மயக்கும் தமிழ் - 41 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

கண்ணன் என் கண்ணில் உளானே!

நம்பியை, தென்குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திருமூர்த்தியை
உம்பர் வானவர் ஆதிஅம் சோதியை
எம்பிரானை, என் சொல்லி மறப்பனோ?

திருவாய்மொழி

தேன் சொட்டும் அற்புத அருளும் பொருளும் நிறைந்த பாசுரம் இது! இந்தப் பாசுரத்தை படைத்த பெருமான் என்ன சாதாரணமானவரா என்ன? ஆழ்வார்களின்  தலைமகன் ஆயிற்றே! ஒருவர் நமக்கு மிகச் சாதாரணமான உதவியைச் செய்தாலே வாழ்நாள் முழுவதும் நாம் அதை மறக்க முடியாமல் அடிக்கடி சொல்லிக்  கொண்டே இருப்போம் இது மனித இயல்பு. எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத நேரத்தில் அற்றவர்க்கு அருமருந்தாக அமையப் பெற்ற உதவியாக அந்த நிகழ்வு  அமைந்திருக்கும். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்காக வீடு கட்டும் போது, மருத்துவ உதவியாக எது மாதிரியாக இருந்தாலும் தக்க சமயத்தில் நமக்கு அமைகிற  உதவியை நம்மால் எப்படி மறக்க முடியும்?


வாழ்க்கையில் சில சமயங்களில் செய்யப்படுகிற இம்மாதிரி செயல்பாடுகளையே மறக்க முடியாத போது இந்த அற்புத வாழ்க்கையை நீதானே எனக்கு  அருளினாய். உன்னை மறந்து விட்டு என்னால் எப்படி இருக்க முடியும்! இப்படிப்பட்ட அற்புதமான ஆனந்தமான ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்த  உன்னை, அதாவது திருக்குறுங்குடியில் நின்று நித்தமும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அந்த நம்பியை நம்பி படைக்கப்பட்ட பாசுரம்தான் இந்தப் பாசுரம்.  இதைவிட தன் உள்ளத்துள் நின்று உயிரோட்டமாக விளங்குகின்ற உணர்வுகளை வேறெப்படி தெரிவிக்க முடியும்?ஆதிஅம் சோதியை, எம்பிரானை என் சொல்லி மறப்பனோ?

ஒருவர் கண்கள் பனிக்க எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால், அதை அப்படியே வார்த்தைகளால் எப்படி வடித்தெடுக்க முடியும்? மாறாத இறை  சிந்தனையும் இறைவனின் பேரருளும் கிடைக்கப் பெற்ற ஒருவரால்தான் இப்படியெல்லாம் முதலில் சிந்திக்கவே முடியும்! அப்படிச் சிந்தித்தவர்தான்  ஞானத்தந்தையாக விளங்குகிற நம்மாழ்வார். அப்படி என்ன சொல்ல வருகிறார் இந்தப் பாசுரத்தில் என்கிறீர்களா?‘‘அந்தர பரிபூரணன் ஆகிய எம்பெருமான்  திருக்குறுங்குடி என்னும் அழகிய திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ளான். அவள் எப்படிப்பட்டவன் தெரியுமா?செம்பொன்னான திருமேனியை உடையவன்.  அதனால்தான் செம்பொனே திகழும் திருமூர்த்தியை என்ற அருளமுதம் நிறைந்த சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். பரமபதத்தில் உள்ள நித்யசூரிகளுக்குத்  தலைவன். ஆதியும் அழகிய ஜோதியாக இருப்பவன்! ஜோதி என்றால் வெளிச்சம், எப்படிப்பட்ட வெளிச்சம் தெரியுமா?

பக்தர்களின் மன இருளைப் போக்குகிற பேராற்றல் வாய்க்கப்பெற்ற வெளிச்சம் அது! எனக்கு எப்பொழுதும் சதாசர்வ காலமும் உதவி செய்து கொண்டே  இருப்பவன். அவன் உதவி எப்படிப்பட்டது தெரியுமா? வற்றாத ஜீவநதியைப் போன்றது. பெருங்கருணை வாய்க்கப்பெற்ற பேரருளாளன் ஆயிற்றே.  அப்படிப்பட்டவனை மறந்து என்னால் எப்படி உயிர் வாழ முடியும்? அதனால்தான், எம்பிரானை, என் சொல்லி மறப்பனோ?’’ என்று நெக்குருகுகிறார், நம்மாழ்வார். 

இந்தப் பாசுரத்திற்கு வேறொரு கோணத்திலும் கருத்துரை தெரிவித்திருக்கிறார்கள், வைணவப் பேராசான்கள். அவனை அபூர்ணன். அதாவது நிறைவு இல்லாதவன்  என்று என்னால் மறக்க முடியுமா? நம்மை விட்டு நீண்ட நெடிய தூரத்தில் உள்ளவன் என்றும், மேன்மை தரவில்லை என்பதற்காக எப்படி நான் மறக்க முடியும்?நம்மாழ்வார் திருக்குறுங்குடி எம்பெருமான் மீது வைத்திருந்த திடபக்தியைத்தான் இந்தப் பாசுரம் நமக்குத் தெரியப்படுத்துகிறது!

நன்றி தெரிவிப்பதின் உச்சபட்சமாக இதைக் கருதலாம். செய்நன்றி அளித்தலுக்கு இதை விட வேறு ஒரு எடுத்துக்காட்டை நம்மால் எப்படி சுட்டிக் காட்ட முடியும்!நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதத்திற்கு ஒப்பாக கருதி போற்றக்கூடியது இந்த வைணவப் பேருலகம்! இறைவன் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத,  பிரதிபலனையும் எதிர்பார்க்காத தூய பக்திதான் சாலச் சிறந்தது. இறைவன் நமக்குச் செய்கிற பேருபகாரங்களை நம்மால் பல சமயங்களில் அறிந்து கொள்ளக்கூட  முடியாது. அந்த ஆற்றலும் கூட சமயத்தில் நமக்கு இல்லாது போகும். எதனால் இப்படி நடக்கிறது? இது என்ன முன்வினைப் பயனா? அல்லது பரம்பரை பரம்பரையாக வரும் புண்ணியத்தின் தொடர்ச்சியா? எப்படி அறிய முடியும்? நம்மாழ்வாரின் மயக்கும் தமிழில் மற்றொரு பாசுரத்தையும் பார்ப்போம்!

ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே

தன் நெஞ்சம் கருணைக் கடலாக இருப்பதை பல பாசுரங்களில் கொண்டாடி மகிழ்ந்த ஆழ்வார், அந்தக் கருணைக்குக் காரணமே இந்தப் பரம்பொருளான காரூண்ய  சீலன்தானே என்கிறார். உயிர்த் துடிப்புள்ள ஓர் வார்த்தைப் பிரயோகம்! அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே! என்கிறார். அடியேன் என்ற வார்த்தையே பணிவின் உச்சமாக கருதப்படுகிறது! தன்னை உய்வித்து உயிர்வித்து உற்சாகத்தோடு இருக்க வைப்பவன் சாட்சாத் அந்த சர்வேஸ்வரன் தான் என்பதை இந்தப்  பாசுரத்தில் பதிவு செய்கிறார்! உனக்கு இணையானவர்களும் யாரும் கிடையாது; உன்னை விட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. இப்படிப்பட்ட ஆச்சர்யமான  குணங்களையும், செயல்பாடுகளையும் உடையவன் நீ! என்னுடைய உயிருக்கு உயிரானவன் நீதான்! அதுமட்டுமா நீதான் எனக்கு தாயும் தந்தையும் ஆனாய்!இவ்வளவு நன்மை செய்தான் என்று பரம்பொருளைப் பற்றி பட்டியல் இடவா முடியும்.

காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவன் இந்தக் காரூண்யமூர்த்தி அத்தா என்று பேசுகிறார். அத்தா என்பது அன்பின் பிழிவு, அதையேதான் இங்கே  பிரதிபலிக்கிறார் ஆழ்வார்! அடியேன் அறியேனே என்பது சாதாரண வார்த்தைப் பிரயோகம் என்று நாம் நினைத்து விடக்கூடாது. திருவாய்மொழி முழுவதும் இப்படி  முத்தும் நவரத்தினமுமாக வார்த்தைகள் இறைந்து கிடக்கின்றது.

‘‘கண்ணன் என் கண்ணில் உளானே’’
‘‘மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே’’
‘‘எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே’’
‘‘ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே’’
‘‘ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே’’

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நம்மாழ்வாரின் அளவற்ற பக்திக்கு அளவேது! ஆண்டவனின் பேரருள் பெருங் கருணைக்கு எல்லையேது!

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை