கண்ணனையே கனவிலும் நனவிலும் விரும்பிய கோதாதேவி அவனை விரைவில் கூட எண்ணினாள். அப்படித் தம் விருப்பப்படி அவன் கூடுவானோ கூடானோ என்ற எண்ணத்தினால் கூடலிழைத்துச் சகுனம் பார்க்கிறாள் அவள்.
தாம் விரும்பிய புருஷன் தன்னிடம் வந்தடைவானா என்பதையறியப் பண்டைய தமிழ்நாட்டில் பெண்கள் அனுஷ்டிக்கும் முறை அது. கண்ணை மூடிக்கொண்டு மணலில் அமர்ந்து தம் விரலில் ஒன்றை மணலில் வைத்துக்கொண்டு தம் இஷ்டத்தைப் பூர்த்தி செய்விக்கும் தெய்வத்தை வாழ்த்தி, மணலில் வைத்த விரலைச் சுழி சுழியாகச் சுழித்துக் கொண்டே ஒரு வட்டம் இழைக்கவேண்டும், அந்த வட்டம் ஆரம்பித்த இடத்தை அடைந்து அம்முனையைத் தொடவேண்டும். பிறகு கண்ணை விழித்துப் பார்க்கையில் இருமுனையும் தொட்டுக் கொண்டிருந்தால் தம் எண்ணம் கைகூடுமென்று நம்பிக்கை. இதுவே கூடலிழைத்தல் எனப்படும்.
இவ்வாறு கூடலிழைக்க விரும்பிய கோதாபிராட்டியும் மணலில் அமர்ந்தாள். விரலையும் ஊன்றிவிட்டாள். கூடல் தெய்வத்தைத் தொழுது வாழ்த்தவேண்டுமே, அவள் கண்ணனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையறிவாள்? அவளுக்கு எல்லாமும் அக்கண்ணனேயல்லவா? அவளே அகிலமெல்லாவற்றிற்கும் நாயகன், அவனே அவள் விரும்பிய நாயகன். முதலில் நினைக்கிறாள் கோதை "இந்தப் பூமிக்கு நாயகன்" என்று. அவன் பூமிக்கு மட்டுமா நாயகன்? தன்னுந்தியிலே நான்முகனையும் தோற்றி அகிலத்தையும் படைத்தவனல்லவா அவன் என்று நினைக்கிறாள் பிறகு, அந்தப் பரமன், ஸகலதேவர்களாலும் நித்யஸுரர்களாலும் புகழப்படும் புருஷோத்தமன் தனக்கு இணங்கி வருவானா என்று ஓர் சந்தேகமும் ஒரு கணம் எழுகிறது.
அதோடு கோதைக்கு என்றும் நினைவை விட்டு நீங்காத க்ருஷ்ணாவதாரம் தோன்றவும், எல்லையற்ற பரத்வமுடைய பரம புருஷன் ஓர் பெண்ணைத் தாயாக நினைத்து அவளுடைய கர்ப்பத்தில் தோன்றிய ஸௌசீல்யத்தை நினைக்கிறாள். அவன் அவதரித்தது தான் அவதரித்தான் வேறு இடம் அகப்படவில்லையா? சிறைக்கூடம்தானா அகப்பட்டது. என்று நினைக்கிறாள் பிராட்டி. அப்படி நினைக்கும் போதே கம்சனது சிறைக்கூடமும் அங்கே தேவகி இருப்பதும் அவளையும் அவள் கர்ப்பத்தில் இருக்கும் கண்ணனையும் தேவர்கள் துதிப்பதும் தோன்றுகிறது. அந்தத் துதியைக் கேட்கும்போதே பரமன் சங்க சக்கரங்களுடன் அவதரிப்பதும் தம் மகனைப் பரமன் என்று அறிந்த தேவகியின் மகிழ்ச்சியும் அம்மகிழ்ச்சியால் அவள் முகம் அதியான ஒளியுடன் விளங்குவதும் கூடத் தோன்றுகின்றன கோதைக்கு. தன் மகன் ஸர்வேசுவரன் என்றறிந்த தேவகி, மங்கள தேவதையாகிய மஹாலக்ஷ்மியே தனக்கு மருமகளாகியமை குறித்தும் பெரிதும் மகிழ்கிறாள்.
தந்தை தாயார்களின் கால்களில் உள்ள விலங்குகள் தெறிக்கின்றன. தம் மகனைப் புருஷோத்தமன் என அறிந்திருந்தும் தேவகியும் வஸுதேவரும் அவ்வெம்பெருமானைத் தம் மகனாகவே கருதுகின்றனர். சங்க சக்கரங்களை மறைத்துக் கொள்ளும்படி வேண்டுவது மாத்திரமல்ல உத்திரவாகவும் இருக்கிறது அவர்கள் வார்த்தை. அவர்களுக்கு அவ்வெண்ணம் தோன்றக் காரணம் அக்கண்ணனே அவர்களை அம்மாவென்றும் அப்பாவென்றும் அழைத்ததே.
சிறைக்கூடம் திறந்து கொள்ளுகிறது. கண்ணணைத் தலையில் தாங்கிய வஸுதேவர் வெளிவருகிறார். மழையும் தூறுகிறது. மழையைத் தாங்குவதுடன் இருட்டைப் போக்கவும் செய்கிறான் ஆதிசேஷன். யமுனையும் தம் பெருக்கை ஒதுக்கிவிட்டு வழி விடுகிறது. இவைகளெல்லாம் தம் தலைமேல் இருக்கும் தெய்வங்களுக்கரசாகிய பரமக் குழந்தையின் சக்தியே என்றும் உணர்கிறார் வஸுதேவர். இருந்தாலும் தாம் தூக்கிக் காப்பாற்றாவிடில் என்ன நேருமோ என்றும் நினைக்கிறார் அவர். கோமான்களுக்கும், தேவர்களுக்கு தேவர் கோமானுக்கும் எவன் என்றும் தந்தையோ அவனுக்குமல்லவோ தந்தையாகிவிட்டார் வஸுதேவர்?
வஸுதேவர் தலைமேல் உள்ள பரமனும் நினைக்கிறார் அப்போது. நம்மைக் குழந்தையாக அடைய வேண்டுமென்று இவர் பட்ட பாடு கொஞ்சமா? அதற்காக இவரைத் தந்தையாக அடைந்தோம். அது மட்டுமல்ல; நம்மை என்றும் சுமக்கும் பாக்கியமுள்ள கருடனுடையவும் அநந்தனுடையவும் ஸ்தானத்தையும் இவருக்கு அளித்து விட்டோம் என்று திருவுள்ளத்தில் நினைக்கிறார் குழந்தைக் கண்ணன்.
இவைகளெல்லாம் ஒன்றும் விடாமல் தோன்றுகின்றன கோதா பிராட்டிக்கு. ஆஹா! வஸுதேவருடைய செல்வமும் சிறப்பும், சீரும் யாருக்கு வரும் என்றும் நினைக்கிறாள் அவள்.
அப்படிப்பட்ட பரமன் ஸௌலப்பிய, ஸௌசீல்ய, வாத்ஸல்யாதி கல்யாணகுண பரிபூர்ணனானவன் நிச்சயம் வருவார் என்று தோன்றுகிறது அவளுக்கு.
ஏ கூடலே அக்கோமகன் வருவானாகில் நீ கூடு என்று கூறிக் கூடலிழைக்கிறாள் கோதை. அவள் அனுபவம் நிறைந்த பாட்டை நாமும் அனுபவிப்போம்.
"பூமகன் புகழ்வானவர் போற்றுதற்
காமகன் அணிவாணுதல் தேவகி
மாமகன் மிகுசீர் வசுதேவர்தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே"
(நாச்சியார் திருமொழி-4-3)
ஆண்டாள் திருவடிகளே சரணம்
நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா 1966