மயக்கும் தமிழ் - 42 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

தீவினை தவிர் அறவழி பயில்!

யானும் நீ தானே ஆவதோ மெய்யே,
அருநரகு அவையும் நீ; ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில்என்? மற்றை
நரகமே எய்தில் என்? எனினும்
யானும் நீ  தானாய்த் தெளிதோறும் நன்றும்
அஞ்சுவன் நரகம் நான் அடைதல்;
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்!
அருளு நின் தாள்களை எனக்கே!

திருவாய்மொழி!

வேதத்திற்கு ஒப்பான நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் இது! பிரபஞ்ச ரகசியத்தில் உனக்குத் தெரியாதது எது? உன்னிடமிருந்து நான் எதை மறைக்க முடியும்? உன்னை விட்டால் எனக்கு நாதி ஏது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை இறைவன் முன் வைக்கிறார், ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார்.

எம்பெருமானே! எல்லாப் பொருட்களும் நீயாகவே இருக்கிறாய். அதாவது, நாங்கள் எல்லோருமே உனக்குள் அடக்கம் என்கிற பேருண்மை எனக்குத் தெரியாமல் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கொடிய நரக உலகத்தைப் படைத்தவனும் நீதான். வைகுந்தத்தைப் படைத்ததும் நீதான். வான் உயர் இன்பம் எய்தில் என்? மற்றை நரகமே எய்தில் என்? என்று இந்தக் கருத்தை முன் வைத்தே பேசுகிறார் நம்மாழ்வார். சம்சார சாகரத்தில் உழல்கிற எனக்கு விடுதலையே இல்லை. விருப்பு வெறுப்பு நிறைந்த இந்த உலக வாழ்க்கை வேண்டாம், உன் பெருங்கருணை எனக்கு வேண்டும்.

அதைத்தான் அருளு நின் தாள்களை எனக்கே என்று பரமாத்மாவான அந்த பேரருளும், பெரும் ஞானமும் பெற்ற இறைவனிடம் தன் மன உணர்வுகளை விண்ணப்பமாக முன் வைக்கிறார். இறைவன் எங்கிருக்கிறான் தெரியுமா? வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் பரமபதத்திலே உயர்ந்த இன்பத்திலே நிலைபெற்று வீற்றிருப்பவனே என்னையும் அங்கே அழைத்துக் கொண்டு உனக்கு நித்யமும் அதாவது, அனுதினமும் சேவை செய்ய வேண்டும், எனக்கு அதற்கு நீதான் அருள் செய்ய வேண்டும் என்கிறார். பெருங்கருணைக்கும் பேரன்பிற்கும் உடையவனான இறைவனிடம் மன்றாடுகிறார். நிலையில்லாத இந்த வாழ்க்கையில் கிடைக்கும் எல்லாமுமே நீர்க்குமிழிபோல் சற்று நேரத்தில் மறைந்து விடும். அதனால் எப்பொழுதும் சுகமான ஆனந்தமயமாக இருப்பவனான உன்னிடம் நான் வந்தடையும் நாள்தான் எனக்கு இனிப்பான தித்திப்பான திருநாள் என்று புளகாங்கிதம் அடைகிறார்.

திருவாய்மொழிப் பாசுரம் முழுவதும் ஒருவித ஞானத்தேடல்தான். தேடித்தேடி சிந்தனை செய்து செய்து அவனை அடையும் உபாயத்தை கையிலெடுக்கிறார், ஆழ்வார்! ஒருவன் தன்னைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால்தான் மற்ற விஷயங்களை ஒருவித கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். தன்னையே தன்னுடைய எண்ண ஓட்டங்களுக்கு மாற்றாக அமைத்துக் கொள்கிறவனால் பெரிதாக என்ன சாதித்து விட முடியும்? என்ற கேள்வியை பொதுவெளியில் முன் வைக்கிறார்.

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அறமுயல் ஆழிப்படையவன் கோயில்
மறுவில் வண்சுனை சூழ் மாலருஞ் சோலை
புறமலை சாரப் போவதுகிறியே!

திருவாய்மொழி!

மனமே! உடலில் வலிமை மிகுதியாக இருக்கிறது என்று ஆணவம் கொண்டு தீமையைத் தரும் செயல்களை மேலும் மேலும் செய்யாதே! தன் மனதிற்கு எச்சரிக்கை விடுகிறார். கடவுள் போடுகிற தாயக்கட்டத்தில் எந்தக் காய் எப்படி எந்த ஆட்டத்தில் விழும் என்று யார்தான் கணிக்க முடியும்! காலச் சக்கரத்தை கையில் ஏந்தி ராஜ பரிபாலனம் செய்கிறவன், அவனுடைய ராஜதர்பாரில் பள்ளம் மேடு ஆவதும், மேடுகள் பள்ளம் ஆவதும் சகஜம்! அவன் நினைத்தால்தான் எதுவும் நடக்கும், அதனால் அடக்கத்தோடு இருக்க வேண்டும். ஆணவம் பிடித்து அலையக்கூடாது என்று தன் நெஞ்சுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார்! 

அதனால்தான் திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது என்ற வார்த்தைப் பிரயோகத்தை கையாள்கிறார். 

ஏற்கனவே, செய்த பாவத்தால் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகிறோம். மீண்டும் மீண்டும் பாவ மூட்டையை அதிகப்படுத்துவதால் சுமைதான் கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை. சுமை குறைய என்ன செய்ய வேண்டுமாம், திருமாலிருஞ்சோலை மலையில் இருந்து கொண்டு அருள் செய்கிற அந்த இறைவனை சிக்கெனப் பிடித்துக் கொள். அதுதான் உய்ய ஒரே வழி என்று நோய்க்கு மருந்து கொடுப்பதுபோல் நம் புண்ணியத்திற்கான வாயிலுக்கு வழிகாட்டுகிறார், நம்மாழ்வார்! இறைவன் மீதும், இறைப்பற்று மீதும் நம்மாழ்வாருக்குத்தான் எவ்வளவு பிடிப்பு! அத்தனையும் அவரின் உயிர்த்துடிப்பு! அதையெல்லாம் அப்படியே முத்து முத்தான வார்த்தைகளாக வடித்தெடுத்திருக்கிறார்.

யானே என்னை அறியகிலாதே
யானே என்றனதே என்றிருந்தேன்
யானே நீ; என் உடைமையும் நீயே!
வானே ஏத்துமெம் வானவரேறே!

திருவாய்மொழி

வானவர்கள் ஏத்திப் போற்றி செய்யும் நித்திய சூரிகளின் தலைவராக விளங்குபவரே! நான் யார்? என் உள்ளம் யார்? என்பது எனக்கே இன்னும் தெரியவில்லை. அறியாமை இருளில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சு. துன்ப இருளும் துயர இருட்டும் என்னை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கின்றன. அதிலிருந்து நான் விடுபட வேண்டுமானால் உன் பார்வை என்மீது பட வேண்டும். உன்னையும் என்னையும் என்னால் தனித்துப் பார்க்க முடியவில்லை. யானே நீ; என் உடைமையும் நீயே! என்ற அழகான அர்த்தமுள்ள வார்த்தைகளின் மூலம் நம்மாழ்வார் எத்துணை பற்றை பரம்பொருள் மீது வைத்திருந்தார் என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க முடிகிறது. நம்மாழ்வார் காட்டிய வழியில் பயணம் செய்தால் வாழ்வு இனிக்கும்!

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை