அருள்மாரி (கள்வன் கொல்!) - டாக்டர். மதி.சீனிவாசன், சென்னை

அந்தப் பெண் பரகால நாயகி, வயலாளி மணவாளன் வடிவழகில் தன்னை இழந்தாள். அல்லும் பகலும் அவன் நினைவாகவே இருந்தாள். நெஞ்சுருகிக் கண்பனிப்ப நின்றாள்;

நெட்டுயிர்த்தாள். நாயகனைப் பிரிந்த பிரிவில் தரியாது, வாய் விட்டுப் புலம்பினாள். சோலையிலே மலர்ந்து காட்சி அளித்த பூக்களைப் பார்த்தாள், ஒன்றை விட்டு ஒன்று பிரியாத இணை வண்டுகள் தம் சிறகை வீசியவாறு பூக்களின் மதுவைக் குடித்தவாறு இருந்ததைக் கண்டாள். அவற்றைத் தன் நாயகனிடத்தே தூது செல்லுமாறு வேண்டினாள்.


"தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி

ஏவரி வெம் சிலையா னுக்கு என்நிலைமை உரையாயே”


என்று வேண்டினாள். குருகுப் பறவையைப் பார்த்த பரகால நாயகி, அதனையும்

வயலாளி மணவாளனிடம் தூது விடுத்தாள். "வம்பார் பூம் வயவாலி மைந்தா!” என்று அரற்றியபடியே, அந்நினைவில் அவன் வடிவத்தை உருவெளிப்பாட்டில், மனக்கண்ணால் கண்டாள்.


"மண் அளந்த தாளாளப் பெருமானே! உன்னைப் பிரிந்து கண்ணீர் விட்டுக் கதறுகிறேன். மார்பில் பசலை பூத்தது. நாளும் நாளும் உன்னையே நினைந்து நைகின்றேன். “வரை எடுத்த தோளாளா! என் தனக்கோர் துணையாளன் ஆகாயே” என்று பேசுகிறாள். அவளுடைய துயரத்தின் எல்லையிலே பீறிட்டு வெளிவந்த உணர்ச்சிக் குமுறல்கள், கேட்பார் நெஞ்சை ஊடறுத்து உருக்க வல்லவை.


“நிலையாளா! நின்வணங்க வேண்டாயே ஆகிலும் என் 

முலை ஆள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே; 

நிலை யாளா மரம் எய்த திறலாளா! திருமெய்ய 

மலையாளாநீஆள, வளை ஆள மாட்டோமே."


இவ்வாறெல்லாம் அவள் புலம்பிய பிரிவுத் துயர ஒலி, திருவாலிப் பெருமான் காதில் விழுந்து விட்டது. அதனைப் பொறுக்க மாட்டாத அவன், அவள் முன்னே வந்து முகம் காட்டி, தன்னுடன் கூட்டிச் செல்ல விழைந்தான். அவளோ, தன் தாயுடன் பஞ்சணையில் படுத்த நிலையில் கிடந்தாள். வயலாளி மணவாளன் திடீரென்று அங்கே தோன்றி, அவளை உசுப்பியவாறு, “வா! வா! உடனே புறப்படு” என்று கூறினான். அவன் கையைப் பற்றியவாறு இழுத்துக் கொண்டு வெளிக் கிளம்பினான். திடுக்கிட்டு எழுந்த தாயார், செய்வதறியாது, திகைத்தாள். நொடி நேரத்தில் அவளும் அவனும் திருவாலி நகரை நோக்கிச் சென்று விட்டனர். மகளை இழந்த தாயார், துயரத்தைப் பொறுக்க முடியாதபடி "ஐயோ! யாரோ ஒரு கள்வன் வந்தானே! என் மகளை இழுத்துச் சென்றானே!” என்று உரத்த குரலில் கூவினாள். படுக்கையில் தன் மகளைக் காணாத நிலையையும், போனவன் படியையும், வந்தவன் தோற்றத்தையும் கூறிப் புலம்பினாள்.


“நானும் எம்பெண்ணும் ஒரு சேரப்படுத்திருந்த நிலையிலே, திடீரென்று அவளைக் காணவில்லையே! திடுக்கென்று ஒரு வாலிபன் வந்தானே! அவனை யார் என்று நான் அறியேன் கறுத்த நிறமுடைய அவன் காளை போன்ற இளம் பருவத்தினன்; மூடிய கண்ணைத் திறந்து பார்த்தால் அவன் செய்த செயலை என் என்பேன்! மான் போன்ற மிருதுவான இயல்புடைய என் மகள் நிலை எங்கே! முரட்டுக்காளை போன்ற அவன் செயல் எங்கே? இருவருக்கும் உள்ள பருவக் கோளாறா இப்படி நடைபெறச் செய்தது! வல்லிக்கொடி போன்ற இடையழகு பொருந்திய என் மகளின் கைகளைப் பற்றி விட்டானே அவன்! வெள்ளி வளை அணிந்த அவள் கைகளைப் பற்றியபடி, அந்தக் கள்வன், “வா! வா!" என்று அழைத்ததைக் கேட்டேன். இந்தப் பெண்ணாவது தன் கைகளை உதறினாளா? இல்லையே! பெற்று வளர்த்துச் சீராட்டிய என் பாசத்தை மறந்தாளே!” அந்த மணவாளப் பெருமாளின் கைகள் பட்டதும், என் பெண், பல்லாண்டு காலமாக வளர்த்த என் தாய்மைப் பாசத்தை உதறித் தள்ளிவிட்டாளே! எப்படி அவளுக்கு உடன் போகத் துணிச்சல் வந்ததோ? வந்தவன் கள்வனா? அல்லது கணவனா? ஒன்றையும் நான் அறியேன் உடைமையைக் கொண்டு போக வந்த உடையவன் அன்றோ அவன்! இருவரும், பூக்கள் மலர்ந்த நீர்நிலை விளங்கும் திருவாலி நகருக்குச் சென்றிருப்பார்கள் போலும்!


இவ்வாறு புலம்பிய தாயார் பேச்சைத் திருமங்கை ஆழ்வார் அருமையான பாசுரமாகத் தருகிறார். இதோ!


"கள்வன்கொல் யான் அறியேன்! கரியான் ஒரு காளை வந்து

வள்ளிமருங்குல் என்றன் மடமானினைப் "போத" என்று

வெள்ளி வளைக் கை, பற்றப் பெற்ற தாயரை விட்டு அகன்று

அள்ளல்அம் பூங்கழனி அணி ஆலிபுகுவர் கொலோ?"


(வள்ளி-வல்லிக்கொடி; மருங்குல் இடை; அள்ளல் - சேறு: கழனி - வயல்)

இப்பாசுரத்தில் நம், பூர்வாசாரியர்கள், மிகவும் ஆழங்கால்பட்டு, உருகி இருக்கிறார்கள். பிள்ளை

அமுதனார் என்பவர் "பெண்ணும் தாயும் படுக்கையில் கிடந்தபோது, வயலாலி மணவாளன் யாரும் காணாதபடி, தாய்க்குத் தெரியாமலேயே, பரகால நாயகியை எழுப்பி அழைத்துச் சென்றதாகப் பாடல் வரிகளுக்குப் பொருள் கொண்டார். ஆனால் பராசர பட்டரோ வேறு விதமாகப் பொருள் கொண்டார்.


அதாவது: தீவட்டிக் கொள்ளைக்காரர்கள், தங்களை மறைத்துக் கொள்ளாமல் நேரிடையாகவே வெளிப்பட்டுப் பொருள்களைக் கவர்ந்து போகையில், “அதோ கள்ளன்! கள்ளன்!” என்று பாதிக்கப் பட்டவர் கதறுவது போல, இங்கே, திருத்தாயார், திருவாலி மணவாளன் செயலைக் கண்டவாறு! "பிள்ளை, பிள்ளை!" என்று கதறி இருக்கிறாள். அவள் கண் முன்னாலேயே, அக்கள்வன் பரகால நாயகியின் கையைப் பற்றி அழைத்துச் சென்றுள்ளான்.


இவ்வாறு பட்டர் இப்பாசுரத்தில் மனம் பறி கொடுத்து ஆழங்கால் பட்டார். ஆளவந்தார் கோஷ்டியில் "திருவாய் மொழி" பற்றிய பயிலரங்கில், அருமையான கருத்து விவாதம் ஒன்று உண்டாயிற்று. “உண்ணும் சோறு” பதிகத்தில் நம்மாழ்வார் திருத்தாயார் பேச்சாகப் பராங்குச நாயகி 'திருக்கோளூருக்குத் தனி வழிப் பயணம் மேற்கொண்டது அவ் விஷயம் ஆகும். பரகால நாயகியோ, மணவாளனுடன் திருவாலிக்கு, உடன் போகியவளாய்ச் சென்றாள். இவ்விரண்டு நாயகிகளுக்கும் இடையே உள்ள வாசியை அறிய, ஆளவந்தாரிடத்தே சீடர்கள் வினவினர்கள். ஆளவந்தாரோ, தாம், பரகால நாயகியின் நிலைக்கே அதிக கழிவிரக்கம் கொள்வதாகக் கூறினார்! பராங்குச நாயகி தனியாகத் திருக்கோளூருக்கு வழி நடந்தாலும் அவளுக்கு எத்துன்பமும் நடைபெறாது. குருகூருக்கும் இடையே திருக்கோளூருக்கும் உள்ள வழியில் எவ்வித ஆபத்தும் இல்லை. தாயாரும், "திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே! என்று கூறுவதால், பராங்குச நாயகி, திண்ணமாகத் திருக்கோளூர் சேர்ந்து விடுவாள்" என்று நம்பிக்கை உள்ளது. ஆனால், வயலாலி மணவாளனும், பரகால நாயகியும் போகும் வழியில் தம்மை மறந்து, காதல் மயக்கத்தில் திளைத்திருந்தால் தம்மேல் கடித்ததும் ஊர்ந்ததும் தெரியாதபடி இருப்பார்கள். சேர்த்தியில் இருக்கும் அந்த ஜோடிக்குப் புறத்தே வரும் ஆபத்துக்கள் தெரியா. பாராங்குச நாயகியின் தனிவழிப் பயணத்தை விடவும் “பரகாலநாயகி - மணவாளப் பிரான்” உடன் போக்குப் பயணம் ஆபத்து நிறைந்தது.


"அள்ளல் அம்பூங்கழனி அணி ஆலிபுகுவார்கொலோ?" என்ற ஐயப்பாட்டுக்குக் கழிவிரக்கம் அதிகமே. "அன்றியே லங்காத் வாரத்திலே புகுவர் கொலோ!" என்றே அங்கு வயிறுபிடி” என்பது நம்பிள்ளை உரைநயம்.


இவ்வாறு ஆளவந்தார் இரண்டு நாயகிகளுக்கும் இடையே உள்ளவாசியைக் காட்டுவார். அருளிச் செயல் அமுதக்கடலில், இதுபோன்ற எத்தனையோ முத்துக்கள் உள்ளன. 

முத்துக்களின் முகம் அறியும் வல்லார் அவற்றைக் கோப்பது போல, நம் பூர்வாச்சாரியர்கள் நல்ல பல நயங்களைக் கோத்து, மாலை ஆக்கித் தந்துள்ளார்கள்.


நன்றி - சப்தகிரி 2016


Post a Comment

புதியது பழையவை