ஶ்ரீமத் பாகவதம் - 73

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்து எட்டாவது அத்தியாயம்

(பக்தியோகத்தையும் அதற்கு அங்கமான மற்றவைகளையும் விரிவாகக் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வாராய் மனுசக்ரவர்த்தியின் புதல்வியே! பக்தியோகத்தின் ப்ரகாரத்தையும் அதன் அங்கங்களுடைய ஸ்வரூபத்தையும் மேல்விரிவாகச் சொல்லுகிறேன்  கேட்பாயாக. இந்த பக்தியோகத்தை அனுஷ்டித்துக்கொண்டு வருவானாயின், அவனுடைய மனது ராகம் த்வேஷம் முதலிய கல்மஷங்களெல்லாம் தீர்ந்து தெளிந்து நல்வழியில் சென்று சுபாச்ரயமான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில் நிலைபெறும். அந்த பக்தியோகத்திற்கு அஷ்டாங்கயோகம் அங்கமாயிருக்கும். யமம் நியமம் ஆஸனம் ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் தாரணம் த்யானம் நிதித்யாஸனம் என்னும் இவையே அஷ்டாங்க யோகமாகும். தன் சக்திக்குத் தகுந்தபடி தனது வர்ணாச்ரமங்களுக்குரிய தர்மங்களை அனுஷ்டிக்கையும், தன் வர்ணாச்ரமங்களுக்கு இணங்காத விபரீத தர்மங்களினின்று மீளுகையும் (அவற்றைச் செய்யாமையும்), தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளால் ஸந்தோஷம் அடைகையும் பாகவத ஸமாராதனமும் அவரவர்கள் ஆதரிக்கும்படியான தர்ம அர்த்த காமங்களென்கிற புருஷார்த்தங்களில் கண்வையாமையும், மோக்ஷ தர்மங்களில் மனவிருப்பமும், ஜாதிதுஷ்டம் ஆஸ்ரயதுஷ்டம் சிமித்ததுஷ்டம் என்று மூன்று வகைப்பட்ட துஷ்ட ஆஹாரங்களைத் தவிர்த்து ஸாத்விகமான அன்னாதிகளைப் புசிக்கையும், அந்த சுத்தமான ஸாத்விகாஹாரங்களையும் மிதமாகப் புசிக்கையும் எப்பொழுதும் ஜன ஸங்கமின்றி ஏகாந்தமாய் க்ஷேமத்திற்கிடமான தேசத்தில் இருக்கையும், அஹிம்ஸையும் (ஒருவர்க்கும் ஹிம்ஸை செய்யாமையும்), ஸத்யம் பேசுகையும் திருட்டுத்தனமில்லாமையும், எவ்வளவால் தேஹயாத்ரை நிறைவேறுமோ அவ்வளவு பொருள் கொண்டு திருப்தி உண்டாகப் பெறுகையும், இந்திரியங்களை வென்று ப்ரஹ்மசர்யம் தவறாதிருக்கையும், சாந்த்ராயனம் முதலிய வ்ரதங்களை அனுஷ்டிக்கையாகிற தவமும், சுத்தியுடனிருக்கையாகிற ஆசாரமும், வேதாத்யயனம் முதலியவைகளும், பகவானை ஆராதித்தலும், மிதமாகப் பேசுகையாகிற மௌனமும், எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பினும் வருத்தம் உண்டாகாதபடி உட்கார்ந்திருக்கும் நிலைமையும், மெல்லமெல்ல ப்ராணவாயுவை ஸ்வாதீனப்படுத்திக் கொள்கையும், இந்த்ரியங்களை மனத்தினால் சப்தாதி விஷயங்களினின்று திருப்பி ஹ்ருதயத்தில் அடக்குகையும், ப்ராணன் அபானம் முதலிய பஞ்ச ப்ராணன்களையும் மனத்தையும் அவற்றிற்கு ஸ்தானங்களாகிய ஹ்ருதயம் குதம் முதலிய இடங்களுக்குள் ஏதேனுமொன்றில் நிலைநிறுத்துகையும், பரமபுருஷனுடைய லீலைகளான ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை த்யானிக்கையும், மனத்தை ஒன்றிலேயே நெடுநேரம் நிலைநிற்கச் செய்கையும் ஆகிய இவ்வுபாயங்களாலும் மற்றுமுள்ள வ்ரதங்களாலும் தானாதிகளாலும் சப்தாதி விஷயங்களில் ஆழ்ந்திருப்பதும் ஆனது பற்றியே “கல்மஷமுடையதுமாகிய மனத்தை, புத்தியைக்கொண்டு மெல்லமெல்ல சுபாச்ரயத்தில் (சுபாஸ்ரயமான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில்) படியச்செய்ய வேண்டும். பக்தியோகத்தை விரும்புமவன் கீழ்ச்சொன்ன வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்கை முதலிய உபாயங்களாலும் மற்றும் பலவகை வ்ரதானுஷ்டானங்களாலும், தானாதி தர்மங்களாலும், சப்தாதி விஷயங்களில் ஓடுகின்ற துஷ்டமான மனஸ்ஸை மெல்ல மெல்ல புத்தியினால் சுபாச்ரயமெனப்படுவதான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில் பற்றச் செய்யவேண்டும். சோம்பலின்றி முதலில் ப்ராணவாயுவை ஸ்வாதீனப்படும்படி ஜயிப்பானாயின், அவன் மனத்தை அனாயாஸமாகவே ஸ்வாதீனப்படுத்திக் கொள்வான், “ப்ராண வாயுவை எங்ஙனம் ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள முடியும்?” என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக. 



நெடுநேரம் உட்கார்ந்திருப்பினும் இளைப்பு உண்டாகாதிருக்குமாறு ஆஸனத்தை ஜயித்துப் பரிசுத்தமான இடத்தில் பீடத்தை ஏற்படுத்திக்கொண்டு அதின்மேல் தர்ப்பங்களையும் அவற்றின்மேல் மான்தோலையும் அதன்மேல் வஸ்த்ரத்தையும் பரப்பி அதன்மேல் ஸ்வஸ்திகாஸனத்தில் சரீரம் நேராயிருக்கும்படி உட்கார்ந்து ப்ரணவத்தை அப்யஸிக்கவேண்டும். பூரகம் கும்பகம் ரேசகம் என்கிற க்ரமத்திலாவது ரேசகம் பூரகம் கும்பகம் என்கிற க்ரமத்திலாவது ப்ராணவாயுவின் மார்க்கத்தைச் சுத்திசெய்ய வேண்டும். இப்படி ப்ராணவாயுவின் மார்க்கம் சுத்தமாயின், மனம் நிலைநின்று மீளவும் சலிக்காதிருக்கும். (பூரகமாவது வெளிக்காற்றை உள்ளே இழுக்கை., கும்பகமாவது அதை உள்ளே நிறுத்திக்கொள்கை. ரேசகமாவது உள்ளேயிருக்கும் காற்றை வெளிவிடுகை.) (வெளிக்காற்றை உள்ளே இழுத்து அதைச் சிறிது நேரம் உள்ளே நிறுத்திக்கொண்டிருந்து அதை வெளிவிடுகையாகிற இந்த க்ரமத்திலாவது உள்காற்றை வெளியே விடுத்து வெளிக்காற்றை உள்ளே இழுத்து அதை உள்ளே சிறிதுநேரம் நிறுத்திக்கொள்கையாகிற இந்த க்ரமத்திலாவது ப்ராணவாயுவின் மார்க்கத்தைச் சுத்திசெய்யின், ப்ராணவாயு ஸ்வாதீனமாம். ப்ராணவாயு ஸ்வாதீனப்படின் மனது ஸ்வாதீனமாம்) இங்ஙனம் ப்ராணவாயுவை வென்று ஸ்வாதீனப்படுத்திக்கொண்ட யோகியின் மனது, காற்று அக்னி இவைகளால் காச்சப்பட்ட ஸ்வர்ணம் முதலிய லோஹமானது அழுக்கெல்லாம் போய் நிர்மலமாயிருப்பதுபோல், விரைவில் ரஜோகுணம் தொலைந்து அதன் மூலமாய் விளையும் தோஷங்களெல்லாம் தீர்ந்து நிர்மலமாயிருக்கும். ப்ராணாயாமங்களால் வாதம் பித்தம் ஸ்லேஷ்மம் என்கிற தாதுக்களின் வைஷம்யத்தினால் விளையும் உபத்ரவங்களையும், தாரணையால் பாபத்தையும், ப்ரத்யாஹாரத்தினால் சப்தாதி விஷயங்களில் விளையும் விருப்பங்களையும், த்யானத்தினால் க்லேசாதிகளையும் போக்கடித்துக் கொள்ளலாம். மனத்தைச் சுபாச்ரயத்தில் நிலைநிறுத்துகையே தாரணையாம். சப்தாதி விஷயங்களினின்று இந்த்ரியங்களுடன் மனத்தை இழுக்குகையே ப்ரத்யாஹாரமாம். சுபாச்ரயத்தில் நிலைகின்ற மனம் மாறாதிருக்கை த்யானமாம். அந்த த்யானமே வேறு விஷயங்களைப் பற்றின அறிவுகளால் மறையாதிருக்கை ஸமாதியாம். தன் மனது ப்ராணாயாமம் முதலிய யோகத்தினால் நிர்மலமாகிச் சுபாச்யத்தில் எப்பொழுது நிலையுற்றிருக்குமோ, அப்பொழுது கண்களை மூக்கு நுனியில் வைத்து பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானிக்கவேண்டும். தெளிந்த தாமரை மலர்போன்ற முகமும் தாமரையிதழ்போல் மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டு அழகிய கண்களும் அமைந்து கருநெய்தலின் இதழ்போல் கறுத்துச் சங்கம் சக்ரம் கதை இவைகளைத் தரித்து தாமரைத் தாதுபோல் பொன், நிறமுடையதான பீதாம்பரம் உடுத்து மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளமும் கழுத்தில் ஸ்ரீகௌஸ்துப மணியும் அணிந்து மதித்த வண்டுகள் கூட்டங்கூடி மொய்த்துக் கொண்டிருக்கிற அழகிய வனமாலையோடு கூடி விலையுயர்ந்த முத்துமாலைகளும் கைவளைகளும் கிரீடமும் தோள்வளைகளும் சிலம்புத் தண்டைகளும் பூண்டு, அரைநூல் மாலையால் திகழ்கின்ற இடையின் பின்புறமுடையவனும் ஹ்ருதய கமலத்தையே ஆஸனமாகக் கொண்டிருப்பவனும் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி அழகியனும் சாந்தமாயிருப்பவனும் பக்தர்களின் மனத்தையும் கண்களையும் களிப்புறச் செய்பவனும் அதிஸுந்தரனாகையால் கண்டவுடனே பக்தியை விளைக்கும் படியான காட்சியுடையவனும் ஸமஸ்த லோகங்களாலும் எப்பொழுதும் நமஸ்காரம் செய்யப்பெற்றவனும் இளம்பருவத்தில் இருப்பவனும் ப்ருத்யர்களுக்கு அனுக்ரஹம் செய்வதில் ஊக்கமுடையவனும் அனைவராலும் புகழத்தகுந்த பரிசுத்தமான யசஸ்ஸையுடையவனும் புண்ய ஸ்லோகர்களான பலி பீஷ்மன் முதலியவர்களுக்கும் யசஸ்ஸை விளைவிப்பவனுமாகிய ஸ்ரீபகவானை ஸமஸ்த அவயவங்களோடும், மனது ஸ்வாதீனமாயிருக்கும் வரையில் தியானிக்கவேண்டும். பகவானை த்யானிப்பவன் அவனை நிற்பதாகவும், போவதாகவும், உட்கார்ந்திருப்பதாகவும், சயனித்திருப்பதாகவும், ஹ்ருதய குஹையில் இருப்பதாகவும், இன்னம் எந்தெந்த சேஷ்டைகள் தன் மனத்திற்கு இனியவைகளாகத் தோற்றுகின்றனவோ அத்தகைய சேஷ்டைகளுடையவனாகவும், சுத்த பர்வத்தையுடைய (ராகம் த்வேஷம் முதலிய தோஷங்கள் தீண்டப்பெறாமல் பரிசுத்தமான பாவத்தையுடைய) மனத்தினால் த்யானிக்கலாம். தன்மனது அந்த பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில் காலூன்றப்பெற்று அந்தத் திருமேனியின் ஸமஸ்த அவயவங்களிலும் படிந்திருப்பதை அறிந்து, அதை பகவானுடைய அவயவங்களில் ஏதேனுமொன்றில் பற்றச் செய்யவேண்டும். வஜ்ராயுதம் மாவெட்டி த்வஜம் தாமரை மலர் இவைகள் போன்ற ரேகைகளாகிற அடையாளங்களால் நிறைந்திருப்பதும் உயர்ந்து சிவந்து விளங்குகின்ற நகங்களின் வரிசையினின்று கிளம்புகின்ற காந்திகளால் த்யானஞ்செய்யும் மஹான்களுடைய ஹ்ருதயத்திலுள்ள அந்தகாரத்தையெல்லாம் போக்குவதுமாகிய பகவானுடைய சரணாரவிந்தத்தை முதலில் த்யானஞ் செய்யவேண்டும். 

ஸ்ரீபகவான் த்ரிவிக்ரமாவதாரத்தில் தன் ஸ்ரீபாதத்தை உயரத்தூக்கி அளக்கும்பொழுது நான்முகன் அந்த பகவானுடைய பாதாரவிந்தத்தைத் தன் கமண்டலு ஜலத்தினால் விளக்கும் தருணத்தில் அதினின்று பெருகின ஜலம் நதிகளில் சிறந்து கங்கையென்று பேர் பெற்றது. அந்த கங்கா நதியின் புண்யதீர்த்தத்தை ருத்ரன் தன் தலையில் தாங்குகையில் அவன் தன் பாபங்களெல்லாம் தீர்ந்து மங்களனாகிச் சிவனென்று பேர் பெற்றான். இங்ஙனம் பரிசுத்தமாகிய கங்காநதிக்கு உற்பத்தி ஸ்தானமாயிருப்பதும் த்யானிப்பவர்களின் மனமலங்களாகிற பர்வ வதங்களுக்கு வஜ்ராயுதம் போன்றதும் (மலைபோன்ற மனமலங்களையெல்லாம் பனிபோல் பறக்கும்படி செய்வதும்) ஆகிய பகவானுடைய பாதாரவிந்தத்தை நெடுநேரம் த்யானிக்க வேண்டும். ஸமஸ்த லோகங்களுக்கும் தாயாயிருப்பவளும் ப்ரஹ்மதேவன் முதலிய ஸமஸ்த தேவதைகளாலும் வணங்கப் பெற்றவளும் “தாமரையிதழ் போன்ற கண்களுடையவளுமாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மியால் தன் துடைகளில் வைத்துத் தளிர்போல் மிகவும் மென்மைக்கிடமான ஹஸ்தங்களால் பிடித்து (ஆவலுடன் ஆதரிக்கப் பெற்றவைகளான)  உபலாலனஞ் செய்யப் பெற்றவைகளான பகவானுடைய முழந்தாள்களை த்யானிக்கவேண்டும். அந்த பகவான் உலகங்களைப் படைப்பவன்; கர்மத்தினால் விளையும் ஜன்மாதிகளற்றவன் ; ஸமஸ்த லோகங்களுக்கும் ப்ரபு. அத்தகையனான பகவானுடைய முழந்தாள்களை ஹ்ருதயத்தில் கொண்டு த்யானிக்கவேண்டும். கருத்மானுடைய தோள்களில் ப்ரகாசிப்பவைகளும் தேஜஸ்ஸுக்கு நிதி போன்றவைகளும் காயா மலர்போல் அழகிய ஒளியுடன் திகழ்பவைகளுமான பகவானுடைய துடைகளை ஹ்ருதயத்தில் த்யானிக்க வேண்டும். அங்ஙனமே குதிகால்வரையில் தொங்குவதும் பொன்நிறம் உடையதுமான பீதாம்பரத்தின் மேல் தங்கி விளங்குகின்ற அரை நூல்மாலை அமைத்து அழகியதான அந்த பகவானுடைய நிதம்பஸ்தானத்தை (இடையின் பின்புறத்தை) த்யானிக்கவேண்டும். 

உலகங்களாகிற பொக்கிஷத்திற்கு இருப்பிடமான உதரத்தில் விளங்குவதும், ப்ரஹ்மதேவனுக்கு வாஸஸ்தானமாகி ஸமஸ்த ஜகத்ரூபமான தாமரை மலருக்கு விளைநிலமுமாகிய பகவானுடைய நாபியையும், வெளுத்த முத்துமாலைகளின் காந்தியால் வெளுத்திருப்பவைகளும் சிறந்த மரகத மணிகள் போல் ப்ரகாசிப்பவைகளுமான ஸ்தனங்களையும் த்யானிக்க வேண்டும். ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமும் த்யானம் செய்யும் புருஷர்களுடைய மனத்திற்கும் கண்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பதுமான பகவானுடைய வக்ஷஸ்தலத்தையும் (மார்பையும்), ஆபரணமாக அணிந்த கௌஸ்துபமணியை அலங்கரிப்பதற்காகவே ஏற்பட்டது போன்ற அவனுடைய கண்டத்தையும் (கழுத்தையும்) த்யானிக்க வேண்டும். அந்த பகவான் ஸமஸ்த லோகங்களாலும் நமஸ்காரம் செய்யப்பெற்ற மஹானுபாவன். ஆகையால் அவனுடைய அவயவங்களை த்யானிக்கையே ப்ராணிகள் ஜன்மம் எடுத்ததற்கு ப்ரயோஜனமாம். மந்தரபர்வத்தைக் கொண்டு கடல் கடையும்பொழுது அதன் உறைதலால் சாணை பிடித்தாற்போல் பளபளவென்று விளங்குகின்ற வளைகள் அமையப்பெற்றவைகளும் தன் நீழலில் ஒதுங்கி வாழ்கின்ற லோகபாலர்களை உடையவைகளுமான அவனுடைய புஜங்களை த்யானிக்க வேண்டும். பிறர்க்குப் பொறுக்க முடியாமல் கிளர்கின்ற தேஜஸ்ஸையுடையதாகி அந்த பகவானுடைய கைமேல் திகழ்கின்ற சக்ராயுதத்தையும், தாமரை மலர்போன்ற அவனுடைய கைத்தலத்தில் ராஜஹம்ஸம் போன்ற பாஞ்சஜன்யமென்கிற சங்கத்தையும் தியானிக்க வேண்டும். பகவானுக்கு ப்ரியமாயிருப்பதும் சத்ருக்களின் ரக்தமாகிற சேறு படிந்திருப்பதுமாகிய கௌமோதகி என்னும் கதையை த்யானிக்க வேண்டும். வண்டுகளின் ஜங்கார சப்தங்களோடு கூடின அழகிய வனமாலையையும், இந்த பகவானுடைய கண்டத்தில் ப்ரகாசிப்பதும் ஜீவாத்மாக்களுக்கு அதிஷ்டான தேவதையுமாகிய கௌஸ்துப மணியையும் த்யானிக்கவேண்டும். 

பகவான் பக்தர்களை அனுக்ரஹிப்பதற்காகவே தன் ஸங்கல்பத்தினால் அந்தந்த அவதாரங்களைச் செய்கின்றான். ஆகையால் அவனை த்யானிக்கையே ப்ராணிகளுக்கு க்ஷேமத்தைக் கொடுப்பதாம். காதுகளில் அணியப்பெற்று விளங்குகின்ற மகர குண்டலங்கள் தொங்கிக் கொண்டிருக்கையால் திகழ்கின்ற அழகிய கபோலங்களும் உயர்ந்து ரமணீயமான மூக்கும் அமைந்து தாமரை மலர்போல் ப்ரகாசிக்கின்ற அந்த பகவானுடைய திருமுகத்தை தியானிக்க வேண்டும். வரிசை வரிசையாய்த் தொங்குகின்ற சுரி குழல்களோடு கூடினதும் தாமரையிதழ் போன்ற கண்களுடையதும் யோகத்தினால், பரிசுத்தமான மனத்திற்கு விஷயமாகக் கூடியதும் திகழ்கின்ற புருவங்களுடையதும் வண்டுகளோடு கூடி இரண்டு மீன்கள் அமைந்ததுமான தாமரை மலரைத் தன் சோபையால் திரஸ்கரிப்பதுமாகிய பகவானுடைய வதனார விந்தத்தை (அரவிந்தம் போன்ற முகத்தைச்) சிறிதும் சோம்பலின்றி த்யானிக்க வேண்டும். மிகுந்த கருணையால் மிகவும் பயங்கரமான மூன்று வகைப்பட்ட ஸம்ஸார தாபங்களையெல்லாம் தீர்க்கும்பொருட்டுக் கண்களினின்று வழிந்து வருவதும் ஸ்னேஹம் நிறைந்ததும் புன்னகை பொருத்தினதும் மஹத்தான அனுக்ரஹத்தை உடையதுமாகிய பகவானுடைய கண்ணோக்கத்தைத் தன் ஹ்ருதயத்தில் நெடுநேரம் நீண்ட பாவனையுடன் த்யானிக்க வேண்டும். சோக ஸாகரத்தில் மூழ்கிக் கண்ணும் கண்ணீருமாய் வேறு கதியொன்றுமின்றித் தன் பாதங்களில் விழுந்த ஸமஸ்த லோகங்களுக்கும் தீவ்ரமான சோக வேகத்தினால் ஸமுத்ரம் போல் பொங்கி வளர்ந்து வழிகின்ற கண்ணீரை வற்றச் செய்வதும் எத்தகைய விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கும்படியான மிகுந்த ஔதார்யமுடையதுமான பகவானுடைய புன்னகையை த்யானிக்க வேண்டும். அவன் தன்னைப்பற்றினாருடைய பாபங்களைப் போக்கி வருத்தங்களைத் தீர்க்குத் தன்மையனாகையால் ஹரியென்னும் பேருடையவன். தன்னை த்யானிக்கிற யோகிகளின் மனத்தை மயக்கும் பொருட்டு முயன்ற மன்மதன் மதிமயங்கி நிற்கும்படி தன் ஸங்கல்பத்தினால் செய்யப்பட்டதும் மிக்க அழகாயிருப்பதுமாகிய பகவானுடைய புன்னகையை த்யானிக்கவேண்டும். மிகவும் அழகாயிருக்கையால் வருத்தமின்றி த்யானிக்கக் கூடியதும் கீழுதட்டின் ஒளிப்பெருக்கினால் சிவந்து நுண்ணியவைகளும் (குருத்தமொக்கு) குந்தமுகுளம் போன்றவைகளுமான பற்களின் வரிசை வெளித்தோன்றப் பெற்றதுமாகிய பகவானுடைய அட்டஹாஸத்தை த்யானிக்க வேண்டும். இங்ஙனம் ஸமஸ்த அவயவங்களோடும் த்யானிக்கப்பட்ட பகவானிடத்தில் மிகுந்த ப்ரேம ரஸம் நிறைந்த பக்தியுடன் மனத்தை அவனிடத்திலேயே நிலைநிறுத்தி பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹம் தவிர மற்றெதையும் பார்க்க விருப்பமுறாதிருக்க வேண்டும். இங்ஙனம் ப்ரேமரஸம் நிறைந்த பக்தியினால் மனம் உருகவும் மயிர்க்கூச்சல் உண்டாகவும் பெற்று ப்ரேமாவேசத்தினால் விளைந்த கண்ணீரினால் அடிக்கடி வருத்தமுற்று ஆநந்த ஸாகரத்தில் மூழ்கி எத்தகையர்க்கும் க்ரஹிக்க முடியாத பகவானை க்ரஹிக்கும்பொருட்டு முயன்ற மனதாகிற தூண்டுமுள்ளும் அவனை க்ரஹிக்க முடியாமல் அவனிடத்தினின்று மீண்டு வரும். (மீனைப்பிடிக்கும் பொருட்டுத் தூண்டு முள்ளை ஜலத்தில் போடுகையில், அது ஒருக்கால் மீனைப் பிடிப்பதும் உண்டு; ஒருக்கால் தவறிப் போவதும் உண்டு. அங்ஙனமே, எவர்க்கும் பிடிகொடாத பகவானை யோக பரிசுத்தமான மனத்தினால் க்ரஹிக்கவேண்டும். அவன் அதற்கும் ஒருக்கால் பிடிகொடாமற் போவான்). இங்ஙனம் த்யானித்துக்கொண்டு வருவானாயின், பகவானுடைய வடிவழகு யோகியின் மனத்தை, தூண்டுமுள்ளு மீனை இழுப்பது போல், இழுக்கும். அப்படி இழுக்கப்பட்டு நெடுந்தூரம் சென்றும் அவனை க்ரஹிக்க முடியாமல் மீண்டுவரும். அப்பால், புகையில்லாத அக்னி ஜ்வாலைபோல் சப்தாதி விஷயங்களில் விருப்பமின்றிச் சப்தாதி விஷயங்களோடு ஸம்பந்தமற்றதாகி பகவானுடைய திருமேனியை த்யானிப்பதினின்று மீண்டு வருகின்ற மனது பாஹ்ய வ்யாபாரங்களில் செல்லாமல் ஓய்ந்திருக்கும் தருணத்தில், இங்ஙனம் த்யானிக்கப்பட்ட பரமாத்மாவிடத்தில் நேரே ஸம்பந்தித்திருப்பதும் தேவாதி தேஹங்களற்றதும் பரிசுத்தமுமாகிய ஆத்மஸ்வரூபத்தை, தேஹாத்மாபிமானமும் ஸ்வதந்த்ராத்மாபிமானமும் தொலையப்பெற்றுக் கண்டனுபவிப்பான். இங்ஙனம் பகவானுடைய அவயவங்களை தியானிக்கையால் கடைசியாக நிலைகின்றிருக்குமாறு விளைந்ததும் சரீரத்தின் அவஸானம் வரையில் தொடர்ந்து வருவதுமாகிய இந்த பக்தியால் சப்தாதி விஷயங்களில் மனப்பற்றின்றிப் பயமாத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து கர்மத்தினால் உண்டாகக்கூடிய ஸுக துக்கங்களைக் கடந்த அபஹத பாப்மத்வம் முதலிய குணாஷ்டகமாகிற (பாபமற்றிருக்கை முதலிய எட்டு குணங்களாகிற) தன்மஹிமையில் நின்று (பரமாத்மாவை அடைந்து ஸ்வரூபம் ஆவிர்ப்பவிக்கப் பெற்றவனாகி) முன்பு தான் அனுபவித்துக் கொண்டிருந்த ஸுகதுக்கங்களுக்குக் காரணமான தேஹாத்மாபிமானம் ஸ்வதந்த்ராத்மாபிமானம் முதலியவையெல்லாம் தேஹ ஸம்பந்தத்தினால் விளைந்தவையென்றும், போதல் வருதல் முதலிய ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகள் தேஹத்தைச் சேர்ந்தவையென்றும், தேஹம் பொய்யென்றும் (ஒரு நிலைப்படாமல் பலவாறு மாறுந் தன்மையுடைய ப்ரக்ருதியின் பரிணாமமென்றும், ஆத்மஸ்வரூபம் மாறாமல் என்றும் ஜ்ஞாநாந்த மயமாகி மாறாதிருக்கும் தன்மையதென்றும் அறிந்து அந்த தேஹாத்மாபிமானாதிகள் மீளவும் தீண்டப் பெறாதவனாகி ஸுகமாயிருப்பான். 

மத்யபானம் செய்து அந்த மதத்தினால் மதி மயங்கினவன்மேல் போட்டுக்கொண்டிருக்கும் துணியை அறியாதிருப்பதுபோல், இங்ஙனம் அனுஷ்டித்த பக்தியோகத்தினால் பரமாத்மாவை அடைந்து ஸ்வஸ்வரூபம் கைபுகுந்த யோகியமானவன், ஈஸ்வர ஸங்கல்பத்தினால் தனக்குச் சரீர ஸம்பந்தம் நேர்ந்ததையும், அது அவன் ஸங்கல்பத்தினால் நீங்கிப் போனதையும், அங்ஙனம் நீங்கின சரீரம் கீழ் விழுந்து பந்துக்களால் சூழப்பட்டிருப்பதையும், பிறகு ஸம்ஸ்காரம் செய்யப்பெற்று பஸ்மமானதையும் அறியமாட்டான். என்றும் மாறாமல் எல்லையில்லாததுமான ஆனந்தமே வடிவான பரப்ரஹ்ம ஸ்வரூபமும் அவனுக்குச் சரீரமான தன் ஸ்வரூபமும் அபஹதபாப்மத்வம் (பாபமற்றிருக்கை) முதலிய குணங்களும் தோன்றப்பெற்று ஆனந்த ஸாகரத்தில் மூழ்கிக் கிடப்பவனாகையால் முன்னிருந்த தேஹம் முதலியவற்றை நினைக்கமாட்டான். ஈஸ்வர ஸங்கல்ப ரூபமான புண்யபாபக்களுக்கு உட்பட்டதேஹமும் தானிருப்பதற்குக் காரணமான கர்மம் தீராதிருக்கும் வரையில் இந்திரியங்களோடும் ப்ராணன்களோடும் கூடி அழியாதிருக்கும். தேஹம் தன் முடிவுக்குக் கர்மத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. 

பக்தியோகம் நிறைவேறி அபஹதபாப்மத்வம் முதலிய எட்டுக் குணங்களையுடைய ஆத்மஸ்வரூபம் கைபுகுந்து ப்ராரப்தகர்மமும் முடிந்து முக்தியை அடைந்தவன், ஸ்வப்னத்தில் கண்ட வஸ்துவைப்போல் நிலை நில்லாததும் புத்ர களத்ராதிகளோடு கூடினதுமாகிய தேஹத்தை, மீளவும் பெறுகிறதில்லை. (மோக்ஷம் அடைந்தவன் மீளவும் ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வரமாட்டான்). மிகவும் ப்ரீதிக்கிடமான பிள்ளை பெண்டிர் பணம் முதலியவற்றைக் காட்டிலும் தேஹம் வேறுபட்டதென்று எங்ஙனம் ஸ்பஷ்டமாகத் தெரியவருகின்றதோ, அங்ஙனமே “இதுவே ஆத்மா” என்று நாம் அபிமானித்துக் கொண்டிருக்கிற தேஹாதிகளைக் காட்டிலும் ஜீவாத்மா வேறுபட்டிருப்பான். அக்னியினின்று உண்டானவைகளும், அவிவேகிகள் “இவையெல்லாம் அக்னியே” என்று நினைத்திருப்பவைகளுமான குறைக்கொள்ளி நெருப்புத் துணுக்கை புகை இவற்றைக் காட்டிலும் அக்னி வாஸ்தவத்தில் எங்கனம் வேறுபட்டதோ, அங்கனமே பஞ்சபூதங்கள் இந்திரியங்கள் மனது இவையாகப் பரிணமித்த ப்ரக்ருதி ஜீவனென்று சொல்லப்படுகிற க்ஷேத்ரஜ்ஞன் ஆகிய இவர்களைக் காட்டிலும் ஸர்வஜ்ஞனும் ஜ்ஞானம் சக்தி முதலிய குணங்கள் நிறைந்தவனும் பரப்ரஹ்மமென்று கூறப்படுகிறவனுமாகிய பரமாத்மா வேறுபட்டவன், தேவாதி சரீரங்கள் எல்லாவற்றிலும் உட்புகுந்து அவற்றிற்கு தாரகராயிருக்கும் ஆத்மாக்கள் அனைவரும் ஜ்ஞான ஸ்வரூபராகையால் ஒருவரோடொருவர் ஒத்திருப்பார்கள். ஆகையால் தேவாதி சரீரங்கள் பேதித்திருப்பதைக் கண்டு ஆத்மாக்களும் வெவ்வேறாய் இருப்பவரென்று நினைக்கலாகாது. ஜீவாத்மாக்களால் தரிக்கப்பட்டிருக்கிற தேவாதி சரீரங்கள் அந்தந்தக் கர்மங்களால் வெவ்வேறாயிருப்பினும் ப்ரக்ருதியின் பரிணாமங்கள் ஆகையால் ஒருவகைப்பட்டவைகளென்றே நினைக்கவேண்டும். அக்னி தான் பற்றி எரிவதற்குக் காரணமான புல் கட்டை முதலியவற்றில் பற்றி, தான் ஒருவாறாய் இருப்பதாயினும், அந்தப் புல் முதலியவற்றின் குணங்கள் வெவ்வேறாயிருக்கையால் தானும் பலவாறாகத் தோற்றுகின்றது. அங்கனமே, ப்ரக்ருதியின் பரிணாமமாகிய தேவாதி சரீரங்களில் இருக்கின்ற ஜீவாத்மாவும் அந்தச் சரீரங்கள் வெவ்வேறாயிருக்கையால் தானும் வேறுபட்டவன்போல் தோற்றுகிறான்.

வாஸ்தவத்தில் ஸமஸ்த தேஹங்களிலிருக்கிற ஜீவாத்மாக்களும் ஜ்ஞானமே வடிவாயிருக்கப் பெற்றவராகையால் ஒருபடிப்பட்டவர்களே. ஜகத்தைப் படைப்பதும் அதை வளர்ப்பதும் அதை அழிப்பதுமாகி விளையாடுந்தன்மையுள்ள பகவானுக்கு உட்பட்டிருப்பதும் கார்யமாயும் காரணமாயும் இருப்பதாகையால் ஸத்தென்றும் அஸத்தென்றும் இருவகைப்பட்டிருப்பதும் எப்படிப்பட்ட மஹா ஜ்ஞானிகளுக்கும் கடக்கமுடியாததும் தன்னை அணைந்திருப்பதுமாகிய ப்ரக்ருதியைக் கீழ்ச்சொன்ன பக்தியோகத்தினால் திரஸ்கரித்து அபஹதபாப் மத்வம் முதலிய குணங்கள் அமைந்த ஸ்வரூபம்தோன்றப் பெற்றிருப்பான் ; மீளவும் ஸம்ஸாரத்தை அடையமாட்டான். 

இருபத்தெட்டாவது அத்யாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை