வியாழன், 30 ஆகஸ்ட், 2012

தானே முறிந்த தனுசு

மிதிலையே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. திடுக்கென்று ஒரு லேசான அதிர்ச்சியுடன் மக்கள் மனம் பூராவும் ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. எதிர்பாராத வகையில் பனித்துளி ஒன்று திறந்த மார்பில் பட்டால் சிலிர்க்குமே, அந்த உணர்வு. இயற்கைக்கு முரணான இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது? ஒட்டு மொத்தமாக அனைத்து உயிரினங்களுக்குமே மனம் உற்சாகமாகத் துள்ளும்படியாகச் செய்தது எது?

அதற்குக் காரணமானவனான, அப்போது அந்த ஜனகபுரிக்குள் தன் பொற்பாதங்களைப் பதித்த, ராமனுக்கே அது தெரியாது. மாமுனிவர் விஸ்வாமித்திரர் முன்னே செல்ல, அவர் வழிகாட்டலில் அவருக்குப் பின்னால் அமைதியாக ஆனால், கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் ராமன். இவனுக்குப் பின்னால் சுற்றுமுற்றும் பார்த்தபடி, அண்ணனுக்கு எத்திசையிலிருந்தும் எந்தத் தீங்கும் நெருங்கிவிடாதபடி, பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தான் லட்சுமணன்.

அந்தப் பகலிலும் பளிச்சென்று ஒரு நிலவு தென்பட்டது ராமனுக்கு. சற்றே தலைதூக்கி, நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட அவனது பார்வையில் பட்ட அந்த நிலவும் சட்டென மேலும் ஒளிர்ந்தது. நான்கு விழிகளின் பார்வை சந்திப்பில் இரு மனங்கள் ஒன்றாகிவிட்ட அதிசயம் அங்கே நடந்தது. அதுதான் முதல் பார்வை. சந்திப்புகூட இல்லை. ஆனாலும், என்னவோ பூர்வ பந்தத் தொடர்புபோல மனங்கள் மட்டும் கலந்துவிட்ட அற்புதம் அங்கே நிகழ்ந்தது. அவள், பெண்மையின் இயற்கையில் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

ஆனாலும், உப்பரிகையிலிருந்தபடி அவள் அப்படிச் செய்ததால் அந்தத் தாழ்ந்த பார்வையும் அவனைச் சுற்றியே வேலியிட்டிருந்தது. சாலையில் தொலைதூரத்திலேயே நடந்து வந்து கொண்டிருந்த அவனைப் பார்த்தவளுக்கு அவன் நெருங்கி வரவர, அதனால் விரிந்த அவள் விழிகள் தாழ, அப்போதும் அவன் அவள் பார்வைக்குள்ளேயே சிறைபட்டிருந்தான்.

ராமனும் அவளுடைய பார்வை கொக்கியில் தன் பார்வை சிக்கிக் கொண்டுவிட்டதை அறிந்தும், அதிலிருந்து மீளமுடியாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். எல்லாம் அறிந்த முனிவரோ மெல்லிய புன்னகையுடன் வேகமாகவே போய்க் கொண்டிருந்தார். ராமனுக்கும் தவிப்புதான், அவருடைய அடி ஒற்றியே போக வேண்டியிருந்ததால் அவருடைய வேகம் அவனுக்கு மனவருத்தத்தைத் தந்தது. மெதுவாகப் போகமாட்டாரா இவர்? அந்த உப்பரிகையை வேகமாகக் கடந்து விடுவோம் போலிருக்கிறதே. கட்டாயப்படுத்தி பார்வையை விலக்கிக் கொள்ளத்தான் வேண்டுமா?

 தான் யாகம் மேற்கொள்ள முடியாதபடி இடையூறு செய்த மாரீசன், சுபாகு ஆகிய அரக்கர்களை அடக்கி, அவர்களை வீழ்த்துவதற்காகத்தான் தன்னை அவருடன் அழைத்து வந்திருந்தார் முனிவர் என்றே நினைத்திருந்த ராமன், அந்தச் செயல் முடிந்தபிறகு மீண்டும் அயோத்திக்குச் செல்லாமல் மிதிலைக்கு அவர் அழைத்து வந்ததற்கான காரணத்தை அறியமுடியாதிருந்தான். அது இப்படி ஒரு இனிய சந்திப்புக்காகத்தானோ? ஆனால், இந்த பார்வைப் பரிமாற்றம் மாலை பரிமாற்றத்தில் முடியுமா?

ஏக்கத்துடன், முனிவரின் வேகத்துக்கு ஈடுகட்டும் வகையில் தன் நடையை அவன் துரிதப்படுத்தினான். பின்னால் வந்து கொண்டிருந்த லட்சுமணன் அண்ணன் பார்வை பதிந்த இடத்தையும், நிலவில் பட்ட அந்த பார்வை, கயல்விழி காந்தமாகத் திரும்பி அண்ணனின் விழிகளிலேயே வந்து சேர்வதையும் கவனித்தான். உப்பரிகை மங்கையின் பார்வையில் தெரிந்த நாணம், அண்ணனின் மனம் கனிந்திருப்பதையும் அவனுக்கு உணர்த்தியது. அந்தக் கனிவு அவரது வாழ்க்கையை சுவைமிக்கதாகச் செய்ய வேண்டுமே என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டான். ஆனால், விஸ்வாமித்திரரின் நோக்கம்தான் என்ன?

மகரிஷி வருகிறார் என்று அறிந்ததும் ஜனகர் அரண்மனை வாயிலுக்கே ஓடோடி வந்து வரவேற்றார். முனிவருடன் வந்த இரு இளம் பிராயத்தினரையும் கண்டு திகைத்தார். ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசமாகத் திகழும் அந்த அழகன் யார்? அவனுக்குப் பின்னால் வரும் இளவல் யார்? முன்னே வருபவன் அப்படியே அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிடுகிறானே! ம்... இவன் முனிவரின் மாணவனாக மட்டுமே இல்லாமல் என்னுடைய மருமகனாகவும் ஆவானா? ஆனால், இவன் என் மருமகனாக வேண்டுமானால் என்னுடைய நிபந்தனையை இவன் நிறைவேற்ற வேண்டுமே, செய்வானா?

ஜனகர் கைகூப்பி வரவேற்க, தன் வழக்கமான, ஆரவார தோரணையுடன், அரண்மனைக்குள் நுழைந்தார் விஸ்வாமித்திரர். இளைஞர் இருவரும் அமைதியாக அவரைப் பின்தொடர்ந்தனர். சம்பிரதாய உபசரிப்புகள் எல்லாம் முடிந்தன.

முனிவர் கேட்டார். “ஜனகரே, உங்கள் மகள் சீதையை மணம் முடிக்க விரும்புபவனுக்கு நிபந்தனை ஒன்றை விதித்திருக்கிறீர்கள் அல்லவா?”
“ஆம், முனிவரே, இதுவரை பல தேசத்து மன்னர்களும் பிற இளைஞர்களும் வந்து முயன்று தோற்றுதான் போயிருக்கிறார்கள். நானும் உண்மையான வீரன் ஒருவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இனி நான் காத்திருக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்” என்று பதில் கூறிய ஜனகர், சற்றே ஆழமாக ராமனைப் பார்த்தார்.

அந்தப் பார்வையைப் புரிந்து கொண்ட விஸ்வாமித்திரர், “உன் மகளுக்கு முற்றிலும் பொருத்தமான ஒருவனைத்தான் நானும் அழைத்து வந்திருக்கிறேன்” என்று பதில் சொன்னபடி ராமனை நோக்கி முறுவலித்தார்.

ராமனுடைய உள்ளம் படபடத்தது. ஜனகரின் மகள் யார்? அவள் அந்த உப்பரிகைப் பெண்ணாகவே இருந்துவிட வேண்டுமே... அதுசரி, அது என்ன நிபந்தனை? இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அது தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு சாதனையாகத்தான் இருக்க முடியும். எப்படிப்பட்ட சவால் அது?

ஜனகரே அதை விளக்கினார்: “என்னிடம் எங்கள் மூதாதையர் வழிவழி வந்த அற்புதமான தனுசு ஒன்று உள்ளது. தெய்வ அனுக்ரகமாக என்னிடம் வந்து சேர்ந்த என் மகள் சீதை, அதேபோன்ற தெய்வ அம்சம் பொருந்திய ஒருவனைத்தான் மணக்க வேண்டும் என்று நான் கருதியிருந்தேன். அதனால்தான் மிகவும் புனிதமான இந்த சிவ தனுசில் நாணேற்றும் நாயகனுக்கே என் மகளை நான் மணமுடித்து வைப்பதாகத் தீர்மானித்தேன். இதுவரை பலரும் வந்து முயற்சித்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால், அந்த முயற்சிகளில் தெய்வீகம் இல்லை, அலட்சியமும், அகம்பாவமும், பேராசையும், தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பும்தான் இருந்தன. இந்தத் தீய குணங்களால் தம்முடைய இயல்பான வீரத்தையும், ஆண்மை திறத்தையும் அவர்கள் அனைவரும் இழந்து கேலிக்குரியவர்களாக ஆனதுதான் மிச்சம்.  இனியும் யாரேனும் வருவார்களா, தெரியவில்லை. காத்திருக்கிறேன்...”

“இந்த ராமன், அயோத்தி சக்கரவர்த்தி தசரதனின் மகன். இவனுக்குப் பின்னால் நிற்பவன், அவனுடைய  இளவல் லட்சுமணன். இவர்கள் இருவரும் அசகாயசூரர்கள்” -விஸ்வாமித்திரர் ஜனகரிடம் சொன்னார். “நான் முறையாக யாகம் நடத்த முடியாதபடி இடைஞ்சல் செய்த அரக்கர்கள் இருவரை வீழ்த்தியவர்கள். அதற்கு முன்னால் தாடக வனத்தில் அடாத செயல் புரிந்து, முனிவர்களையும், மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த தாடகையை தன் ஒரே அம்பால் சாய்த்தவன் இந்த ராமன். இந்த மென்மையான உடலுக்குள், கருணை ததும்பும் விழிகளுக்குப் பின்னால் இத்தனை பராக்கிரமம் புதைந்திருப்பதைப் பார்த்து நான் வியந்து மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியை உன்னுடனும் நான் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், அதுபோன்ற ஒரு சாதனையை இங்கும் ராமன் நிகழ்த்த வேண்டும். அது உன்னிடமுள்ள சிவதனுசில் நாணேற்றுவதாக இருந்தால் நான் பெரிதும் மகிழ்வேன்...”

“அது என்னுடைய பாக்கியம்’’ என்று சொல்லி ஆனந்தப்பட்டார் ஜனகர். “இப்போதே அந்த அரிய காட்சியை அனைவரும் காணுமாறு செய்வோம்.” இவ்வாறு சொன்ன ஜனகர் தன் படை வீரர்களை அழைத்தார். சைகை செய்தார். சிறிது நேரத்தில் பிரமாண்டமான தனுசு ஒன்று அவர்களால் தூக்கி வரப்பட்டது. ஒரு மேடை மீது வைக்கப்பட்டது.

அந்த வில்லைப் பார்த்து ராமன் மென்மையாகப் புன்னகைத்தான். பக்கத்திலிருந்த லட்சுமணன் வழக்கம்போல எதற்கோ அவசரப்பட்டான். முனிவரை நெருங்கி அவர் காதில் எதையோ கிசுகிசுத்தான்.

பளிச்சென்று கோபமானார் முனிவர். ‘‘இந்த தனுசை முறிக்க அண்ணன் எதற்கு? நானே செய்துவிடுவேனே! ஊராருக்கெல்லாம் என் அண்ணனின் பராக்கிரமத்தை இப்படி விளக்கலாமே, அதாவது, என்னாலேயே இந்த தனுசில் நாணேற்ற முடியுமானால், என் அண்ணனால் இன்னும் என்னவெல்லாமோ செய்ய முடியும் என்பதை என் செயல் மூலம் நிரூபிக்க விரும்புகிறேன்’’ என்ற அவனுடைய சொற்கள் அவரைக் கோபம் கொள்ள வைத்தன.

“மிதிலைக்குள் வரும்போது எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ராமனுக்குப் பின்னால்தான் நீ வந்து கொண்டிருந்தாய். வழியில், ராமன் உப்பரிகை மீது நின்றிருந்த ஆரணங்கை நோக்கியதையும், அவளும் இவனை நோக்கியதையும் கவனிக்கத் தவறிவிட்டாயா? அவள்தான் சீதை. அவளை மணக்க வேண்டியவன் ராமன்தான். அதற்கு அவன்தான் இந்த தனுசில் நாணேற்ற வேண்டும். விதியை விளக்க வேண்டுமானால், இந்த தனுசு ராமனால் மட்டுமே நாணேற்றப்படும். மற்றவர்கள் முயற்சி வீண் விரயம்தான். அந்த மற்றவர்களில் ஒருவனாக நீயும் ஆகிவிடாதே...” என்று சொல்லி எச்சரித்தார்.

தன்னுடைய அவசர புத்தியை வழக்கம்போல தானே நொந்து கொண்டான் லட்சுமணன். அண்ணனை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று தான் மேற்கொள்ள நினைத்த இந்த முயற்சி, தனக்கு அவமானத்தைத் தந்தாலும் பரவாயில்லை, ராமனுக்கு எந்த இழப்பையும் தந்துவிடக்கூடாது என்று நினைத்து அமைதியாக ஒதுங்கிக் கொண்டான்.

அவையே பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது. மிதிலாபுரி வீதிகளில் ராமன், முனிவருடனும் லட்சுமணனுடனும் வந்து கொண்டிருந்ததைப் பார்த்திருந்த மக்கள், ராமன்தான் தனுசில் நாணேற்றப்  போகிறான் என்பதை ஊகித்து பெரும் திரளாக அரசவையில் பார்வையாளர்கள் பகுதியில் வந்து நிறைந்தார்கள். ஒவ்வொருவர் கண்களிலும் துடிப்பு மின்னியது. ‘‘பேரழகன் இவன். நம் சீதைக்கு மிகவும் பொருத்தமானவன். இவன் வில்லை வெல்ல வேண்டும். நாணேற்றி நிறுத்த வேண்டும். நம் சீதையை மணக்க வேண்டும். இந்த நல்ல தருணத்திற்காகத்தான் இவனுக்கு முன் வந்தவர்கள் யாராலும் நாணேற்ற முடியவில்லை போலிருக்கிறது. அவர்கள் தோற்றதும்தான் இப்போது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! திண்ணிய தோளும், அகன்ற திருமார்பும் கொண்ட இந்த ஆணழகனுக்காகவே காத்திருந்தது போலிருக்கிறது...’’

ஜனகபுரி மக்களின் எண்ண ஓட்டம் இவ்வாறிருக்க, அந்தப்புரத்தில் சீதையின் உள்ளமும் உடலும் பதறிக் கொண்டிருந்தன. ‘‘என் விழிகளை சந்தித்தவன் சிவதனுசைக் கையிலேந்தப் போகிறான் என்று   தோழியர் சொன்னார்களே, அது உண்மையாக இருக்க வேண்டுமே... அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த தனுசு அவனது சிவந்த, பரந்த கைகளுக்குள் குழைந்து நிற்க வேண்டுமே...

குழைவதோடு, அவன் நாணேற்றும்போது மறுக்காமல், விரைக்காமல், விநயமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே... என் அன்பு சிவதனுசே, நான் பிறந்த நாள் முதல் உன்னை இந்த அரண்மனையில் பார்த்து கொண்டிருக்கிறேன். பாரம்பரிய வழக்கமாக உன்னை பூஜித்திருக்கிறேன். உன் பக்தையாக நான் உன்னை மலரிட்டு அலங்கரித்திருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே. என்னைக் கவர்ந்தவன் கைப்பிடிக்குள் இணக்கமாகிவிடு. அவனிடம் அடங்கிவிடு. என்னை உன் இளைய சகோதரியாக நினைத்துக்கொள். ஒரு அண்ணனாக, என் மனவிருப்பத்தை நிறைவேற்றி என் உயிரை நிலைக்கச் செய்...’’

தனுசும் ராமனைப் பார்த்தது. ‘‘இது சும்மா சம்பிரதாயம்தான் ராமா. உனக்குதான் சீதை என்ற தேவலோக பிராப்தம் தவறுமா என்ன?  சீதையை  அவளுடைய தகுதிக்குக் குறைந்தவன் எவனும் கரம் பற்றிவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தால் உருவாக்கப்பட்டதுதான் இந்தப் போட்டி. இதில் வெற்றி பெறுவதற்கென்றே நீ இருக்கும்போது, மற்றவர்கள் என்னை பற்றிடவும் நான் அனுமதிப்பேனோ..? அதனால்தான் யாரையும் என்னில் நாணேற்றிட நான் அனுமதித்ததில்லை. வா, ரகுகுல திலகா, தயாசாகரா, என்னை ஆட்கொள்...’’ என்று யாசித்தது.

ராமன் விஸ்வாமித்திரரைப் பார்த்தான். அவர் சம்மதமாய் தலையசைத்தார். தம்பி லட்சுமணனைப் பார்த்தான். அவன் சற்றே நாணப்பட்டு ஒதுங்கி நின்று சம்மதம் தெரிவித்தான். ஜனகரைப் பார்த்தான். அவர் கண்களில் பேரார்வத்துடன் மலர்ந்திருந்தார். தனுசைப் பார்த்தான். அதில் சிவ அம்சத்தைக் கண்டு கும்பிட்டான். ‘என் வெற்றிக்கு உதவுங்கள்’ என்று மானசீகமாகக் கேட்டுக் கொண்டான்.

சுற்றி நின்றிருந்த அனைவரும் படபடக்கும் இதயத்துடன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவைக்கு வரமுடியாத சட்டத்திற்கு உட்பட்ட பெண்கள் தத்தமது பகுதிகளில் அமர்ந்தபடி என்ன செய்தி வருமோ, ராமன் வெல்வானோ, சீதையைக் கரம் பிடிப்பானோ என்றெல்லாம் கண்களில் ஆர்வம் மின்ன ஆவலுடன் காத்து கொண்டிருந்தார்கள்.

தனுசைப் பார்த்து வணங்கிய தன் கரங்களைப் பிரித்தான் ராமன். தனுசின் நடுப்பகுதியைத் தன் இடது கையால் பற்றினான். அப்படியே தூக்கினான். மேடையிலிருந்து கீழே இறங்கினான். தனுசின் கீழ்ப் பகுதியை நாணின் ஒரு முனை பற்றியிருக்க அடுத்த முனையை இழுத்து மேல் பகுதியுடன் இணைக்க வேண்டும். கீழ்ப்பகுதி தரையில் சறுக்கி நழுவிவிடாதிருக்க, தன் வலது பாதத்தால் அதைப் பற்றிக்கொண்டான். இணைக்கப்பட வேண்டிய நாண் முனையை வலது கையால் எடுத்தான். மேல்நோக்கி இழுத்துச் சென்றான்.

தனுசின் மேல்பகுதி ராமனுடைய சிரசை தரிசித்தது. அவனுடைய முக அழகை ரசித்தது. இடுப்பு வரை அவனுடைய கம்பீரத்தைக் கண்டு பிரமித்தது. ஆனால், அவனது பாத அழகு எப்படி இருக்கும்? தன்னால் அந்த சௌந்தர்யத்தைப் பார்க்க முடியவில்லையே... ஆனால், கீழ்ப் பகுதிக்குதான் எத்தனை பெரிய பாக்கியம்! ராமன் தன் பாதத்தால் பற்றக்கூடிய பெரும் பேறு பெற்றிருக்கிறதே! இது அநியாயம். என்னில் ஒரு பகுதி என்னைவிட பெருமை அடைவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. சிரம் பார்த்து, முகம் பார்த்து, மார்பழகு கண்டு, இடுப்பு எழில் நோக்கினாலும் பாதத்தைச் சரணடையும் பக்குவம் எனக்கு இல்லை என்று நினைத்தானோ ராமன்?

மேல் பகுதிக்கு ஆதங்கம் தாங்கவில்லை. மாட்டேன், நானும் அண்ணலின் பாதம் பணிவேன். என்னையும் அவர் பாதம் ஸ்பரிசிக்க வேண்டும். எனக்கும் அந்தப் பேறு கிட்ட வேண்டும்... அப்படியே குனிந்தது மேல் பகுதி. கீழே... கீழே... குனிந்தது. ராமனின் பாதத்தைத் தானும் தொட்டுவிடும் வேட்கையில் குனிந்தது. தன்னை அவன் பாதம் தீண்டாவிட்டாலும், தானாக முயன்று தொட்டுவிட குனிந்தது...

நாண் பிடித்திருந்த ராமனின் வலது கரம் தயங்கியது. இன்னும் சற்று உறுதியாகப் பற்றினான். இழுத்தான்.

அவ்வளவுதான். படீர் என்ற பேரொலியுடன் இரண்டாக முறிந்து வீழ்ந்தது தனுசு. ஒன்றாக இருந்தபோது ராமனின் கரம் பற்றிய பேறு கொண்ட அந்த தனுசு, இப்போது இரண்டாகி அவன் பாதத்தைச் சரணடைந்திருந்தது.

அவையில் கரகோஷம், கடலலையாகப் பொங்கியது. தனுசை ராமன் எடுத்தது கண்ட அவர்கள், அடுத்த கணமே அது இற்றது கேட்டதும், பேரானந்தம் அடைந்தனர். தன் எண்ணம் எந்த இடையூறுமின்றி ஈடேறியதைப் பார்த்து ஜனகரும், அரச குடும்பத்தினரும் அளவிலா மகிழ்ச்சி எய்தினர்.

உப்பரிகையில் தன்னைப் பார்வையால் கவர்ந்தவன், தொடர்ந்து தன் மனதையும் கவர்ந்தவன், இப்போது தன் கரம் பற்றி வாழ்க்கையையும் கவர்ந்துவிட்ட பெருமையில் சீதை நாணச் சிவப்பு பூண்டாள். தனுசை முறித்தவன் உடனே அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சீதைக்கு மாலையிட வேண்டியிருந்ததால் சீதை அரசவைக்கு வரவழைக்கப்பட்டாள்.

சந்தோஷத்தால் கொந்தளித்துக் கொண்டிருந்த தன் அகத்தை முகம் காட்டிவிடுமோ, சுற்றியிருப்போர் பரிகசிப்பார்களோ என்ற நாணத்தில் தலை குனிந்தபடியே நின்றிருந்தாள் சீதை. ஆனால், தன்னைச் சுற்றி நிற்கும் தோழியர்களிலிருந்து தன்னை தனிப்படுத்திக் காட்டி, ராமனுடைய கவனத்தைக் கவர்வது எப்படி? இந்த யோசனையால் கையைப் பிசைந்தவளுக்கு அந்தக் கரங்களில் அணிந்திருந்த வளையல்கள் கை   கொடுத்தன. அந்த வளையல் அடுக்கை சரி செய்வதுபோல தன் கரங்களைக் குலுக்கினாள். கலகலவென சிரித்த வளையோசை கேட்டு தன் பார்வையைக் கூர்மையாக அந்தப்புரப் பெண்கள் கூட்டத்தை நோக்கித் திருப்பினான் ராமன்.

 பிற பெண்கள் தலை நிமிர்ந்து அடுத்து நடக்கப் போகும் இனிய நிகழ்ச்சியை அனுபவிக்கத் தங்களைத் தயார் செய்து கொண்டிருக்க, முன் வரிசையில் நடுநாயகமாக, லேசாக நடுங்கும் உடலுடன் நின்று கொண்டிருந்த சீதையை அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவள் தன்னைக் கவர்ந்த உப்பரிகைப் பெண்தானோ? அதை எப்படி அறிவது? தன் பார்வையை அவன் அந்த வளையல்கள் மீது செலுத்தினான். அகன்று, பளபளப்பாக ஜொலித்துக் கொண்டிருந்த அந்த வளையல்கள், தலைகுனிந்தபடி நின்றிருந்த அவளுடைய முகத்தை பிரதிபலித்து ராமனுக்கு அடையாளம் காட்டியன! நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ராமன்.

ஜனகர் மலர் மாலையை எடுத்துக் கொடுக்க, ராமன் சீதைக்கு மாலையிட்டான்.

அயோத்திக்குத் தகவல் போயிற்று. பெருமகிழ்ச்சியடைந்த தசரதன் தன் மனைவியர் மற்றும் பரிவாரங்களுடன் மிதிலாபுரிக்கு வந்தான். ராமன் - சீதை திருமணம் இனிதே நடந்தேறியது.

1 கருத்து:

  1. Your articles are extremely good, very fruitful for a better way of living and absolutely informative sir. I am sharing so many posts without your permission!! I am just speechless at the numerous articles of your astounding collection! God bless you and your family for endless years for doing such an enormous task, that takes huge efforts!!

    பதிலளிநீக்கு