வியாழன், 20 டிசம்பர், 2007

திருப்பாவை ஒரு வேள்வி - முக்கூர் லக்ஷ்மீ நரசிம்மாச்சாரியார்

பொறுமையே உருவானவர் பூமிப்பிராட்டி. நாம் செய்யும் தவறுகளை பகவானிடத்திலே சொல்ல மாட்டாளாம். நாம் செய்யும் நல்ல காரியங்கள் அவை சிறியவையானால் கூட அதைப் பெரிசுபடுத்தி அவனிடத்திலே சொல்வாளாம். அவ்வளவு காருண்யம் நம்மிடத்திலே அவளுக்கு!

எம்பெருமான் பூமாதாவைப் பார்த்து, "இப்போது நீ போய் கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்லி, உலகத்தில் உள்வர்களைத் திருத்துவாயா?" என்று கேட்டார்.

"அதற்குத்தானே காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் சுவாமி!" என்றாளாம் பூமாதா. முன்னதாக மஹாலக்ஷ்மி முடியாது என்று சொன்ன பொறுப்பை பூமாதா உடனே ஏற்றுக் கொண்டுவிட்டாள். அதற்கு சில காரணங்கள் உண்டு. பகவான் மகாலக்ஷ்மியிடம் கேட்ட போது, தான் ராமாவதாத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் பட்ட தொல்லைகளைக் காரணம் காட்டி பூமியில் அவதாரம் எடுக்கும் பொறுப்பை மறுத்துவிட்டாள்.

"நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்" என்று முந்தானையிலே போட்ட முடிச்சோடு சொல்கிறாளாம்.

எப்போது போட்ட முடிச்சு அது? வராஹ அவதாரத்திலே, வராஹத்தின் மூக்கில் மேலே உட்கார்ந்திருந்த போது அவன்(பகவான்) சொன்ன மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.

அவன் திருவடியிலே மலரிட்டு அர்ச்சனை செய்யவேண்டும்.அவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும்.அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும்.என்ற மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுக்கள்.

இப்போதே நீங்கள் போகச் சொன்னாலும் சித்தமாயிருக்கிறேன் என்றாள் பூமாதேவி. "எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்?" என்றார் பகவான்..

"உங்களுடைய அனுக்கிரஹம் உதவும்" என்று புறப்பட்டுவிட்டாள் தேவி. விஷ்ணு சித்தரின் மகளாய் வந்து அவதரித்தாள். நம் திராவிட தேசத்துக்கே அந்த அவதாரம் பெருமை சேர்த்தது.

கல்பத்தின் ஆதியிலே கேட்ட வராஹ மூர்த்தியினுடைய வாக்கைத் தானே எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக துளவி வனத்திலே அவதரித்தாள் பூதேவி. பிறக்கும்போதே மேன்மையுடைவளாய், சுவாசனையுடன் ஆர்பவித்தாள். இருமாலை கட்டினாள். ஒரு மாலை பாமாலை, ஒரு மாலை பூமாலை. ஒன்றைப் பாடிச் சமர்ப்பித்தாள். மற்றதைச் சூடிச் சமர்ப்பித்தாள். சூடிக் கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றாள்.

திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள். அவற்றில் முதல் பத்து "அவன் திருநாமத்தைச் சொல்லு என்று உணர்த்துகின்றன". இரண்டாவது பத்து, "உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப் பாரு " என்று சொல்கின்றன. ஆக வராஹ மூர்த்தியினிடத்திலே அன்று கேட்ட மூன்று விஷயங்களை முப்பது பாசுரங்களைய்ப் பாடி ஆண்டாள் அவதாரத்திலே எடுத்துக் காட்டினாள்.

திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யக்ஞம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது. வராஹ மூர்த்தியினிடத்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.

வேள்வி-யக்ஞம் செய்வதற்கு கபாலம் என்றொரு பாத்திரசாதனம் உண்டு. அதிலே புரோடாசத்தை வைத்து நெய்யைத் தடவி சமர்ப்பிப்பார்கள். ஆண்டாள் பண்ணிய திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம். ஆசார்ய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.

யக்ஞம் பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான எம்பெருமானை °தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.

திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன் இல்லையா? ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனை துதிக்கிறார் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

"ஒங்கி உலகளந்த உத்தமன்" என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள். "அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த.." என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்கரமாவதாரத்தைப் பாடுகிறாள்.

"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி" என்று மறுபடியும். இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள்.

ஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, "நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா!" என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் செய்துக் கொண்டாள்.

ஆண்டாள் அழைத்தாள் என்று வந்து குதித்த பெருமான், ஸ்ரீவில்லிப்புத்தூரிலே மடிந்த திருவடியோடு காட்சி தருகிறான்.

பெரியாழ்வாரோ, கன்னிகாதானம் செய்து கொடுத்துவிட்டு அழுகிறார்! "ஒரு பெண்ணைப் பெற்றேன். அவளைச் செங்கண்மால் கொண்டு போனான்.. நான் என்ன செய்வேன்.." என்று அவருக்கு வேதனை.

ஆனால் ஆண்டாள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாள். அப்படிச் சேர்ந்ததில் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டல் இருக்கிறது. வராஹ மூர்த்தி சொன்னதை அனுசரித்து அவள் அவனை அடைந்தது போல நாமும் அவனை அடையலாம். அவன் நமக்குப் பதி.. நாம் அவனுக்கு பத்னி எனற பாவத்துடன் உத்தமமான சரணாகதி மார்க்கத்தைக் கடைப்பிடித்தோமானால் நாமும் அவனை அடையலாம்.!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக