சனி, 7 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 40 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

மாலவனை நோக்கி மாதவம் புரிவோம்!

பதி அமைந்து, நாடி, பருத்தெழுந்த சிந்தை
மதி உரிஞ்சி, வான்முகடு நோக்கி  கதி மிகுத்து
அம் கோல்தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே
மால்தேடி ஓடும் மனம்!

பூதத்தாழ்வார்

ஆழ்வார் தம் மனத்தின் இயல்பை, அதனுடைய குணத்தைப் பற்றியும் பண்பைப் பற்றியும் மிக அழகாக இந்தப் பாசுரத்தில் எடுத்துரைக்கிறார். மால்தேடி ஓடும் மனம் என்கிறார். திருமாலிடத்திலே பேரன்பு கொண்டவர் பூதத்தாழ்வார். அந்தத் திருமால் நின்று அருள்பாலிக்கும் திருமலை திருப்பதியிலே போய் ஆழ்வாரின் மனம் ஆட்பட்டிருக்கிறதாம். திருமலையோடு மட்டும் நின்று விடவில்லையாம். அங்கிருந்து மேலும் கிளர்ந்து எழுகின்ற மனோரதத்தை உடையதாய் ஆர்வ மிகுதி ஏற்பட அவன் எங்கே? எங்கே? என்று தேடிக் காணும் பூரிப்புடனே சந்திரனைத் தாண்டி வான்முகட்டையும் பார்த்து விட்டு பரமபதநாதனை நோக்கி வேகத்தோடு சென்றதாம். அந்த அன்பின் வேகத்தைத்தான் உவமையழகு பொருந்த இந்தப் பாசுரத்தைப் படைத்திருக்கிறார்.

ஆழ்வாரின் ஆழ்மனத்தில் ஏற்பட்டுள்ள வேட்கையின் விளைவுதான் இந்த அபூர்வத் தேடல் என்கிறார்கள், வரலாற்று ஆசிரியர்கள். அதனால்தான் மதி உரிஞ்சி வான்முகடு நோக்கி என்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார் ஆழ்வார். எல்லாமே ஒருவித தேடலின் விளைவுதானே. நமக்கு எந்தெந்தப் பொருட்கள் மீதோ தேடல் இருக்கின்றது. ஆனால், பூதத்தாழ்வார் தன்னுடைய நிலையான உண்மையான சந்தோஷத்திற்காக ஆண்டவனின் பேரருளுக்காக ஏங்கித் தவிக்கிறார்.
பூதத்தாழ்வாரிடமிருந்து சற்று மாறுபட்டு ஆனால், அதே ஆண்டவன் அருளைப் பெறுவதற்கு எது தடையாக உள்ளது. 

அந்தத் தடையை எப்படி உடைக்க முடியும்? எப்படியெல்லாம் நாம் நம் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டால் நம்மால் இறைவனின் பரிபூரண அருளைப் பெற ஏதுவாக இருக்கும் என்ற தன்னுடைய உள்ளக்கிடக்கையை இந்த அழகிய பாசுரத்தில் தெரிவித்திருக்கிறார் பேயாழ்வார்

மால் பால் மனம் சுழிப்ப, மங்கையர் தோள் கைவிட்டு
நூல் பால் மனம் வைக்க நொய்வது ஆம் நால் பால
வேதத்தான், வேங்கடத்தான், விண்ணோர் முடிதோயும்
பாதத்தான் பாதம் பணிந்து!

பேயாழ்வார்

மால் பால் மனம் சுழிப்ப என்றால் என்ன பொருள்? எதை நமக்குச் சொல்ல வருகிறார் பேயாழ்வார். அதிகப்படியான தர்மத்திற்கு எதிரான பெண்ணாசையை விட்டு ஒழித்தால் மட்டுமே நமக்கு இறைவனின் நற்கருணை கிட்டும் என்கிறார் ஆழ்வார். அதனால்தான் மங்கையர் தோள் கைவிட்டு என்று வார்த்தைகளை மிக அழகாக லாவகமாக போடுகிறார். சின்னஞ்சிறிய வயதிலேயே எதற்கு நம்மை நெறிபடுத்தி வழிப்படுத்தி பக்குவப்படுத்துகிறார்கள் நம் பெரியவர்கள். இதுதான் பாதை! இதுதான் பயணம், போகும் வழி என்று சிறு பிள்ளைக்குச் சொல்லித் தருவதுபோல் ஏன் சொல்லித் தருகிறார்கள்! நம்மை ஒருநாளும் தீய சிந்தனைக்குள் ஆட்படுத்தி விடக்கூடாது என்கிற மேலான அக்கறையும் கரிசனமும்தான் முக்கியம். வேதத்தான், வேங்கடத்தான், விண்ணோர் முடிதோயும் பாதத்தான் பாதம் பணிந்து என்கிறார். நான்கு வேதங்களுக்கும் அதிபதியாகிய எம்பெருமான் திருமலையில் நித்யவாஸம் செய்யும் கோவிந்தனின் பாதங்களை பணிந்து வணங்குங்கள் என்கிறார். 

எம்பெருமானை நினைத்து வணங்கும்போது நான் கடவுளை நினைக்கிறேன். அவனை வணங்குகிறேன் என்கிற மேலான கர்வம் மனதில் குடிபுகக் கூடாதாம். எம்பெருமானுக்குத் தேவை தூய பக்தியும், நற் சிந்தனையும், மனிதாபிமானமும்தான். மாறாகப் பகட்டோ, ஆடம்பரமோ ஆரவாரமோ தேவையில்லை. அதனால்தான் ஆழ்வார் நன்கு உணர்ந்து எம்பெருமானைப் பணிந்து வணங்குங்கள் என்கிறார். ஆழ்வார் பெருமக்களெல்லாம் ஏன் இப்படி கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் சொல்லுகிறார்கள் தெரியுமா? நம் மனம் என்னும் களர் நிலத்தை வளர் நிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான். ஏன் என்றால் காமம் புகுந்த மனதில் கடவுளுக்கு இடமில்லை என்பதுதான் இயற்கையின் நியதி! நம் மோகத்தையும் மாளாக் காதலையும் அந்த மாமாயன் மாலவன் மீது வைக்க வேண்டுமே தவிர சாதாரண அழிந்து விடக்கூடிய தேகத்தின் மீது வைப்பதால் பெரிதாக நாம் என்ன சாதித்து விடப் போகிறோம். 

மாலவன் மீது மனம் பற்று வைத்தால் ஆரோக்கியம். மாறாக கீழான சிந்தனைகளில் மனம் லயிக்க ஆரம்பித்தால் மனதில் பற்றுக்கு பதிலாக புற்றுதான் வளரும்!

இவர்களுக்கெல்லாம் சற்று மேலாக அதே சமயம் அந்த பரம்பொருளான இறைவன் பெருங்கருணை உடையவன். அவனுக்கு பக்தர்களிடத்தில் உள்ள வாஞ்சையும் அன்பும் சொல்லில் அடங்காதவை. அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? நம் மனம் என்ன சிந்தித்தாலும் அவ்வளவு ஏன் நாம் உடலாலும் உள்ளத்தாலும் எவ்வளவு தவறுகள் செய்தாலும் அவனை நினைத்து சரணடைந்தால், அவன் எப்படியும் நம்மைக் காத்து ரட்சிப்பான் என்று உறுதியாக நம்புகிறார் பொய்கையாழ்வார். தன் நெஞ்சுக்கு சொல்வதுபோல் இந்த ஊருக்கு உலகத்திற்கு சொல்லுகிறார். நமக்கு பாடம் நடத்துகிற அந்தப் பாசுரத்தை பார்க்கலாம்.

‘‘குன்று அனைய குற்றம் செயினும், குணம் கொள்ளும்
இன்று முதலாக என் நெஞ்சே  என்றும்
புறன் உரையே ஆயினும் பொன் ஆழிக் கையான்
திறன் உரையே சிந்தித் திரு’’

பொய்கையாழ்வார்.

அடியார்களின் குற்றத்தையே நற்றமாகக் கொள்பவன் எம்பெருமான். எவ்வளவு குற்றம் குன்று அனைய குற்றம் பெரிய மலையளவு குற்றம் செய்யினும் பொன் ஆழியான், சக்கரத்தை கையில் ஏந்தியிருக்கிறவன் அந்த சர்வ மங்களமும் தருகிற தயாபரனை நாம் வணங்கித் தொழுவதால் நம் வினைகள் பஞ்சு போல் பறந்து போய் விடுமாம்! இன்று முதலாக என் நெஞ்சே! என்கிறார். இந்த வரியில்தான் பாசுரத்தின் அடிநாதமே அடங்கியிருக்கிறது! நேற்று வரை எந்தத் தப்பு வேண்டுமானாலும் கர்ம வினையால் உந்தப்பட்டு செய்திருக்கலாம். ஆனால், இன்று முதலாக என்றால் இனிமேலாவது அந்த மாலவனை மனதில் வை என்கிறார்.

இந்த இடத்தில் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொன்ன அருளிய அற்புத மகா அருளுரைதான் நினைவிற்கு வருகின்றது. 

நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவத்திற்கு சரியான பரிகாரம் என்ன தெரியுமா? இனி மேல் பாவம் செய்யாமல் இருப்பதுதான் என்கிறார். கோயில் குளங்களுக்குச் செல்வது, யாகம் நடத்துவது எல்லாம் சரிதான். ஆனால், அதையெல்லாம் செய்து கொண்டே மறுபுறத்தில் பாவகரமான செயல்களைச் செய்தால் எந்த நன்மையும் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார். என்ன அருமையான மகா அருளுரை! ஆழ்வாரும் பெருமக்களும் நாயன்மார்களும் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். பரந்தாமன் தாள் பணிவோம். பாரினில் மேன்மையாக வாழ்வோம்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக