மார்கழி நோன்பு பண்டைக் காலத்தில் சிறந்து விளங்கியது என்பதற்கும் அதன் மூல வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் திருப்பாவை சிறந்த கருவியாக அமைந்துள்ளது. மார்கழி நோன்பிற்கு வேத விதியில்லை என்றாலும் ஆன்றோர் கைக்கொண்டு ஒழுகுவதே அதற்கு மூலம் என்பது பெரியவாச்சான்பிள்ளையின் கருத்தாகும். இக்கருத்தை வலியுறுத்த அவர் “மேலையர் செய்வனகள்” என்ற ஆண்டாள் அருளிச் செய்ததை எடுத்துக்காட்டுகிறார். மேலும் அவர் கோகுலத்திலுள்ள ஆயர்கள் மழை பெய்யாக் குறையை நீக்க வேண்டிக் கண்ணனைத் தலைமையாக நியமித்துத் தங்கள் பெண்களை மார்கழி நோன்பு நோற்கச் சொல்ல, அவர்கள் அதற்கிசைந்து பெருமானையும் தோழிமார்களையும் அதிகாலையில் துயிலுணர்த்தி அழைத்துக் கொண்டு யமுனா நதியில் மார்கழி நீராடி நோன்பு நோற்று கண்ணபிரானை நாயகனாகப் பெறும் தங்கள் மனோரதத்தை அடையப் பெற்றார்கள் என்பதே ஆண்டாள் அருளிய திருப்பாவையின் வரலாறு என்று கருதுகிறார். ஆனால் அவர் கருத்துக்கு ஆதாரமான நூற்பிரமாணம் அவரால் குறிப்பிடவில்லை . ஆயினும் ஸ்ரீமத்பாகவதம் தசமஸ்கந்தம் 22ம் அத்தியாயத்தில், கண்ணன் கோபியர் ஆடைகளைக் கவர்ந்த கதையைக் கூறும் தொடக்கத்தே மார்கழி நோன்பு பற்றிய செய்திகள் பின்வருமாறு கூறப்படுகின்றன.
கோகுலத்துப் பெண்கள் மார்கழி மாதத்தில் விடியற்காலத்தில் துயிலெழுந்து யமுனா நதியில் நீராடிக் கார்த்தியாயினி விரதத்தைத் தொடங்கினர். அவர்கள் ஈர நுண்மணலால் கார்த்தியாயினி தேவியின் உருவத்தை அமைத்து பூஜை செய்து, “நந்தகோபன் மைந்தனாகிய கண்ணனை எங்களுக்கு நாயனாக அருள்வாயாக” என்று வேண்டினர். இவ்வாறு அவர்கள் கண்ணனை நினைத்துக் கொண்டு ஒருமாத காலம் பூஜை செய்து விரதத்தை விடாமல் நடத்தி வந்தனர். அக்கோபியர் ஒரு நாள் யமுனையில் நீராட விடியற்காலையில் துயிலெழுந்து அவரவர் தோழிமார்களின் பெயரைச் சொல்லி அழைத்து ஒருவருக்கொருவர் கையைக் கோத்துக் கொண்டும் கண்ணன் புகழ்களைப் பாடிக் கொண்டும் நடந்து சென்றனர். அவர்கள் யமுனையின் ஒரு துறையை அடைந்து, ஆடைகளை அவிழ்த்து வைத்துவிட்டு கண்ணன் புகழைப்பாடிக் கொண்டே நீராடினர். கண்ணன் அப்பெண்களின் விரத பலத்தை அளிப்பதற்காக அங்கு வந்து, அம்மகளிர் ஆடைகளை எல்லாம் கவர்ந்து கொண்டு பக்கத்திலிருந்த கடம்ப மரத்தில் ஏறி நின்றான். நீராடி முடித்த பெண்கள், ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் கண்ணனிடம் வந்து ஆடைகளை தந்தருளுமாறு வேண்டினர். கண்ணனும், சதிகளாகிய நீங்கள் எந்த நோக்கத்தைக் கொண்டு கார்த்தியாயினி விரதத்தை நடத்தினீர்களோ அந்த மனோரதம் இன்றிரவில் என்னோடு கூடி விளையாடுவதால் நிறைவேறும் என்று சொல்லியருளினான். இவையே அச்செய்திகள்.
திருப்பாவை வரலாறு
இப்பாகவதச் செய்தியையும் பெரியவாச்சான் பிள்ளை கூறும் திருப்பாவை வரலாற்றையும் கூட்டி நோக்குமிடத்து, நாடு வளம் குன்றிய போது மழை பெய்யவும், உத்தம நாயகர்களை அடைந்து இம்மை நலமெய்தவும் வேண்டிக் கன்னிப் பெண்கள் கார்த்தியாயினி தேவியைக் குறித்து மார்கழி மாதம் முழுவதும் நோற்பதும், அதன் பொருட்டு அவர்கள் வைகறையில் துயிலெழுந்து ஒருவரையொருவர் உறக்கத்தினின்றும் எழுப்பிச் சென்று ஆற்றை அடைந்து நீராடி தேவியின் படிமம் அமைத்துப்பூசை செய்வதும் பண்டை மரபு என்பது பெறப்படும்.
மேலும் திருப்பாவை பாசுரங்களின் ஈறுகள் தோறும் வரும் “எம்பாவாய்” என்ற தொடர் ஈர நுண்மனலால் அமைக்கப்பட்ட தேவியின் உருவத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஏனெனின் பாவை என்பது “கொல்லிப்பாவை” என்புழிப் போல ஈண்டு பெண் தெய்வத்தின் பழமையைக் குறிப்பதாகும். "நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள்" நம் பாவைக்கு சாற்றி நீராடினால் “பிள்ளைகளெல்லோரும் பாவைகளம் புக்கார்” என வரும் திருப்பாவைத் தொடர்களிலும் படிவம் ஒன்று வைத்து வணங்கும் குறிப்புத் தோன்றுதல் காணலாம். ஆனால் “பாவை” என வரும் இடங்களிலெல்லாம் உரையாளர்கள் நோன்பு என்றே பொருள் கொண்டனர். நோன்பு என்ற பெயரில் “பாவை” என்ற பெயர் வேறிடத்து வழங்குதல் அருமை. அதனால் அப்பொருளும் வணங்கப் பெற்ற படிவும் அடியாக வந்ததென்றே கொள்ளத்தக்கது.
திருமால் பக்தியிற் சிறந்த ஆண்டாள், தேவி விரதத்தை மூலமாகக் கொண்டு திருப்பாவை பாடினார் என்று சொல்லுவது பொருந்துமா என்று சிலர் ஐயுறக் கூடும். கண்ணனை தம் நாயகனாக அடைவதற்குக் கோபியர் கார்த்தியாயினி தேவியை வணங்கின செய்தியையே ஆண்டாளும் கொண்டு கூறினர் என்பதில் இழுக்கு ஒன்றுமில்லை . கண்ணனை தன் கணவனாக அடைய வேண்டி, “உன்னையும் உம்பியையும் தொழுதேன்” எனக்காமனையும் அவன் தம்பியாகிய சாமனையும் கூட தொழுத ஆண்டாள் தேவியை வணங்கி அப்பெருமானைப் பெற முயன்ற கோபியர் செய்தியைக் கூறியதில் குற்றமில்லை. மார்கழி நோன்பும், பாவை வரலாறும் அறிந்து பரமனை தொழுவோம். பரமனடி இணைவோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நன்றி - சப்தகிரி ஜனவரி 2017