ராமானுஜர் ஒரு கலங்கரை விளக்கம்!
ஆழ்வார்களின் தித்திக்கும் தேன் தமிழ் பாசுரங்களை நினைத்தாலே மனதிற்குள் ஒரு மழைத்துளி விழுந்ததைப்போல் உணர்வு மேலிடுகிறது. தூய தமிழில் தூய்மையான சிந்தனைகளை முன்வைத்து மனிதகுலம் மாபெரும் நன்மைகள் அடைய எடுத்த பெருஞ்செயல் அல்லவா இந்தச் செயல்! அதனால்தான் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை ஆழ்வார்களின் அருளிச் செயல், ஈரத்தமிழ், திராவிட வேதம், ஐந்தாம் வேதம் என்றெல்லாம் வைணவ பக்தி உலகம் கொண்டாடி மகிழ்கிறது! சாதாரணமாக ஈரம் கொஞ்சநேரத்திற்கெல்லாம் காய்ந்துவிடும். இதுதான் நிதர்சனமான யதார்த்தமான உண்மை. ஆனால், திவ்யப் பிரபந்தம் என்கிற ஈரத்தமிழோ நம் காய்ந்துபோன மனங்களை எப்போதும் பதப்படுத்தி செப்பனிட்டு ஈரப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் சாகா வரம் பெற்றவையாக குற்றால அருவியாய், கொல்லி மலைத் தேனாய், வற்றாத கங்கையாய், வாசமுள்ள ரோஜாவாய், நம் மனம் சிறக்க பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது!
காலம் தமிழர்களுக்கு கொடுத்த கொடையாக வந்து உதித்த எம்பெருமானார், உடையவர் யதிராஜா, பாஷ்யகாரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிற பகவத் ராமானுஜர் மேடு பள்ளங்களை நிரவி நமது உள்ளங்களை செப்பனிட்டு களர் நிலத்தை வளர் நிலமாக மாற்றம் செய்திருக்கிறார். ஒரு வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமக்கு தெள்ளத் தெளிவாக தந்திருக்கிறார்.
பழத்தைப் பிழிந்து சாறு தருவதைப்போல அவர் தந்திருக்கிறார்.‘‘மனத்தினின்று நானை அகற்றுவது, அகத்தினின்று அகந்தையை நீக்குவது, இதயத்தில் இரக்கம் சுரப்பது, பிறர் குற்றத்தையும் தனதாக ஏற்பது, உண்மைக்கும் நேர்மைக்கும் தலை வணங்குவது, ஊருக்கு நல்லது செய்வது, பலன் கருதாப் பணியாக பரமன் தொண்டாக மதித்து செய்வது...’’
பழத்தைப் பிழிந்து சாறு தருவதைப்போல அவர் தந்திருக்கிறார்.‘‘மனத்தினின்று நானை அகற்றுவது, அகத்தினின்று அகந்தையை நீக்குவது, இதயத்தில் இரக்கம் சுரப்பது, பிறர் குற்றத்தையும் தனதாக ஏற்பது, உண்மைக்கும் நேர்மைக்கும் தலை வணங்குவது, ஊருக்கு நல்லது செய்வது, பலன் கருதாப் பணியாக பரமன் தொண்டாக மதித்து செய்வது...’’
இதெல்லாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் எளிதாக மிகவும் எளிமையாக இருக்கலாம்.
யதார்த்த வாழ்க்கையில் நடைமுறையில் பின்பற்றக்கூடிய எந்தவிதமான சாத்தியக் கூறுகளும் கிடையாதே என்றுதான் நம்மில் பலரும் நினைக்கலாம். அது ஓரளவு உண்மையும்கூட. ஆனால், ராமானுஜர் இங்கே சொல்ல வருவது என்னவென்றால் முடிந்தளவிற்கு முயற்சி செய்து பார். வைணவம் என்பது பிறப்பால், ஜாதியால் வருவது இல்லை அது குணத்தாலும் பண்பட்ட மனத்தாலும் வருவது. வைணவத்தின் உயிர்நாடியே மானுடப் பற்றும் மனிதநேயமும்தான். திருமாலை, விஷ்ணுவை பரம்பொருளாக ஏற்று யாரெல்லாம் வழிபடுகிறார்களோ... அவர்கள் அத்துணை பேரும் வைணவர்கள் என்பதுதான் ராமானுஜ தத்துவம். அங்கே பேதங்களுக்கே இடமில்லை. இதை தான் கடைபிடித்ததோடு நில்லாமல் வாழ்ந்துகாட்டி நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்ததனால்தான் ராமானுஜர் கலங்கரை விளக்கமாய், திசை காட்டியாய், காமதேனுவாய், கற்பக விருட்சமாக இன்றும் சாமான்ய மக்களிடத்தில் காணப்படுகிறார். ஜாதி பேதம் இல்லை. அது கூடாது என்பதை ராமானுஜர் ஆழ்வார் பெருமக்களிடமிருந்து பெற்றிருக்கிறார்.
நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கு உயிர் கொடுத்த நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் திருப்பணாழ்வாரும் பிராமணர்களா என்ன? இவர்களைவிட இறைவனை திருமாலை ஆண்டாள் நாச்சியார் சொல்லுவாளே நெருப்பென்ன நின்ற நெடுமாலே அந்த மலையப்பனை அதிகம் நேசித்தவர்கள் வேறு யாராக இருக்க முடியும்?
வராது வந்த மாமணியாய் இருந்த திருக்கச்சி நம்பிகளிடம் கேட்டவர்களுக்கு கேட்ட வரம் தரும் காஞ்சி வரதன் ஜாதி பார்த்தா பேசினான்? இன்றைய சூழலில் சக மனிதன் புன்சிரிப்போடு பேசுவதே பெரும்பாடாக இருக்கிறது. கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதே (joint family) கூட்டுக் குடும்பமாக மாறிவிட்ட இன்றைய நிலையில் ஆழ்வார்களும் பாசுரங்களும் நம் வாழ்வின் மீதான பிடிப்பை பலப்படுத்த உதவுகின்றன.
இழந்துபோன சுகங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி இருக்கிற காலத்தில் குறைந்தபட்ச நிம்மதியோடு வாழ்வதற்கு ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் நமக்கு அருமருந்தாக அமைந்திருக்கிறது. திருவரங்கனிடமே தன்னை பறிகொடுத்த தொண்டரடிப்பொடி ஆழ்வார். வைணவ அடியார்களின் பாததூளியையே அமிர்தமாக பகவானின் பிரசாதமாக கருதியவர். அரங்கனே கதியாக இருந்தவர். இன்னும் சொல்லப்போனால் அரங்கனின் அடிமையாக இருந்தவர். அவர் படைத்த திருமாலையிலிருந்து சமூகப் புரட்சிக்கு வித்திட்ட பாசுரம் இந்தப் பாசுரம். திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதார் என்பார்கள்.
மனத்தூய்மைக்கு வித்திட்ட தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரம்...
அமர ஓர் அங்கம் ஆறும்
வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களிற் தலைவராய
சாதிஅந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில்
நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்க மா நகருளானே
அரங்கனே! நான்கு வேதங்களையும் அதன் உட்பொருளான ஆறு அங்கங்களையும் கற்றறிந்து, அடியார்கள் வட்டத்தில் முதல்நிலை பெற்றுத் திகழும் முதல் நிலை பிராமணர்களாக இருந்தாலும் அவர்கள் மற்ற இனத்தாரைப் பார்த்து பழித்தார்கள். ஆனால், அப்படி பழித்துரைக்கும் பார்ப்பனர்கள்தான் சண்டாளர்களாக அறியப்படுவார்கள் என்கிறார். எட்டாம் நூற்றாண்டில் எழுந்த இந்தக் குரலின் பிரதிபலிப்பால்தான் ராமானுஜரும் திருக்கச்சி நம்பியும் குரு சிஷ்யர்களாக பரிமளித்தார்கள். மைசூருக்குப் பக்கத்தில் மேல் கோட்டை என்னும் திருநாராயணபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அன்றைய சமூக அமைப்பில் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை எல்லாம் திருக்கோயில் வழிபாட்டுக்கு ஆட்படுத்திய மாபெரும் இமாலயப் பணிக்கு வித்திட்டது ராமானுஜர்தான்.
தெருக்குலத்தாரை எல்லாம் திருக்குலத்தாராக்கி மனித சாதியில் ஜாதிபேதம் கூடாது. அப்படிப் பார்ப்பது நாம் இறைவனுக்கு செய்யும் கேடு என்று உரக்கக் குரல் கொடுத்தவர் ராமானுஜர். அதன் காரணமாகத்தான் அவர் காரேய் கருணை ராமானுஜர் என்று நன்றியுணர்ச்சியோடு அழைக்கப்படுகிறார். விஷ்ணுவை அதாவது, சதா சர்வகாலம் நினைத்து வழிபட்டவர் பெரியாழ்வார். திருமாலிடம் ஆழ்வார் தமது மனம், மொழி, மெய் அனைத்தையும் ஒப்புவித்து அன்றாடம் திருமாலை வணங்கும் பேறு வேண்டும் என்று மன்றாடுகிறார். அவர் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழி பாசுரத்தில் எப்போதும் உன் புகழ்பாடும் வைணவனாக இருப்பதைத் தவிர வேறு என்ன சிறப்புக்கள் இருக்க முடியும் என்கிறார்.
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்
புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்
ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை ஆவது உன் கோயிலில் வாழும்
வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே
திருமாலே! ‘நாராயணா’ என்று உனது பெயரைக் கூறுவதைத் தவிர அதனால் விளையப் போவது நன்மையா தீமையா என்று நான் எதுவும் அறியேன்.
இழிவான சொற்களால் வஞ்சகமாகப் புகழும் எண்ணம் எனக்குக் கிடையாது. நான் என்னையும் ஏமாற்றிக் கொண்டு உன்னையும் ஏமாற்ற விரும்பவில்லை. ‘ஓம் நமோ நாராயணா’ என்று சதா சர்வ காலமும் சொல்லிக் கொண்டிருக்கிறேனே தவிர, உனது சிறப்பியல்புகளை நினைத்துப் பார்க்கும் அளவுக்கு நான் ஒன்றும் அறிந்தவன் அல்லன். ஆனால், உன் புகழ்பாடும் வைணவன் என்கிற பெருமை எனக்கு எப்போதும் உண்டு.
இதிலே நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உயர்ந்த ஒன்றை அதாவது, திருமாலின் திருவடியைப் பற்றுக்கோடாக பற்றுவதற்கு உயர்ந்த தூய்மையான மனச் சிந்தனைகள் இருக்க வேண்டும். அந்த எண்ணத்தில்தான் பெரியாழ்வார் வைணவத்திற்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார். வைணவத்திற்கு அலங்காரம் தேவையில்லை, ஆடம்பரம் தேவையில்லை, திருமாலிடம் நம் உள்ளம் உருக வேண்டும் மனம் கல்பாறையாக இருக்கக் கூடாது. மாறாக வெண்ணெய் உருகுவதுபோல் உருக வேண்டும். வெண்ணெய்போல் நம் உள்ளம் அவன்பால் உருகினால் அந்த மாயக் கண்ணன் மா மாயன் நம் இல்லத்திற்கும் உள்ளத்திற்கும் ஓடோடி வருவான்.
நன்றி - தினகரன்