ஶ்ரீமத் பாகவதம் - 72

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்து ஏழாவது அத்தியாயம்
(பலவகை உபாயங்களால் ப்ரக்ருதி புருஷர்களின் ஸ்வரூபத்தை நிர்ணயித்து மோக்ஷரீதியை நிரூபித்தல்)
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வாராய் மாதாவே! ஜலத்தில் ப்ரதிபலிக்கின்ற ஸூர்யன் அந்த ஜலத்தினுடைய தர்மங்களால் எங்ஙனம் தீண்டப்பெறுகிறதில்லையோ, அங்ஙனமே ஜீவன் ப்ரக்ருதியின் பரிணாமமாகிய தேஹத்தில் இருப்பினும் ப்ரக்ருதியின் தர்மங்களான தேவத்வம் மனுஷ்யத்வம் முதலியவைகளாலும் ஸத்வாதி குணங்களால் விளையும் ஸுகதுக்காதிகளாலும் தீண்டப் பெறுகிறதில்லை. ஏனெனில், அவன் இயற்கையில் விகாரமற்றவன்; தேவ மனுஷ்யாதி உருவமாய்ப் பரிணமிக்கும் தன்மையனல்லன். அவனுக்கு இயற்கையில் ஸத்வாதிகுணங்களின் ஸம்பந்தமே கிடையாது. அவன் போதல் வருதல் முதலிய ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளுக்கு இயற்கையில் இருப்பிடமல்லன். ஸூர்யன் ஜலத்தில் ப்ரதிபலிப்பினும், அசைதல் குறைதல் வளர்தல் முதலிய அந்த ஜலத்தின் குணங்கள் எங்ஙனம் ஸூர்யனுக்கு உண்டாகிறதில்லையோ, அங்ஙனமே ஜீவனுக்கும் ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வாதிகளும் தேவத்வ மனுஷ்யத்வாதிகளும் ஸம்பந்திக்கிறதில்லை. சால் குடம் கலசம் முதலிய மண் பாத்ரங்களிலிருக்கும் ஆகாசத்திற்கு எங்ஙனம் அவற்றின் சிறுமை பெருமை முதலியவை ஸம்பந்திக்கிறதில்லையோ, அங்ஙனமே ஜீவனுக்கு ப்ரக்ருதியின் குணங்கள் ஸம்பந்திக்கிறதில்லை. “ஜீவன் தேவ மனுஷ்யாதி சரீரங்களில் இருப்பினும் அவற்றின் தோஷங்கள் அவனைத் தீண்டுகிறதில்லை என்பது எங்ஙனம் பொருந்தும்?” என்னில், அதற்குக் காரணம் ஜீவாத்மாவின் ஸ்வபாவமே. ஜீவன் இயற்கையில் எவ்வகையான தோஷங்களும் தீண்டப்பெறாதவன், ஆனால், “நான் தேவன், நான் மனுஷ்யன் நான் ஸுகிக்கிறேன், நான் துக்கிக்கிறேன்” என்று ஜீவன் தேஹத்தையே ஆத்மாவாக நினைப்பதும் ஸூகிப்பதும் துக்கிப்பதும் எங்ஙனம் பொருந்தும்?” என்னில், அது ப்ராந்தியே. ஆனால் இத்தகையனான ஜீவாத்மாவுக்கு தேவ மனுஷ்யாதி தேஹஸம்பந்தமும் ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளில் “நான் செய்கின்றேன், நான் போகின்றேன், நான் வருகின்றேன்” என்கிற எண்ணமும் எப்படி பொருந்தும்?” என்னில், சொல்லுகிறேன் கேள். கீழ்ச்சொல்லப்பட்ட குணமுடைய இந்த ஜீவன் இயற்கையில் ப்ரக்ருதியைக்காட்டிலும் ஸ்வரூபத்தினாலும் ஸ்வபாவத்தினாலும் வேறுபட்டவனாயினும் ஆத்மாவல்லாத தேஹத்தை ஆத்மாவாக நினைக்கையாகிற அஹங்காரத்தினால் தன் ஸ்வரூபம் மறையப்பெற்று ப்ரக்ருதியின் குணங்களாகிய சப்தாதி விஷயங்களில் கால் தாழப் பெறுகின்றான்; “நான் செய்கிறேன்” என்று தன்னை ஸ்வதந்த்ரனாகவும் நினைத்துக் கொள்கின்றான். தன்னைத்தான் ஸ்வதந்தரனென்று நினைத்துக் கொள்கையாகிற ஸ்வதந்தராத்மாபிமானமும் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாம். தேஹஸம்பந்தமே ஸம்ஸாரமென்று கூறப்படும். இருவகைப்பட்ட அந்த அபிமானத்தினால் (தேஹாத்மாபிமானத்தினாலும் ஸ்வதந்த்ராத்மாபிமானத்தினாலும்) ஸ்வாதீனமற்றுக் கர்மத்திற்கு உட்பட்டு அந்தக் கர்மா தீனமாய் விளையும் ஸுகதுக்கங்களை அனுபவித்துக்கொண்டு கேவலம் ஸுகத்தையே அனுபவிக்க நேரப்பொறாதவனாகி ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் விளையும் புண்ய பாபரூபமான தோஷங்களால் சிறப்புற்றதும் இகழத்தக்கதும் இருவகைப்பட்டதும் (உத்தமம் மத்யமம் அதமம் என்று மூன்று வகைப்பட்டது) ஆகிய தேவர் திர்யக்கு மனுஷ்யர் முதலிய ஜன்மங்களில் பிறந்து ஸம்ஸாரபந்தத்தை அடைகின்றான். “தேவ மனுஷ்யாதி உருவங்களெல்லாம் ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்ட ஆகாரங்களன்றென்று பலவாறு கூறப்பட்டது. அப்படிப்பட்ட அந்த தேவ மனுஷ்யாதி உருவங்களால் ஜீவனுக்கு என்ன கெடுதி உண்டாகக் கூடும்?” என்னில் சொல்லுகிறேன், கேள். 
தேவத்வம் மனுஷ்யத்வம் முதலிய ஆகாரங்கள் ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்டவைகளன்றாயினும், சப்தாதி விஷயங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கிற இவ்வாத்மாவுக்கு ஸம்ஸாரபந்தம் நிவர்த்திக்கிறதில்லை. ஸம்ஸாரமே பெரிய அனர்த்தமாகையால் அதை அவை விளைக்கின்றன. ஸ்வப்னத்தில் அனுபவிக்கிற சரீரங்கள் ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்ட ஆகாரங்களன்றாயினும் விஷயங்களைச் சிந்திப்பதின் மூலமாய் ஸுக துக்க ரூபமான அனர்த்தத்திற்கு எப்படி காரணமாகின்றனவோ; அப்படியே ஜாக்ரத்தசையிலும் (விழித்துக் கொண்டிருக்கும் பொழுதும்) தேவ மனுஷ்யாதி தேஹங்கள் ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான ஆகாரங்களல்லவாயினும் சப்தாதி விஷயங்களில் மனப்பற்றை விளைப்பதன் மூலமாய் அனர்த்தரூபமான ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாகின்றன. ஆகையால், ப்ரக்ருதியின் பரிணமங்களாகிய இந்திரியங்களின் மார்க்கமான சப்தாதி விஷயங்களில் மிகுதியும் பற்றுடையதான மனத்தை, எவ்வகை இடையூறுகளாலும் தடை நேரப் பெறாத பக்தியோகத்தினாலும் வைராக்யத்தினாலும் மெல்ல மெல்ல ஸ்வாதீனப் படுத்திக்கொள்ள வேண்டும். வைராக்யமாவது ஆசைப்படத் தகுந்த வஸ்துக்களில் விருப்பின்மை. அந்த வைராக்யத்தினால் பகவானிடத்தில் பக்தியை வளர்த்திக்கொண்டு பிறகு மனத்தை பகவானுடைய த்யானத்தில் ஊக்கமுற்றதாகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வானாயின், இந்த ஸம்ஸாரபந்தம் தானே நீங்கிப்போம். மனத்தை வேறு விஷயங்களில் போகவொட்டாமல் தடுக்கையில் உண்டாகும் த்வரையாகிற ச்ரத்தையோடு கூடி பக்தியோகத்திற்கு அங்கங்களாகிய சம தமாதிகளாலும் ஸர்வேச்வரனான என்னிடத்தில் “இவனே நமக்குத் தாய் தந்தை முதலிய ஸமஸ்த பந்துக்களும் மற்றுமுள்ளவை எல்லாமும்” என்கிற மனோபாவத்தினாலும், உண்மையே பேசுந்தன்மையாலும், ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஸமத்வ புத்தியாலும் (ஸமஸ்த வஸ்துக்களிலும் “இவையெல்லாம் சேதனாசேதனங்களைச் சரீரமாகவுடைய ஸர்வேச்வரனே” என்னும் நினைவு உண்டாகப் பெறுகையாலும்) ஸமஸ்த பூதங்களிடத்திலும் வேஷமில்லாதிருக்கையாலும், சப்தாதி விஷயங்களில் மனப்பற்றில்லாமையாலும், ஸ்த்ரீஸம்போகம் முதலியவற்றைத் துறந்திருக்கையாகிற ப்ரஹ்மசர்யத்தினாலும், அளவிட்டு மிதமாகப் பேசுகையாகிற மௌனத்தினாலும், பக்தியோகத்தை வளர்க்கும் உபாயங்கள் எல்லாவற்றிலும் சிறப்புற்றதான வர்ணாச்ரம தர்மானுஷ்டானத்தினாலும் பக்தியோகத்தை அப்யஸிக்கவேண்டும். தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளால் ஸந்தோஷமுற்று, அங்ஙனம் கிடைத்த அன்னாதிகளையும் மிதமாய் புசிப்பவனாகி போஜனாதி காலங்களிலும் சுபாஸ்ரயமான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை மனனஞ்செய்கை தவறாமல் ஏகாந்தமான இடத்தில் வாஸஞ்செய்துகொண்டு பயாதிகளின்றி பயத்திற்கிடமான பூதங்களிடத்திலும் ஸ்னேஹத்தையே விரும்புகின்றவனும் அவற்றிலும் தயை செய்பவனும் எவ்வகையிலும் கலக்கமுறாத ஆழ்ந்த மனமுடையவனுமாய் இருக்கவேண்டும். பிள்ளை பெண்டிர் முதலிய அனுபந்தங்களோடு கூடின இந்த தேஹத்தில் நானென்னும் அபிமானத்தையும் என்னுடையதென்னும் அபிமானத்தையும் செய்யாமல் துறக்கவேண்டும். அத்தன்மையனாகி ப்ரக்ருதி புருஷர்களின் உண்மையைத் தெளிவாக அறிவிக்கின்ற தத்வஜ்ஞானத்தினால் ப்ரக்ருதி ஸம்பத்தம் துறக்கத்தக்கதென்றும் ஆத்ம ஸ்வரூபம் பற்றத்தக்கதென்றும் அறிந்து ஸங்கல்பம் விகல்பம் முதலிய மனஸ்ஸின் நிலைமைகளெல்லாம் தொலையப்பெற்று, பகவானையொழிந்த மற்ற வஸ்துக்களெவையும் கண்ணிலும் தோற்றப் பெறாதவனாகி ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவின் உண்மையைத் தெரிந்துகொண்டு, ஸூர்யனால் அதிஷ்டானஞ் செய்யப்பெற்ற சக்ஷுரிந்த்ரியத்தினால் ஸூர்யனை ஸாக்ஷாத்கரிப்பதுபோல், ஒருவாறாயிருக்கும் தன்மையதல்லாத தேஹத்தில் பரமாத்மாவினால் அதிஷ்டானஞ் செய்யப்பெற்ற ஜீவாத்மாவினால் அந்தப் பரமாத்மாவை ஸாக்ஷாத்கரிக்க வேண்டும். பிறகு ப்ராரப்தகர்மத்தின் முடிவில் தேவமனுஷ்யாதி சரீரத்தைத் துறந்து, கர்மத்தினால் தேவ மனுஷ்யாதி சரீரங்களில்லாதவனும் தன் ஸங்கல்பத்தினால் தேவமனுஷ்யாதி தேஹங்களைப் பரிக்ரஹிப்பவனும் என்றும் ஸங்கோசமடையாத ஜ்ஞானத்தையே ஸ்வபாவமாகவுடையவனும் ஜீவாத்மாவுக்கு ஸகலவிதபந்துவாய் இருப்பவனும் மாறும் தன்மையதாகி நிலையற்றிருக்கையால் அஸத்தென்று கூறப்படுவதான தேஹாதிகளுக்கும் (எப்படி நாம் கண்ணால் வஸ்துக்களைக் கண்டறிகிறோமோ, அங்ஙனமே நாம் ஈச்வரனுடைய உதவியாலேயே கண்ணைக் கொண்டு அந்தந்த வஸ்துக்களைக் காண்கிறோம். அவனில்லாமல் கண்ணுக்கும் தனியே சக்தியில்லை. எப்படி கண்னால் வஸ்துக்களைக் காண்பதற்கு ஸூர்ய கிரணங்களும் விளக்கு முதலிய வெளிச்சங்களும் உதவி செய்கின்றனவோ, அங்ஙனமே ஈச்வரனுடைய உதவியால்தான் நாம் அந்தந்த வஸ்துக்களைக் காண்கிறோம். அந்த ஸூர்யாதிகளுக்கும் ப்ரகாசம் கொடுப்பவன் ஈச்வரனே என்று “தஸ்ய ஹாஸா ஸர்வமீஷ விஜாதி” என்று ச்ருதி சொல்லுகிறது. ஆகையால் தேவாதிகளை ப்ரகாசிப்பிக்கிறவன் ஈச்வரனே. ஆத்மாவுக்கு மிகவும் ஸமீபித்ததாகையால் முதலில் தேஹத்தைச் சொல்லிற்று. தேஹம் முதலிய வஸ்துக்களையெல்லாம் கருதுகிறது.) கண்போல் ப்ரகாசகனும் அனைத்திற்கும் அந்தர்யாமியும் ஈடுமெடுப்புமில்லாதவனுமாகிய பரமபுருஷனைப் பெறுவான். “ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மஸ்வரூபத்தை அறிந்து அவ்வாத்மாவுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவை அடைகிறானென்றாய். ஆத்மஸ்வரூபம் இந்த்ரியங்களுக்கு விஷயமாகாததல்லவா. ஏனென்னில், அது மிகவும் ஸூக்ஷ்மமாயிருப்பது. ஆகையால் அதை எங்ஙனம் கண்டறிய முடியும்?” என்னில், சொல்லுகிறேன், கேள். 
நாம் பூமியிலுள்ள வஸ்துக்களை ப்ரகாசிப்பிக்கிற ஸூர்ய கிரணங்களைக் கொண்டே ஜலத்தில் ப்ரதிபலிக்கிற ஸுர்யனுடைய ப்ரதிபிம்பத்தைக் காண்கின்றோம். அங்ஙனம் ஜலத்தில் ப்ரதிபிம்பத்தை அறிவிக்கிற அந்த ஸூர்யகிரணத்தினாலேயே ஆகாயத்திலிருக்கிற வாஸ்தவமான ஸூர்யனையும் காண்கிறோம். வாஸ்தவத்தில் ஸூர்யனல்லாத ப்ரதிபிம்பத்தைக் காண்பதற்கும் அந்த ஸுர்யனுடைய கிரணங்களே நமக்கு ஸஹாயமாயிருக்கின்றன. இங்ஙனமே பஞ்சபூதங்கள் இந்திரியங்கள் மனது என்று மூன்று வகைப்பட்ட அஹங்கார தத்வத்தின் பரிணாமமாகிய தேஹம் இயற்கையில் ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதாயினும் அந்த தேஹத்தையே ஆத்மாவென்று எந்த ஜ்ஞானத்தினால் அறிகின்றோமோ, அந்த ஜ்ஞானத்தினாலேயே நிர்விகாரஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவையும் அறிகின்றோம். ஸூர்யகிரணமே வாஸ்தவத்தில் ஸூர்யனல்லாத ஸூர்யப்ரதிபிம்பத்தைக் காண்பதற்கும் வாஸ்தவமான ஸூர்யனைக் காண்பதற்கும் காரணமாகிறாப் போல், ஆத்மாவல்லாத தேஹத்தையே ஆத்மாவென்று ப்ரமிப்பதற்கும் உண்மையான ஆத்மாவை அறிவதற்கும் அவ்வாத்மாவின் தர்மபூத ஜ்ஞானமே காரணமாகின்றது. பூத ஸூக்ஷ்மங்கள் இந்திரியங்கள் மனது புத்தி அஹங்காரம் ஆகிய இவையெல்லாம் நித்ரையால் தோற்றாதிருக்கும்பொழுது தூக்கமின்றி தேஹாத்மாபிமானமுமின்றி தேஹத்தில் எவன் தோற்றுகிறானோ அவனே ஜீவாத்மாவென்று கூறப்படுவான். தூக்கமில்லாத ஸமயத்தில் என்னுடையதென்று தேஹாதிகளைக் காண்பவனாகி ஸ்பஷ்டமாகத் தோற்றுகிற ஜீவாத்மாவானவன் தூங்கும்பொழுது தேஹாதிகள் தோற்றாமையால் அந்த தேஹா விஷயமான அஹம்பாவம் நஷ்டமாகப் பெற்றுத்தான் நாசம் அடையாதிருப்பினும், கைப்பொருள் தொலையப்பெற்றவன்போல், தன்னை நாசம் அடைந்ததாக நினைத்துக்கொள்கின்றான். (தூங்கும் பொழுது ஒன்றும் தெரிகிறதில்லையேயென்னில், சொல்லுகிறேன். ஒன்றும் தெரிகிறதில்லையென்பதில்லை. தேஹாதிகள் தோற்றுகிறதில்லையேயன்றி ஜீவன் மாத்ரம் தோற்றிக் கொண்டேயிருக்கிறான். அதற்கு அடையாளம் என்னென்னில், சொல்லுகிறேன். 
தூங்கியெழுந்தவன் “நான் ஸுகமாகத் தூங்கினேன்” என்றும், “எனக்கு ஒன்றுமே தெரியவில்லை” என்றும், “நான் என்னையும் அறியாதிருந்தேன்” என்றும் சொல்லுகிறான். தூக்கத்திலும் நானென்றும் எனக்கென்றும் தோற்றுகிறவனே ஜீவனாவான். “நான் என்னையும் அறியாதிருந்தேன், என்கிறானேயென்னில், நானென்று தோற்றுகையாலே ஜீவன் உண்டென்பதில் ஸந்தேஹம் இல்லை. “என்னையும் அறியாதிருந்தேன்” என்பதற்கு இங்ஙனம் கருத்துக் கொள்ளவேண்டும். எப்படியென்னில், “நான் இன்னவன்” என்றும் “இந்த இடத்தில் இருக்கின்றேன்” என்றும் “இந்தக்காலம் இது” என்றும் எனக்குத் தெரியவில்லையென்பதே அதன் கருத்தாம். ஆகையால் தூக்கத்திலும் கேவலம் நானென்று ஜீவன் தோற்றுகிறானென்பதில் ஸந்தேஹமில்லை. ப்ரக்ருதியைக் காட்டிலும் ஜீவன் வேறுபட்டவனென்று அறிய விரும்புமவன் இங்ஙனம் ஜீவாத்மாவின் தோற்றத்தை நன்றாகப் பராமர்சித்து அந்த ஆத்மாவை ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டவனாக அறியவேண்டும். பஞ்சபூதங்களின் ஸமுதாய ரூபமான தேஹத்தை ஜீவனே தரித்துக்கொண்டிருக்கிறான். ஜீவனுடைய ஸம்பந்தம் அற்றதாயின், சரீரம் உடனே சிதறிப்போய்விடும். அந்தச் சரீரத்திற்கு நடையாட்டமும் ஜீவனால் தான் உண்டாகின்றது. ஜீவனுடைய ஸம்பந்தமற்ற தேஹம் அசையாதல்லவா? இங்ஙனம் தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து அவ்வாத்மாவுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவை உபாஸிக்கவேண்டும்.
தேஹூதி சொல்லுகிறாள்:- வாராய் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டனே! ப்ரக்ருதி ஜீவனை ஒருக்காலும் விடாது போல் தோற்றுகிறது. ஏனென்னில், ப்ரபூ! இந்த ப்ரக்ருதிக்கும் ஜீவனுக்கும் ஒருவருக்கொருவர் உள்ள ஸம்பந்தம் மாறாமல் திடமாயிருக்கின்றது. அன்றியும் அவ்விரண்டும் அழியாத வஸ்துக்களாய் இருக்கின்றன. ஆகையால் இவ்விரண்டு வஸ்துக்களும் ஒன்றை விட்டொன்று பிரிந்திருக்கமாட்டாததுபோல் தோற்றுகிறது. எப்படி பூமிக்கும் அதன் குணமான கந்தத்திற்கும் பிரிந்திருத்தல் உண்டாகாதோ, எப்படி ஜலத்திற்கும் அதன் குணமான ரஸத்திற்கும் பிரிந்திருத்தல் உண்டாகாதோ, அங்ஙனமே ப்ரக்ருதிக்கும் அதைக்காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவுக்கும் தனித்தனியே பிரிந்திருத்தல் உண்டாகாது. மற்றும், ஜீவன் ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளான போதல் வருதல் முதலிய செயல்களுக்கு இருப்பிடமல்லனே; அத்தகையனான ஜீவனுக்கு இந்தக் கர்மபந்தம் எதனால் உண்டாகிறதோ, அந்த ப்ரக்ருதியின் குணங்களாகிய ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் நீங்காதிருக்கையில் ப்ரக்ருதி எங்ஙனம் நீங்கும்? ஆகையால் பூமியைவிட்டு கந்தமும் கந்தத்தைவிட்டு பூமியும், ஜலத்தைவிட்டு பலமும் ரஸத்தைவிட்டு ஜலமும் தனியே பிரிந்திருக்க முடியாததைப் போல், ஜீவனும் ப்ரக்ருதியை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. ப்ரக்ருதியும் ஜீவனை விட்டுப் பிரிந்திருக்க நேராது. “தத்வஜ்ஞானம் உண்டாகையில் ப்ரக்ருகி ஆத்மாவை விட்டுப்போம்” என்னில், அதுவும் ஸரியன்று, ப்ரக்ருதியைக் காட்டிலும் ஜீவன் வேறுபட்டவனென்று நன்கு பராமர்சித்துத் தெரிந்து கொள்ளிலும், அந்த தத்வ ஜ்ஞானத்தினால் பிரபலமான ஸம்ஸாரபயம் நீங்கக் கூடுமாயினும், அவ்வளவில் ப்ரக்ருதி நீங்குவதற்கு இடமில்லை. ப்ரக்ருதி நீங்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்கையில், ஒருக்கால் நீங்கின ஸம்ஸாரபயமும் அதன் காரணம் நீங்காமையால் மீண்டுவரும். ஆகையால் ப்ரக்ருதி ஸம்பந்தம் நீங்காதிருப்பின் மோக்ஷத்திற்கு இடமில்லை. ஆகவே ஆத்ம ஸ்வரூபத்தையும் அவ்வாத்மாவுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவையும் உபாஸிப்பதால் என்ன ப்ரயோஜனம்? அறிஞரே! இங்ஙனம் என் மனது ஸந்தேஹத்தில் ஆழ்ந்து வருந்துகின்றது. இதைப் போக்குவாயாக.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தமக்கு ஏற்பட்ட வர்ணாச்ரம தர்மங்களை ஒரு பலனையும் விரும்பாமல் அனுஷ்டித்துக்கொண்டு தூயமனத்தராகி, நெடுநாள் என் கதைகளைக் கேட்டுக்கொண்டு வருவார்களாயின், அவர்க்கு எவ்வகை விக்னங்களாலும் தடைபடாத பக்தி என்னிடத்தில் உண்டாகும். அங்ஙனம் என்னிடத்தில் திடமான பக்தி உண்டாகப்பெற்றவர்க்கு ப்ரக்ருதி ஸம்பந்தம் தானே தொலைந்துபோம். ப்ரக்ருதியும் புருஷனும் தனித்தனியே வேறுபட்ட வஸ்துக்களென்றும், ப்ரக்ருதி ஸம்பந்தம் துறக்கத் தக்கதென்றும் ஆத்மஸ்வரூபம் பற்றத் தகுந்ததென்றும் நன்றாகத் தெரிந்துகொண்டு சிறந்த வைராக்யத்துடன் உபவாஸம் முதலிய தவங்களையும் தவறாமல் அனுஷ்டிப்பவராகி ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவின் உண்மையைச் சிந்தித்துக் கொண்டே மிகுந்த மன ஆக்கத்துடன் இருப்பார்களாயின், அவர்க்கு என்னிடத்தில் சிறந்த பக்தி உண்டாகும். ஆத்மாவுக்கு ஸம்ஸார பந்தத்தை விளைக்கின்ற ப்ரக்ருதியானது இங்ஙனம் என்னிடத்தில் பக்தி உண்டாகப் பெற்றவருடைய தவம் முதலியவற்றால் தஹிக்கப்பெற்றதாகி அவர்க்கு மீளவும் ஸம்ஸாரபந்தத்தை விளைக்க வல்லமையற்று மறைந்துபோம். அக்னிக்கு உத்பத்தி ஸ்தானமாகிய அரணிக்கட்டை அக்னியாகி தஹிக்கப்படுவதுபோல், தத்வஜ்ஞானத்திற்கு ஹேதுவான ப்ரக்ருதியானது அந்தத் தத்வஜ்ஞானத்தினாலேயே தஹிக்கப்பட்டு மறைகின்றது. ப்ரக்ருதி ஜ்ஞானத்தை அழிக்குமேயன்றி அதை விளைக்குமோவென்னில்; சொல்லுகிறேன், கேள். ஸாத்விகாஹாரங்களால் ஜ்ஞானாபிவ்ருத்தி உண்டாகுமென்பது யாவர்க்கும் தெரிந்த விஷயமே. அவையெல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமங்களே. பகவானுடைய கதைகளைக் கேட்பதாலும் பகவானுடைய ஸந்நிதானங்களுக்குப் போய்ப் பணிவதனாலும் ஜ்ஞானாபிவ்ருத்தி உண்டாகின்றது. அன்றியும் சாஸ்த்ராப்யாஸாதிகளால் ஜ்ஞானம் உண்டாவது வெளிச்சமே. இவை எல்லாவற்றிற்கும் தேஹமே காரணம். தேஹம் ப்ரக்ருதியின் கார்யமேயன்றி வேறன்று. ஆகையால் ப்ரக்ருதி ஜ்ஞானத்தை மறைப்பதுபோல் அதை விளையவும் செய்கின்றது. அஸத் கர்மங்களால் ஜ்ஞானம் நசிப்பதுபோல், ஸத்கர்மங்களால் ஜ்ஞானம் வளர்ந்து வருமென்பதில் ஸந்தேஹமில்லை. கர்மங்கள் ப்ரக்ருதியின் பரிணாமங்களேயன்றி வேறன்று. ஆகையால் ப்ரக்ருதியே ஜ்ஞானத்தை விளைக்கின்றது, அங்ஙனம் ஜ்ஞானோத்பத்திக்கு ஹேதுவான ப்ரக்ருதி அந்த ஜ்ஞானத்தினாலேயே அழிக்கப்படுகின்றது; பக்தியாவது பகவானிடத்தில் உண்டான ஓர் ஜ்ஞானமே. அத்தகைய பக்தி உண்டாகப் பெற்றவனுக்கு இந்த ப்ரக்ருதி ஸம்பந்தம் தானே பறந்துபோம். ஜீவன் ப்ரக்ருதியால் விளையும் போகங்களை அனுபவித்து இவை அஸாரங்களென்றும் அற்பங்களென்றும் நல்வரங்களென்றும் கண்டு என்றும் புலப்படுகின்ற அதன் தோஷங்களை அறிந்து துறந்துவிடுகின்றான். அங்ஙனம் துறக்கப்பெற்ற ப்ரக்ருதியானது இயற்கையில் கர்மத்திற்கு உட்படாதவனும் இடையில் வந்த கர்ம ஸம்பந்தமும் பகவத் பக்தியின் மஹிமையால் கழியப்பெற்றுத் தனக்கு இயற்கையில் ஏற்பட்ட அபஹதபாப்மத்வம் (பாபங்களற்றிருக்கை) முதலிய எட்டு குணங்களாகிற தன் மஹிமையில் நிலை நின்றவனுமாகிய ஆத்மாவுக்கும் அமங்களமான ஸம்ஸார பந்தத்தை மீளவும் விளைவிக்க வல்லதன்று. அஜ்ஞானம் உள்ளவரையிலுமே ப்ரக்ருதி ஸம்பந்தம் நடையாடுமன்றி ஜ்ஞானம் பிறந்தபின்பு ப்ரக்ருதி ஸம்பந்தம் நடையாடாது. தூங்குகிறவனுக்கு ஸ்வப்னம் பலவகை அனர்த்தங்களை விளைக்கின்றது. ஸ்வப்னத்தில் தலையறுப்புண்பதாகவும் பிள்ளை பெண்டிர் முதலியவர் மரணம் அடைவதாகவும் மற்றும் பலவகை அனர்த்தங்கள் விளைவதாகவும் அனுபவிக்கின்றானல்லவா? அங்கனம் பலவகை அனர்த்தங்களுக்கு இடமான ஸ்வப்னம் உறங்குகிறவனுக்கு அன்றோ உண்டாகின்றது. விழித்துக் கொண்டிருப்பவனுக்கு அத்தகைய ஸ்வப்னமே உண்டாகிறதில்லை. ஆனதுபற்றியே அந்த ஸ்வப்னத்தினால் விளையும் அனர்த்தங்களை அவன் அனுபவிக்கிறதில்லை. ஆகையால் அங்ஙனம் விழித்துக் கொண்டிருப்பவனுக்கு ஸ்வப்னம் மதிமயக்கத்தின் பொருட்டு வல்லதாகிறதில்லை. இங்ஙனமே ப்ரக்ருதி புருஷன் ஈஸ்வரன் என்கிற மூன்று தத்வங்களின் உண்மையை அறிந்து என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்தி ஆத்மானுபவத்தினால் மனக்களிப்புற்று இருக்கின்ற புருஷனுக்கு ப்ரக்ருதி ஸம்ஸார பந்தத்தை விளைவிக்க வல்லதாகிறதில்லை. ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்ம பரமாத்மாக்களின் அனுபவத்தில் நிலைகின்றவனுக்கு ஒருக்காலும் ப்ரக்ருதி ஸம்ஸார பந்தத்தை விளைவிக்காது. இங்ஙனம் ஆத்ம ஸ்வரூபத்தை அறிய முயன்று அதில் மனவூக்கமுடையவன் பல ஜன்மங்களை அனுபவித்து வெகுகாலம் கழிந்தபின்பு தத்வங்களை அறிந்து தனக்கு ஹிதமான புருஷார்த்தம் இன்னதென்று தெரிந்து ஸத்யலோகம் வரையிலுமுள்ள ஸமஸ்த லோகங்களிலும் “இவை நச்வரங்கள், அற்பங்கள்” என்று விருப்பமற்றவனும் என்னிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவனுமாகி என்னால் மிகவும் அருள்புரியப்பெற்று, ஸமஸ்த புருஷர்களாலும் ப்ரார்த்திக்கக்கூடிய சிறந்த புருஷார்த்தமாயிருப்பதும் என்னால் தரிக்கப்பெற்றதுமாகிய ஆத்மஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பான். அங்ஙனம் பகவானுக்கு உட்பட்டு அவனேயென்னும்படி அவனிட்ட வழக்காயிருப்பதாகிய ஆத்மாவினுடைய ஸாக்ஷாத்காரத்தினால் ஸம்சயங்களெல்லாம் தீரப்பெற்று தேஹாத்மாபிமானத்தையும் துறந்து என்னிடத்தில் நிலைகின்ற பக்தியோகம் உடையவனாகி ப்ராரப்த கர்மத்தின் முடிவில், எங்குப் போனவர்கள் திரும்பமாட்டார்களோ, அப்படிப்பட்ட எனது ஸ்தானமாகிய பரமபதம் போய்ச்சேருவான். வாராய் மாதாவே! பக்தியோகம் கைபுகுந்தவனுக்கு யோகத்தினால் வருந்தி ஸாதிக்கக்கூடியவைகளும் மற்ற எந்தக் காரணங்களாலும் கிடைக்க முடியாதவைகளுமாகிய அணிமாதி ஐஸ்வர்யங்கள் தானே கைகூடும். அவை மிகவும் ஆச்சர்யங்களாயிருப்பவை. ஆகையால் அவை மனத்தை இழுக்கும். ஆயினும் அவை ஸம்ஸாரபந்தத்திற்கு இடமாயிருப்பவைகளேயன்றி ஸம்ஸாரத்தை முடிப்பவையன்று, அவற்றில் கால் தாழ்ந்தவனுக்கு ஸம்ஸார பந்தம் எக்காளும் தீராது. பக்தியோகம் கைபுகுந்தவன் தனக்குத்தானே சேர்ந்த அந்த அணிமாதி ஸித்திகளில் மனம் செல்லப் பெறாதிருப்பானாயின், அவன் ஸ்ம்ஸாரத்தைப் பற்றறத் துறந்து சரீர ஸம்பந்தமற்று மஹாநந்த ஸ்வரூபனாகிய என்னைப் பெறுவான். 
இருபத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை