எட்டாவது ஸ்கந்தம் – ஒன்பதாவது அத்தியாயம்
(மோஹினி ரூபியான பகவான் அஸுரர்களை மதிமயக்கி, அம்ருத கலசத்தை வாங்கித் தேவதைகளுக்கு அம்ருதம் கொடுத்தல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருவர்மேல் ஒருவர்க்குள்ள ஸ்நேஹத்தைத் (நட்பைத்) துறந்து, ஒருவரையொருவர் தடுத்து, பழித்து, அம்ருத கலசத்தைத் திருட்டுத்தனத்தினால் பறித்துக்கொண்ட அஸுரர்கள், அவ்வாறு அழகமைந்த பெண்மணி வருவதைக் கண்டார்கள். அவ்வஸுரர்கள் அவளைக் கண்டதும் “ஆ! இதென்ன அழகு? ஆ! இதென்ன ஒளி? ஆ! இவளுடைய யௌவன (இளம்) வயது புதிதாயிருக்கின்றது” என்று மொழிந்து அப்பெண்மணியை எதிர்கொண்டு சென்று, காமவிகாரம் (காதல், ஆசை) விளையப்பெற்று அவளை இவ்வாறு வினவினார்கள்.
அஸுரர்கள் சொல்லுகிறார்கள்:- தாமரையிதழ் போன்ற கண்களுடையவளே! நீ யார்? எங்கிருந்து வந்தாய்? நீ என்ன செய்ய விரும்புகின்றாய்? நீ யாருடையவள்? அழகிய துடைகளுடையவளே! இதைச் சொல்லுவாயாக. நீ எங்கள் மனத்தைக் கலக்குகின்றாய். தேவதைகள், அஸுரர், ஸித்தர், கந்தர்வர், சாரணர் இவர்களில் எவராலும் நீ தீண்டப்படாதவள் (தொடப்படாதவள்) என்று எங்களுக்குத் தோன்றுகின்றது. யோகீச்வரர்களும் கூட உன்னைத் தீண்டியிருக்க (தொட்டிருக்க) மாட்டார்கள். இனி, மனுஷ்யர்கள் உன்னைத் தீண்டுவதற்கு (தொடுவதற்கு) இடமேயில்லை. ஆகையால், நீ ஒருவர்க்கும் வாழ்க்கைப்பட்டவளல்லள். அழகிய புருவமுடையவளே! ஈச்வரன் எங்களிடம் மன இரக்கமுற்று எங்களுடைய ஸமஸ்த இந்திரியங்களையும் மனத்தையும் களிக்கச்செய்ய விரும்பி, உன்னை அனுப்பினானோ? ஆம். இதுவே நிச்சயம். புகழத்தகுந்த மேன்மையுடையவளே! அம்ருதமாகிற ஒரு வஸ்துவைக் குறித்துப் பொறாமையினால் ஒருவர்மேல் ஒருவர் த்வேஷத்தை (வெறுப்பை) ஏற்றுக் கொண்டிருக்கிற ஜ்ஞாதிகளான (பங்காளிகளான) எங்களுக்கு, நீ ஸந்தியை (ஒற்றுமையை) விளைப்பாயாக. அழகிய இடையுடையவளே! எங்களுக்கு இந்த அம்ருதத்தைப் பங்கிட்டுக் கொடுப்பாயாக. நாங்கள் கச்யபருடைய பிள்ளைகள்; உடன் தோன்றினவர்கள். இப்பொழுது நாங்கள் சண்டைசெய்யும் பொருட்டுப் பௌருஷத்தை (ஆண்மையை, வீரத்தை) ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குச் சண்டை நேராதிருக்குமாறு, ந்யாயத்தின்படி, இந்த அம்ருதத்தைப் பங்கிட்டுக் கொடுப்பாயாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மாயையினால் மடந்தையின் (பெண்) உருவம் தரித்த பகவான், அஸுரர்களால் இவ்வாறு தூண்டப்பட்டு, சிரித்து அழகிய கடைக்கண்களால் அவர்களை நோக்கிக்கொண்டே, இவ்வாறு மொழிந்தான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- கச்யபருடைய புதல்வர்களே! பரமபுருஷனை விரும்பும் தன்மையுடைய என்னை, ஏன் நீங்கள் தொடர்கின்றீர்கள்? பண்டிதனாய் இருப்பவன், ஒருகாலும் காமவிகாரத்தினால் (ஆசையால்) மதி (புத்தி) மயங்கிப் பரமபுருஷனை விரும்புகிற மடந்தையர்களிடத்தில் (பெண்களிடத்தில்), விச்வாஸம் (நம்பிக்கை) செய்யமாட்டானல்லவா? அஸுரர்களே! மனம்போனவழியே திரியும் தன்மையுள்ள பெண்களோடும், செந்நாய்களோடும் ஸ்நேஹம் (நட்பு) செய்யலாகாது. அவர்களுடைய ஸ்நேஹம் (நட்பு) நிலைநின்று இருப்பது அன்று என்று சொல்லுகிறார்கள். அவர்கள் புதிது புதிதாகத் தேடுவார்கள்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு அம்மோஹினியின் பரிஹாஸ (கேலி) வாக்யங்களால் அஸுரர்கள் மனம் கலங்கப்பெற்று, மனக்கருத்தினால் கம்பீரமாகச்சிரித்து, அம்ருத பாத்ரத்தையும் அவள் கையில் கொடுத்தார்கள். அப்பால், பெண்ணுருவம் தரித்த பகவான், அம்ருத பாத்ரத்தை வாங்கிக்கொண்டு, புன்னகையின் சோபையினால் திகழ்கின்ற அழகிய உரையுடன், “நான் நன்மை செய்யினும், தீமை செய்யினும் அது உங்களுக்கு ஸம்மதமாயிருக்குமாயின், இந்த அம்ருதத்தை உங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கிறேன்” என்றான். “அஸுரச்ரேஷ்டர்கள், அம்மோஹினி மொழிந்த மொழியைக்கேட்டு, அதன் கருத்தையறியாமல் அப்படியே ஆகட்டும்” என்று ஒப்புக்கொண்டார்கள். பிறகு, அந்த மோஹினியின் ஆஜ்ஞையினால் (கட்டளையினால்), தேவதைகளும், அஸுரர்களும், உபவாஸம் இருந்து, ஸ்நானம்செய்து, ஹவிஸ்ஸினால் அக்னியில் ஹோமஞ்செய்து, ப்ராஹ்மணர்களுக்கும் மற்ற ப்ராணிகளுக்கும் பசு முதலியவைகளைக் கொடுத்து, ப்ராஹ்மணர்களால் ஸ்வஸ்தி வாசகம் (ஆசீர்வாத நல்வார்த்தைகள்) செய்யப்பெற்று, ப்ரீதியுடன் புதிய வஸ்த்ரங்களை உடுத்தி, நன்றாக அலங்கரித்துக்கொண்டு, எல்லோரும் கிழக்கு நுனியாகப் பரப்பின தர்ப்பங்களின்மேல் உட்கார்ந்தார்கள்.
அகில் முதலிய தூபங்களையிட்டு, நெய் விளக்குகளை ஏற்றி முழுவதும் அலங்காரம் செய்யப்பெற்ற ஸபையில், தேவர்களும், அஸுரர்களும் கிழக்கு நுனியான தர்ப்பங்களில் உட்கார்ந்திருக்கையில், மோஹினி கையில் அம்ருத கலசத்தை ஏந்திக்கொண்டு, ஸபைக்குள் நுழைந்தாள்.
மன்னவனே! அடிபெருத்து நுனிசிறுத்து, அழகாயிருக்கின்ற துடைகளுடையவளும், அழகிய வெண்பட்டு வஸ்த்ரத்தினால் திகழ்கின்ற அகன்ற இடையின் பின்புறமுடையவளும், மதித்த (மதம் கொண்ட) யானைப்பேடு (பெண் யானை) போல மெதுவாய் நடக்கும் தன்மையளும், யௌவன (இளமை) மதத்தினால் (கர்வத்தினால்) கண்கள் தழதழக்கப் பெற்றவளும், ஸ்வர்ணமயமான சிலம்பு தண்டைகளின் த்வனியினால் (ஒலியால்) சப்தம் செய்பவளும், குடம்போன்ற கொங்கைகள் (மார்பகங்கள்) அமைந்தவளுமாகிய, அந்த மோஹினி, பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி, மிகவும் அழகாயிருந்தாள்.
ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் போன்று ஸ்வர்ணமயமான குண்டலங்கள் அணிந்து, காது, மூக்கு, கபோலம் (கன்னம்), முகம் இவையெல்லாம் அழகாயிருக்கப்பெற்று ஸ்தனத்தின் (மார்பகத்தின்) மேல் போர்த்தப்பட்ட வஸ்த்ரம் காற்றில் சிறிது நழுவி மிகவும் அழகாயிருப்பவளும், பரதேவதையுமாகிய அந்த மோஹினியைக்கண்டு, தேவாஸுரர்கள் அனைவரும், அவளுடைய புன்னகையமைந்த கண்ணோக்கத்தினால் அடியுண்டு, நன்கு மோஹித்தார்கள் (மயங்கி இருந்தார்கள்). தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாது பாதுகாக்கும் தன்மையுள்ள மோஹினி ரூபியான பகவான், இயற்கையில் கொடியர்களான அஸுரர்களுக்கு அம்ருதம் கொடுப்பது ஸர்ப்பங்களுக்குப் பால் வார்ப்பதுபோல அநியாயமென்று (ந்யாயமற்றது என்று) நினைத்து, அந்த அம்ருதத்தை அஸுரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கவில்லை.
அப்பகவான், தேவதைகள், அஸுரர்கள் ஆகிய இரு தரத்தவர்களையும் தனித்தனி வரிசையாகப் பிரிந்திருக்கும்படி செய்து, அவர்களைத் தங்கள் தங்கள் வரிசைகளில் உட்கார வைத்தான். பெண்ணுருவம் கொண்ட பகவான், கலசத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அருகில் செல்வது, வெகுமதிப்பது, இஷ்டமான உரைகளைப் பேசுவது, முதலியவற்றால் அஸுரர்களை வஞ்சித்துக் (ஏமாற்றி) கிழத்தனம், மரணம், இவற்றைப் போக்கும் திறமையுள்ள அம்ருதத்தைத் தூரத்திலிருக்கிற தேவதைகளுக்கு மாத்ரமே கொடுத்துப் பானம் செய்வித்தான்.
மன்னவனே! அஸுரர்கள் அம்ருதம் கிடைக்கப் பெறாதவர்களாயினும், அம்மோஹினியிடம் தாங்கள் முதலில் செய்துகொண்ட எற்பாட்டைப் பாராட்டியும் அவளிடத்தில் தங்களுக்குள்ள ஸ்நேஹத்தைப் (நட்பைப்) பற்றியும் ஸ்த்ரீயோடு விவாதப்படுவது (வழக்காடுதல்) இகழ்வு என்பதைப் பற்றியும் பேசாதிருந்தார்கள். அந்த மோஹினியிடத்தில் மிகுந்த ஸ்நேஹமுடைய (நட்புடைய) அவ்வஸுரர்களுக்கு, அவளுடைய ஸ்நேஹத்திற்கு (நட்புக்கு) என்ன கெடுதி நேருமோவென்னும் பயத்தினாலும், அவள் தங்களிடத்தில் வைத்திருக்கிற வெகுமதியினால் (மரியாதையால்) கட்டுண்டிருப்பதனாலும், அவளுக்கு அனிஷ்டமான (விருப்பமற்ற) பேச்சை எதையும் சொல்லாமல் வெறுமனே இருந்தார்கள். அப்பொழுது ராஹு, தேவதைகளோடு ஒத்த வேஷம்பூண்டு, மறைந்து தேவதைகளின் வரிசையில் நுழைந்து அம்ருதபானம் செய்தான். சந்த்ர, ஸூர்யர்கள் அதைக்கண்டு, அவனை வெளியிட்டார்கள். பகவான், கத்தி போன்ற நுனியுடைய சக்ராயுதத்தினால் அம்ருதபானம் செய்கிற அந்த ராஹுவின் தலையை அறுத்தான். அவனுடைய கபந்தம் (கழுத்துக்குக் கீழ் பகுதி) அம்ருதம் தீண்டப் பெறாமையால் கீழே விழுந்தது. தலை அம்ருதம் பட்டமையால், “அமரத்வத்தை (அமரத்வம் – மரணமற்றவர்களான தேவர்களின் தன்மை) அடைந்தது. ப்ரஹ்மதேவன் அவனை ஸூர்ய சந்த்ராதிகளைப் போலச் சுப அசுபங்களை (நன்மை, தீமைகளை) அறிவிக்கும் க்ரஹமாய் (கோளாய்) இருக்கும்படி ஏற்படுத்தினான்.
அவ்வாறு க்ரஹங்களில் (கோள்களில்) ஒருவனாகிய அந்த ராஹு, வைரத்தை (பகைமையை) மறக்காமல் மனத்தில் வைத்துக்கொண்டு, பர்வகாலங்களில் (பெளர்ணமி, அமாவாசை நாட்களில்) சந்த்ர ஸூர்யர்களை விழுங்கவேண்டுமென்று எதிர்த்தோடுகிறான். தேவதைகள் அம்ருதபானம் செய்ததாகையால், உலகங்களைப் பாதுகாக்கும் தன்மையனும், ஸமர்த்தனுமாகிய பகவான், அஸுர ச்ரேஷ்டர்கள் பார்த்துக் கொண்டேயிருக்கையில், முன்போலத் தன்னுடைய புருஷ உருவத்தை ஏற்றுக்கொண்டான். தேவாஸுரர்கள் இருவகையரும், தேசம், காலம், காரணம் ப்ரயோஜனம், செயல், புத்தி இவையெல்லாம் ஒத்திருக்கப் பெற்றவர்களாயினும், பலத்தில் மாறுபாட்டை அடைந்தார்கள். அவர்களில், தேவதைகள் பகவானுடைய பாதாரவிந்தங்களின் பராகத்தைப் (துகள்களைப்) பற்றினவர்களாகையால் அம்ருதமாகிற பலத்தை ஸுகமாகப் பெற்றார்கள்.
அஸுரர்கள், அந்தப் பகவானுடைய பாதாரவிந்தங்களின் பராகத்தைப் (துகள்களைப்) பற்றாமையால், வருந்தியும் அம்ருதத்தை இழந்தார்கள். ப்ராணிகள், தேஹம், பிள்ளை, பெண்டிர் முதலியவர்களுக்காக ப்ராணன், தனம், செயல், மனம், வாக்கு, இவைகளால் செய்வதெல்லாம் அஹங்கார (நான்) மமகாரங்களாலும் (எனது), எல்லாம் பரமாத்ம ஸ்வரூபங்களே என்னும் புத்தியில்லாமையாலும், கிளைக்கு ஜலம் கொட்டுவது போலப் பயனற்றவைகளே. ஸகல ஜகத்காரணனும் (இந்த உலகம் முழுவதற்கும் காரணனும்), ஸர்வாந்தராத்மாவும் (எல்லோர் இதயத்திலும் ஆத்மாவாக இருப்பவனும்), ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷனுடைய ப்ரீதியை உத்தேசித்துச் செய்யும் செயல்களெல்லாம், பரமாத்மாவைத் தொடர்ந்த புத்தி அமைந்திருக்குமாயின், மரத்தின் அடியில் ஜலம் கொட்டுவதுபோலப் பெரும் பயனைப் பெறும்.
ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.