மாலவன் மாலுறும் மார்கழி - கே.எல்.ஹேமாமாலினி

கார்த்தண் கமலக் கண் என்னும் நெடுங் கயிறு படுத்தி என்னை 
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே? 
போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல் 
வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே.


நாச்சியார் திருமொழி 14-4.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ கீதோபதேசத்தில், “நான் மாதங்களில் மார்கழி மாதம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஹேமந்த ருதுவாகிய பொற்காலமாம் மார்கழி மாதம் ஒவ்வொரு இல்லமும் களை பெற்று விளங்கும்; அதை நாம் அதிகாலை சாலைகளில் நடந்து செல்லும் போது அறியலாம். சிறார்களும் அதிகாலையில் எழுந்து தன் தாயிடம் சென்று அவள் போடும் கோலங்களை ரசித்துத் தன் பங்கிற்கும் சிறிது கோலப்பொடியை இறைத்து அம்மா சாணத்தில் பூ வைப்பது போலத் தனது கோலத்திலும் பூ வைப்பதைப் பார்த்துக் களிக்க ஆயிரம் கண்களும் போதாது. அது போல பெண்களிடத்தே ஒரு உற்சாகத்தையும் மன ஸந்தோஷத்தையும் தருவது மார்கழி, "துர்ல போ மா நுஷோதேஹ:'' என்கிறபடி மனுஷ்ய ஜன்மம் கிடைத்ததற்கரியது. அந்த ஜன்மத்தை பகவத் விஷயங்களில் செலுத்தி பயனடைய வேண்டுவது அவசியம்.


அங்ஙனம் மனுஷ்ய ஜன்மத்தைப் பயன் பெற செய்ய உதவுவது, “பெரியாழ்வார் பெற்ற பெண் கொடியாம் கோதை” பகர்ந்த “சங்கத் தமிழ் மாலையாம் திருப்பாவை முப்பதும்” ஆகும். அக்காதை மனதைக் கொள்ளை கொள்ளும் ஓர் காவியம். ஏன்? பெண் கொடியாம் கோதையே காவியம் தானே! பற்பல விசித்திரங்களும், அழகிய நிகழ்ச்சிகளும் நடைபெறும் இந்தப் பாரில் தானும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, மக்கள் உய்ய வழிகாட்டியாக திகழ்ந்த தெய்வமே கோதை. கண்ணகி, சீதை போல கற்புக்கும், (திருவரங்கப் பெருமானை மனத்தில் வரித்ததால்) தெய்வத்தன்மைக்கும், கோதையாகி ஸ்ரீ விஷ்ணு சித்தரது பாசத்திற்கும் ஏற்றவளாய், மற்ற உத்தமிக்கும் உத்தமியாய் வாழ்ந்தவள் அவள். இக்கால நவநாகரீக மங்கையருக்கும் வழிகாட்டி, திருப்பாவை விரும்பாதவர் சிலரே இருப்பினும் அவர் தம் மனத்தையும் கொள்ளை கொள்ளும் தனிப்பொருள், சொற்சுவையுடையது திருப்பாவை, மேலும் சிறு குழந்தைகளும் அச்செந்தமிழ்ப் பாசுரங்களை மழலையால் மிழற்றும்போது கேட்போரது மனம் பாகாக உருகி, ஓர் ஆத்மசாந்தி பிறக்கிறது. ஆத்ம தாகத்தைத் தீர்ப்பது 'பக்தி'யால் மட்டுமே முடியும் என்பது சான்றோர் அறிந்த உண்மை. மனத்திற்குள் நிம்மதி தேடாதவரே கிடையாதே! 


திரு ஆண்டாள் அவதாரம் : 


“ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்ப வல்லீம் 
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தந யோக த்ருச்யாம் 
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம் 
கோதா மநந்ய சரண: சரணம் ப்ரபத்யே” 


ஸ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் என்ற சான்றோர் ஒருவர் வாழ்ந்து வந்தார். விஷ்ணு பக்தரானதாலேயே அவர் விஷ்ணு சித்தரானார். அன்று நிலத்தில் அவதரித்த சீதாதேவி போல இன்றும் நிலத்தில் அவதரித்தாள் பூதேவி, ஆம் ஆண்டாள் என்ற பூமிதேவி திருவாடிப்புரத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசிச் செடியின் மடியில் தவழ்ந்தாள். மலர் கொய்யத் தன் திருநந்தவனத்திற்கு வந்த விஷ்ணு சித்தர் கற்பக பரிமள சுகந்த மணம் நுகர்ந்து அதன் போக்கில் சென்று கோடி சூர்யப் பிரகாசத்துடன் அவதரித்த குழந்தையைக் கண்டார்; இன்ப வாரிதியில் ஆழ்ந்தார்; தன்னை மெய் மறந்தார். அந்தக் குழந்தையோ அவரைப் பார்த்துச் சிரித்தது. அதனை வளர்த்தார். குழந்தையின் மழலை அவரை மயக்கியது. அவரது பக்தி இறையையே மயக்கி மயங்க வைத்து, தேவியே அவரிடம் வளரும்படி செய்ததோ! தினமும் குழந்தையை நீராட்டி, புது ஆடை புனைவித்து, தலைவாரிப் பின்னலிட்டு பூச்சூட்டி, சகல நலங்களையும் அளித்தார். அவரையேத் தந்தையாகப் பாவித்து தேவியே பாசத்தில் திளைத்தாள். பூதேவியின் நெடுநாளைய ஆசையான பூமியில் பிறந்து ஒருவரால் வளர்க்கப்படும் திருவிளையாடல் அன்று நிறைவேறியதோ! சிறு வயது முதற்கொண்டே கண்ணனின் கதைகளைக் கேட்ட குழந்தை கண்ணிற்கு கண்ணன் மட்டும் தெரிந்தான். உலகம் மறைத்தது. ஆம் குழந்தை தக்க பருவத்தில் திருவரங்கனையே மனதில் வரித்தாள், காதல் ததும்பியது. மூழ்கினாள் காதல் வெள்ளத்தில், அவனையே சரணடைந்தாள். எப்போதும் போல தந்தை தொடுத்த மாலைகளை அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து அழகு பார்ப்பாள். பிறகு அவற்றை பழையபடியே கூடையில் வைத்து விடுவாள். இது ஆழ்வாருக்குத் தெரியாது. 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்ற வாய்மொழிக்கேற்ப விஷ்ணுசித்தர் பார்வையில் இந்தக் கோலத்துடன் தென்பட்டு விடவே அவர் மிக விசனித்து அறியாப் பெண் அணிந்த புதிய மாலை நிர்மால்யமாகியதே என பயந்து அவற்றைக் கொண்டு செல்லவில்லை. பகவானும் ஆழ்வாரது ஸ்வப்னத்தில் வந்து அன்று மாலை ஏன் கொண்டு வரவில்லை என்றார், ஆழ்வாரும் நடந்ததைக் கூற, அவரும் தினமும் அவள் சூடுவதால்தானே மாலை மிக நறுமணத்துடன் விளங்குகிறதென அருளினார். விவரம் கண்டறிந்த ஆழ்வார் அது முதல் கோதை சூடிக் கொடுத்த மாலைகளையே எம்பெருமானுக்குச் சார்த்தினார். அவ்வாறு சூடிக் கொடுத்த சுடர்க்கொடி தன் மனத்தே பெருமானை வரித்திருப்பதைக் கூற ஆழ்வாரும் மகிழ்ந்தார், அவளது திருமணக்கோலம் கண்டு மனம் வியாகூலப்பட்டாலும், (இங்கு நாம் ஒரு தந்தையின் கட மையை உணரலாம்) அவளது பிரேமை திருமொழி, திருப்பாவை முதலானவற்றால் பிரகாசித்தது. அங்ஙனம் வியாகூலப்பட்ட ஆழ்வாருக்கு நெடுமால் அவரது கனவில் தோன்றி, நாச்சியாரைத் திருமணக் கோலத்துடன் ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வருமாறு பணித்தார். அதேபோல பகவான் திருவரங்கத்திலிருந்த பரிகாரத்தாருக்கும் ஸ்ரீவில்லி புத்தூர் சென்று ஸ்ரீ ஆண்டாளைத் தக்க மரியாதைகளோடு அழைத்து வருமாறு சொன்னார்.


அவ்வாறே அவர்களும் ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆழ்வாரிடம் பகவானது விருப்பத்தைத் தெரிவிக்கவே அவரும் அளவிலா ஆனந்தமுற்று சர்வாலங்கார பூஷிதையாக ஆண்டாளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். எம்பெருமானின் சந்நிதானத்தை அடைந்ததும் ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கி தண்டைகள் குலுங்க, மணிகள் ஆர்ப்பரிக்க, நவரத்தினங்கள் ஒளிவீச, சீரார் வளையொலிப்ப எம்பெருமானும் நாராயணன் திருவுரு முன்பு சென்று தன் செந்தாமரைக் கைகளைக் கூப்பி, கந்தம் கமழும் குழல் உடைய தன் சென்னியைத் தாழ்த்தி அந்த வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு; புந்தரவல்குல் புனமயிலாம் அன்ன வயல் புதுவை ஆண்டாள் வணங்கி நிற்க, திருமகள் கொழுதனான ஸ்ரீமந் நாராயணன், திருவரங்கத்தான் வேயர் பயந்த ஸ்ரீ ஆண்டாளைத் தம்முடன் ஐக்கியப் படுத்தி, வாரணமாயிரத்தை உண்மையாக்கி, ''பகவானிடத்தில் அன்பைச் செலுத்தி அவன் அன்பைப் பெறு' என்ற கூற்றை உண்மையாக்கினார். ஆழ்வாரும் மற்றவர்களும் பேராச்சர்யமுற்று நிற்க அவர்களுக்கு பகவான் திருக்காட்சி தந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வடபத்ரசாயி சயனித்த வட பெருங்கோயிலுக்குச் சென்று தொடர்ந்து பணிவிடை புரிந்து வருமாறு அவரை அனுப்பி வைத்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து பருவமடைந்து, மானிடவர்க்கென்று பேச்சுப்படிலும் வாழமாட்டேன் என்று நாரணநம்பியைக் கைப்பிடிக்க வேணும் என்று ஆசார்யர்களாம் குயில்களைத் தூதனுப்பி, பரமபுருஷனான ஸ்ரீமந் நாராயணனையே அடைந்தபடியாலும், அவனைத் தான் ஆண்டு அனுபவித்தபடியாலும் அவள் “ஆண்டாள்” எனப் பெயர் பெற்றாள். ஸ்ரீ பாகவதத்தில் வ்யாஸர் கூறியபடி, “ஸ்வய்ம் ஸமுத்தீர்ய ஸுதுஸ்தரம் த்யுமந்பவார்ணவம் பீம மதப்ரஸௌஹ்ருதா: பவத் பதாம் போருஹ நாவமத்ர தேதி தாய யாதா: ஸதநுக்ரஹோ பவாந்" என்றருளியபடி பரமனே! பக்தர்கள் உன் பாத கமலங்களாம் தோணியைப் பற்றி ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து, அத் தோணியை இங்கு வைத்துப் போனார்கள். அதாவது பக்தி என்ற மார்கத்தை உபதேசித்தனர். அவற்றில் திருப்பாவை என்னும் பிரபந்த ரத்னமானது வேதத்தின் வித்தாக அமைந்து, உலகோர் உய்ய வழியாயிற்று. மற்ற ஆழ்வார்கள் பெண் பாவத்தில் எம் பெருமானை அனுபவித்தனர். இவள் பெண்ணாகவே இருந்து பேசின படியால் இவள் ஸ்ரீ ஸுக்திகள் இயற்கையாகவே அமையப் பெற்றன என உயர்ந்தன.


உண்மையில் ஸ்ரீ ஆண்டாள் தன்னை கோபிகையாக்கி மற்றவரையும் கோபிகா கன்னிகைகளாக்கித் தன் ஊரை ஆயர்பாடியாக்கி, ஸ்ரீ வடபத்ரசாயியைக் கண்ணனாக்கித் தங்கள் பெற்றோரின் அனுமதியுடன் நோன்பு நோற்றுக் கண்ணனை அடைந்ததுமன்றி மற்றவர்க்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கி பக்தி ஸாரம் என்பது ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்ட ஒரு வழி என விளக்கினாள், 


“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்” 


என்ற குறளையும் மெய்ப்பித்தாள். 


நூற் பொருள்:


செல்வங்களில் பக்திச் செல்வமே மிகச் சிறந்தது என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ள முதல் பாடல் “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்......எம்பாவாய்” என்பது. இதில் பகவானாகிய தடாகத்தில், உலகமாயையாகிய செல்வங்களனைத்தும் நிலையற்றதை உணர்ந்து ஆபரணமாகிய சாந்தி போன்ற நற்குணங்களைப் பெற பகவதனுபவமாகிய வெள்ளத்தில் நீராடி பரமாத்ம ஸ்வரூபத்தை அடைய வேண்டியதின் அவச்யம் உணர்த்தப்பட்டு உள்ளது. அதற்குரிய பலத்தை இறைவனே அருளுவான் என்பதாகும்.


அடுத்த பாடலில் நோன்பும் அதன் அவசியத்தையும் கூறுகையில்,


“பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி 
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; 
செய்யாதென செய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; 
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி 
உய்யுமாறெண்ணி உலகேலோர் எம்பாவாய்” 


என்கிறாள். இதில் எப்படி நாம் நோன்பு நோற்க வேண்டும் எனத் தெரிகிறது. பரமனது அடிபாடி, நீராடி, ஐயம், பிச்சை , ஆந்தனை கைகாட்டி, உகந்து ஆகிய செயல்களைச் செய்தும் நெய், பால் உண்ணாது மலர், மை அணியாது தீக்குறள் ஓதாது கூடாதவற்றைக் செய்யாது நோன்பு நோற்றால், அவன் தாளைச் சரணடைந்து பர ஸமர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது.


மற்ற பாடல்களில் அவனைப் பாடிப் பரவுவதால் பல இன்பங்களும், தீயவையும் தீயினுள் தூசாவதுபோல நீங்கும் என்பதைத் தெரிவிக்கிறாள், அதாவது ஆசார்யனை முன்னிட்டு இறைவனைச் சரணடைந்தால் மழைபோல நமக்கு ப்ரஹ்மஜ் ஞானம் உண்டாகும். (3-5)


ஆறாவது பாசுரத்தில் வலிவுடைய சிறகான ஞான கர்மத்தை உடைய ஆசார்யராகிய பறவைகள் ஹரிநாம முழக்கம் செய்தும் அது காதில் விழாதுறங்கும் அஞ்ஞானத்தில் உள்ள தோழியை ஞானம் பெற எழுப்பும் தோழி நமக்கும் நம் கடமையைக் கூறுகிறாள், ஏழாம் பாசுரத்திலும் எட்டாம் பாசுரத்திலும் பரப்ரஹமருத்ராதிகளையும் படைத்த பகவானிடம் அன்பைச் செலுத்தினால் அவன் நமக்கு அருளுவான் என்று கூறி அவர்களை எழுப்புகின்றனர், அடுத்த பாசுரமாகிய, “தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய.......எம்பாவாய்” என்பதில் ஜ்ஞானானுஷ்டான வைராக்யங்கள் மூன்றும் நிரம்பிய ஆசார்ய ச்ரேஷ்டனே ஆச்ரயிக்கத்தக்கவன் என்பது விளங்கும். ஸ்ரீமத் கீதையில் கூறிய படி “அபிசேத் ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக், ஸாது ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:” என்கிற ஸ்லோகத்தில் எவனொருவன் எத்தனை பாபாத்மாவானாலும் இறைவனை அடையவும் ஞானம் பெறவும் அவனே உபாயம் என்ற ஞானம் அடைந்தால் அவனே இறைவனுக்குப் பிரியமானவர் என்றும் அவனை ஆச்ரயித்து பகவத் கடாக்ஷத்திற்கு பாத்திரராக வேண்டும் என்று கூறி அஞ்ஞானத் தூக்கத்தை நீக்குமாறு கூறி எழுப்புகின்றனர் தோழிகள். அது அடுத்த பாசுரமாகிய “நோற்றுச் சுவர்க் கம்.......எம்பாவாய்” யிலும் “கற்றுக் கறவை......எம்பாவா” யிலும் விளக்கப்படுகிறது. அவ்வாறே அனைவரையும் எழுப்பிப் பின் 16-ம் பாசுரத்தில் அஹங்கார மமகாரங்களை நீக்க உதவ பகவானை வேண்டி மந்த்ரம், தேவதை, ஆசார்யரிடம் பக்தி செலுத்தி, பின்பு வரும் பாசுரங்களில் முறையே நந்தகோபாலன், யசோதை, பலதேவன் ஆகியோரை எழுப்பிப் பின் பதினெட்டாம் பாசுரமான "உந்துமதகளிற்றான்'' என்பதில் பிராட்டியை புருஷகாரமாகப் பற்றிப் பகவானை சரணமடைய வேண்டியதைக் கூறினாள், பின்பு வரும் 19, 20-ம் பாசுரத்தில் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் தானே அந்தர்யாமியாய் இருந்து, தன் பக்தர்களான பரமைகாந்திகள் செலுத்தும் யஜ்ஞ ஹவிஸ் என்ற கப்பத்தை ''அஹம் ஹி ஸர்வ யஜ்ஞா நாம் போக்தா ச ப்ரபு ரேவச" என்று ஸாதித்த முறையில் தேவர்களுக்குத் தவிர்க்க கூடியவனும், ஸம்ஸார ஸாகரத்தை நீக்கும் பரமனே! நீ துயிலெழந்து எமக்கு
அனுக்ரஹித்து எமது அஹங்கார மமகாரத்தை நீக்கியருள வேண்டும் என்று வேண்டுகின்றனர்.


இதர விஷயங்களிலுள்ள பற்றை விட்டு பகவானைப் பற்றவேண்டுவதை பாசுரம் 22-ல் கூறுகின்றனர். மேலும் மற்ற பாசுரங்களில் கோபிகைகள் தாங்கள் தேவரீரைப் புகழ்ந்து பாடி வந்தோம் ஆதலால் எமக்கு ஆத்மாநந்தத்தை அனுபவிக்கும்படி ஆராய்ந்து அருள வேண்டுமென்றனர், பிறகு 27, 28 ஆகிய பாசுரங்களில் அடியார்கள் தமக்கு கர்மஞ்ஞான பக்திகள் இயற்கையாய் இல்லாதது முன்னிட்டு பகவானை அடியார்கள் அனைவரும் கூடியிருந்து சரணடைந்து அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி மற்ற விஷயங்களான காமத்தை நீக்கியருளும் படி பிரார்த்தித்தார்கள்.


30-வது பாசுரமாம் வங்கக் கடலில் ஆசார்யரை முன்னிட்டு வருபவரை ஸ்ரீதேவியும் அவள் வல்லபனான நாராயணனும் அளவிலா செல்வம் கொடுத்து இன்புறச் செய்வர் என்றனர்.


இவ்வாறு திருப்பாவை ஈந்த திருப்பாவையைப் போற்றி நாம் வணங்குவோம். இவள் மேலும் திருமொழியில் வாரணமாயிரமாகிய பாயிரத்தையும் நம் தாய் திருநாட்டிற்குத் தந்தாள். 


“அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப் 
பன்னு திருப்பாவைப் பல்பதியம் இன்னிசையால் 
பாடிக்கொடுத்தாள் நுற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாகாச் சொல்லு”


மாதவர் மகிழ்ந்த மாதவனை, பாவை பரவிய பரந்தாமனை, நங்கையர் நவிலும் நாரணனை, வையத்தார் வணங்கும் வைகுந்தனை உத்தமர் உன்னும் உத்தமனை மங்கையர் மயங்கும் மாதவனை நாடி அவன் நாமம் பாடி நாமும் நலமே நாடிடுவோம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.


நன்றி - சப்தகிரி டிசம்பர் 1982

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை