நாச்சியார் - உ.வே. வங்கிபுரம் நவநீதம் கோபால தேசிகாசாரியார்

நமக்குள் இருக்கும் ஆத்மா (ஆன்மா என்று தமிழில் சொல்லப்படும்), ஜீவாத்மா என்றும் வழங்கப்படும். இந்த ஜீவாத்மா ஆதியும், அந்தமும் - ஆரம்பமும், முடிவும் - இல்லாதது.


நாம் ஓர் ஆடையைக் கழற்றி விட்டு, இன்னொரு ஆடையை அணிந்து கொள்கிறோம். இப்படி ஆடைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். இது போலவே ஜீவாத்மாவும் மனிதன், மிருகம், பட்சி, மரம், செடி, கொடி போன்ற பல பல சரீரங்களை எடுத்துக் கொள்கிறது. அதாவது, மனிதன் ஆடையை மாற்றுவது போல, ஜீவாத்மா சரீரங்களை மாற்றுகிறது. ஒரு சரீரத்தை விட்டு ஜீவாத்மா நீங்கும் போது, நாம் இறப்பு என்கிறோம். வேறு ஒரு சரீரத்தை எடுத்துக் கொள்ளும் போது பிறப்பு என்கிறோம்.


இப்படி உலக வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவது ‘சம்சாரம்’ என்று சொல்லப்படும். நமது வாழ்க்கையின் குறிக்கோள் அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லப்படும். அதாவது இந்த உலகத்தில் அறத்தின் வழி நின்று பொருளை ஈட்ட வேண்டும். அப்படி ஈட்டிய பொருளைக் கொண்டு, அறநெறி தவறாமல் உலக சுகங்களை அனுபவிக்க வேண்டும். திருமாலிடம் சரணாகதி பண்ணி, இந்த சரீரத்தின் முடிவில் வீடு (மோக்ஷம்) என்னும் பேரின்பத்தைப் பெற வேண்டும். உலக வாழ்க்கை என்பது ஒரு பெரும் கடலைப் போன்றது. இந்தக் கடலைக் கடந்து, மோக்ஷம் பெற வேண்டும்.


இதைத்தான் திருவள்ளுவரும் சொல்கிறார்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடி சேராதார். (திருக்குறள் - 1-10)


(இறைவனுடைய திருவடிகளைச் சரணம் அடைபவர்கள் பிறவி என்னும் பெரும் கடலைக் கடந்து, மோக்ஷம் ஆகிற கரை சேருவார்கள். அப்படி இறைவனைச் சரணம் அடையாதவர்கள் பிறவி ஆகிற பெரும் கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். இங்கேயே உழல்வார்கள்.)


நாம் நல்வழியில் செல்வதற்குக் கைவிளக்காக, பகவான் நமக்கு வேதங்களையும் சாத்திரங்களையும் கொடுத்திருக்கிறான். தானே ராமன், கிருஷ்ணன் முதலான பத்து அவதாரங்களை (தசாவதாரம்) எடுத்தான். மேலும், பத்து ஆழ்வார்களையும், ஆண்டாளையும், மதுரகவிகளையும் தோற்றுவித்து, அவர்கள் வாயிலாக நாலாயிர திவ்யப்ரபந்தத்தையும் தோன்றச் செய்தான்.


இந்த ஆழ்வார்களுள் ஆண்டாள் தனிச் சிறப்புடன் விளங்குகிறாள். பூமிதேவியே ஆண்டாள் ஆகத் தோன்றினாள் என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம்.


இதை சுவாமி தேசிகன் சமத்காரமாகக் கூறுகிறார் - ‘அம்மா கோதையே, பூமியில் உள்ள மண்புற்றை பூமிதேவியின் காதாக வேதம் கூறுகிறது. அந்தப் புற்றிலிருந்து தோன்றியதால், வால்மீகி என்றே பெயர் பெற்றார் ஒரு மாமுனிவர்’. (வடமொழியில், வல்மீகம் என்றால் புற்று என்று பொருள்).


‘வால்மீகி எழுதிய ராமாயணம் உலகப்புகழ் பெற்றது. வால்மீகி பூமிப் புற்றில் தோன்றியவர். நீயோ பூமியின் அவதாரமே ஆவாய். பூமிப் புற்றில் தோன்றிய வால்மீகியின் படைப்பே உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் போது, பூமியாகிய உன் பாடல்கள் தேனாக இனிப்பதில் என்ன ஆச்சரியம்?’ (கோதா ஸ்துதி - 7)


திருமாலுக்குப் பிரபந்தங்கள் ஆகிற பாமாலையும், பூமாலையும் சூட்டியவள் ஆண்டாள். அவளுடைய தகப்பனார் என்ற பெருமையைப் பெற்றதால் தான், பெரிய ஆழ்வார் (பெரியாழ்வார்) என்று அழைக்கப் பட்டார்.


திருவரங்கனும், தன்நாயகி ஆகிய ஆண்டாளின் பிறந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் இருக்கும் தெற்கு திசையைப் பார்த்துக் கொண்டு, பள்ளி கொண்டிருக்கிறான்.


பகவான் தான் நமக்குத் தாய், தந்தை, உறவினர், தோழன் எல்லாமே. அவன் தான் புருஷன், புருஷோத்தமன்.


அதனால், திருமாலை நாயகன் ஆகவும், தம்மை நாயகி (பெண்) ஆகவும் பாவித்து, ஆழ்வார்களும் கவிகளும் பாடி உள்ளனர். இதற்கு நாயக - நாயகி பாவம் என்று பெயர்.


தேசிகன் கூறுகிறார் - ‘தாயே, மற்ற ஆழ்வார்கள் ஆண்கள். அதனால் அவர்கள் நாயகி பாவத்தில் பாடல்களைப் பாடுவதற்காகப் பெண் தன்மையை ஏறிட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் நீயோ இயற்கையாகவே பெண். அதனால், உனக்குப் பெண் தன்மையைப் புதிதாக ஏறிட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே இந்த விஷயத்தில் மற்ற ஆழ்வார்களுக்கு நீ வழிகாட்டியாக இருக்கிறாய்’. (கோதாஸ்துதி - 8)


ஆண்டாள் அருளியவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி - சென்ற கட்டுரையில் திருப்பாவையைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம். இப்போது நவரசங்களையும் கொண்ட நாச்சியார் திருமொழியைப் பார்ப்போம்.


பாவை நோன்பு மார்கழி மாதத்தில் கொண்டாடப் படுகிறது. அதனால் திருப்பாவை, மிகப் பொருத்தமாக, “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” என்று தொடங்குகிறது. அதே போலப்பாவை நோன்புக்குப் பிறகு, அதற்கு அடுத்த தை மாதத்தில், கண்ணனுடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு, ஆண்டாள் வேண்டுகிறாள். அதனால் நாச்சியார் திருமொழியும் மிகப் பொருத்தமாகத் “தை ஒரு திங்களும் தரை விளக்கித் தண்மண்டலம் இட்டு மாசிமுன்னாள்” என்று தொடங்குகிறது.


14 பதிகங்களைக் கொண்ட இந்தத் திருமொழி முழுதுமே (6வது பதிகத்தைத் தவிர), கண்ணனைப் பிரிந்து ஆண்டாள் படும் வேதனையைப் படிப்பவர் நெஞ்சை உருக்கும்படித் தெள்ளெனக் காட்டுகின்றது. இப்படி, காதலனைப் பிரிந்து காதலிபடும் வேதனையை வடமொழியில் ‘விப்ரலம்பச்ருங்காரம்’ என்பர்.


முதல் பதிகத்தில், தான் ஒரு மானிடனை மணப்பதை நினைக்கவும் முடியாது என்றும், கண்ணனுக்காகவே சிருஷ்டிக்கப்பட்ட தன்னைக் கண்ணனுடன் சேர்த்து வைக்குமாறும் வேண்டுகிறாள். பிறகு, மணலில் வீடுகள் கட்டி விளையாடும் இளஞ்சிறுமிகள், அந்த மண் வீட்டைச் சிதைக்க முனையும் கண்ணனைச் செல்லமாகக் கோபிப்பதாக ஒரு பதிகம். கண்ணனுடன் சேர முடியாமல் வருந்தும் கோதை, அவனுடன் அழகிய திருமணம் நடப்பதாகக் கனாக்காண்கிறாள்.


கண் விழித்த கோதை, அது வெறும் கனா என்று அறிந்து, மீண்டும் துயரக் கடலில் மூழ்குகின்றாள். ராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற பிறகு, சீதையைப் பிரிந்து ராமன் பட்ட துயரத்தை, வால்மீகியும் கம்பனும் மிக உருக்கமாக வர்ணிக்கின்றனர். இங்கே, கண்ணன் வராமல் தான் படும் துயரத்தை, ஆண்டாளே நெஞ்சை அள்ளும் தீஞ்சுவைக் காவியமாக வடிவமைக்கிறாள்.


குயிலையும், மயிலையும், மேகத்தையும், வண்ண மலர்களையும் கண்டு மனம் வெதும்புகிறாள். கண்ணனின் கரிய நிறத்தை ஒத்த அவை, கண்ணனை நினைவூட்டுவதால் கண்ணன் வாழ்ந்த இடங்களான மதுரா, பிருந்தாவனம், துவாரகை போன்ற திருத்தலங்களுக்குத் தன்னை அழைத்துச் செல்லும்படி வேண்டுகிறாள். அவன் அணிந்த ஆடை, துளசி மாலை போன்றவற்றை யாசிக்கிறாள், அவற்றைக் கண்டாவது சற்றுமனம் ஆறி இருக்கலாம் என்று.


இந்தத் திருமொழி முழுவதிலுமே உவமை அணிகள் பரவிக்கிடக்கின்றன. மானிடவனை மணக்க மாட்டேன் என்று கூறும் ஆண்டாள், ஓர் உவமையைச் சொல்கிறாள். அந்தணர்கள் யாகம் செய்யும் போது தேவர்களுக்கு என்று அக்கினியில் ஹவிஸ்ஸைச் (உணவு) சேர்க்கின்றனர். இந்தப் புனிதமான ஹவிஸ்ஸை, ஒரு நரி உண்ணலாமா? அது போலக் கண்ணனுக்காகவே சிருஷ்டிக்கப்பட்ட தன்னை, ஒரு மானிடன் தீண்டக் கூடாது என்கிறாள்.


பகவானைப் பிரிந்து, உடல் மெலிந்து உள் மெலிந்து இருக்கும் தன் நிலையைக் கூறுகிறாள், பெருங்கொசுக்களும் பூச்சிகளும் தின்ற ஒரு விளாம்பழம் வெளிப்பார்வைக்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால் உள்ளே சத்து ஒன்றும் இருக்காது. கொசுக்கள் தின்றுவிடும். அந்தக் கொசுக்கள் உண்ட ஒரு விளாம்பழம் போலத் திருவேங்கடவன் வராததால் உள் மெலிந்த தன்னை வர்ணிக்கிறாள்.

 திருமால் கையில் உள்ள வெண்மையான சங்கு, சரத்காலத்தில், மேகம் இல்லா வானத்தில், ஒரு பௌர்ணமி தினத்தில், ஒளி வீசி ப்ரகாசிக்கும் முழுநிலவைப் போல் உள்ளது என்கிறாள். இப்படி எத்தனை எத்தனையோ உவமைகள் மிளிர்கின்றன.


இந்தத் துயரக்காவியத்தில், ஒரு மாறுபாடாக, எதிரிடையாக, (as a contrast), ஹாஸ்ய ரஸமும் ஆங்காங்கே பளிச்சிடுகிறது.


நதியில் ஆடையின்றி நீராடிய இடைப் பெண்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு, மரத்தின் மீது ஏறி அமர்ந்தான் கண்ணன். பெண்கள் கூறுகின்றனர், “கண்ணா, நீ முன்பு ராமனாக இருந்த போது, சுக்ரீவன், அனுமான், அங்கதன் முதலான குரங்குகளுடன் மிக நெருங்கிப் பழகினாய். குரங்குகள் மரம் ஏறுவதில் வல்லவர்கள். கிளைக்குக் கிளை தாவிக் குரங்குகள் செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அந்தக் குரங்குகளுடன் பழகி, மரம் ஏறும் பழக்கம் உனக்கும் தொற்றிக் கொண்டதோ? அதனால் தான், எங்கள் ஆடைகளை எடுத்துக்கொண்டு, மரத்தின் மேல் ஏறி அமர்ந்திருக்கிறாயா?”


இன்னும் ஒரு நகைச்சுவை. ஆண்டாள் கேட்கிறாள், “பெருமானே, நீ ராமனாகவும், கண்ணனாகவும் அவதாரம் செய்தபோது, என்னைச் சரணம் அடைந்த அடியார்களை ஒரு போதும் கைவிடமாட்டேன் என்று உறுதி அளித்தாயே. அந்த உறுதி என்ன ஆயிற்று?”


நீ வந்து முகம் காட்டாமல், நான் துன்பக்கடலில் வீழ்ந்து கிடப்பதை நீ அறியாயா? என் விஷயத்தில் உன் உறுதி மொழியும் பொய் ஆனதே.


ஓ, நீ ஆதிசேஷன் ஆகிற பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கிறாய் அல்லவா. பாம்புக்கு இரண்டு நாக்குகள் உண்டு. அதனோடு சேர்ந்திருக்கும் உனக்கும் இரட்டை நாக்கு வந்து விட்டதா? ‘அடியார்களைக் காக்கிறேன்’ என்று நீ சொல்வது ஒன்று; செய்வது ஒன்று (உன் அடியாளான என்னை நீ காக்கவில்லை). நாக்கு ஒன்றாய் இருந்தால், வாக்கும் ஒன்றாக இருக்கும்; ஆனால், உன் வாக்கு இரண்டு பட்டதால் (மாறியதால்), “உன் நாக்கும், பாம்பைப் போல், இரண்டாகி விட்டதோ” - என்று பரிகசிக்கிறாள்.


இப்படி நவரசங்களும் நிரம்பி வழியும் இந்தத் தீஞ்சுவைக் காவியத்தை அவசியம் படித்துச்சுவைத்து இன்புற வேண்டும்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

(வங்கிபுரம் நவநீதம் கோபால தேசிகாசாரியார் ஸ்வாமிகள் இயற்றிய திருமால் திருவருள் புத்தகத்திலிருந்து)

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை