மயக்கும் தமிழ் - 8 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

பக்தியும் முக்தியுமே பிரதானம்!

எம்பெருமான் திருமாலின் கல்யாணக் கோலங்களில் ஆழ்ந்திருப்பவர்கள் ஆழ்வார்கள் ஆவர். விஷ்ணுவை சதா சர்வகாலமும் நினைத்து வழிபடுபவர்கள் வைணவர்கள். இதையே நம்மாழ்வார் ஒருபடி மேலே சென்று எல்லாவற்றையுமே கண்ணனாகவே பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். அவரது அதிஅற்புதமான பாசுரம் ஒன்றில்...

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணின் உளவன் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இள மான் புகுமூர் திருகோளூரே

தலைவனது நகர் நோக்கித் தனிவழியே சென்ற மகளைக் குறித்து தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. இதைத் திருத்தாயார் பாசுரம் என்பார்கள். பன்னிரு ஆழ்வார்களின் தலைமகன், ஞானத்தந்தையாகிய நம்மாழ்வார் தன்னை பராங்குச நாயகியாகவும், திருமங்கைஆழ்வார் தன்னையே பரகால நாயகியாகவும் நாயகா  நாயகி பாவத்தில் படைத்திட்ட பாசுரங்கள் ஏராளம். அதில் ஒன்றுதான் நம்மாழ்வார் படைத்து நமக்கு இட்ட பெரு விருந்துப் பாசுரமான, ‘இந்த உண்ணும் சோறு’ பாசுரம். ‘‘உயிர் வாழ்வதற்கு உண்ணத்தக்க சோறும், உயிரைப் பாதுகாப்பதற்குப் பருகத்தக்க நீரும் இன்பத்துக்காக மகிழ்ந்து தின்னத்தக்க வெற்றிலையுமாகிய இப்பொருட்கள் எல்லாம் எனக்கு கண்ணபிரான் ஆகிய எம்பெருமானே’’ என்கிறார். எல்லாமே அவன்தான். சகலமும் அவன் படைப்பே என்கிற உள்ளம் வரவேண்டுமானால் இறைவனோடு எத்தகைய நெருக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

உயிர் வாழ இன்றியமையாதது உண்ண உணவு. தாகம் தீர்ப்பதற்கு தண்ணீர், மகிழ்ச்சிக்கு வெற்றிலைப் பாக்கு. இதை முன்னிறுத்தி இதையெல்லாம் கண்ணபிரானாகவே நம்மாழ்வார் பார்த்தார் என்றால் அவருக்குத்தான் இறைவன் மீது எத்தகைய மாளாக் காதல் இருந்திருக்க வேண்டும். வைணவ உலகம் இந்தப் பாசுரத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடுவதற்கு காரணம் இருக்கத்தானே செய்கிறது. எல்லாம் அவனே! எல்லாவற்றிலும் அவனே! இந்தப் பாசுரத்தில் வருகிற திருக்கோளூர், பக்தி உலகத்தில் தனி இடத்தைப் பெற்றிருக்கிறது. வைணவ உலகம் தழைக்க வந்த மாமுனிவர் பெருங்கருணையாலே அனைவரையும் தன்பால் ஈர்த்த ஜீவநதியாகத் திகழும் உடையவர் எம்பெருமானார் ராமானுஜரை முன்வைத்து திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் என்ற நூலை படைப்பதற்கும் நம்மாழ்வாரின் இந்தப் பாசுரம்தான் மூலமுதல்.

இன்றும் நம்மாழ்வார் நமக்கெல்லாம் அருள்பாலிக்கும் ஆழ்வார் திருகரிக்குப் பக்கத்தில் இருக்கிறது திருக்கோளூர். நம்மாழ்வாரே சரண் என்று வாழ்ந்த மதுரகவியாழ்வார் அவதரித்த ஊர். தேவுமற்று அறியேன், குருகூர் பாவின் இன்னிசை பாடித்திரிவேனே என்று உடலாலும் உள்ளத்தாலும் வாழ்ந்தவர் மதுரகவியாழ்வார். மிகவும் மேன்மையான குணங்களைப் பெற்றவர்  நம்மாழ்வார். அந்த மேன்மையான குணங்களைப் புரிந்துகொண்டு அவரைத் தலைவனாக ஏற்றுக்கொண்ட தொண்டர் இப்படியொரு குரு  சிஷ்யர் அமைவதெல்லாம் சாதாரண விஷயமா என்ன? பொதுநலம் ஒன்றையே சிந்தித்த தலைவன். சுயநலம் துளிகூட கிடையாது என்பதை உறுதி செய்துகொண்ட தொண்டன். அதனால் தலைவன் பால் ஈர்க்கப்பட்டு அவரையே அதாவது. 

நம்மாழ்வாரையே அவரது திருவடியையே சரண் புகுந்த மதுரகவி ஆழ்வார். அடடா! என்ன அற்புதம் இது. நம்மாழ்வாருக்கு முன்பும் இப்படி இருந்தது இல்லை பின்பும் இல்லை. நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் நமக்குள் ஏற்பட்டிருக்கிற பிணியைப் போக்குகிற அருமருந்தாக அமைந்திருக்கிறார்கள். இங்கே லாப நஷ்டக் கணக்குகள் கிடையாது. பக்தியும் அதனால் ஏற்படும் முக்தியும்தான் பிரதானம். கண்ணனை நினைத்துப் பார்த்தாலும் அவன் வரவில்லை. சரி என்ன செய்யலாம் என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் திருக்கோளூருக்கு வந்துவிட்டாளாம். கண்களில் நீர் கோர்த்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீரால் உடல்  நினைகிறது. உள்ளமோ கண்ணனை நினைத்து கண்ணீரால் அழுகிறது.தன் பெண் எப்படி இருக்கிறாளாம்? இளமையான மானைப் போன்று இருக்கிறாளாம். அதைத்தான் ஆழ்வார் இளமான் புகும் ஊர் என்கிறார். 

நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும் வாழ்ந்த காலம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. ஆனால், அவர் நமக்குக் காட்டிய திருக்கோளூர் தாமிரபரணியின் கரையில் இருக்கிற திருக்கோயிலுக்குச் சென்று பாருங்கள். அங்கே புஜங்க சயனத்தில் அற்புதமாக வைத்தமாநிதிப் பெருமாள் பள்ளிகொண்டிருக்கிறார். குபேரனுக்கும், நவநிதிகளுக்கும், மதுரகவி ஆழ்வாருக்கும் காட்சி கொடுத்தவர். திருத்தாயார் பெயர் குமுதவள்ளி. திருக்கோளூர் வள்ளி என்று அழைக்கப்படுகிறாள். குபேரன்தான் இழந்த செல்வத்தைப் பெறுவதற்கு இந்தப் பெருமாளை வழிபட்டான். அவனுக்கு செல்வத்தை வாரி வழங்கியவர் இந்தப் பெருமான்தான். இந்தப் பெருமாள் தன்னுடைய தலைக்கு மரக்காலை வைத்து பள்ளிகொண்டிருக்கிறார். 

செல்வத்திற்கு அதிபதியாகிய வைத்தமாநிதிப் பெருமாளே தன் கையில் அஞ்சனம் என்ற மை தடவி செல்வம் எங்கே இருக்கிறது என்று பார்ப்பதாக ஒரு ஐதீகம். ரிசர்வ் பேங்கில் இருக்கிற பணத்திற்குகூட தட்டுப்பாடு வரும் ஆனால், என்றைக்குமே அள்ள அள்ளக் குறையாத (Fixed Deposit) வைப்பு நிதி வைத்திருக்கிற வைத்தமாநிதி இருக்கும்போது நமக்கு என்ன கவலை இருக்க முடியும்? வைணவ குரு பரம்பரையில் மிக ஆளுமையுடன் விளங்கிய சுவாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய பிரபந்தஸாரத்தில் இத்தலத்தினையும் மதுரகவியாழ்வாரின் அவதாரத்தையும் சிறப்பித்துள்ளார்.

“தேறிய மாஞானமுடன் திருக்கோளுரில்
சித்திரையில் சித்திரை நாள் வந்து தோன்றி
ஆறிய நல்லன்புடனே குருகூர் நம்பிக்கு
அனவரத மந்தரங்க வடிமை செய்து
மாறனையல்லால் என்றும் மறந்தும் தேவு
மற்றறியே னெனும் மதுரகவியே நீ முன்  கூறிய
கண்ணி நுண் சிறுத்தாம்பதினிற் பட்டுக்
குலவு பதினொன்று மெனக்குதவு நீயே”

வேதாந்த தேசிகரைப் போலவே வைணவ உலகத்தில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த மாபெரும் ஆச்சாரியனாகத் திகழும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் தன்னுடைய உபதேசரத்தின மாலையில் 
  
‘‘சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோயில்
ஏரார் பெரும்புதூர் என்னுமிவை பாரில்
மதியாகும் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர்.’’


என்று குறிப்பிட்டதிலிருந்து திருக்கோளூரின் சிறப்பும் மதுரகவி ஆழ்வாரின் பெருமையும் நம்மாழ்வாரின் வைத்தமாநிதிப் பெருமானைப் பற்றிய மங்களாசாசனப் பாசுரங்களும் நமக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கையில் ஒருமுறையேனும் திருநெல்வேலி  திருச்செந்தூர் வழியில் இருக்கின்ற நவதிருப்பதிற்குச் சென்று வாருங்கள். நம்மாழ்வாரின் ஆன்மா குடிகொண்டுள்ள ஆழ்வார்த்திருநகரியையும் திருக்கோளூரையும் அங்கே சேவை சாதிக்கிற பெருமாளையும் கண்டு மகிழுங்கள். வைத்தமாநிதியை பார்த்தாலே நமது வறுமை தீரும். இது கண்கூடான உண்மை அருளோடு பொருளையும் தருகிற பெருங்கருணை கொண்ட பெருமாளை பணிந்து வணங்குவோம். நம்மாழ்வாரையும் அந்த அற்புத தலைவனை நமக்கு காட்டிய சிறப்புமிக்க மதுரகவியாழ்வாரை நெஞ்சில் நினைப்போம்.

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை