ஆழ்வார்களின் அருந்தமிழில் வேங்கடவன் பெருமை - முனைவர் ஸ்ரீராம்

திருமலையப்பனை ஆழ்வார்களில், மதுரகவியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் நீங்கலாக, மற்ற ஆழ்வார்கள் அனைவரும் பாடிப் பரவி உள்ளனர். அப்படிப் பாடிய பக்தி பனுவல்கள் ஏராளம். அதில், சில துளிகளை இங்கே அனுபவிப்போம்.

திருமங்கை ஆழ்வார் மனம் வீழ்ந்த இடம் திருமலை. 


திருமங்கை ஆழ்வார், பெருமாளைத் தரிசிக்க திருவேங்கடம் வந்தார். பெருமாளைப் பார்த்த பரவசத்தில், அளவு கடந்த மகிழ்ச்சி. ஆழ்வாரைப் பார்த்த பரவசத்தில் பெருமாளும் இருந்தார். ஆழ்வாரைக் கருணையோடு நோக்கிய பார்வையில், ஆழ்வாரின் உள்ளமும் இளகியது. இப்போது அவர் தன் மனதைப் பார்த்துக் கேட்கிறார்.


அதில் ஒரு கேலி தெரிந்தது. 


‘‘என்ன, அடிமையாகி விட்டாய் போலிருக்கிறதே?’’ நெஞ்சம் திருப்பிக் கேட்டது. 


‘‘யாருக்கு அடிமையானேன்? என்ன சொல்கிறீர்கள்?’’


‘‘என்ன ஒன்றும் தெரியாதவன் போல் கேட்கிறாயா? இந்த மலை மேல் “ஆடும் கூத்தனு” க்குத்தான் நீ அடிமையாகி விட்டாய்’’


‘‘என்ன மலையப்பன் ஆடுகின்றானா?’’


‘‘அவன் ஆடிய ஆட்டத்தில் தானே, மனமே, உன் ஆட்டம் அடங்கியது’’ 


‘‘என்ன செய்வது? பெருமாளைப் பார்த்தவுடன் நான் விழுந்து விட்டேன்’’


‘‘பிறகு என்ன செய்வாய்? “நின்றதும் வேங்கடம்” அல்லவா’’


‘‘ஆமாம்.. இந்தப் பெருமாளை, தாமரை மலர் அமர்ந்த பிரம்மாவும், சிவனாரும், இந்திரனும் வணங்குகிறார்கள்... அப்புறம் நான் மட்டும் என்ன?’’



‘‘அது சரி அங்கே பார்.... பலரும் பாடிப் பணிந்து ஏத்தும் காட்சியை...’’ 


‘‘ஆமாம்... பார்த்தேன்.. மனதை அவன் திருவடியில் சமர்ப்பிப்பது தானே ஆத்ம சமர்ப்பணம்... அதற்குத்தானே அவன் பரம பதத்தை விட்டு மலைமேல் காலம் காலமாய் நிற்கிறான்....’’ 


‘‘அடடா.. பிரம்மலோகம், சிவலோகம், இந்திரலோகம் எல்லாம் இங்கே வந்து விட்டதே! ஆயினும் மனசே, எனக்கு உன்னை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது’’ 


‘‘ஏன், பரிதாபம்?’’


“நேற்றுவரை நீ எப்படி இருந்தாய்?’’ 


‘‘எப்படி இருந்தேன்?’’


‘‘உண்டதையே உண்டு, உறங்கிய பின் மீண்டு, கண்டதையே பேசிக் களிப்புற்று கிடந்தாயே... நினைவில்லையா... ஆனால் இன்று அப்படியே மாறிவிட்டாய். உன்னுடைய குணங்களை விட்டுவிட்டு அந்த அனந்தனின் திருவடியில் விழுந்து அடிமைத் தொழில் பூண்டாய்... காலம் கடந்து செய்தாலும், இச்செயல் எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது. நான் மகிழ்ந்தேன்.. என் நெஞ்சமே! நீ வாழ்க’’ இப்படித் தன்னுடைய நெஞ்சத்தை வாழ்த்துகின்றார் திருமங்கையாழ்வார்.


 “கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்
என் நெஞ்ச மென் பாய்  துணிந்துகேள்,


பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா,


ஆடு தாமரையோனு மீசனும்
அமர்கோனும் நின்றேத்தும்,  

வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்று
‘‘அடிமைத்தொழில் பூண்டாயே”


என்பது பெரிய திருமொழி பாசுரம்.


ஒரு திரியை அணைக்கிறது; ஒரு திரியைத் தூண்டுகிறது. 


முதல் திருவந்தாதி பாடிய, முதல் ஆழ்வார்களில் முதல்வரான பொய்கை ஆழ்வார், மிக அருமையான ஒரு பாசுரத்தைப் பாடியுள்ளார். முதல் திருவந்தாதியில் திருமலை குறித்த முதல் பாசுரம் இது. திருவேங்கடமலை இரண்டு காரியங்களைச் செய்கிறது.


1. எரிகின்ற ஒரு திரியை அணைக்கிறது.

2. இன்னொரு திரியைத் தூண்டுகிறது.


இந்த இரண்டு திரிகளும் ஒரே நேரத்தில் செயல்படுவது கிடையாது. இருட்டும் வெளிச்சமும் ஒரே நேரத்தில் இருப்பதற்கான வழி இல்லை. வெளிச்சம் இல்லாத நிலை இருட்டு. இருட்டு நீங்கிய நிலை வெளிச்சம். நம்முடைய கவலைகளுக்குக் காரணம், நம்முடைய வினைகள் பற்றி எரிந்துகொண்டே இருப்பதுதான். அந்த வினைகள் எரிவது அடங்கினால் தான், நம்முடைய பாவங்கள் நீங்கி, மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.


அந்த வினைத்திரியை எப்படி அடக்குவது?


இருட்டை விலக்க வேண்டும் என்று சொன்னால் வெளிச்சம் வேண்டும் அல்லவா? நம்முடைய வினைகள் எல்லாம் நீங்க வேண்டும். பாவங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என்று சொன்னால், மனதிலே இன்னொரு விளக்கு எரிய வேண்டும். அந்த விளக்கு எரிய, திருப்பதிக்குச் செல்ல வேண்டும். அந்த ஏழுமலையானைத் தரிசிப்பது கூட அப்புறம்தான். அந்த மலையைப் பார்த்தாலே போதும். மலையானது சுட்டெரிக்கும் வினைத்திரியை அணைத்துவிட்டு, புண்ணியமான மனத்திரியைத் தூண்டி விடும். இதைத்தான் பொய்கை ஆழ்வார் மிக அற்புதமான ஒரு பாசுரத்தில் சொல்லுகின்றார்.


எழுவார் விடை கொள்வார், ஈன் துழாயானை,


வழுவா வகை நினைந்து, வைகல் தொழுவார்,


வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, 

வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை


பரமபதத்தில் இருக்கும் நித்ய சூரிகள்கூட, திருமலையிலேயே கைங்கர்யம் செய்து கொண்டு இருந்துவிடலாம் என்ற ஆவலைத் தூண்டும் சிறப்பு திருமலைக்கு உண்டு என்பது...

வினையான சுடரை அவிப்பவனும் அவன். மனதில் உள்ள சுடரைத் தூண்டி பிரகாசிக்கச் செய்வதும் அவன்.இது நடப்பது திருமலையில் என்பது பொய்கை ஆழ்வாரின் அனுபவம்.


திருமலையப்பனும் திருவரங்கநாதனும்


ஆழ்வார்களில் திருப்பாணாழ்வார் 10 பாசுரங்களால் வேதத்தின் சாரத்தை பிழிந்துக் கொடுத்திருக்கிறார். ‘‘என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று, எம்பெருமானைக் கண்டபிறகு, இந்தக் கண்களுக்கு, வேறு பொருள் லட்சியமே இல்லை என்று காட்டித் தந்திருக்கிறார். எது மிக உயர்வான ஒரு இன்பமோ, அந்த இன்பத்தை அடைந்த பிறகு, மற்ற இன்பங்கள் எல்லாம் அதைவிடக் கீழானதாகவே இருக்கும்.


“என் அமுதன்” என்று யாரைச் சொல்லுகின்றார் பாணர்?

காவிரிக்கரையில் நின்றுகொண்டு, யாழ் இசைத்து அரங்கனைப் பாடியவர், நிறைவாக அந்த அரங்கனோடு உள் புகுந்தவர் திருப்பாணாழ்வார் என்கிற சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், இங்கே கேள்வி என்னவென்றால். அவர் மலையப்ப சுவாமியைப் பாடி இருக்கிறாரா?


“பாடியிருக்கிறார்” என்றுதான் சொல்ல வேண்டும்.


வைணவ சமய மரபிலே நேரடியாக ஒரு பதிகமோ, பாசுரமோ பாடித்தான் மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்கின்ற அவசியமே இல்லை. ஏதாவது ஒரு பாசுரத்தில், ஒரு திவ்ய தேசத்தைப் பற்றிய ஒரே ஒரு குறிப்பு வந்து விட்டாலும், அந்த ஆழ்வார், அந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்ததாகத்தான் பொருள். அந்த அடிப்படையில் திருப்பாணாழ்வார் திருவரங்கன் மீது பத்து பாசுரங்கள் பாடி இருக்கிறார்.


அவர் திருவேங்கடவனை இரண்டு பாசுரங்களில் மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்பதால், அவர் திருவேங்கடவனையும் பாடியிருக்கிறார் என்பது ஆசாரியர்கள் நிர்ணயம். இந்த அடிப்படையில் திருமலை அப்பனை அவர் எப்படி மங்களாசாசனம் செய்கிறார் என்கிற ஒரு பாசுரத்தை அனுபவிப்போம்.


“அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த


விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்


நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள் மதி அரங்கத்தம்மான் திருக்


கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே.”


முதல் பாசுரத்திலேயே அவருக்கு திருமலையப்பன் நினைவு வந்து விடுகிறது. பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை உடைய திருவேங்கட மலையில் வந்து தங்கி, இன்றளவும் நமக்குச் சேவை சாதித்து வரும்;


1. அவன்தான் ஆதிபிரான்.


2. அவன்தான் அடியார்க்கு என்னை ஆட்படுத்தியவன்.


3. அவன்தான் தேவாதி தேவன்.


4. அவன்தான் ஒரு கைம்மாறும் கருதாத சுத்தியை உடைய நிமலன்.


5. அவன்தான் எந்தவித உதவியையும் தன்னுடைய பேறாகக் கருதிச் செய்யும் நின்மலன்.


6. அவன்தான் தலைவன் தொண்டன் என்கின்ற முறை வழுவாதபடி சேஷ சேஷி பாவத்தோடு நியாயமே சொல்லும் பரமபதத் தலைவன்.


7. அவன்தான் இப்பொழுது அர்ச்சையில், என் கண்ணெதிரே காட்சி தரும் நீண்ட மதில்களை உடைய திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருளுகின்ற அழகியமணவாளன். 



திருப்பாணாழ்வார், திருவரங்கத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்தாலும்கூட, “திருமலை அப்பன் தான் இங்கு வந்து படுத்துக் கிடக்கின்றான். இதற்கு முன்னாலே திருமலை வந்து நின்றவன்” என்று மங்களாசாசனம் செய்கின்ற அழகைக் கவனிக்க வேண்டும். இங்கே “விரையார் பொழில் வேங்கடவன்” என்பது மிக முக்கியமான பதம்.


பரிமளம் நிறைந்த திருச்சோலைகளை உடைய திருமலையை தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டவன். பரமபதத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்த எம்பெருமான், இடையில் சற்று இளைப்பாற, கால் தாழ்ந்த பூமி என்று திருமலையைச் சொல்வார்கள். எனவே, திருவரங்கத்திற்கு முன்னாலேயே வந்து நின்ற தலம் என்கின்ற சிறப்பு திருமலைக்கு உண்டு.

அதனால்தான் இத்தலத்தை “விண்ணுக்கும் மண்ணுக்கும் வைப்பு” என்று ஆழ்வார்கள் பாடுகின்றார்கள். மண்ணவர்கள் ஆகிய சம்சாரிகள் எம்பெருமானைக் காண திருமலையில் ஏறுகின்றார்கள்.


விண்ணோர்கள் அதே எம்பெருமானைக் காண திருமலைக்கு வந்து இறங்குகின்றார்கள். இருவரும் சந்திக்கின்ற ஒரு இடம் என்பது திருமலைக்குப் பெருமை.


“சந்தி செய்ய நின்றான்” என்பது சந்தியாவந்தன வழிபாட்டைக் குறித்தாலும், சந்திப்பு நிகழ்கின்ற இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். (சந்தி-சந்தித்தல்). 


‘‘வேங்கடவன் என்கின்ற சொல் அர்ச்சாவதாரத்துக்கு பொற்கால் பொலிய விட்ட விடம்” என்று ஆசாரியர்கள் உரை எழுதுகிறார்கள்.


ஆண்டாள் மணந்தது யாரை? மலையப்பனையா? அரங்கனையா?


சங்கத் தமிழ் பாடிய ஆண்டாள், தான் யாரை மணக்கப் போகிறேன் என்பதை வெகு நேர்த்தியாகத் தெரிவித்துப் பாடும் பாசுரம்தான் நாச்சியார் திருமொழியில் முதல் பாசுரம்.


தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்


ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!


உய்யவும் ஆங்கொலோ? என்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்


வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!


ஆண்டாள் இரண்டு பிரபந்தங்களை அருளிச் செய்திருக்கிறார்.


1. திருப்பாவை 

2. நாச்சியார் திருமொழி

திருப்பாவை, மார்கழி மாதத்தில் பாட ஆரம்பித்தாள். மார்கழித்திங்கள் என்று மாதத்தின் பெயரைச் சொல்லி தொடங்கினாள். அதைப்போலவே, நாச்சியார் திருமொழியை தை மாதத்தில் பாடியதால் தையொரு திங்களும் என்று மாதத்தின் பெயரிட்டு முதல் பாசுரத்தைத் தொடங்கினாள். இந்த அமைப்பு வேறு ஆழ்வார்கள் பாசுரங்களில் இல்லை என்பது ஆண்டாளின் பாசுரத்திற்குச் சிறப்பு. இந்த இரண்டு பிரபந்தங்களின் நோக்கமும், எம்பெருமானாகிய கண்ணனை அடைவதுதான். அவளுக்கு கண்ணன் தான் நான்கு வித புருஷார்த்தங்களும்.


கண்ணன்தான் தர்மம்.
கண்ணன்தான் அர்த்தம்.
கண்ணன்தான் காமம்.
கண்ணன்தான் மோட்சம்.


“கண்ணனுக்கே.. ஆம்! அது காமம்” என்பதுதான் அவளுடைய திண்ணமான நிலை. எனவேதான் அவள் “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’’ என்றும், “அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன்’’ என்றும் பாட முடிந்தது. எம்பெருமானுக்காக உள்ளதுதான் அவளுடைய உடலும் உயிரும் என்பதை; ‘‘வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் சரியோ?” எனப் பாடுகிறாள். மற்ற காமங்கள் அவளுக்கு இல்லை. எனவேதான் திருப்பாவையில் “மற்றை நம் காமங்கள் மாற்று” என்று அவள் சொன்னாள். இதில் அழுத்தமான ஒரு வைணவத் தத்துவமும் இருக்கிறது. எம்பெருமான் நம்மை ஆட் கொண்டாலும், ஆட்கொள்ளாவிட்டாலும் அவனே நமக்குத் துணை.


அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்கிற நிலைக்கு சமயக்கற்பு என்று பெயர். கண்ணன் இடத்திலே காமம் கொள்வது என்பது கூட இரண்டாம் பட்சம். ஆனால், மற்ற தெய்வங்களிடத்திலே காமம் கொள்வது தகாது என்பதுதான் வைணவத்தின் நிலை. இந்த உறுதிநிலை கொண்ட ஆண்டாள், மார்கழி நோன்பு முடிந்தும், கண்ணனை அடையும் முடிவு தெரியாததால், தைமாதத்திலே எப்படியாவது எம்பெருமானாகிய வேங்கடவனை அடைந்தே தீரவேண்டும் என்பதற்காக காமன் நோன்பு நோற்கிறாள்.


தரையைத் தூய்மைப்படுத்தி, குளிர்ந்த நீர் தெளித்த மண் தரையில், அழகிய நுண்ணிய மணல் கொண்டு கோலம் இட்டு அலங்கரித்து காம தேவனைத் தொழும் காட்சிதான் மேற்படி பாசுரம்.


பரமபதத்தில் அயர்வறு அமரர்கட்குக் காட்சி கொடுத்துக் கம்பீரமாக வீற்றிருக்குமவன் ‘ஸம்ஸாரிகளும் இப்பேற்றைப் பெற்று வாழவேணும்’ என்று இங்கு திருமலைக்கு வந்தான்.


இங்கு ஒரு ஐயம்.


அவள் மணந்தது யாரை? மலையப்பனையா? அரங்கனையா?


அவளுக்கு உடனடி வைபவ அனுபவம் மலையப்ப சுவாமியுடன்தான். மற்ற திவ்ய தேசங்களில் (திருவரங்கம் மற்றும் வில்லிபுத்தூரில்) பங்குனி உத்திரம் ஆண்டாள் திருமணம் கொண்டாடுவார்கள். 


ஆனால், வேங்கடவன் அதற்கு முன்னதாகவே கோதைக்கு அருள் செய்கிறான்! இன்றும் திருமலை - திருப்பதியில், தைத்திருநாளான பொங்கலில் ஆண்டாள் திருமணம் (கோதைப் பரிணயம் என்று) கொண்டாடப்படும்! காலையில், மலையப்ப சுவாமி பாரி வேட்டை நடத்தி வர, மாலை கோதையின் மாலையை வாங்கும் “கோதா பரிணயம்’’ நடைபெறும். ஆக ஆண்டாள் எண்ணத்தை உடனடியாக நிறைவேற்றியது வேங்கடவாணன்தான்.


நன்றி - தினகரன் 2023


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை