ஞாயிறு, 8 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 43 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

ஓடோடி வரும் சர்வசுலபன் அவன்!

காலம் காலமாக கோயிலுக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறேன். அவன் ஏனோ கண்ணை மூடியபடியே இருக்கிறான். என்ன செய்வது? என்று பல  அடியவர்களும் ஏக்கப் பெருமூச்சு விடுவதை நாம் நித்தம் நித்தம், அதாவது தினம் தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்! தனது ஆசைகள் உடனே செயல்  வடிவம் பெறவில்லை என்றால் இயலாமையை தங்களுடைய அங்கலாய்ப்பாய் வெளிப்படுத்துகிறோம். ஆனால், ஒன்று தெரியுமா? கடவுள் விருப்புவெறுப்புக்கு  அப்பாற்பட்டவன்! அவனுக்கு இன்னார் இனியார் என்று தனித்தனி பட்டியல் கிடையாது. பேரண்ட பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் தலைவனாக முடிசூடாத  சக்கரவர்த்தியாக இருக்கிறவனிடத்தில் எந்த பேதமும் களங்கமும் கிடையாது! நம்மாழ்வார் நம்மை வியக்க வைக்கிறார். கூடவே ஒருவித திகைப்பும் ஏற்படுகிறது.  அவரின் இந்தப் பாசுரத்தைப் படித்து அனுபவிக்கும்போது. இதோ அந்த அற்புதப் பாசுரம்...


கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே     என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத்து ஈசன் வந்தேறக் கொலோ?

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் என்று தொடங்குகிற பாசுரத்தில் ஏறக்குறைய வரிகள் எல்லாம் ஒன்றுபோல இருக்கும். ஆனால், பாசுரத்தின்  அர்த்தங்கள் ஒவ்வொரு பார்வையை, தனித்தன்மை உடையதாக இருக்கிறது. கடவுளால் படைக்கப் பெற்றும், காக்கப் பெற்றும், அழிக்கப் பெற்றும் கரைந்து  மீண்டும் புதுமையாக்கப் பெற்றும் அவனது எல்லையில்லா லீலை என்னும் விளையாட்டில் நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் எப்போதும் மாறியபடி, மறைந்தபடி  பலவகையிலும் மறுபிறப்பு எடுப்பதெல்லாம் அந்த ஆண்டவனின் வடிவமே! அவனது திருஉடலேயாகும்! எல்லாம் அவனது விஸ்வரூபமேயாகும். அவனது  எல்லையற்ற சக்திக்கு முன்னே யார்தான் என்ன செய்ய முடியும்? அவன் எல்லாவற்றிலும் மறைந்தும், மறையாமலும் அந்தர்யாமியாக  உள்ளான்.  துளிச்சொட்டு  நீரிலும், காட்டுவழிப் பாதையில் மலர்ந்திருக்கும் மலரிலும் அவன் வியாபித்திருக்கிறான். நம்மாழ்வாருக்கு அந்த பரந்தாமன் மீதுதான் எத்துணை அளவற்ற பேரவா!  அதனால்தான் தன் எண்ண ஓட்டத்தை வலிமைமிக்க வார்த்தைகளில் நமக்குத் தருவதில் ஒருவித அலாதி ஈடுபாடு காட்டியுள்ளார்.

‘‘பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்னும் 
எல்லாம் பிரான் உருவே
மாசூணாச் சுடர் உடம்பாய்...

எல்லாமும் அவனே! அவனே சர்வமும் என்பதைத்தான் ‘‘எல்லாம் பிரான் உருவே’’ என்று முடிந்த முடிவாய் தன்னுடைய ஆழ்மனதின் கருத்தை உணர்ந்து  அனுபவித்து நமக்கு படைத்துள்ளார்! என்னிடம் ஒன்றும் இல்லை, எல்லாம் அவனே என்பதை போகிற போக்கில் ஏனோ தானோ என்று சொல்லாமல் அவனை  உணர்ந்து உள்வாங்கிக் கொண்டு அந்தப் பேரின்ப பெருவெள்ளத்தில் நீந்தி நம்மையும் நீந்த வைக்கிறார்.

‘என்னுள் கலந்தவன்’
மாயவன் என்னுள் இரான் எனில்
பின்னை யான் ஓட்டுவேனோ
தானொட்டி வந்து என்
தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என்
உயிரில் கலந்தியல்வான்

நம்மாழ்வார்தான் ஞானத் தந்தையாயிற்றே, அவருடைய பாசுரங்களில் பக்தியோடு, ஒருவித ஞானத்தேடலும் ரயில் தண்டவாளங்களைப் போல பிரிந்தும்  இணைந்தும் காணப்படும்! நம்மாழ்வார் இறைவனை நாயகனாகவும், தலைவனாக மட்டும் பார்க்கவில்லை. தனது தந்தையாகவே பார்க்கிறார் இந்த பாசுரத்தில்...

‘‘யதொனும் ஓர் ஆக்கையில் புக்கு, அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும், முதுஆவியில் தடுமாறும் உயிர், முன்னமே அதனால் யாதானும் பற்றி, நீங்கும்  விரதத்தை நம் வீடு செய்யும் மாதாவினை, பிதுவை திருமாலை வணங்குவனே!’’ பெற்ற தாயினும் ஆயின செய்யும் என்று பெரிய திருமொழியில்  திருமங்கைஆழ்வார் தாயாரை விட அந்த தயாபரன் ஈடு இணையற்றவன் என்று குதுகூலிக்கிறார். ஆனால், இங்கே நம்மாழ்வார் என்னைப் பெற்ற தாய் தந்தையே  நீதான், உன்னை எப்படி நான் மறந்து உயிர் வாழ முடியும்? என்று வினா கொடுத்து கேள்வி கேட்டு அதற்கு தக்க விடையும் சொல்கிறார்!

நெஞ்சுக் கூட்டுக்குள் அபரிமிதமான அன்பு இருந்தால் மட்டுமே இத்தகைய வார்த்தைகள் வந்து விழும்.‘‘மாதாவினை, பிதுவை திருமாலை வணங்குபவனே! தந்தைக்குப் பிது என்கிற வார்த்தைப் பிரயோகம் நம்மாழ்வார்களில் இருந்தது. அதனால்தான் சாதாரணமாக வழக்கத்தில் பேசும்போது மாதா, பிதா, குரு, தெய்வம்  என்று பேசுகிறோம். நம்மாழ்வார் எனக்கு எல்லாமும் அந்த சர்வேஸ்வரன்தான், பரந்தாமனின் பாதச்சுவடுகள்தான் நிரந்தரம் என்பதை கல்வெட்டு எழுத்துக்களைப்  போல் நம் நெஞ்சத்தில் பதிய வைக்கிறார். இதனை நாம் அன்பு, பிரேமை, காதல், பக்தி என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி, ஆழ்வாரின் பாசுரத்தை நாம்  படிக்கத் தொடங்கினால் நாம் ஒருவித புத்துணர்ச்சியை, உத்வேகத்தைப் பெற முடியும். ஆழ்வாரின் அருளிச் செயல்களுக்கு ஈடு இணையற்ற இந்தப் படைப்புக்கு  ஈடு இணை எதுவும் கிடையாது. ஏழை, பணக்காரன், செல்வாக்கு உள்ளவன், இல்லாதவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதமும் அவனிடம் கிடையாது. நாம்  தூய்மையான பக்தியோடு கூப்பிட்டால் ஓடோடி வருவான் ‘சர்வசுலபன்’ அவன்! அந்த ஆண்டவனை நினைத்துக் கதறுகிறார் நம்மாழ்வார்.

‘‘ஆம் முதல்வன் இவன் என்று தன்தேற்றி, என்
நாமுதல் வந்து புகுந்து, நல் இன் கவி
தூ முதல் பக்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?’’

இந்தப் பாசுரத்தில் எனக்கு எல்லாமுமாய் இருக்கிற இறைவனைப் எப்படி மறப்பேன் என்று கண்கலங்குகிறார்! என் வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?


ஒரு பாசுரத்தில் மாதா பிதா என்கிறார். இந்தப் பாசுரத்தில் இன்னும் எளிமைப்படுத்தி அப்பனை எப்படி மறக்க முடியும் என்கிறார். பிரபத்தியை அதாவது  சரணாகதியை இதைவிட யாரால் உயர்த்திச் சொல்ல முடியும். நம்மாழ்வார் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். அதை நாளும் நாம் மகிழ்ந்து  அனுபவிப்போம். நமக்குள் இன்பம் காண்போம்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக