மயக்கும் தமிழ் - 39 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

மனதை மடைகட்டி பரந்தாமனிடம் திருப்புங்கள்

‘‘நெய்க்குடத்தைப் பற்றியேறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்
காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து
வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பணையோடும்
பண்டன்று பட்டினம் காப்பே!’’

பெரியாழ்வார்

நெய் குடத்தில் ஏறும் எறும்புகள்போல் என்னைக் கைப்பற்றிக் கொண்ட நோய்களே பிழைத்து ஓடிச் செல்லுங்கள். என் உடலில் நாராயணன் தன் பாம்பணையோடு  குடிவந்து விட்டான். முன்பு போல கிடையாது. இந்த உடல் பட்டினம் அளவுக்கு காவல் உடையது பத்திரமானது என்கிறார். பெரியாழ்வாரின் இப்படிப்பட்ட  பாசுரங்கள் எல்லாம் மகோன்னதம் வாய்ந்தவை. சதாசர்வ காலமும் நான் திருவெட்டு எழுத்துக்களை உடைய அந்த நாராயண நாமத்தை உள்வாங்கிக் கொண்டே  இருக்கிறேன் என்கிறார் ஆழ்வார். எங்கேயும் எப்போதும் மாலவனின் பெருமைகளை பேசியபடியே இருக்கிறேன். வாழ்ந்து வருகிறேன். 

எனவே என்னுள் அந்த பரந்தாமன் அதுவும் எப்படிப்பட்டவன் தெரியுமா? பாற்கடலின் பையத் துயின்ற பரமனடி பாடி என்கிறாளே ஆண்டாள் நாச்சியார். அதுபோல  பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்கிறவன் தற்போது என்னுள் வந்து தங்கியிருக்கிறான். அதனால் என்னுள் குடிகொண்டிருக்கிற நோய்களே தப்பித்தோம்  பிழைத்தோம் என்ற நிலையில் என்னை விட்டு ஓடிப் போய் விடுங்கள் என்று நோய்களை எச்சரிக்கிறார் பெரியாழ்வார். நோய் என்பது மனிதனை கொஞ்சம்  கொஞ்சமாக அழிக்கக்கூடியது. அதற்கொரு எடுத்துக்காட்டாக உவமை சொல்கிறார் பாருங்கள்.

நெய்க் குடத்தைப் பற்றியேறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்
என்கிறார்! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

நெய் குடத்தில் சாரை சாரையாக எறும்புகள் வந்து ஆக்கிரமிக்கும். அதுபோல இந்த உடலில் ஏகப்பட்ட நோய்கள் வந்து ஏகப்பட்ட பிரச்னைகளை செய்து  கொண்டிருக்கும். அதுவும் சாதாரணமான குடம் இல்லை நெய்க்குடம். ஆனால், நேற்று வரை இருந்த நிலைமை வேறு இன்றைய நிலவரம் வேறு! தற்போது என்னுள் வேதப்பிரானார் வந்து புகுந்து விட்டார். வேதப்பிரானார் என்றால் யார்? நான்கு வேதங்களுக்கும் அதிபதியான சாட்சாத் பரந்தாமன் தான்.
அவனே என்னுள் இருந்து என்னைக் காவல் காக்கிற போது நோய்களே உங்களுக்கு இங்கே என்ன வேலை சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய் விடுங்கள்  என்று நோய்களை எச்சரிக்கிறார் பெரியாழ்வார். இறைவன் தானே விரும்பி வந்து ஆழ்வாருடைய உள்ளத்திற் புகுந்து நின்றான். 

அதனால் தன் திருமேனி பகவானுக்கு திருப்பள்ளி ஆயிற்று என்று உணர்ந்த பெரியாழ்வார் இதை அப்படியே தன் அடியார்களுக்கு சொல்லும்விதமாக பாசுரத்தைப்  படைத்திருக்கிறார். இறைவனுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை உருக்கமாக இதை விட வேறு யாரால்தான் சொல்ல முடியும். இதையெல்லாம் நாலாயிர  திவ்யபிரபந்தத்தில்தான், ஆழ்வார் பெருமக்களிடம் தான் பார்க்க முடியும்! உடல்நலம் குன்றி இருக்கும்போது பெரியாழ்வாரின் நெய்க்குடத்தை என்று துவங்கும்  பத்து பாசுரங்களையும் மனம் ஒன்றிச் சொன்னால் நம்மைப் பீடித்திருக்கும் நோய்கள் பறந்து போய் விடும் என்பது பலரின் நம்பிக்கையாக இன்றளவும் இருக்கிறது!

‘‘நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின்
மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக்கையால் பகிரண்டம்
அகப்படுத்த காலத்து அன்று
எல்லோரும் அறியாரோ, எம்பெருமான்
உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாமுளரே? அவனருளே
உலகாவது அறியீர்களே?’’

பெரிய திருமொழி

எம்பெருமானின் துணை கொண்டு நம் உடம்பில் உள்ள நோய்களை விரட்டியடிக்கிறார். பெரியாழ்வார் என்றால் அறிவு தரும் பெரிய திருமொழியில் திருமங்கை  ஆழ்வாரோ இந்த உலகம் நிலைபெற்று இன்றளவும் நீடித்திருப்பது அவனருளால்தானே என்று வியப்படைந்து இந்த பக்திப் பரவசமான பாசுரத்தைப்  படைத்திருக்கிறார். பாசுரத்தை ஆரம்பிக்கும் போதே, நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம் என்றால் என்ன அர்த்தம்? பிரளய  வெள்ளமானது ஓரிடத்திலும் நிலைகொள்ளாமல் ஆகாயத்திற்கு மேலே போய் பெருக்கெடுத்து விட்டதாம். அப்போது பரமபதத்தை வெள்ளம் சூழாதபடி தன்னுடைய  மிடுக்குடைய பெரிய கைகளால் எம்பெருமாள் பாதுகாத்து இந்த மூவுலகத்தையும் பக்த ஜனங்களையும் காத்து பேருதவி செய்தார் என்கிறார் நெகிழ்வுடன் ஆழ்வார்!  திருமங்கை ஆழ்வாருக்கு எங்கிருந்து தான் வார்த்தைகள் வந்து விழுகின்றனவோ?

‘‘மல்லாண்ட தடக்கையால் பகிரண்டம்
அகப்படுத்த காலத்து’’

அன்று பேரண்டம் கூட இல்லையாம் பகிரண்டமாம் நாம் நம்முடைய சுயதேவைகளுக்காகவும், சிற்றின்ப வேட்கைக்காகவும் தினம் தினம் பகவானிடம் கோரிக்கை மனு போட்டபடி இருக்கிறோமே  தவிர அவன் அதாவது எம்பெருமானான பரந்தாமன் இன்றளவும் இந்த உலகத்தை சதாசர்வ காலமும் பாதுகாத்து வருவதை நம்மில் எத்துணை பேர்  அறிந்திருக்கிறோம். அதற்கான நன்றியை மனப்பூர்வமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் அவனிடத்தில் செலுத்தியிருக்கிறோம் என்று யதார்த்த நிலையில் நின்று  சிந்திக்கிறார் திருமங்கை ஆழ்வார். அவரால் எம்பெருமானின் பெருங்கருணையைத் தவிர வேறு ஒன்றையும் சிந்திக்க முடியவில்லை. அதனால் தானோ  என்னவோ அவனருளே உலகாவது அறியீர்களே?

அவனுடைய பெருமையையும் சிறப்பையும் பெருங்கருணையையும் நம்மில் எத்துணை பேர் உணர்ந்திருக்கிறோம் என்று மனம் வருந்துகிறார். பரம்பொருளான  ஸ்ரீமந் நாராயணன் மீது எத்தகைய பக்தியும் பெருங்காதலும் மயக்கமும் இருந்தால் இப்படிப்பட்ட உள்ளப்பூர்வமாக ஆழ்வார் தம் மக்களுக்காக சிந்தித்திருப்பார்!

பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் தத்தம் பாணியில் சிந்தித்து பாசுரங்களை படைத்திருக்கிற சூழலில், ஆழ்வார்களின் தலைவரும் ஞானத்தந்தையுமான  நம்மாழ்வார் தன்னுடைய வேதத்திற்கு ஒப்பான திருவாய்மொழியில் மிக அழகான பாசுரத்தை படைத்திருக்கிறார். அதுவும் எப்படி தெரியுமா? தன்னுடைய  மனதிற்கு சொல்வது போல் இந்த ஊருக்கும் மக்களுக்கும் சொல்கிறார்.

‘‘பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனை, பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை
மணிவண்ணனை குடக்கூத்தனை
அரவம் ஏற்றி அலைகடல்
அமரும் துயில்கொண்ட அண்ணலை
இரவும் நன்பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ’’

திருவாய்மொழி

இதர விஷயங்களில் ஈடுபடும் மனதினை மீட்டு கிருஷ்ணனாய் அவதரித்த பரமனிடத்திலே வைக்கப் படாதபாடு படுகிறார் ஆழ்வார். நாம் எதில் எதிலோ நம்  மனதை செலுத்துகிறோம். கடலில் சூரைக்காற்றில் பாய்மரக் கப்பல் தத்தளிப்பதைப் போல நம் மனம் அல்லாடுகிறது தள்ளாடுகிறது. இது எல்லோருக்கும்  பொருந்தக்கூடிய ஒன்று! இதிலே பணக்காரன் ஏழை, மேலானவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றெல்லாம் யாரும் கிடையாது! பாசுரத்தில் நம்மாழ்வார்  பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளை கவனித்தீர்களா? பரமன், பரஞ்சோதி, குழகன், மணிவண்ணன் குடக்கூத்தன் இதுதானே மயக்கும் தமிழ்! நாம் கோயிலின்  கர்ப்பக்கிரகத்திற்கு அருகே நின்று சுவாமி தரிசனம் செய்கிறபோது நம் மனம் நம் கட்டுப்பாட்டில் எத்தனை விநாடி இருக்கிறது! இது மிகப் பெரிய கேள்விக்குறி?
ஆழ்வார் இதற்கு ஒரு உபாயம் சொல்கிறார்.

என்ன உபாயம் சொல்கிறார்? கொஞ்சம் கொஞ்சமாக மனதை அதாவது நம்முடைய எண்ண ஓட்டங்கள் ஓடக்கூடிய மனதை அந்த மாலவனிடம் திருப்புங்கள்.  வயல்வெளிகளில் தண்ணீரை பாசனத்திற்கு மடை கட்டி திருப்புவது போல் பரந்தாமனிடம் திருப்புங்கள் அதனால் தான் ‘‘இரவும் நன்பகலும் விடாது என்றும்  ஏத்துதல் மனம் வைம்மினோ? இரவு பகல் என்றில்லை இதெல்லாம் ஒரே நாளில் நடக்கக்கூடியதா என்ன என்று ஒரு கேள்வி நம்முன் எழும். கொஞ்சம்  கொஞ்சமாக ஆழ்வார் சொன்னபடி செய்து வந்தால் நமக்கு நாளெல்லாம் நல்ல நாள்தானே!

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை