மன்னர் கிருஷ்ணதேவராயர் மகாநீதிமான். எதையும் எளிதில் விசாரிக்காமல்
செய்யமாட்டார். அது மட்டுமல்ல, அவரும் பெருமாள் பக்தர். பெருமாளின் திவ்யலீலைகளை அவர்
அறிவார்.
தன் முன்னால் நிறுத்தப்பட்ட பாவாஜியின் முகத்தைப் பார்த்த அவருக்கு,
இந்த மனிதன் தவறு செய்திருக்க மாட்டார் என்றே தோன்றியது. இருப்பினும், ஏழுமலையானின்
ஆரத்துடன் பிடிபட்டதால் விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.
""பாவாஜி! உம் மீது திருட்டு குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இதுபற்றி என்ன சொல்கிறீர்!'' என்று அதட்டலுடன் கேட்டார்.
""அரசே! இது சுத்தப்பொய். பெருமாள் என்னுடன் தினமும் சொக்கட்டான்
ஆட வருவார் என்பது நிஜம். அவரே இந்த மாலையை என் ஆஸ்ரமத்தில் கழற்றி வைத்து விட்டு வந்துவிட்டார்.
அதை அவரிடம் சேர்க்கவே வந்தேன். இதற்கு நானும் அவருமே சாட்சி. செய்யாத குற்றத்துக்காக,
தாங்கள் எனக்கு மரணதண்டனை விதித்தாலும் அதற்காக கலங்கமாட்டேன். ஏனெனில், மரணம் என்றும்
நிச்சயமானது. இறைவன் குறிப்பிட்ட நாளில் அது வந்தே தீரும். ஆனால், கெட்ட பெயருடன் நான்
மரணமடைந்து விட்டால், என் மீதான களங்கம் உலகம் உள்ளளவும் பேசப்படும். அதை நினைத்தே
கலங்குகிறேன்,'' என்றார்.
பாவாஜியின் பேச்சு தேவராயருக்கு நம்பிக்கையைத் தந்தது.
""சரி, பாவாஜி! நீர் பாலாஜியின் நண்பர் என்பது உண்மையானால்
உமக்கு ஒரு பரீட்சை வைக்கிறேன். ஒரு வண்டி கரும்பை நிலவறையில் (பாதாளத்திலுள்ள அறை)
வைக்கிறேன். நீர் சொல்வது உண்மையானால், அவற்றை நீ முழுமையாகத் தின்று விட வேண்டும்.
புரிகிறதா?'' என்று சொல்லி அவரை அனுப்பினார்.
ஏவலர்கள் பாவாஜியை நிலவறைக்கு இழுத்துச் சென்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட
கரும்புகளை உடைய வண்டியின் முன்னால் அமர வைத்து விட்டனர்.
ஆயிரம் கரும்புகளை வரிசையாக ஒருவனால் எப்படி உண்ண முடியும்? ஒரு துண்டு
கரும்பைத் தின்பதற்குள்ளேயே சலிப்பு தட்டிவிடும். நடக்கிற காரியமா?
பாவாஜி கண்ணீர் வடித்தபடியே, ""பரந்தாமா! உன் நண்பனை, உன்
பக்தனை நீ நடத்தும் விதம் இதுதானா? எந்தப் பாவமும் செய்யாத என்னை சிக்கலில் மாட்டிவிட்டாயே!
இது தான் பக்தன் மீது நீ கொண்ட பாசமா? விரைவில் வா! உன் மீது பாரத்தைப் போட்டு விட்டேன்.
என் மீதான களங்கத்தைப் போக்கு,'' என்று அழுதார். அப்படியே தூங்கியும் விட்டார்.
அப்போது ஏழுமலைவாசன் ஒரு யானையின் வடிவில் நிலவறைக்குள் வந்தார். விடிவதற்குள்
ஆயிரம் கரும்புகளையும் தின்று தீர்த்தார். அத்துடன் தும்பிக்கையை நீட்டி பாவாஜியை எழுப்பி
ஆசிர்வாதம் செய்தார். பின்னர் பிளிறினார்.
நிலவறையில் யானையின் பிளிறல் சப்தம் கேட்டதும், காவலர்கள் ஓடி வந்து
பார்த்தனர். கரும்பு முழுமையாக காலியாகி விட்டிருந்தது. ""குறுகிய வாசல்
கொண்ட அந்த நிலவறைக்குள் யானை எப்படி புகுந்தது? இதென்ன ஆச்சரியம்,'' என அவர்கள் தங்களுக்குள்
பேசிக்கொண்டனர்.
உடனடியாக கிருஷ்ணதேவராயரிடம் சென்று, ""அரசே! கேளுங்கள்.
பாவாஜியை அடைத் திருந்த நிலவறைக்குள் ஒரு யானை எப்படியோ புகுந்திருக்கிறது. அது எப்படி
உள்ளே வந்தது என்பதை நாங்கள் அறியமாட்டோம். ஆனால், நிகழ்ந்திருப்பது நிச்சயமாக அதிசயம்.
அங்கிருந்த ஒரு வண்டி கரும்பும் காலியாகி விட்டது,'' என்றனர்.
தேவராயர் அவசர அவசரமாக நிலவறைக்குள் வந்தார். பாவாஜியை அணைத்துக் கொண்டார்.
""பாவாஜி! தாங்கள் சொன்னது நிஜமே! உங்களை விட உத்தமர் உலகில்
இல்லை. அந்த சீனிவாசனே யானையாக வந்து கரும்புகளை உங்களுக்காக தின்றிருக்கிறார் என்றால்,
உங்கள் இருவரிடையே உள்ள நட்பை என்னவென்று புகழ்வேன்! எங்களை மன்னிக்க வேண்டும். இனி,
நீங்களே இந்தக் கோயிலின் அதிகாரி. கை சுத்தமானவர்களே கோயிலில் அதிகாரியாக இருக்க தகுதியுடையவர்கள்,''
என்றார்.
பாவாஜியும் அரசரின் வேண்டுகோளை ஏற்று, ஏழுமலையான் கோயிலின் நிர்வாக
அதிகாரியானார். ஏழுமலைவாசனுக்கு தினமும் பணிவிடை செய்தார். அவரது நினைவாக திருமலையில்
கோயிலுக்கு தென்புறம் ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த மண்டபத்தை தரிசித்து
செல்கிறார்கள். மலை உச்சியில் பாலாஜியும், பாவாஜியும் விளையாடிய மண்டபம் இருக்கிறது.
ஏழுமலையானை எல்லாருமே "பணக்கார சுவாமி' என்பர். ஆனால், அவர் கடன்காரர்.
அதுமட்டுமல்ல, எளிமையையே அவர் விரும்புவார்.
திருப்பதி அருகிலுள்ள சுத்தவாகம் என்ற கிராமம் உள்ளது. அங்கு தன் மனைவி
மாலினியுடன் வசித்த பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி, பானைகள் செய்து விற்று வந்தார்.
அவர் ஏழுமலையானின் தீவிர பக்தர். மண்ணால் செய்யப்பட்ட புஷ்பங்களைத் தயாரித்து, தன்
வீட்டில் இருந்த வெங்கடாஜலபதி சிலைக்கு அணிவித்து வழிபட்டு வந்தார். அவரது நிஜ பக்தியைப்
பாராட்டும் விதத்தில் ஏழுமலையான் அந்த மண்சிலையில் பிரசன்னமானார்.
""பீமனே! உன் பக்தி அபரிமிதமானது. என் கோயிலில் இனி எனக்கு
மண்பாண்டத்திலேயே நைவேத்யம் செய்ய வேண்டும்,'' என்று அருளியதுடன் தேவலோகத்தில் இருந்து
விமானத்தை வரவழைத்து அந்த தம்பதியரை வைகுண்டத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஏழுமலையான் குடியிருக்கும் மலையும் சிறப்பு மிக்கது. ஆதிசேஷன் வடிவத்தில்
இம்மலை இருப்பதால் "சேஷாசலம்' என்றும், அந்த மலையில் வேதங்கள் இருப்பதால்
"வேதாசலம்' என்றும், பூலோகத்திற்கு இந்த மலையைக் கருடன் கொண்டு வந்ததால்
"கருடாசலம்' என்றும், விருக்ஷன் என்ற அசுரன் இங்கு மோட்சம் பெற்றதால் "விருக்ஷõத்ரி'
என்றும், அஞ்சனாதேவி தவம் செய்து அனுமனைப் பெற்றெடுத்த தலம் என்பதால் "அஞ்சனாத்ரி'
என்றும், மகிழ்ச்சி தரும் மலை என்பதால் "ஆனந்தகிரி' என்றும், பாவங்களைப் போக்கும்
மலை என்பதால் "வேங்கடாசலம்' என்றும் அழைக்கப்படுகிறது.
ஏழுமலைவாசனை வணங்குபவர்களின் பாவம் நீங்கும். இந்த சரிதத்தைப் படித்தவர்களின்
இல்லங்களில் செல்வம் பெருகும். ஓம் நமோ நாராயணாய! கோவிந்தா! கோவிந்தா!
—முற்றும்
நன்றி - தினமலர்