திங்கள், 15 டிசம்பர், 2008

மாதங்களில் நான் மார்கழி

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளார். மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து தீபங்கள் ஏற்றி, இறைவனுடைய புகழைப் பாடி வீதிவலம் வந்து, பின்பு ஆலயம் சென்று பரம்பொருளை வழிபடுவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும்.

டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி செவ்வாயன்று மார்கழி மாதம் தொடங்குகிறது. அதற்கு முதல் நாள் கார்த்திகை சோமவாரம். இது சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்று பல கோயில்களில் பரமேஸ்வரனுக்கு சங்காபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் விளக்கேற்றுவது தொன்றுதொட்டு வரும் பழக்கம். கார்த்திகை மாத சோமவாரம் முடிந்த மறுதினமே மார்கழி மாதம் ஆரம்பமாவது இந்த ஆண்டின் தனிச்சிறப்பு. மார்கழி மாதச் சிறப்புகள் பற்றியும், அம்மாதத்தில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பாடப்படுவதும், சொற்பொழிவாளர்களால் பேசப்படுவதுமான திருப்பாவை, திருவெம்பாவையைக் குறித்தும் சில தகவல்களை இக்கட்டுரையில் காண்போம். ""வருடங்களை சூரியனை வைத்துக் கணக்கிடும் போது "ஸௌர மாதம்' என்றும், சந்திரனை வைத்துக் கணக்கிடும் போது "சாந்த்ர மாதம்' என்று இரண்டு விதமாகக் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் வெகு காலங்களாக சாந்த்ர மாத வழக்கே இருந்து வருவதால் மாதத்தை "திங்கள்' என்று அழைக்கும் வழக்கம் உள்ளது'' என்று காஞ்சிப் பெரியவர் கூறியுள்ளார். ஸௌர மாதம் ராசியைக் கொண்டு குறிப்பிடப்படுவதால் மார்கழி மாதத்தை "தனுர் மாதம்' என்றும் அழைக்கின்றோம். தனுர் மாதம், தேவதைகளுக்கு சூர்யோதய காலம். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியனுடைய உத்தராயணம்; அது தேவர்களுக்குப் பகல் பொழுது. ஆடி முதல் மார்கழி வரையில் சூரியனுடைய தக்ஷிணாயனம்; அது தேவர்களுக்கு இரவு நேரம். நமக்கு அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை பிரம்ம முகூர்த்தம். கடவுள் வழிபாட்டிற்கு அது சிறந்த நேரம். அதே போன்று தேவர்களுக்கு மார்கழி முழுவதும் பிரம்ம முகூர்த்தம். ஆதலால் மாதங்களில் மார்கழி மிகச் சிறந்தது. சூரிய உதயத்தில் செய்யும் காரியங்கள் அதிக பலனைத் தருகின்றது. வருடத்தை நான்கு பாகமாகப் பிரித்தால் உத்தராயணத்திற்கு முந்திய உஷத் காலத்தில் மார்கழி மாதம் வருகிறது. அம்மாதத்தில் விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும் (ஏன்? எல்லா நாட்களிலுமே சூர்யோதயத்திற்கு முன்பு எழுந்திருப்பது உடலுக்கு நன்மை தரும்.) ஆகவேதான் ""வைகறைத் துயிலெழு'' என்ற பழமொழி வழங்கி வருகிறது. மார்கழி மாதத்தில்தான் சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை, விஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு விழாக்களும் வருகின்றன. இவை சைவ-வைணவ ஒற்றுமையைக் காட்டுகின்றன.


திருப்பாவை ஆண்டாள் தனது முதல் பாடலில், ""மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்'' என்று தொடங்குகின்றார். "மார்கழி மாதம் விடியற்காலை பறவைகள் பாடுகின்றன. ஆனைச் சாத்தன் என்னும் பறவை சப்தமிடுகிறது. கீழ்வானம் வெளுத்துவிட்டது. மாடுகள் மேயச் சென்றுவிட்டன. ஆய்ச்சியர்கள் தயிர் கடையும் சப்தம் கேட்கிறது. துறவியர்கள் ஒலிக்கும் சங்கொலி கேட்கின்றது. பனிப் பொழிவு நிறைந்த மாதம்' எனப் பல செய்திகளை விளக்குகின்றார். பின்பு நான்காவது பாடலில், ""நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்'' என்று நீராடுதல் பற்றிக் குறிப்பிடுகின்றார். நதியில், குளத்தில் குளிப்பது, அதுவும் விடியற்காலையில் குளிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். அடுத்து நல்ல இல்வாழ்க்கை வேண்டி "பாவை நோன்பு' நோற்கும் பெண்கள் செய்யத் தக்கன எவை, செய்யத் தகாதவை எவை என்று பட்டியலிட்டுக் காண்பிக்கின்றார் ஆண்டாள். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் சிறப்பானவை ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம். ஆண்டாள், கிருஷ்ணாவதாரத்தில் கோகுலத்தில் கோபியர்கள் கண்ணனை வேண்டி நோற்ற நோன்பினைக் கலியுகத்தில் வில்லிபுத்தூரில் நடத்திக் காண்பிக்கின்றார். அவர் திருப்பாவையின் முப்பது பாடல்களிலும் கண்ணனின் பிறப்பு, அவனுடைய லீலைகள், அவனுக்குள்ள பல நாமங்கள், அவன் முன்பு எடுத்த அவதாரங்கள் முதலியவைகளைக் கூறுகின்றார். ஆயர் குலத்தில் பிறந்தவன், யமுனைத் துறைவன், வடமதுரை மைந்தன், தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன், புள்ளின் வாய் கீண்டவன், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன், கன்று குணிலா எறிந்தவன், வங்கக் கடல் கடைந்தவன் என்று கண்ணனின் பெருமைகளைப் பலவாறு பாடுகிறார். மாமாயன், கேசவன், மாதவன், முகில் வண்ணன், கண்ணன், கோவிந்தன், நாராயணன், வைகுந்தன் என்று திருமாலின் பல நாமங்களைக் கூறுகின்றார். "ஏழேழ் பிறவிக்கும் உன்னுடைய அடிமையாகித் தொண்டுகள் செய்ய அருள் புரிவாயாக!' என வேண்டுகின்றார். இப்ர்படிப்பட்ட பெருமைகள் உடைய திருப்பாவையை மார்கழி மாதத்தில் ஓதி மகிழ்ந்தால், நமது தீவினைகள், "தீயினில் தூசாகும்' என்பதில் ஐயம் இல்லை. திருவெம்பாவை திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி உள்ளிட்ட திருவாசகத்தைப் பாடிய மாணிக்கவாசகர், மதுரைக்கு அருகில் "வாதவூர்' என்னும் தலத்தில் அவதரித்தார்; பாண்டிய மன்னனின் முதலமைச்சராகப் பணி புரிந்தார்; திருப்பெருந்துறை என்னும் தலத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். 

மாணிக்க வாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது "திருவெம்பாவை' பாடப் பெற்றது. திருவாசகத்திற்கு நடுநாயகமாய் விளங்குவது திருவெம்பாவை. "எம்பாவாய்' என்னும் தொடர்மொழி, அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்று சேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வபூததமனி, பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரௌத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும். ஈசனுடைய அடியார்களாகிய பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், மாலும் நான்முகனும் காணா மலையான், சிவன், முன்னைப் பழம் பொருள், தீர்த்தன், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை "திருவெம்பாவை' விளக்குகிறது. அவர்களுடைய வேண்டுகோள்தான் என்ன? உன்னுடைய மெய்யன்பர்களை எங்களுக்கு கணவனாகத் தர வேண்டும்; நாங்கள் இருவரும் உங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களுடைய பிரார்த்தனை. ஆக "சிவத்தொண்டு' புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. மாணிக்க வாசகரால் திருப்பெருந்துறையில் பாடப் பெற்றது திருப்பள்ளியெழுச்சி. இதன் பத்து பாடல்களும் இறைவனுடைய பஞ்ச கிருத்தியங்களில் திரோதான சுத்தி (மறைத்தல்) என்ற செயலைக் குறிக்கின்றது. "பூங்குயில்கள், கோழிகள், மற்ற பறவைகள், வீணை, யாழ் இவற்றின் இசை, வேத மந்திரங்கள், துதிப்பாடல்கள் முதலியவை கேட்கின்றன. உத்தரகோச மங்கை, திருப்பெருந்துறை முதலிய தலங்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானே! எவராலும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளிமையானவனே! முந்திய முதல் இறுதியுமானவனே! அடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளும் பரம்பொருளே! எங்களுடைய குற்றங்கள் எல்லாம் நீக்கி, இந்தப் பிறவியை அறுத்து எங்களை ஆண்டுகொள்ள பள்ளி எழுந்தருளாயே!' என்று திருப்பள்ளி எழுச்சியில் போற்றிப் பாடுகின்றார் மணிவாசகப் பெருமான். திருப்பாவை பாடிய ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும், திருவெம்பாவை ஆசிரியர் மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூரிலும் அவதரித்தனர். இந்த இரண்டு தலங்களுமே பாண்டிய நாட்டைச் சேர்ந்தவை. ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருடன் ஐக்கியமானார். மாணிக்கவாசகர் தில்லை எனப்படும் சிதம்பரத்தில் நடராஜருடன் ஒன்று சேர்ந்தார். இவை இரண்டும் சோழநாட்டுத் தலங்கள். திருப்பாவை, திருவெம்பாவை வழி நடந்து இறை அருள் பெறுவோமாக!

2 கருத்துகள்:

  1. மிக நல்ல விளக்கங்களுக்கு நன்றி... ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்னர் ஏன் "மாதங்களில் நான் மார்கழி" ஆக இருப்பதாக கூறியிருக்கார்? இதற்கான சரியான விளக்கம் தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலக் கணக்கில் நம் ஒரு வருட காலம் தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களின் பகல்; ஆடி தொடங்கி மார்கழி வரை அவர்களின் இரவு. ஆக மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம்; ஆடி மாதம் தேவர்களின் மாலை நேரம். தேவர்களுக்குப் புனிதமான இந்த காலங்களில் இறைவழிபாடு செய்தால் மனிதர்களுக்கும் நலம் என்பதால் அவ்விரண்டு மாதங்களையும் தெய்வ வழிபாட்டிற்காக என்று சிறப்பாக வைத்தார்கள் நம் முன்னோர்.

      மார்கழி, ஆடி இவ்விரண்டு மாதங்களிலும் தேவர்களின் பிரம்ம முஹூர்த்தமான மார்கழி மாதம் மிகச் சிறப்பானது. ஒரு குழுவில் எதுவெல்லாம் சிறப்பானவையோ அவற்றை எல்லாம் தன் வடிவாக கண்ணன் கீதையில் சொல்லிக் கொண்டு வரும் போது தான் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்கிறான்.

      நன்றி - கூடல்

      நீக்கு