சனி, 3 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 318

பதினோறாவது ஸ்கந்தம் - பன்னிரெண்டாவது அத்தியாயம்

(ந்யாஸமென்னும் ப்ரபத்தி வித்யையை உபதேசித்தல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உத்தவனே! கர்ம யோகம், ஜ்ஞானயோகம், அஹிம்ஸை முதலிய தர்மம் வேதமோதுதல், உபவாஸம் முதலிய தவம், யாகம் முதலிய வைதிக கர்மம், பூர்த்தம் (கிணறு, குளம் வெட்டுதல்) முதலிய ஸ்மார்த்த கர்மம், தானம் யாகாதிகளில் அவற்றின் மேன்மைக்காகக் கொடுக்கும் தக்ஷிணை, ஏகாதசி உபவாஸம் முதலிய வ்ரதங்கள், பஞ்ச மஹாயஜ்ஞங்கள் {(ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்}, ரஹஸ்ய மந்திரங்கள், கங்கை முதலிய புண்ய தீர்த்தங்கள், சௌசம் (தூய்மை), ஆசமனம் முதலிய நியமங்கள், உள்ளிந்திரியம், வெளியிந்தரியங்கள் ஆகிய இவற்றை அடக்குவதற்கு உரிய உபாயங்களான யமங்கள் (அஹிம்ஸை – பிறர்க்குத் தீங்கு செய்யாமை; ஸத்யம் – உண்மை பேசுதல்; அஸ்தேயம் – திருடாமை; ப்ரஹ்மசர்யம் - மனம், சொல், செயலால் தூய்மை; அபரிக்ரஹம் – கஷ்டத்திலும் தானம் பெறாமை) ஆகிய இவற்றுள் எதுவும் ஸத்புருஷர்களுடைய ஸஹவாஸம் (தொடர்பு) போல் என்னை வசப்படுத்த வல்லதாக மாட்டாது.

ஏனென்றால், அந்த ஸத்புருஷ (நல்லவர்களுடைய) ஸஹவாஸம் (தொடர்பு) என்னை ஒழிந்த மற்ற எல்லாவற்றிலுமுள்ள மனப்பற்றுக்களையெல்லாம் அடியோடு போக்கிவிடும். ஆகையால், அது என்னை வசப்படுத்துவது போல், மற்ற எதுவும் வசப்படுத்தமுடியாது. (கர்மயோக, ஜ்ஞான யோகாதிகள் மனத்தை நிர்மலமாக்கி ஊக்கத்தை உண்டாக்கி, பக்தி யோகத்தை விளைவித்து, அவ்வழியால் பகவானை வசப்படுத்துவதற்குக் காரணமாயிருப்பது போல, ஸத் ஸஹவாஸமும் (நல்லோர் தொடர்பும்), ஆசார்ய ஸமாச்ரயணம் முதலியவற்றை உண்டாக்கி, அவ்வழியால் தான் ஈச்வரனை வசப்படுத்துமன்றி நேரே வசப்படுத்த முடியாது. ஆகையால், அந்தக் கர்ம யோகாதிகளைக் காட்டிலும் இதைச் சிறந்ததென்று எவ்வாறு புகழலாமென்று நினைக்கலாகாது. ஸத்புருஷர்கள், தங்களுடைய ஸம்பந்த மாத்ரத்தினால் ப்ராணிகளை ஸம்ஸாரத்தினின்று விடுவிக்க வல்லவர்களாகையால், ஸத்ஸஹவாஸத்திற்கு (நல்லோர் தொடர்பிற்கு) அவை ஒருகாலும் ஈடாக மாட்டாது).

அஸுரர்கள், ராக்ஷஸர்கள், பக்ஷிகள், ம்ருகங்கள், கந்தர்வர், அப்ஸரஸ்த்ரீகள், யானைகள், ஸித்தர், சாரணர், குஹ்யகர், வித்யாதரர் இவர்களும், மனுஷ்யர்களில் வைச்யர், சூத்ரர், ஸ்த்ரீகள், அந்திம ஜாதியில் பிறந்தவர், ரஜஸ், தமோ குணங்களே தலையெடுத்து மோக்ஷ உபாயத்தில் (மோட்சத்திற்கான வழியில்) சிறிதும் ஸம்பந்தமில்லாத இவர்கள் பலரும் அந்தந்த யுகத்தில் என்னுடைய ஸ்தானத்தை அடைந்தார்கள்.

வ்ருத்ராஸுரன், ப்ரஹ்லாதன், வ்ருஷபர்வன், பலி, பாணன், மயன் இவர் முதலியவர்களும், விபீஷணனும், ஸுக்ரீவன், ஹனுமான், ருக்ஷன், கஜேந்திரன், இவர்களும், ஜடாயுவும், துலாதாரனென்கிற வணிக்பதனும் (வைச்யரில் தாழ்ந்தவனும்), தர்மவ்யாதனும், கூனி, கோகுலத்துக் கோபிகைகள், ப்ராஹ்மண பத்னிகள் இவர்களும், மற்றும் பலரும் என் ஸ்தானத்தை அடைந்தார்கள். அவர்கள், பற்பல சாகைகளாகப் (கிளைகளாகப்) பிரிந்த வேத ஸமூஹங்களை அத்யயனம் செய்தவர்களல்லர். மிகவும் பெருமையுள்ள ஸத்புருஷர்களை உபாஸித்தவர்களுமல்லர்; வ்ரதங்களை அனுஷ்டித்தவர்களுமல்லர்; தவம் செய்தவர்களுமல்லர்.

பின்னையோவென்றால், கேவலம் ஸத்ஸங்கத்தினால் என்னை அடைந்தார்கள். “உன்னுடைய உண்மையை உணர்ந்தவர்களும், அவர்களோடு ஸம்பந்தமுடையவர்களும், முக்தி அடைவார்களென்பது யுக்தமே. காமம் முதலிய ஸாதாரண பாவத்தினால் உன்னை அனுஸரித்த கோபிகைகள் முதலியவர்க்கும் முக்தி உண்டாயிற்று என்பது யுக்தமன்று: அவர்களுக்கே முக்தி நேராது என்ற பின்பு, அவர்களோடு ஸம்பந்தமுடையவர்களுக்கு முக்தியென்பது எவ்வாறு ஸம்பவிக்கும்?” என்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்.

காமம் (காதல் ஆசை), பயம், த்வேஷம் (பகைமை) முதலிய ஏதேனுமொரு மனோபாவம் தலையெடுத்து அதனால் என்னை இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருப்பார்களாயின், அவர்களும் முக்தி அடைவார்கள். கோபிகைகள் என்னிடத்தில் காமம் (காதல் ஆசை) என்னும் மனோபாவம் (மனநிலை) உண்டாகப் பெற்று, அதனால் ஸர்வ காலமும் என்னையே சிந்தித்துக் கொண்டிருந்து, என்னை அடைந்தார்கள்.

பசுக்கள், வ்ருக்ஷங்கள் (மரங்கள்), செடி, கொடி முதலியவை ம்ருகங்கள் இவைகளும், கேவல தமோ குணமே தலையெடுக்கப் பெற்று மதி மயங்கின காளியன் முதலியவர்களும், என்னுடைய தர்சனம் (பார்த்தல்), ஸ்பர்சனம் (தொடுதல்) முதலியவற்றால் என்னிடத்தில் மனோபாவம் (நிலை பெற்ற மனம்) உண்டாகப் பெற்று, மோக்ஷ விரோதியான பாபங்களெல்லாம் தொலைந்து, மோக்ஷத்திற்கு உரியவர்களாகி, என்னை அனாயாஸமாக (எளிதாக) அடைந்தார்கள்.

யோக்யதையில்லாத செடி, கொடி, மரம் முதலியவைகளும் ஏதேனும் ஒரு பாவத்தினால் முக்தி அடையுமாயின், கோபிகைகளும் அவரைச் சேர்ந்தவர்களும் முக்தி அடைந்தார்களென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ?

(செடி, கொடி முதலியவற்றிற்கு எவ்வாறு முக்தி உண்டாகுமென்றால், ராம விரஹத்தில் வ்ருக்ஷங்களும் கூட வாடின என்றாற்போல், அவற்றிற்கும் கூட உள் நினைவு உண்டாகையால், ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஸந்நிதானத்தில் (அருகில்) செழித்திருக்கையும், அவனுடைய அஸந்நிதானத்தில் (அருகில் இல்லாதபொழுது) வாடுகையும் உண்டாகையால், அவற்றிற்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மிகுந்த பாவ பந்தம் (பற்று) உண்டென்பது ஸித்தமே (ஏற்பட்டதே). அதனால், அவையும் முக்தி அடையத் தடையில்லை).

ஒருவன், கர்மயோகம், ஜ்ஞானயோகம், தானம், ஏகாதசி உபவாஸம் முதலிய வ்ரதங்கள், சாந்தராயணம் (சந்த்ரனின் பிறை வளர்ச்சி, தேய்வு முதலியவற்றுடன் தொடர்புள்ள மத ஸம்பந்தமான வ்ரதம்) முதலிய தவங்கள், யாகங்கள், சாஸ்த்ரங்களை உணர்தல், வேதங்களை ஓதுதல், ஸந்யாஸாச்ரமத்தை அனுஷ்டித்தல் ஆகிய இவைகளால் எவ்வளவு ப்ரயத்னம் (முயற்சி) செய்யினும், எவனை அடையமாட்டானோ, அத்தகையனான என்னைக் கோபிகைகளும், பசுக்களும், செடி, கொடி முதலியவைகளும் அடைந்தன. அக்ரூரன் பலராமனோடு கூட என்னை மதுரைக்கு அழைத்துக் கொண்டு போகும் பொழுது, கோபிகைகள் என்னிடத்தில் மிகுந்த அன்புடன் நிலை நின்ற மனமுடையவர்களாகையால், என்னைப் பிரிந்திருக்க முடியாமல் மிகவும் மனவருத்தமுற்று, மற்ற எதைக் காண்கிலும் ஸுகத்தை அடையாதிருந்தார்கள்.

ஓ, உத்தவனே! நான் ப்ருந்தாவனத்திலிருக்கும் பொழுது, கோபிகைகள் மிகவும் அன்பனாகிய என்னுடன் எந்தெந்த ராத்ரிகளை (இரவுகளை) அரை க்ஷணம் போல் அனுபவித்தார்களோ, அத்தகைய ராத்ரிகள் (இரவுகள்) என்னைப் பிரிந்த பின்பு அவர்களுக்குக் கல்பங்கள் போன்றிருந்தன. மற்றும், என்னிடத்தில் மிகுந்த அனுராகத்தினால் (அன்பினால்) கட்டுண்ட மனமுடைய அக்கோபிகைகள், தங்களையாவது, தங்கள் தேஹத்தையாவது, தூரத்திலுள்ளதையாவது, ஸமீபத்திலுள்ளதையாவது எதையும் அறியவில்லை. பரமாத்ம த்யானத்தில் (பகவானை த்யானம் செய்வதில்) ஆழ்ந்த முனிவர்கள் போலவும், ஸமுத்ரத்தில் போய் விழுந்த நதிகள் போலவும், நாம ரூபங்களையும் அறியாதிருந்தார்கள்.

பின்னையோ என்றால், ஒன்றும் தெரியாதவர்களான அந்தக் கோபிகைகள், என் ஸ்வரூபத்தை அறிந்தவர்களல்லர். ஆயினும், என்னிடத்திலேயே காமமுடைய அம்மடந்தையர் மணிகள், மேலுக்குக் கள்ள (திருட்டு) அன்பனாய்த் தோற்றுகின்றவனும், உண்மையில் பரப்ரஹ்ம ஸ்வரூபனுமாகிய என்னை அடைந்தார்கள்.

இவ்வாறு ஸத்ஸங்கத்தினால் (நல்லோர் தொடர்பினால்) பலவாயிரம் பேர்கள் என்னை அடைந்தார்கள். (இவ்வாறு சரணாகதியென்னும் பெயருடைய ந்யாஸ (சரணாகதி) யோகத்தின் ப்ரபாவத்தை (பெருமையை) வெளியிடுவதற்காக அந்த ந்யாஸ யோக (சரணாகதியில்) நிஷ்டர்களான (நிலைநின்ற) பெரியோர்களின் ஸம்பந்த மாத்ரத்தினால், மற்ற எந்த உபாயங்களாலும் ஸாதிக்க முடியாத பரம புருஷார்த்தம் கைகூடுமென்பதை மொழிந்து, இப்பொழுது அந்த ந்யாஸ யோகத்தை (சரணாகதியை) உபதேசிக்கிறான்).

ஓ உத்தவனே! விதி (செய்) நிஷேத (செய்யாதே) சாஸ்த்ரங்களையும், அந்தச் சாஸ்த்ரங்களால் ஏற்படுகிற ப்ரவ்ருத்தி (செயலில் ஈடுபடுதல்), நிவ்ருத்திகளையும் செயலிலிருந்து விலகுதல்), கேட்க வேண்டியதையும், கேட்டதையும் துறந்து, ஜ்ஞான சக்த்யாதி குணங்களும் வாத்ஸல்ய, ஸௌலப்ய (எளிமை), ஸௌசீல்ய (பெரியவர்களாய் இருந்தும் தாழ்ந்தவர்களிடம் இரண்டறக் கலந்து பழகும் தன்மை) முதலிய குணங்களும் அமைந்து, ஸர்வ ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவாகிய என்னையே ஸர்வ ப்ரகாரத்தாலும் சரணம் அடைவாயாக. இப்படியாயின், உனக்கு எவ்விதத்திலும் பயம் உண்டாகாது. நீ ஸர்வ பாபங்களினின்றும் விடுபட்டு, முக்தர்களுக்கு போக்யனாகிய (இனியனான) என்னைப் பெறுவாய்.

உத்தவன் சொல்லுகிறான்:- யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனே! உன் வார்த்தையைக் கேட்கிற எனக்கு, உபாய (பகவானை அடைவதற்கு வழி என்ன என்ற) விஷயத்தில் ஸம்சயம் (ஸந்தேஹம்) தீர்ந்தது. ஆத்ம விஷயத்திலேயோவென்றால், ஸம்சயம் (ஸந்தேஹம்) தீரவில்லை. அந்த ஸம்சயத்தினால் (ஸந்தேஹத்தினால்) என் மனம் ப்ரமிக்கின்றது. (ஸமஸ்த இந்த்ரியங்களையும், ப்ராணன்களையும் நியமிப்பது முதலியன ஜீவனுடைய கார்யமா? அல்லது உன்னுடைய கார்யமா? உன்னுடைய கார்யமாயின், தேவ, மனுஷ்யாதி சரீரங்களைப் பெறுகையாகிற ஸம்ஸாரம் (உலகியல் கட்டு) யாருக்கு உண்டாகிறது? இந்த்ரியாதிகளுக்கு ஆதாரமாயிருப்பவன் யாவன்? ஜீவனா? அல்லது சரீரமா? அல்லது நீயா? ஸுக, துக்கங்களுக்குக் காரணமான புண்ய பாப கர்மங்களைச் செய்யத் தொடங்குகிறவன் எவன்? ஸுக, துக்கங்களை அனுபவிக்கிறவன் எவன்? ஆகிய இவை முதலிய ஆத்மாவைப் பற்றின ஸம்சயங்கள் (ஸந்தேஹங்கள்) பலவும் என் மனத்தை ப்ரமிக்கச் செய்கின்றன. ஆகையால், அவற்றைப் போக்கியருள்வாயாக.)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அவ்வாறு உன்னுடைய ஸந்தேஹங்களுக்கிடமாகிய இந்த ஜீவன், ப்ராணனோடும் (மூச்சுக்காற்று), ப்ராண கோஷத்தோடும் ஹ்ருதய குஹையில் ப்ரவேசித்து, அதன் விவரத்தில் (பள்ளத்தில்) ப்ரகாசித்துக் கொண்டிருப்பவன். (ப்ராண கோஷமாவது காதுகளைக் கைகளால் மூடிக்கொண்டால் அவரவர்களுக்குக் கேட்கும் சப்தம். இதை ஆத்ம கோஷமென்றும் சொல்லுவார்கள். ஆத்மா உடலிலிருந்து வெளிப்படும் பொழுது, அந்த கோஷம் செவிப்படாதென்றும் சொல்லுகிறார்கள்.)

அந்த ப்ராணகோஷம் கேவலம் அவரவர் மனத்தினால் அறியத் தகுந்ததும், பக்கத்திலிருப்பவர்களுக்குத் தெரியாததுமாகிய ஸூக்ஷ்ம (நுட்பமான) ரூபத்தை அடைந்திருக்கும். பிறகு உச்சாரண (சொற்களை உச்சரிக்கும்) வேளையில், மார்பு, கண்டம், சிரஸ்ஸு என்னும் ஸ்தானங்கள் (இடங்கள்), ப்ரயத்னங்கள் (முயற்சி) இவற்றின் ஸம்பந்த வசத்தினால் ஹ்ரஸ்வம் (குறில்), தீர்க்கம் (நெடில்), ப்லுதம் (நீண்ட) என்னும் மாத்ரைகள், ககரம் முதலிய வர்ணங்கள், உதாத்தம், அனுதாத்தம் முதலிய ஸ்வரங்கள் ஆகிய ஸ்தூல ரூபங்களை அடைகின்றது.

அக்னி, காஷ்டத்தின் (கட்டையின்) உள்ளிருக்கும் பொழுது ஸூக்ஷ்மமாய் (கண்ணுக்குப் புலப்படாமல் நுட்பமாய்) இருக்கின்றது. கடைந்தெடுக்க ஆரம்பிக்கும்பொழுது சுடுகையாயிருக்கின்றது. பிறகு கட்டையில் உறுத்தி கடைகையில், ஆகாயத்தில் காற்றின் ஸஹாயத்தைப் (உதவியைப்) பெற்று, சிறிய பொரியாய்க் கிளம்புகிறது. பிறகு, துணுக்கையாய் உண்டாகின்றது. பிறகு க்ரமமாக வளர்ந்து ஹவிஸ்ஸினால் எரிகின்றது. அவ்வாறே வாக் இந்த்ரியத்தின் வியாபாரமாகிய இந்த வாணி (குரல்), முதலில் ப்ராண கோஷ ரூபமாய் ஸூக்ஷ்மமாய் (நுட்பமாய்) இருந்து, பிறகு ஸ்தான (இடம்), ப்ரயத்ன (முயற்சி) பேதத்தினால் (வேறுபாடுகளால்) பலவாறு விரிந்து வெளியாகின்றது. இதுவும் என்னுடைய சரீரமே. (சரீரம் போல் எனக்கு அதீனமாய் (உட்பட்டு) இருப்பது). இவ்வாறே பாத இந்த்ரியத்தின் வியாபாரமான நடையும், பாணி (கை) இந்த்ரியத்தின் வியாபாரமாகிய செயலும், உபஸ்த (பிறப்புக் குறி) இந்த்ரியத்தின் வியாபாரமாகிய ரதியும் (ஆண், பெண் சேர்க்கையும்), பாயு (ஆசன வாய்) இந்த்ரியத்தின் வியாபாரமாகிய மல விஸர்ஜமும் (கழித்தல்), க்ராண (மூக்கு) இந்த்ரியத்தின் வியாபாரமாகிய க்ராணமும் (கந்தத்தை மோருதலும் ), ரஸன (நாக்கு) இந்த்ரியத்தின் வியாபாரமாகிய ரஸமும் (ருசியறிதலும்), சக்ஷுர் (கண்) இந்த்ரியத்தின் வியாபாரமாகிய காட்சியும், த்வக் (தோல்) இந்த்ரியத்தின் வியாபாரமாகிய ஸ்பர்சமும் (தொடு உணர்ச்சியும்), ச்ரோத்ர (காது) இந்த்ரியத்தின் வியாபாரமாகிய ச்ரவணமும் (சப்தத்தைக் கேட்கையும்), மன இந்த்ரியத்தின் வியாபாரமாகிய ஸங்கல்ப ஜ்ஞானமும், அஹங்காரத்தின் வியாபாரமாகிய அபிமானமும், (ஆத்மாவல்லாததை ஆத்மாவாக ப்ரமிக்கையும்), மஹத்தத்வத்தின் வியாபாரமாகிய அத்யவஸாயமும் (உறுதி, நிச்சயம்), ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களின் பரிணாமமாகிய தேஹம், இந்த்ரியங்கள் இவைகளும், என்னுடைய சரீரமே. (இவையெல்லாம் சரீரம் போல் எனக்கு அதீனங்களய் (உட்பட்டு) இருப்பவை). (ஆனால் தேவ, மனுஷ்யாதி சரீரங்களைப் பெறுகையாகிற ஸம்ஸாரம் யாருக்கென்றால், சொல்லுகிறேன்; கேள்.)

இந்த ஜீவாத்மா, ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு உட்பட்டிருப்பவன்; அதனால், இந்த ப்ரஹ்மாண்டத்தினிடையில் பிறப்பதும், சாவதுமாயிருப்பவன்; இயற்கையில் வளர்தல், குறைதல் முதலிய விகாரங்களின்றி (மாறுபாடுகள் இன்றி) என்றும் ஒருவாறாயிருப்பவன்; அணு ஸ்வரூபன் (வடிவானவன்); நித்யன்; காலத்தினால் தேஹத்திலும் (உடலிலும்), தேஹானுபந்திகளிடத்திலும் (உடலோடு தொடர்பு உடையவர்களிடத்திலும்), அஹங்கார (நான்), மமகார (எனது) ரூபமாகச் சிதறின சைதன்ய (அறிவு) சக்தியுடையவன்.

இத்தகைய ஜீவன், விதைகள் க்ஷேத்ரத்தில் (நிலத்தில்) விதைக்கப்பட்டு, அந்தந்த க்ஷேத்ரத்தின் ஸாரத்திற்குத் (விளைச்சல் தன்மைக்குத்) தகுந்தபடி பலவாறு தோன்றுவது போல், தேவ, மனுஷ்யாதி தேஹங்களைப் (உடல்களைப்) பெற்று, பலவாறு தோன்றுகிறான்.

வஸ்த்ரத்தில் நூல்கள் குறுக்கும் நெடுக்குமாய்க் கோர்க்கப்பட்டிருப்பது போல், இந்த்ரியங்கள், ப்ராணன்கள் ஆகிய இவையெல்லாம் எதில் குறுக்கும் நெடுக்கும் கோக்கப்பட்டவை போன்றிருக்கின்றனவோ, அத்தகைய ஸம்ஸாரமாகிய (உலக வாழ்வாகிற) வ்ருக்ஷம் (மரம்), ப்ரவாஹம் (வெள்ளப் பெருக்கு) போல் அனாதியாய் (ஆரம்பம் இன்றி) இருப்பது; ப்ரவ்ருத்தியையே (செயலையே) இயற்கையாகவுடையது. இந்த ஸம்ஸார வ்ருக்ஷம், புண்ய, பாப கர்மங்களாகிற புஷ்பங்களையும் ஸுகதுக்கங்களாகிற பலன்களையும், விளைக்கின்றது.

இந்த ஸம்ஸார வ்ருக்ஷத்திற்குப் புண்ய, பாப ரூபங்களான இரண்டு கர்மங்களே இரண்டு விதைகள். ராகம் (விருப்பு), த்வேஷம் (பகைமை), பயம் முதலிய பல வேர்கள் உண்டு. இந்த வ்ருக்ஷம் (மரம்), ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களாகிற மூன்று நாளங்களும் (தண்டுகள்), ப்ருதிவி, அப்பு, தேஜஸ்ஸு, வாயு, ஆகாசம் என்கிற ஐந்து ஸ்கந்தங்களும் (பெரும் கிளைகள்) உடையது; சப்தாதி விஷயங்களாகிற ஐந்து ரஸங்களுக்கு (சாறு) விளை நிலமாயிருக்கும்; பதினொரு இந்திரியங்களாகிற பதினொரு கிளையுடையது.

ஆத்ம, பரமாத்மாக்களாகிற இரண்டு பக்ஷிகள் சேர்ந்து வாஸம் செய்யும்படியான ஹ்ருதய கமலமாகிற ஒரு கூண்டுடையது. வாத, பித்த, கபம் என்கிற மூன்று தாதுக்களாகிற மூன்று பட்டைகளுடையது; போக, மோக்ஷங்களாகிற இரண்டு பலன்களையுடையது; ஆத்யாத்மிகம் முதலிய தாபத்ரயமாகிற {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான துன்பங்களில்} பாத்தியில் நிலைநின்றிருப்பது. 

சப்தாதி விஷயங்களை விரும்பும் க்ராம்ய ஜனங்களாகிற (ஸாதாரண ஜீவன்கள்) க்ராமங்களில் வஸிக்கும் கழுகுகள், இந்த வ்ருக்ஷத்தின் இரண்டு பலன்களில் ஒன்றாகிய ஸுக, துக்கங்களாகிற ஒரு பலனைப் புசிக்கின்றன. மோக்ஷமாகிற மற்றொரு பலனை அரண்யத்தில் வஸிக்கும் முனிவர்களாகிய ஹம்ஸங்கள் புசிக்கின்றன. ப்ரக்ருதியின் பரிணாமமும் (மாற்றமூம்), தேவன், மனுஷ்யன் முதலிய பல உருவங்களையுடையதுமாகிய இந்த ஸம்ஸார வ்ருக்ஷத்தை எவன் குருக்கள் மூலமாய் உள்ளபடி அறிகிறானோ, அவனே வேதங்களை உணர்ந்தவனாவான்.

அத்தகையதான இந்த ஸம்ஸாரமாகிற வ்ருக்ஷத்தை (மரத்தை) இவ்வாறு அறிந்து, நிலைநின்ற பக்தியுடைய குரு உபாஸனையால் (ஆசார்ய பக்தியால்) ஜ்ஞானமாகிற கூருள்ள கோடாலியைப் பெற்று, தைர்யத்துடன் ஜீவாத்மாவைத் துடர்ந்திருக்கின்ற இந்த ஸம்ஸாரமாகிற வ்ருக்ஷத்தை (மரத்தை) அடியோடு அறுத்து, மனவூக்கம் தவறுதலின்றி, பரமாத்மாவாகிய என்னைப் பெற்று, அதன் பிறகு அந்த ஜ்ஞானமாகிற கோடாலியைத் துறப்பாயாக. (என்னைப் பெறும் வரையில், அந்த ஜ்ஞானமாகிற ஆயுதத்தைக் கைவிடலாகாது.)

பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக