எதனால் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களை (ப்ரக்ருதி ஸம்பந்தத்தைக் கடந்து என்னோடொத்திருக்கையாகிய மோக்ஷத்தை அடைவானோ, அதுவே சிறந்த பக்தியோகமென்று கூறுகின்றார்கள். அந்த பக்தியோகத்தின் அங்கங்களைச் சொல்லுகிறேன் கேட்பாயாக. ஒரு பலனையும் விரும்பாமல் தனது வர்ணாச்ரமங்களுக்கு உரிய தர்மத்தை அனுஷ்டிக்கையும், பக்தியின் அங்கங்களெல்லாவற்றிலும் சிறந்ததும் அதிக ஹிம்ஸையில்லாமல் நடத்தப்படுவதும் பஞ்சராத்ர சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டதுமாகிய பகவதாராதனமும், என்னுடைய அர்ச்சா விக்ரஹங்கள் எழுந்தருளியிருக்கிற இடங்களைக் காண்கையும் அவ்விடங்களைக் கோமயத்தினால் மெழுகிச் சுத்திசெய்கை முதலியதும், அவற்றைப் பூஜிக்கையும், துதிசெய்கையும், வணங்குகையும், ஸமஸ்த பூதங்களிலும் நான் உள்ளும் புறமும் நிறைந்திருக்கையால் எல்லாம் பகவத் ஸ்வரூபங்களேயென்கிற நினைவும், மனக்கலக்கம் உண்டாகக்கூடிய காரணங்கள் பல உண்டாயிருப்பினும் மனக்கலக்கமுறாதிருக்கையும், வைராக்யமும், தனக்கு மேற்பட்ட பெரியோர்களை வெகுமதிக்கையும், தனக்குக் கீழ்ப்பட்ட தீனர்களிடத்தில் மன இரக்கமுற்றிருக்கையும், தன்னோடொத்தவரிடத்தில் ஸ்னேஹித்திருக்கையும், யம நியமாதிகளும், வேதாந்த சாஸ்த்ரங்களைக் கேட்கையும், என்னுடைய நாம ஸங்கீர்த்தனம் செய்கையும், மனோவாக்காயங்கள் ஒத்திருக்கையும் (மனத்தினால் நினைப்பதும் வாயால் சொல்லுவதும் சரீரத்தினால் செய்வதும் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று வேறுபடாமல் ஒத்திருக்கையும்), ஸத்புருஷர்களோடு ஸஹவாஸமும், அஹங்காரமற்றிருக்கையும் (தேஹாத்மாபிமானம் முதலியவை இல்லாதிருக்கையும்) ஆகிய இவை பக்தியோகத்திற்கு அங்கங்களாம். என்னிடத்தில் பக்தியோகம் செய்பவன் இந்த குணங்களைக் கைப்பற்றி வருவானாயின் அவனுடைய மனம் பரிசுத்தமாகி என் குணங்களைக் கேட்ட மாத்ரத்தினால் என்னிடத்தில் பற்றுடையதாகும். வாயுவை ரதமாகவுடைய (காற்று போன வழியெல்லாம் போய்ப் பரவும் தன்மையதான) கந்தமானது புஷ்பம் முதலிய தன் ஸ்தானத்தினின்று க்ராணேந்திரியத்தினிடம் ப்ரயத்னமில்லாமல் வருவது போல், யோகத்தையே ரதமாகவுடையதும் சப்தாதி விஷயங்களால் விகாரம் அடையாததுமாகிய மனது என்னிடம் ப்ரயத்னமில்லாமலே வந்துசேரும். நான் ஸமஸ்த பூதங்களிலும் ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய் எப்பொழுதும் இருக்கின்றேன். அப்படிப்பட்ட என்னுடைய தன்மையை அறியாமல் ஸம்ஸாரி ஜனங்கள் என்னுடைய அர்ச்சா விக்ரஹத்தைப் பூஜிப்பதாக அனுகரிக்கின்றார்கள். (எங்கும் நிறைந்திருக்கிற என்னுடைய உண்மையை அறிந்த பெரியோர்கள் என்னை அர்ச்சா விக்ரஹத்தில் பூஜிப்பதைக் கண்டு என் ஸ்வரூபம் தெரியாத ஸம்ஸாரிகளும் அங்கனம் என்னைப் பூஜிக்கின்றார்கள். அது அறிஞரான பெரியோர்களைப் பரிஹஸிப்பதாமேயன்றிப் பூஜையாகாது. நான் அர்ச்சா விக்ரஹங்களில் நிறைந்திருப்பதில் ஐயமில்லை. அதை ஆராதிக்க வேண்டியதும் அவஸ்யமே. ஆனதுபற்றியே மஹாயோகிகளும் என்னுடைய அர்ச்சாவதாரங்களில் பெரிய ஆவலுடன் ஆழ்ந்து ஈடுபடுகின்றார்கள். ஆயினும் என் ஸ்வரூபத்தை அறியாமல் என்னை அர்ச்சாவிக்ரஹங்களில் ஆராதிப்பது அவ்வளவு நலமன்று. ஸமஸ்த பூதங்களிலும் அந்தராத்மாவாயிருக்கின்ற என்னை அறியாமல் எவன் அர்ச்சாவிக்ரஹத்தை ஆராதிக்கிறானோ, அவன் பஸ்மத்தில் ஹோமம் செய்பவனாவான். அர்ச்சா விக்ரஹத்தில் நான் நிறைந்திருப்பதை அறியாமல் செய்யும் பூஜை பஸ்மாஹுதிபோல் பயனற்றதேயாம். ஆகையால் அர்ச்சாவதாரத்தின் மேன்மையை அறிந்து அதை ஆராதிக்கவேண்டும். தேஹாத்மாபிமானம் உடையவனும் பிறர் சரீரத்தில் நான் இருப்பதை அறியாமல் அவரைப் பகைப்பவனும் அர்ச்சாவதாரங்களை என்னைக் காட்டிலும் வேறு பட்டதாகப் பார்ப்பவனும் ப்ராணிகளிடத்தில் அழியாத வைரமுடையவனுமாகிய ஸம்ஸாரியின் மனசாந்தி உண்டாகப் பெறாது.
வாராய் பாபமற்றவளே! ஸமஸ்த பூதங்களிலும் நான் அந்தராத்மாவாய் இருப்பதை அறியாமல் அந்த ப்ராணி ஸமூஹங்களை த்வேஷிப்பவன் சிறப்புடைய பலவகை உபசார வஸ்துக்களைக் கொண்டு என்னை அர்ச்சாவிக்ரஹத்தில் எவ்வளவு ஆராதிப்பானாயினும், அவனுடைய ஆராதனத்திற்கு நான் ஸந்தோஷம் அடையமாட்டேன். ஆகையால், தன்னுடைய ஹ்ருதயத்திலும் ஸமஸ்தபூதங்களிலும் நிறைந்து நிலைநின்றிருக்கிற என்னை அறியாதிருக்கும் வரையில், தனக்கு ஏற்பட்ட வர்ணாச்ரம தர்மங்களைத் தவறாமல் ஆசரித்துக்கொண்டு ஸர்வேச்வரனான என்னை அர்ச்சாதிகளில் ஆராதிக்க வேண்டும். அங்ஙனம் ஆராதித்துக்கொண்டு வருவானாயின், ஹ்ருதயகமலத்தில் இருக்கின்ற என்னை ஸாக்ஷாத்கரிப்பான். ஆகையால் அந்த ஸாக்ஷாத்காரம் உண்டாகும்வரையில் என்னை அர்ச்சாதிகளில் ஆராதித்துவர வேண்டும். ஜீவாத்மாக்கள் அனைவரும் பரமபுருஷன் அந்தராத்மாவாய் இருக்கப்பெற்று அவனுக்குச் சரீரமாகி ஜ்ஞானமாகிற வடிவம் ஒத்திருக்கப் பெற்றவரென்றும், கர்மாதீனமாய் விளைகிற தேவாதி சரீரங்களால் வரும் பேதம் ஆத்மாக்களுக்கு இல்லையென்றும் அறியாமல் சரீரபேதத்தினால் ஆத்மாக்களும் வெவ்வேறாயிருப்பவரென்று நினைத்து, தன்னைக் காட்டிலும் பிறன் வேறுபட்டவனென்று எவன் சிறிதாயினும் பேதம் நினைக்கின்றானோ, பேதத்ருஷ்டியுடைய அவனுக்கு யமன் பெரும் பயத்தை விளைக்கின்றான். (அவன் யமலோகம் போய்ச் சேர்த்து நரகங்களை அனுபவிப்பான்). ஆகையால், ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பவனும் ஸமஸ்த பூதங்களிலும் வாஸம் செய்கின்றவனுமாகிய என்னை ஸமத்ருஷ்டியாலும் ஸ்னேஹத்தினாலும் தானத்தினாலும் ஸத்காரங்களாலும் பூஜிக்கவேண்டும். (தனக்கு மேற்பட்டவரிடத்தில் வெகுமதியும், தன்னோடொத்தவரிடத்தில் ஸ்னேஹமும், தனக்குத் தாழ்ந்தவரிடத்தில் தானமும் செய்யவேண்டும். “எல்லோரும் ஜ்ஞான ஸ்வரூபராகையாலும் பரப்ரஹ்ம ஸ்வரூபராகையாலும் பேதமற்றவர்களே” என்னும் நினைவு மாறாதிருக்கவேண்டும். பிறர்க்கு தான மானாதிகளைச் செய்யும்பொழுது இவர்கள் பரப்ஹ்ம ஸ்வரூபர்களாகையால் நாம் இவர்க்குச் செய்வதெல்லாம் பரமாத்ம ஸமாராதனமேயென்னும் புத்தியுடன் செய்யின், அந்த தான மானாதிகள் எனக்கு மிகுந்த ஸந்தோஷத்தை விளைப்பனவாம்). ஜீவனில்லாத வஸ்துக்களைக் காட்டிலும் ஜீவனுள்ள வஸ்துக்கள் சிறந்தவை. அவற்றைக் காட்டிலும் ப்ராணனுடையவை மேற்பட்டவை.
மங்கள ஸ்வபாவமுடையவளே! அவற்றைக் காட்டிலும் ஜ்ஞானமுடையவை மேற்பட்டவை. அவற்றைக் காட்டிலும் இந்திரிய வ்யாபாரமுடையவை மேற்பட்டவை. (இந்திரிய வ்யாபாரமாவது பார்வைகேள்வி முதலியவை) இவை வ்ருக்ஷங்களுக்கும் உண்டென்கிறார்கள். ஆனால் அவற்றிற்கு த்வக்கிந்த்ரிய வ்யாபாரமே பெரும்பாலும் உள்ளதாம். அதாவது தொட்டால் தெரிந்துகொள்ளும் தன்மை). அங்ஙனம் ஸ்பர்சத்தை அறியும் தன்மையுள்ள அவற்றைக் காட்டிலும் ரஸத்தை அறிபவை (ரஸனேந்த்ரியத்தின் வ்யாபாரமுடையவை) மேற்பட்டவை. (அவற்றைக் காட்டிலும் ரஸத்தை அறியும் தன்மையுடைய மத்ஸ்யாதிகள் மேற்பட்டவை). அவற்றைக் காட்டிலும் கந்தத்தை அறியும் தன்மையுடைய வண்டு முதலியவை மேற்பட்டவை. சப்தத்தை அறியும் தன்மையுடைய ஸர்ப்பாதிகள் அவற்றைக் காட்டிலும் மேற்பட்டவை, ரூபத்தை அறியும் தன்மையுடைய காக்கை முதலியவை அவற்றைக் காட்டிலும் மேற்பட்டவை. அவற்றைக் காட்டிலும் இரண்டு பக்கத்திலும் பல்லுடைய ஜந்துக்கள் மேற்பட்டவை. அவற்றைக் காட்டிலும் பலகால்களையுடைய ஜந்துக்கள் சிறந்தவை. அவற்றைக் காட்டிலும் நாற்கால் ஜந்துக்கள் சிறந்தவை, அவற்றைக் காட்டிலும் இரண்டு கால்களையுடைய மனிதர்கள் மேற்பட்டவர். அம்மனிதர்களிலும் ப்ராஹ்மண க்ஷத்ரிய வைச்ய சூத்ரர்கள் என்கிற நான்கு வர்ணத்தவர்கள் மேற்பட்டவர். அந்நான்கு வர்ணத்தவர்களில் ப்ராஹ்ணர் ஸ்ரேஷ்டர்கள், ப்ராஹ்மணர்களிலும் வேதாத்யயனம் செய்தவர் மேற்பட்டவர். அவர்களைக் காட்டிலும் வேதார்த்தம் அறிந்தவர் மேற்பட்டவர். அவர்களைக் காட்டிலும் அவ்வர்த்தங்களில் விளையும் ஸம்சயங்களைத் தீர்க்கும் திறமையுடைய மீமாம்ஸகர் மேற்பட்டவர். அவர்களைக் காட்டிலும் தமது வர்ணாச்ரம தர்மங்களைத் தவறாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பவர் மேற்பட்டவர். அவர்களைக் காட்டிலும் ஸம்ஸாரத்தில் பற்றற்றவர் மேற்பட்டவர். இவர் தாம் செய்யும் கர்மங்களுக்கு பகவானுடைய அனுக்ரஹம் தவிர மற்றொரு பலனையும் எதிர்பாராதிருப்பவர். அவர்களைக் காட்டிலும், ஸமஸ்த கர்மங்களையும் கர்ம பலன்களையும் தேஹத்தையும் ஆத்மாவையும் என்னிடத்தில் அர்ப்பணம் செய்து எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபங்களே யென்றுணர்ந்து சிறிதும் பேத புத்தியற்றிருப்பவர் மேற்பட்டவர். சேஷியும் ரக்ஷகனும் அந்தர்யாமியுமாகிய என்னிடத்தில் (தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ளும் பாரத்தை) ஆத்மரக்ஷாபரத்தை வைத்துக் கர்மங்களைச் செய்விப்பவனும் கர்ம பலன்களைக் கொடுப்பவனுமாகிய என்னிடத்தில் தான் செய்யும் கர்மங்களை அர்ப்பணம் செய்து “கர்மங்களைச் செய்பவன் நானே” என்ற ஸ்வதந்த்ர புத்தியில்லாதவனும் சேதனாசேதன ரூபமான ஜகத்தெல்லாம் பரப்ஹ்ம ஸ்வரூபமேயென்ற ஜ்ஞானமுடையவனுமாகிய இந்த ஜ்ஞானியைக் காட்டிலும் மேற்பட்ட ஜந்து எதுவுமே இருப்பதாக நான் காண்கிலேன் “இவற்றில் ஜீவன் மூலமாய் பகவான் உள்புகுந்திருக்கிறான்” என்று நினைத்துக் கீழ்ச்சொன்ன ஜங்கமஸ்தாவர ரூபமான பூதங்களை மனத்தினால் வெகுமதித்து வணங்கவேண்டும்.
வாராய் மனுசக்ரவர்த்தியின் புதல்வீ! பகவானை ப்ரீதியுடன் பணிகையாகிற பக்தியோகத்தையும், ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டதும் பரப்ரஹ்ம ஸ்வரூபமுமாகிய ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை உணர்கையாகிற ஜ்ஞான யோகத்தையும் உனக்குச் சொன்னேன். இந்த ஜ்ஞானயோக பக்தியோகங்கள் இரண்டில் ஒன்றை அனுஷ்டிக்கிலும் ஜீவன் பரம புருஷனைப் பெறுவான். ப்ரக்ருதி ஜீவன் தெய்வம் புண்ய பாப ரூபகர்மம் செயல்கள் இவற்றைக் காட்டிலும் மேற்பட்ட வஸ்து காலமென்று கூறப்படும். இது பகவானுக்கு உட்பட்டதாகி அவனுக்குச் சரீரமாயிருக்கும்; மற்றும், மஹத்து முதலிய ஸமஸ்த பூதங்களின் பரிணமங்களுக்கு (ஒன்று ஒன்றாக மாறும் தன்மைகளுக்கு)க் காரணமாயிருக்கும். ஸமஸ்த பூதங்களிலும் ஆத்மாக்கள் ஜ்ஞான ஸ்வரூபர்களாகி ஒத்திருப்பினும் தேவ மனுஷ்யாதி பேதத்தை ஆத்மாக்களில் ஏறிட்டுப் பார்க்கும் பேத புத்தியுடையவர்களுக்கு (தேஹாத்மாபிமானிகளுக்கு) இந்தக் காலஸ்வரூபனான பகவானிடத்தில் என்றுமே ஜன்ம ஜரா மரணாதி ரூபமான பயம் உண்டாகின்றது. இந்தக் காலஸ்வரூபியான பகவான் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் உள்ளே புகுந்து ப்ராணிகளைக் கொண்டே ப்ராணிகளை ஸம்ஹரிக்கின்றான். இந்தக் காலமாவது ஸமஸ்தஜகத்திற்கும் ஆதாரமான விஷ்ணுவென்கிற பகவானே. (இந்தக் காலம் பகவானுக்குச் சரீரமாகையால் பகவானேயென்று சொல்லும்படி அவனுக்கு உட்பட்டிருக்கும்). இந்தக்காலமே யாகாதி ஸகல கர்மங்களும். (காலத்தில் செய்யவேண்டுமென்று சாஸ்த்ரங்களில் விதிக்கப்படுகின்றன வாகையால் யஜ்ஞாதி கர்மங்களெல்லாம் காலஸ்வரூபங்களேயென்று கூறப்படுகின்றன). இந்தக் காலம் எல்லாவற்றையும் தம் வசப்படுத்திக் கொண்டிருக்கின்ற ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரபுவாயிருக்கும். (ப்ரஹ்மாதிகளையும் தன் வசத்தில் நடத்தும் திறமையுடையது). இந்தக் காலஸ்வரூபியான பகவானுக்கு ப்ரியனாவது த்வேஷிக்கத் தகுந்தவனாவது பந்துவாவது எவனும் கிடையாது. இந்த பகவான் அனவதானமின்றி மிகுந்த ஊக்கத்துடன் இருந்து ஊக்கமற்ற ஜனங்களை ஸம்ஹரிப்பவனாகி அவரிடத்தில் ரோகாதி ரூபமாய் ப்ரிவேசிக்கின்றான். இந்தக் கால ஸ்வரூபியான பகவானிடத்தினின்று பயந்தே காற்று இங்ஙனம் வீசுகின்றது; இந்த ஸூர்யனும் காய்கின்றான்; மேகமும் மழை பெய்கின்றது; நக்ஷத்ரக் கூட்டமும் விளங்குகின்றது. இந்தக் காலரூபியான பகவானிடத்தினின்று பயந்தே வ்ருக்ஷங்களும் செடி கொடிகளும் தந்தமக்கு ஏற்பட்ட காலங்களில் புஷ்பங்களையும் பழங்களையும் ஏற்றுக்கொள்கின்றன. நதிகளும் இவனிடத்தில் பயந்தே பெருகுகின்றன. ஸமுத்ரமும் தன் கரையைக் கடந்து பூமியின்மேல் பாயாதிருக்கின்றது; அக்னி எரிகின்றது; பர்வதங்களோடு கூடின பூமியும் ஜலத்தில் மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கின்றது. இந்த பகவானுடைய நியமனத்தினால் ஆகாசமும் ப்ராணிகளுக்கு அவகாசம் கொடுக்கின்றது. பெருமையுள்ள வஸ்துக்களைக் காட்டிலும் மேலான பெருமையுடைய இந்தக் காலஸ்வரூபியான பகவான் பூமி முதலிய ஏழு ஆவரணங்களால் சூழப்பட்டதும் தனக்குச் சரீரமுமாகிய ப்ரஹ்மாண்டத்தைப் படைக்கின்றான். இந்தக் காலஸ்வரூபியான பகவானால் தூண்டப்பட்டதாகியே மஹத்தத்வம், ப்ருதிவி அப்பு தேஜஸ்ஸு வாயு ஆகாசம் அஹங்காரம் இந்திரியங்கள் இவைகளால் சூழப்பட்டதும் தனது மாறுருவமுமாகிய ஜகத்தைப் பரவச் செய்கின்றது. ரஜஸ் தமோ குணங்களை முக்யமாகவுடைய ப்ரஹ்மாதியான தேவர்கள் இவ்வுலகைப் படைக்கை முதலிய வ்யாபாரங்களில் யுகந்தோறும் முயற்சி கொண்டு அவற்றை நடத்துகிறார்கள். ஜங்கம ஸ்தாவர ரூபமான ஜகத்தெல்லாம் எந்த ப்ரஹ்மாதி தேவதைகளுக்கு உட்பட்டிருக்கின்றதோ, அத்தகையரான அந்த தேவர்களும் காலஸ்வரூபியான இந்த பகவானிடத்தில் பயந்து தந்தமது செயல்களில் ஊக்கமுற்றிருக்கின்றார்கள்.. அத்தகைய காலஸ்வரூபியான பகவான் மற்றொன்றால் அளவிடக் கூடாதவன். தந்தை முதலிய ஜனங்களைக் கொண்டு பிள்ளை முதலிய ஜனங்களைப் படைக்கின்றவன் அவனே. அவன்தானே மருத்யுவுக்கும் மரணங் கொடுக்கும் திறமையன். ஆனதுபற்றியே அவன் ம்ருத்யுவுக்கும் ம்ருத்யுவென்று கூறப்படுகிறான். அவனே ஆதிகர்த்தா. அவனுக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. எவ்வகையிலும் அழிவில்லாதவன்.
இருபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.