ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 77

மூன்றாவது ஸ்கந்தம் – முப்பத்திரண்டாவது அத்தியாயம்

(புண்யம் செய்பவருக்கும் பரப்ரஹ்மோபாஸகர்களுக்கும் சேரும் கதியைச் சொல்லுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வாராய் மாதாவே! க்ருஹஸ்தாச்ரமத்தில் இருந்துகொண்டு அந்த க்ருஹஸ்தாச்ரமத்திற்கு ஏற்பட்ட தர்மங்களையே முக்யமாக ஆசரிப்பவனாக அந்த ஆச்ரமதர்மங்களையும் அர்த்த காமங்களையும் மேன்மேலும் வளர்த்துக்கொண்டு வருகிறவன் மீளவும் அந்த தர்மங்களையே பாதுகாக்கப் பெறுவான். அங்ஙனம் கேவலக்ருஹஸ்தாச்ரம தர்மங்களையே ஆசரிக்கிறவன் சப்தாதிவிஷயங்களில் மனப்பற்றுடையவனாகி அதனால் மதிமயங்கி பகவானைப் பணிகையாகிற முக்ய தர்மத்தினின்று நழுவி ஸ்ரத்தையுடன் (ப்ரவ்ருத்தி தர்மங்களை அனுஷ்டிக்கும் வரையுடன்) கூடி யாகங்களால் தேவதைகளையும் பித்ருக்களையும் ஆராதிப்பான். அங்ஙனம் பித்ருக்களையும் இந்த்ராதியான ப்ராக்ருத தேவதைகளையும் ஆராதிப்பதில் ச்ரத்தை தலையெடுக்கப் பெற்று அதனால் பகவத் தர்மத்தில் மதிசெல்லப் பெறாதவனாகி அந்தப் பித்ரு தேவதைகளுக்காகவும் இந்த்ராதி தேவதைகளுக்காகவும் விரதங்களை ஆசரித்துக்கொண்டு ஸோமயாகம் செய்த புருஷன் (தூமம் பாத்ரி அபார பக்ஷம் தக்ஷிணாயனம் பித்ருலோகம் ஆகாசம் சந்த்ரன் என்னும் க்ரமத்தில்) சந்திரலோகத்தை அடைந்து மீளவும் (ஆகாசம் வாயு தூமம் மேகம் என்னும் க்ரமத்தில்) இறங்கி பூமிக்கு வந்து சேருவான். இங்ஙனம் க்ருஹஸ்த தர்மங்களை அனுஷ்டித்துச் சந்த்ராதி லோகங்களை அடைபவன் அந்த லோகங்களில் பார்வதமாயிருக்க நேராமல் அங்கிருந்து நழுவி பூலோகத்திற்கு வருவானாயின், அந்தப் புண்யலோகங்களைப் பெறுதற்காக எவன் ப்ரயத்னம் செய்வான்? மற்றும், ஆதிசேஷனை ஆஸனமாகக் கொண்டு வீற்றிற்கும் பகவான் அந்த ஆதிசேஷனாகிற படுக்கையில் சயனித்துக்கொள்ளும்பொழுது கேவல க்ருஹஸ்த தர்மத்தையே ஆசரிப்பார் அடையும்படியான புண்ய லோகங்களெல்லாம் நாசம் அடைகின்றன. புண்யலோகங்கள் கல்பம் முடியும் வரையிலுமே நிலையாயிருக்கும். கல்பாவஸனத்தில் பகவான் உலகங்களையெல்லாம் ஸம்ஹரிக்கும் போது அந்தப் புண்யலோகங்களும் நாசம் அடைகின்றன. கேவல தர்மத்தை அனுஷ்டிக்கிறவர்கள், அக்காலம் வரையிலுங்கூட அவ்வுலகங்களில் நிலைநிற்பவரல்லர். இனிமேல் பரப்ரஹ்மோபாஸனம் செய்பவர்க்கு நேரும் கதியைச்சொல்லுகிறேன் கேட்பாயாக. 


எவர்கள் தீரர்களாகி இந்திரியங்களை வென்று காமத்திற்கும் அர்த்தத்திற்கும் காரணமான வர்ணாச்ரம தர்மங்களையே முக்யமாக அனுஷ்டிக்காமல் அஸத்துக்களோடு ஸஹவாஸமின்றித்தான் செய்யும் கர்மங்களையெல்லாம் பகவானிடத்தில் ஸமர்ப்பித்து சமதமாதி குணங்கள் நிறைந்தவரும் தமக்கு ஏற்பட்ட தர்மங்களை அனுஷ்டிப்பதனால் மனத்தூய்மையுடையவரும் பகவானுடைய குணங்களைக் கேட்பதும் அவற்றைக் கீர்த்தனம் செய்வதுமாகிய நிவ்ருத்தி தர்மத்தில் ஊக்கமுடையவரும் பஞ்சமஹாயஜ்ஞாதி கர்மபலன்களை பகவானிடத்தில் அர்ப்பணம் செய்திருப்பவரும் (ஸாத்விக த்யாகத்தோடு கர்மங்களைச் செய்பவரும்) தமக்கு ஏற்பட்ட தர்மங்களைத் தவறாமல் அனுஷ்டிப்பதனால் ஸத்வம் தலையெடுக்கப் பெற்றவரும் பகவானிடத்தில் பக்தி மாறாமையால் பரிசுத்தமான மனமுடையவரும் அஹங்கார மமகாரங்களற்றவருமாய் இருப்பார்களோ, அவர்கள் ஸுர்ய மண்டலத்தின் வழியாய் அர்ச்சிஸ்ஸு அஹஸ்ஸு சுக்லபக்ஷம் உத்தராயணம் ஸம்வத்ஸரம் வாயு ஸுர்யன் சந்திரன் வித்யுத்து வருணன் இந்திரன் ப்ரஹ்மா என்னும் க்ரமத்தையுடைய அர்ச்சிராதி மார்க்கத்தினால்) பரமபுருஷனைப் பெறுகின்றார்கள். எவன் ஸர்வஜ்ஞனென்று வேதங்களால் ஓதப்படுகிறானோ, எவன் இந்த உலகத்தின் பக்த மோக்ஷங்களுக்குக் காரணமாயிருக்கின்றானோ (இவ்வுலகத்திலுள்ளவர் அனைவர்க்கும் ஸம்ஸாரபந்தமும் அதினின்று விடுபடுதலாகிற மோக்ஷமும் எவனால் உண்டாகின்றனவோ); எவன் உலகத்தில் எல்லோரிலும் மேற்பட்டவனென்று புகழப்பெற்ற ப்ரஹ்மாதிகளும் தனக்குத் தாழ நிற்கும்படி ஸர்வேச்வரனாயிருக்கின்றானோ; எவன் இவ்வுலகத்தினுடைய ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்துகிறானோ; அப்படிப்பட்ட பரமபுருஷனைப் பெறுகின்றார்கள். 

பரமபுருஷனை உபாஸிப்பவர்களான யோகிகள் இரண்டு பரார்த்தங்களோடு முடியும்படியான ப்ரஹ்மாவின் ப்ரளய காலம் வரையில் ப்ரஹ்மலோகத்தில் வாஸஞ் செய்கின்றார்கள். பூமி ஜலம் அக்னி வாயு ஆகாசம் மனது இந்த்ரியங்கள் சப்தாதி விஷயங்கள் தாமஸாஹங்காரம் இவை முதலியவற்றால் சூழப்பட்ட ப்ரஹ்மாண்டத்தை ஸம்ஹரிக்க விரும்பி ஸ்தூல தசையை அடைந்த சேதனா சேதனங்கள் அடங்கின ஜகத்தைச் சரீரமாகவுடைய பகவான் நாமரூபங்களுக்கு இடமல்லாமல் ஸூக்ஷ்மாவஸ்தையை அடைந்த சேதனா சேதனங்களைச் சரீரமாகவுடைத்தாயிருக்கும் தசையை எப்பொழுது அடைகின்றானோ, அப்பொழுது ப்ரஹ்மதேவன் இரண்டு பரார்த்தங்கள் அடங்கின தனது வாழ்நாளை அனுபவித்து அந்தப் பரமபுருஷனை அடைகின்றான். அங்ஙனமே, தத்தமது புண்யகர்மங்களால் ப்ரஹ்மலோகத்தை அடைந்த யோகிகள் எவரெவர் உண்டோ, அவர்களும் ப்ராணன்கள் இந்திரியங்கள் இவற்றை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டு தமக்கு ப்ராப்யமான (அடையத் தகுந்ததாகிய) பரப்ரஹ்மத்தைத் தவிர மற்ற அணிமாதி அஷ்டைச்வர்யங்களில் விருப்பமற்று தேஹத்தையே ஆத்மாவென்று நினைக்கையாகிற தேஹாத்மாபிமானமும் தம்மைத் தாம் ஸ்வதந்த்ரர்கௌன்று நினைக்கையாகிற ஸ்வதந்த்ராத்மாபிமானமும் தொலையப்பெற்று அந்த ப்ரஹ்மதேவனோடு கூடவே பரமபுருஷனைப் பெறுவார்கள். அவன் எல்லோரிலும் மேற்பட்டவனும் ஸ்வரூபத்தாலும் குணங்களாலும் மிகுந்த பெருமையுடையவனும் புராண புருஷனுமாயிருப்பவன். இப்படிப்பட்ட பரமபுருஷனை உபாஸிப்பவர் அவனுடைய ஸ்தானமாகிய பரமபதத்திற்கே நேரில் போய்ச் சேரவேண்டுமன்றி ப்ரஹ்மலோகத்திற்குப் போய் அங்கு ப்ரளயம் வரைலிருந்து அந்த ப்ரஹ்மாவுடன் பரமபுருஷனைப் பெறுவதற்குக் காரணமென்னெனில், சொல்லுகிறேன் கேட்பாயாக, இங்கு பகவானை உபாஸிக்கத் தொடங்கினவர் அந்த உபாஸனம் நிறைவேறுதற்கு முன்னமே இடையில் மரணம் அடைவார்களாயின், அவர்கள் பகவானை உபாஸிக்கத் தொடங்கின மஹிமையால் ப்ரஹ்மலோகம் போய்ச் சேர்ந்து அங்கு ப்ரஹ்மோபாஸனம் நிறைவேறப்பெற்று ப்ரளயம் வரையில் அங்கேயே இருந்து ப்ரஹ்மதேவனுடன் பரமபதம்போய்ச் சேருவார்கள். இங்கு பக்தியோகம் நிறைவேறப் பெற்றவர் காலவிளம்பமில்லாமல் அர்ச்சிராதி மார்க்கத்தினால் பகவானை அடைகின்றார்கள். வாராய் மடந்தையர் மணியே! ஆகையால் ஸமஸ்த பூதங்களின் ஹ்ருதய கமலத்திலும் வாஸஞ்செய்பவனாகிய அந்த பகவானையே நீயும் ஸர்வப்ரகாரத்தாலும் சரணம் அடைவாயாக. அவனுடைய ப்ரபாவங்களையெல்லாம் நான் சொல்லக் கேட்டாயல்லவா? அத்தகைய வைபவங்களையுடைய அந்தப் புருஷனை “இவனே நமக்கு மாதாவும் பிதாவும் ப்ராதாவும் புத்ரனும் நண்பனும் ரக்ஷகனும்” என்று நினைத்துச் சரணம் அடைவாயாக, ப்ரஹ்மலோகவாஸிகளும், தேஹாத்மாபிமானமும் ஸ்வதந்த்ராத்மாபிமானமும் தொலையப் பெறுவார்களாயின், அப்பொழுதே அவர்கள் பகவானைப் பெறுவார்கள். இவ்வுலகத்திலுள்ளவர் ஏதேனுமொரு புண்ய விசேஷத்தினால் ப்ரஹ்மலோகம் போய்ச் சேர்ந்து பலன்களை விரும்பாமல் கர்மத்தை அனுஷ்டித்துக் கொண்டிருப்பினும் தேஹாத்மாபிமானம் முதலியவை மாறாதிருப் பார்களாயின், அவர்கள் மீளவும் ஸம்ஸாரத்தில் வந்து விழுவார்களேயன்றிப் பரமபுருஷனைப் பெறமாட்டார்கள். மற்ற தேஹாத்மாபிமானிகள் ஸம்ஸாரம் நீங்கப்பெற மாட்டார்களென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? ஸ்தாவர ஜங்கமங்கள் அடங்கின ஜகத்தையெல்லாம் படைக்கின்றவனும் வேதங்களையெல்லாம் ஓதியுணர்ந்தவனுமாகிய ப்ரஹ்மதேவனும் மரீசி முதலிய மஹர்ஷிகளும் யோகேஸ்வரர்களான ஸனத்குமாராதிகளும் யோகப்ரவர்த்தகர்களான மற்றுமுள்ள ஸித்தர்களும் பலன்களில் விருப்பமின்றிக் கர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டிருப்பார்களாயினும், நாம் பரப்ரஹ்மத்திற்கு உட்படாமல் ஸ்வதந்த்ரமாயிருப்பவரென்கிற ஸ்வதந்த்ராத்மாபிமானமும் தேஹமே ஆத்மாவென்கிற தேஹாத்மாபிமானமும் மாறாதிருப்பார்களாயின் ஸூக்ஷ்ம சேதனா சேதனங்களைச் சரீரமாகவுடைய பரப்ரஹ்மத்தினிடத்தில் மறைந்திருப்பார்களன்றிப் பரமபதம் சென்று அங்குப் பரமபுருஷனை அனுபவிக்கையாகிற மோக்ஷத்தைப் பெறமாட்டார்கள். அந்த ப்ரஹ்மதேவன் ஸூக்ஷ்ம சேதனா சேதனங்களோடு கூடின பரமபுருஷனிடத்தில் மறைந்திருந்து அந்தப் பரமபுருஷன் மீளவும் உலகங்களைப் படைக்க வேண்டுமென்று ஸங்கல்பிக்கும் பொழுது ஈஸ்வர ஸ்வரூபமாகிய காலத்தினால் ஸத்வ ரஜஸ் தமோகுணங்களுக்கு வைஷ்டியம் உண்டாகையில் முன்போலவே பிறக்கின்றான். ப்ரஹ்மாவாயிருக்கையாகிய மேன்மையும் புண்ய கர்மங்களால் விளையக்கூடியதாகையால் கர்மாதீனமாய் வருவதே. அதை அனுபவித்த பின்பு பரமபுருஷனிடத்தில் மற்றை உலகங்களைப்போல் தானும் லயத்தை அடைந்து மீளவும் ஸ்ருஷ்டி காலத்தில் வருகின்றான். இங்ஙனம் பலன்களில் அபிஸந்தியில்லாமல் கர்மங்களை அனுஷ்டிப்பவர்களும் தேஹாத்மாபிமானாதிகள் உடையவராயிருப்பின் ஸம்ஸாரத்தை அடைவார்களேயன்றி மோக்ஷம் பெறமாட்டார்கள். இப்படியிருக்க, ஸாம்ஸாரிக பலன்களை விரும்பிக் கர்மங்களைச் செய்கிற தேஹாத்மாபிமானிகள் ஸம்ஸாரத்தினின்று விடுபடமாட்டார்களென்பதில் ஸந்தேஹம் உண்டோ? 

ஐச்வர்யங்களில் ப்ரஹ்மாவாயிருக்கையே மேலானது. அந்த ப்ரஹ்மபதம் வரையிலுமுள்ள ஐச்வர்யங்களில் மனவிருப்பமுடையவராகி அவற்றை நிறைவேற்றிக் கொடுக்குங் கர்மங்களை அனுஷ்டிப்பதில் ச்ரத்தையுடன், சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப்படாத காம்ய கர்மங்களையும் நித்ய கர்மங்களையும் ஸ்வர்க்காதி பலன்களுக்காகச் செய்கின்றார்கள். ரஜோ குணத்தினால் மனம் கலங்கப் பெற்றவராகி அந்தந்த பலன்களை விரும்பி இந்திரியங்களை அவற்றில் போகவொட்டாமல் தடுக்க வல்லமையின்றி க்ருஹஸ்த தர்மங்களில் மனம் செல்லப்பெற்றுப் பிறகு தேவதைகளை ஆராதிக்கின்றார்கள். ஈச்வரனுடைய வீரச் செயல்கள் எத்தனை காலம் சொல்லிலும் அவை முடிபவையல்ல. சொல்பவனுக்குச் சொன்னது போதுமென்று திருப்தியும் உண்டாகாது. அப்படிப்பட்ட வீரச்செயல்கள் பலவும் உண்டு. அவன் ஸங்கல்பித்த மாத்ரத்தில் அவனைப் பற்றினாருடைய பாபங்களெல்லாம் பறந்துபோகும். அவனைப் பணிபவர் ஸம்ஸாரம் வேரோடு தீரப் பெறுவார்கள். அவன் மதுவென்னும் அஸுரனைக் கொன்றாற்போல் தன்னைப் பற்றினாருடைய விரோதிகளையெல்லாம் போக்கும் திறமையுடையவன். இப்படிப்பட்ட மஹானுபாவனான பர புருஷனுடைய கதையில் விமுகராகி (மனம் செல்லப் பெறாதவராகி) தர்ம அர்த்த காமங்களையே முக்யமாகக் கொண்டு திரிகின்றார்கள். மற்றும் தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாத பகவானுடைய அம்ருதம் போன்ற கதையைத் துறந்து, பன்றி முதலியவை அமேத்யத்தை ஆவலுடன் ஆராய்வதுபோல, அஸத்துக்களின் பாடல்களைக் கேட்கின்றார்கள். இவர்களெல்லோரும் தெய்வத்தினால் வஞ்சிக்கப் பெற்றவர்கள். (இவர்கள் பாழாகட்டும் என்று தெய்வத்தினால் விபரீதத்தில் புத்தி செல்லும்படி தூண்டப் பெற்றவர்கள். ஆகையால் அவர்கள் எல்லாரும் தெய்வத்தினால் அடியுண்டவர்களென்றே கூறலாம்). 
“அவர்களுக்கு விளையும் கதி என்?” என்னில் சொல்லுகிறேன். 

அவர்கள் ஸுர்யனுக்குத் தென்புறத்திலுள்ள மார்க்கத்தினால் (தூமாதி மார்க்கத்தினால்) பித்ருலோகம் போய்ச் சேருகின்றார்கள். அவ்விடத்தினின்று மீளவும் தமது புத்ராதிகளிடத்தில் பிறக்கின்றார்கள். பிறகு கர்ப்பாதானம் முதல் மயானம் வரையிலுள்ள ஸம்ஸ்காரங்களைப் பெற்று மீளவும் பரலோகம் சென்று அங்கு ஸுகங்களை அனுபவித்துப் புண்யம் க்ஷனிக்கப்பெற்று அங்குள்ள தேவதைகளால் அந்த க்ஷணமே போகத்தினின்று தள்ளுண்டவராகி மேன்மையெல்லாம் தொலைந்து ஜன்மாந்தர கர்மத்திற்கு உட்பட்டு மீளவும் இந்த லோகத்தில் வந்து விழுகின்றார்கள். இங்ஙனம் காம்யகர்மங்களை அனுஷ்டிப்பவர்க்கு விளையும் கதியைச் சொன்னேன். இவர்கள் போவதும் வருவதுமாகி ஸுகதுக்கங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்களேயன்றி ஸம்ஸாரத்தினின்று விடுபடமாட்டார்கள். ஆகையால், மாதாவே! நீ ஈச்வரனே எல்லாவுறவுமுறையுமென்று நினைத்துப் பரமபதத்தில் வாஸம் செய்பவனும் நித்ய முக்தர்களால் ஆராதிக்கப்படுகின்ற பாதாரவிந்தங்களையுடையவனுமாகிய அந்த ஸர்வேச்வரனையே பக்தியுடன் பஜிப்பாயாக. அவனுடைய கல்யாண குணங்களை நான் சொல்லக் கேட்டாயல்லவா? அவற்றை மனத்தில் நினைத்துக் கொண்டிருப்பாயாயின் அவனிடத்தில் பக்தி தானே உண்டாகும். பக்தியோகத்திற்கு வைராக்யமன்றே முக்யமாயிருக்க வேண்டும். அது இல்லாமல் எனக்கு பக்தியோகம் எப்படி உண்டாகும்? என்று நீ சிந்திக்க வேண்டாம். ஸ்ரீவாஸுதேவனுடைய குணங்களை நினைத்து அவனிடத்தில் ப்ரீதி செய்கையாகிற பக்தியோகத்தைச் செய்யத் தொடங்குவாயாயின், அது வைராக்யத்தை விளைவிக்கும். அந்த வைராக்யத்தினால் பக்தியோகம் நிறைவேறும். அதனால் பகவானுடைய ஸாக்ஷாத்காரம் உண்டாகும். “பக்தியோகம் செய்யத் தொடங்கினவன் எப்பொழுது பரப்ஹ்மத்தை ஸாக்ஷாத்கரிப்பான்?” என்னில், சொல்லுகிறேன். 

இந்த பக்தியோகம் செய்கிறவனுடைய மனம் அனுகூலமாயும் ப்ரதிகூலமாயுமுள்ள சப்தாதி விஷயங்களைப் பெற்றுக் கண் காது முதலிய இந்திரியங்களுடைய வ்யாபாரத்தின் மூலமாய் அனுகூல விஷயங்களை இவை ப்ரியமென்றும் ப்ரதிகூல விஷயங்களை இவை அப்ரியமென்றும் நினைத்து வைஷம்யத்தை அடையும் நிலை நீங்கி இரண்டிலும் ஸமமாயிருக்கும் நிலைமை எப்பொழுது உண்டாகப் பெறுமோ; மற்றும், இவனுடைய மனது சப்தாதி விஷயங்களில் பற்றின்றி இவை நமக்கு வேண்டாமென்றும் இவை நமக்கு வேண்டுமென்றும் நினைக்காமல் எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமேயாகையால் ஒருவகைப்பட்டதேயென்று நினைத்து ஒன்றிலும் பேதம் பாராட்டாமல் சுபாச்ரயமான பரமபுருஷனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானிப்பதில் நிலைபெறுமோ, அப்பொழுது அத்தகைய மனத்தினால் ஈச்வரனுடைய ஸாக்ஷாத்காரம் உண்டாகப் பெறுவான். ஜகத்தையெல்லாம் பரப்ரஹ்மமாக நினைப்பது எங்ஙனம் சேருமென்னில், ஜ்ஞானமே வடிவமாயிருக்கப் பெற்றவனும் பரப்ரஹ்மம் பரமாத்வா ஈச்வரன் புருஷன் என்று கூறப்படுபவனுமாகிய பகவானொருவனே ஒன்றோடொன்று விலக்ஷணமான ப்ருதிவி முதலிய தத்வங்களாகத் தோற்றுகிறான். பகவானையொழிந்த வஸ்து எதுவுமே இல்லை. தேவமனுஷ்யாதியான ஸமஸ்த வஸ்துக்களுக்கும் அந்தராத்மாவாய் இருப்பவன். அவன் அவற்றின் காமங்களால் அவனே கூறப்படுகின்றான். ஆகையால் ஜகத்தெல்லாம் பரப்ரஹ்மமேயென்று நினைப்பது நன்றாகப் பொருந்தும். யோகிகளுக்கு வைராக்யம் முதலிய அங்கங்களோடு கூடின பக்தியோகத்தினால் விளையும் பலன் யாதெனில், எல்லையில்லாத ஆநந்த ரூபமாயிருப்பதும் பரமபுருஷார்த்தமென்று கூறப்படுவதுமாகிய அபஹத பாப்மத்வம் (பாபமற்றிருக்கை முதலிய குணங்கள் அமைந்த தன் ஸ்வரூபம் தோற்றப்பெறுகையும், ப்ரக்ருதி ஸம்பந்தம் முழுவதும் நீங்கப் பெறுகையுமாகிற இவ்வளவே பக்தியோகத்தினால் உண்டாகும் பலன்.) ஜீவன் இயற்கையில் ஸத்வாதி குணங்களில்லாதவன்; ஜ்ஞானஸ்வரூபன்; ஒருபடிப்பட்டவன். அவன் பிறர்க்கு விஷயங்களை அறிவிக்குந் தன்மையுள்ள இந்திரியங்களால், சப்தாதிகளை குணமாகவுடைய ப்ருதிவி முதலிய பஞ்ச பூதங்களால் ஏற்பட்ட தேவமனுஷ்யாதி சரீரமாகவே தன்னை ப்ரமிக்கின்றான். மஹத்தத்வமும் வைகாரிகம் தைஜஸம் பூதாதி என்று மூன்று வகைப்பட்ட அஹங்காரமும் அதினின்று உண்டான பஞ்ச மஹாபூதங்களும் ஜ்ஞானேந்திரியங்கள் கர்மேந்த்ரியங்கள் மனது ஆகிய பதினொரு இந்திரியங்களும் இந்தத் தத்வங்களாலே ஏற்பட்டதான ப்ரஹ்மாண்டமும் ப்ரஹ்மதேவனும் ஆகிய இவையெல்லாம் எவனிடத்தினின்று உண்டாயினவோ, அந்தப் பரமபுருஷனுக்கே சரீரமாயிருப்பவை. இதுவே இவற்றினுடைய உண்மையான ஸ்வரூபம். ஜீவன் ஸ்ரத்தையும் பக்தியும் வைராக்யமும் ஆகிய இவைகளால் மனவூக்கம் உண்டாகப் பெற்று வேறு விஷயங்களில் மனப்பற்றின்றி விரக்தனாயிருப்பானாயின், இந்த ஜகத்தெல்லாம் “பரப்ரஹ்மமேயென்னும் புத்தி உண்டாகப் பெறுவான். வாராய் மாதாவே! மேன்மைக்கிடமாயிருப்பவளே! ப்ரக்ருதி ஜீவன் ஈஸ்வரன் ஆகிய இம்மூன்று தத்வங்களின் உண்மையை அறிவிப்பதும் பாப்ரஹ்மத்தினுடைய ஸாக்ஷாத்காரத்தை விளைவிப்பதுமாகிய ஜ்ஞானத்தை உனக்கு இங்ஙனம் மொழிந்தேன். ஜ்ஞான யோகத்தையும் (ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவனும் பரப்ரஹ்மத்திற்குச் சரீரமாகி அதற்கு உட்பட்டவனுமாகிய ப்ரத்யகாத்மாவின் ஸ்வரூபத்தை உபாஸிக்கையாகிற ஜ்ஞானயோகத்தையும்) ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தத்தைப் போக்குவதும் என்னைப் பற்றினதுமாகிய பக்தி யோகத்தையும், இந்த ஜ்ஞானயோக பக்தியோகங்கள் இரண்டுக்கும் பகவானைப் பெறுகையே பலனென்பதையும் உனக்குச் சொன்னேன். ஜ்ஞானயோகம் பக்தியோகம் இரண்டுகளாலும் பகவானையே பெறுவது எப்படியென்னில், ரூபம் ரஸம் முதலிய வெவ்வேறு விஷயங்களையுடைய கண் நாக்கு முதலிய இந்திரியங்களால் அந்த ரூபம் ரஸம் முதலிய பல குணங்களுக்கு இடமான பால் முதலிய வஸ்துவானது பலவாறாக அறியப்படுகின்றது. பாலெனப்படுகிற ஒரு வஸ்துவே ரூபத்தை அறியும் தன்மையுடைய சக்ஷுரிந்த்ரியத்தினால் (கண்ணால்) வெளுப்பு குணமுடையதாகவும், ஸத்தை அறியும் தன்மையுடைய ரஸனேந்தரியத்தினால் (நாக்கினால்) தித்திப்பு குணமுடையதாகவும், ஸ்பர்சத்தை அறியும் தன்மையுடைய த்வக்கிந்த்ரியத்தினால் (தோலால்) குளிமை சுடுகை முதலிய குணங்களுடையதாகவும் எங்ஙனம் அறியப்படுகின்றதோ, அங்ஙனம் பகவானொருவனெ சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட அந்தந்த மார்க்கங்களால் ஆராத்யனாகவும் ( ஆராதிக்கத் தகுந்தவனாகவும்) ப்ராப்யனாகவும் (அடையத் தகுந்தவனாகவும்) அறியப்படுகின்றான். சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட மார்க்கங்கள் தான் எவையென்னில் சொல்லுகிறேன் கேட்பாயாக. 

பஞ்சராத்ர சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட பூஜாவிதானமும் வேதத்தின் பூர்வபாகத்தில் சொன்ன யஜ்ஞங்களும் ஸ்ம்ருதிகளில் விதித்த தானமும் சாந்த்ராயணம் முதலிய வரதங்களை அனுஷ்டிக்கையாகிற தவமும், வேதாத்யயனம் செய்வதும், வேதத்தின் அர்த்தங்களை ஆராய்வதும், மனத்தை அடக்குகையும், மற்ற இந்திரியங்களை அடக்குகையும், பலன்களை விரும்பாமல் கர்மங்களை அனுஷ்டிக்கையும், பலவகை அங்கங்களோடு கூடின பக்தியோகமும், அங்ஙனமே பலவகை அங்கங்களோடு கூடின ஜ்ஞானயோகமும், பலன்களை விரும்பிச் செய்யும் தர்மமாகிய ப்ரவ்ருத்தி தர்மமும், பலன்களை விரும்பாமல் செய்யும் தர்மமாகிய நிவ்ருத்தி தர்மமும், ஆத்மாவின் உண்மையை அறிகையாகிற ஜ்ஞானயோகமும், திடமான வைராக்யமும் ஆகிய இவைகளால், நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமும் துர்க்குணங்கள் தீண்டப்பெறாதவனும் ஸ்வயம்ப்ரகாசனுமாகிய பகவானொருவனே அடையப்படுகின்றான். யாகாதிகர்மங்களால் இந்த்ராதி தேவதைகளை ஆராதித்து ஸ்வர்க்காதி பலன்களைப் பெறுகின்றார்களாயினும், அவ்விந்த்ராதி தேவதைகளுக்கு அந்தராத்மாவாயிருந்து யாகாதிகளால் ஆராதிக்கப்பெற்று ஸ்வர்க்காதிபலன்களைக் கொடுக்கிறவன் பகவானே. யாகாதிகர்மங்களும் ஸ்வர்க்காதிபலன்களும் அவனே. அவனை நேரே ஆராதிப்பவர் மோக்ஷமென்கிற அழியாத பலனையும், இந்த்ராதி தேவதைகள் மூலமாய் அவனை ஆராதிப்பவர் அழியுந்தன்மையுள்ள ஸ்வர்க்காதி பலன்களையும் பெறுகின்றார்கள், ஆகையால் ஜ்ஞானயோக பக்தியோகாதிகளெல்லாம் அந்தப் பரமபுருஷனைப் பற்றினவைகளே. 

ஸாத்விகம் ராஜஸம் தாமஸமென்று பக்தியோகம் மூன்று வகைப் பட்டிருக்கும். அவற்றில் ஸாத்விக பக்தியோகம் இரண்டு விதமாயிருக்கும். அவற்றில் ஒன்று பலனை விரும்பிச் செய்யப்படுவதாம். மற்றொன்று பலனை விரும்பாமல் செய்யப்படுவதாம், பலனை விரும்பாமல் செய்யப்படும் பக்தியோகத்தையே நைர்க்குண்ய பக்தியோகமென்று மொழிவார்கள். இந்த பக்தியோகத்தை அனுஷ்டிக்கும் ஜீவன் ஸத்வாதிகுணங்களின் ஸம்பந்தம் நீங்கி ஸம்ஸாரமற்றுப் பரமபுருஷனைப் பெறுவான். இங்ஙனம் நான்கு வகைப்பட்ட பக்தியோகத்தின் ஸ்வரூபத்தையும் உனக்கு மொழிந்தேன். வஸ்துக்களில் புகுத்து இன்னின்ன வஸ்துவுக்கு இவ்வளவே நிலைமை என்று பரிச்சேதிப்பதும் ஸ்பஷ்டமாகத் தோற்றுகின்ற கண் காது முதலிய இந்திரியங்களால் அறியக்கூடாத கதியுடையதுமாகிய காலத்தின் ஸ்வரூபத்தையும் கூறினேன். வாராய் மாதாவே! ஜீவன் எந்த ஸம்ஸார ஸம்பந்தத்தினால் தன் ஸ்வரூபம் தனக்குத் தெரியாமல் மதிமயங்கித் தடுமாற்றமுறுகின்றானோ, மற்றும் எவை ஜீவனுடைய கர்மத்தினால் ஏற்படுகின்றனவோ; அப்படிப்பட்ட பலவாறான ஸம்ஸார கதிகளையும் உனக்கு மொழிந்தேன். நான் சொன்ன இது ஸமஸ்த வேதாந்தப் பொருள்களும் அமைந்திருக்கின்றதாகையால் இதை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வரவேண்டும். பிறர்க்கு உபத்ரவம் செய்யும் துஷ்டர்களுக்கு இதை உபதேசிக்கலாகாது. வணக்கமில்லாதவனுக்கும் மூர்க்கனுக்கும் துராசாரனுக்கும் தாம்பிகனுக்கும் வைராக்யமின்றிச் சப்தாதி விஷயங்களில் மனவிருப்பமுடையவனுக்கும், கேவலம் க்ருஹஸ்த தர்மங்களில் மனவூக்கமுடையவனுக்கும், என்னிடத்தில் பக்தியில்லாதவனுக்கும், என்னிடத்தில் பக்தி செய்பவர்களை த்வேஷிக்கிறவர்களுக்கும் இதை எவ்விதத்திலும் எக்காலத்திலும் உபதேசிக்கலாகாது, ஆனால் எவர்க்கு உபதேசிக்கலாமென்னில், இதைக் கேட்கவேண்டுமென்னும் ஸ்ரத்தையும் வணக்கமும் அஸுயையில்லாமையும் ப்ராணிகளிடத்தில் மைத்ரியும் குருசுச்ரூஷையில் ஆவலும் வெளியிந்த்ரியங்களை அடக்குகையாகிற தமமும் உள் இந்த்ரியமான மனத்தை அடக்குகையாகிற சமமும் பிறர் நன்மையைப் பொறுமையாகிற மாத்ஸர்யமில்லாமையும் ஸதாசாரநிலைமையும் ஆகிய இவையெல்லாம் அமைந்தவனுக்கும், எவன் ப்ரீதிக் கிடமான வஸ்துக்கள் எல்லாவற்றிலும் என்னிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவனோ, அவனுக்கும் இதை உபதேசிக்கலாம். அன்றி மற்றவனுக்கு இதை உபதேசிக்கலாகாது. 

வாராய் மாதாவே! இங்ஙனம் நான் மொழிந்த இந்தத் தத்வோபதேசத்தை எவன் ச்ரத்தையுடன் ஒருக்காலாவது கேட்பானோ, எவன் என்னிடத்தில் மனநிலைமையுடையவனாக இதை ஒருவனுக்கு மொழிவானோ; அவர்களிருவரும் ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாகப் பெற்று என் பதவியாகிய மோக்ஷத்தைப் பெறுவார்கள்.


முப்பத்திரண்டாவது அத்யாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக