மூன்றாவது ஸ்கந்தம் – பதினேழாவது அத்தியாயம்
(ஹிரண்யாக்ஷ ஹிரண்யகசிபுக்களின் பிறவியும், ஹிரண்யாக்ஷனுடைய ப்ரபாபவமும், அவன் திக்விஜயம் செய்தலும்)
ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- தேவதைகள், இங்ஙனம் ப்ரஹ்மதேவன் தங்கள் வ்யஸனத்திற்குக் காரணம் இன்னதென்று சொல்லக்கேட்டு, “ஈஸ்வரன் க்ஷேமத்தை விளைவிப்பான்” என்ற வசனத்தினால் பயம் தீர்ந்தவராகி அனைவரும் ப்ரஹ்மலோகத்தினின்று ஸ்வர்க்கம் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு திதியோவென்றால், தன்பர்த்தாவான காஸ்யபர் “உன் பிள்ளைகள் மூன்று லோகங்களையும் தேவர்களையும் பரிதபிக்கச் செய்வார்கள்” என்று மொழிந்த வசனத்தை நினைத்து “என் குழந்தைகளுக்கு தேவதைகளால் என்ன பயம் நேரிடுமோ” என்று சங்கித்துக் கொண்டிருக்கையில், நூறாண்டுகள் நிரம்பின. அங்ஙனம் நூறாண்டுகள் நிரம்பின பின்பு அந்த திதி ஒரே காலத்தில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் பிறக்கும் பொழுது அவ்விடத்தில் ஸ்வர்க்கத்திலும் பூமியிலும் அந்தரிக்ஷத்திலும் உலகங்களுக்கு மிகவும் பயங்கரங்களான பற்பல உற்பாதங்கள் விழுந்தன. பர்வதங்களோடு கூடின பூமியின் ப்ரதேசங்களெல்லாம் நடுக்கமுற்றன. திசைகளெல்லாம் ஜ்வலித்தன. குறைக்கொள்ளிகளும் இடிகளும் விழுந்தன. உலகங்களுக்கு மேல் வரும் பீடையை அறிவிக்கின்ற தூமகேது முதலியவைகளும் தோன்றின. அப்பொழுது மிகவும் பயங்கரமான சுழற்காற்றுகள் வீசின. அவை சிறிதும் மேற்படமுடியாமல் கடினமான ஸ்பர்சமுடையவைகளாய் இருந்தன. மற்றும், அவை “பட்பட்” என்கிற த்வனிகளை விளைத்தன; பெருப்பெரிய வ்ருக்ஷங்களையும் வேரோடு பிடுங்கின. அவற்றிற்கு வெகுதூரம் மேற்கிளம்பின தூட்களே த்வஜங்கள் போல் தோன்றின. அப்பொழுது திடீரென்று மேகங்கள் கூட்டங்கூட்டமாய் ஆகாசத்தில் கிளம்பின. அம்மேகங்களில் மின்னற்கள் அட்டஹாஸம் செய்பவைபோல் மின்னின. அம்மேக ஸமூஹங்களால் ஆகாயத்தில் ஸுர்யன் முதலிய ஒளியுள்ள க்ரஹங்கள் எவையும் புலப்படவில்லை; எல்லாம் மறைந்தன. அதனால் ஆகாயம் முழுவதும் இருள் மூடப் பெற்றிருந்தது. ஆகையால் ஆகாயத்தில் அந்தந்த ஸ்தானங்கள் எல்லாம் சிறிதும் கண்ணுக்குத் தோற்றாதிருந்தன. ஸமுத்ரம் பேரலைகள் மேலெழப்பெற்று அவ்வலைகளால் இடையிலுள்ள மகரமீன் முதலிய ஜலஜந்துக்களெல்லாம் கலங்கப்பெற்று வருத்தமுற்றதுபோல் பெருங்கோஷமிட்டது. வாபீ கூப தடாகாதிகளும் நதிகளும் வாடிவதங்கின தாமரை மலர்களுடையவையாகிக் கலங்கின. சந்த்ர ஸுர்யர்கள் இருவரும் ராஹுவினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள், அவ்விருவர்க்கும் அடிக்கடி பரிவேஷங்கள் உண்டாயின. ஆகாயத்தில் மேகமில்லாமலே மேக கர்ஜனங்கள் உண்டாயின. பர்வத குஹைகளினின்று ரதகோஷங்கள் போன்ற பெரும் த்வனிகள் செவிப்பட்டன. க்ராமங்களின் இடையில் குள்ள நரிகள் முகங்களால் தீவரமான அக்னியைக் கக்கிக்கொண்டு அமங்களமாகச் சத்தமிட்டன. இங்கனமே நரிகளும் கோட்டான்களும் பயங்கரமான த்வனிகளைச் செய்தன. நாய்கள் கழுத்தை உயரத் தூக்கிக்கொண்டு ஆங்காங்கு ஸங்கீதம்போலும் ஊளையிடுவது போலும் பலவாறு குலைத்தன. கழுதைகள் கடினமான தமது குளம்புகளால் பூமியைக் குற்றிக்கொண்டு கீச்கீச்சென்னும் சபதங்களைச் செய்வதில் மிகவும் உத்ஸர்ஹமுடையவையாகி மதித்துக் கூட்டங்கூட்டமாய் ஓடின. பக்ஷிகள் இங்கனம் அமங்களமான சப்தங்களைக் கேட்டு பயந்து கூச்சலிட்டுக்கொண்டு தத்தமது கூடுகளினின்று வெளிக்கிளம்பி விழுந்தன. இடைச்சேரிகளிலும் அரண்யங்களிலுமுள்ள பசுக்கள் மலமூத்ரங்களை விட்டன. பசுக்கள் ரத்தங்களைக் கறந்து பயந்தன. மேகங்கள் சீயைப் பெய்தன. ஆங்காங்கு ஆலயங்களிலுள்ள தவப்ரதிமைகள் கண்ணீர் பெருக்கின. காற்றில்லாமலே மரங்கள் முறிந்து விழுந்தன குரு புதன் முதலிய சுபக்ரஹங்களையும் மற்றும் பல நக்ஷத்ரங்களையும் அங்காரகன் முதலிய மற்ற க்ரூர க்ரஹங்கள் பீடித்துக்கொண்டு கடந்து சென்றன. வக்ரகதியாகத் திரும்பிவந்து ஒன்றொடொன்று யுத்தம் செய்தன. இவையும் மற்றும் பல உத்பாதங்களும் உண்டாயின. ப்ரஹ்ம புத்ரர்களான மரீசி முதலியவர் தவிர மற்ற ப்ரஜைகள் எல்லோரும் அந்தந்த உத்பாதங்களின் பலன்களை அறியாதவராகையால் பயந்து ஜகத்தெல்லாம் பாழாய்ப் போகிறதென்று நினைத்தார்கள். ப்ரஹ்மபுத்ரர்களோ வென்றால் த்ரிகாலத்திலுமுள்ள வஸ்துக்களின் ஸ்வரூபத்தை அறிந்தவராகையால் பயப்படவில்லை. அங்கனம் பிறாத அவ்வஸுரர்கள் இருவரும் சீக்ரமாகத் தம்முடைய வௌருஷம் வெளியாகப்பெற்று இரும்புபோல் மிகவும் உறுதியாயிருக்கின்ற தேஹத்துடன் மேலான பர்வதங்கள் போல் வளர்ந்தார்கள். அவர்கள் ஸ்வர்ணமயமான கிரீடங்களின் நுனிகளால் ஆகாயத்தை அளாவிக் கொண்டிருந்தார்கள். தோள்வளைகளுடன் திகழ்கின்ற புஜங்களால் திசைகளைத் தகைந்தார்கள். பாதங்களால் அடிவைப்புகள் தோறும் பூமியை நடுங்கச் செய்தார்கள். இடையில் மிகவும் அழகான அரை நூல்மாலை அணிந்து ஸுர்யனை அதிக்ரமித்து ப்ரகாசித்தார்கள். கச்யபப்ரஜாபதி அவ்விருவர்களில் எவன் தன் தேஹத்தினின்று முதலில் பிறந்தானோ, அவனுக்கு ஹிரண்யகசிபுவென்று பேர் இட்டார். திதி எவனை முதலில் ப்ரஸவித்தாளோ, அவனுக்கு ஹிரண்யாக்ஷனென்று பேர் இட்டார். ஹிரண்யகசிபு தன் புஜபலத்தினால் கொழுத்தவனாக ப்ரஹ்மதேவனிடம் வரம் பெற்று எவ்விதத்திலும் மரணமற்றவனாகி லோகபாலர்களோடு கூடின மூன்று லோகங்களையும் தனக்கு வசப்படுத்திக்கொண்டான், ஹிரண்யகசிபுவின் தம்பியாகிய ஹிரண்யாக்ஷன் தமையனுடைய அன்பிற்கிடமாகித் தானும் தமையனிடத்தில் ப்ரீதியுடையவனாயிருந்தான். அவன் கதையைக் கையில் ஏந்திக்கொண்டு யுத்தஞ்செய்ய விருப்பமுற்று எங்கே யுத்தம் கிடைக்குமென்று தேடிக்கொண்டு ஸ்வர்க்கம் சென்றான். அந்த ஹிரண்யாக்ஷன் பிறர்க்குப் பொறுக்கமுடியாத மஹா பலமுடையவன். அவன் கால்களில் ஸ்வர்ணமயமான சிலம்புத் தண்டைகள் அணிந்திருந்தான். அவை அழகாய் ஒலித்துக்கொண்டிருக்கும். மற்றும், அவன் புஷ்பங்கள் பல்லவங்கள் (தளிர்கள்) முதலியவற்றால் தொடுக்கப்பெற்ற வைஜயந்தியென்னும் மாலையால் அலங்காரமுற்றிருப்பான். தோளில் பெரிய கதையைத் தரித்துக்கொண்டு மனோபலம் தேஹபலம் வரபலம் இவைகளால் கர்வமுற்று எவ்விதத்திலும் தடுக்கமுடியாதவனும் எங்கும் பயமற்றவனுமாய் இருப்பான். அவனைக் கண்டு தேவதைகள் பயந்து கருடனைக் கண்ட ஸர்ப்பங்கள்போல் மறைந்தார்கள். அஸுர ச்ரேஷ்டனாகிய அந்த ஹிரண்யாக்ஷன், தன் தேஜஸ்ஸினால் இந்த்ரனோடு கூடத் தேவர்களெல்லோரும் மறைந்திருப்பதை அறிந்து மதித்து அவர்களைக் காணாமல் மிகவும் ஸிம்ஹநாதம் செய்தான். அப்பால் அந்த ஹிரண்யாக்ஷன் ஸ்வர்க்கத்தினின்று திரும்பி விளையாட விரும்பி ஆழ்ந்திருப்பதும் பயங்கரமான அலைகளின் த்வனியுடையதுமாகிய ஸமுத்ரத்தில் ப்ரவேசித்து மஹா பலமுடையவன் ஆகையால் யானைபோல் அதைக் கலக்கினான். அங்ஙனம் அவன் ஸமுத்ரத்தில் இழிந்தவுடனே வருணனுடைய ஸேனா ஜனங்களாகிய ஜல ஜந்துக்களெல்லாம் பயந்து மதிமயங்கி, அவ்வஸுரன் அவைகளை உபத்ரவஞ் செய்யாதிருப்பினும் அவனுடைய தேஜஸ்ஸினால் பரிபவிக்கப்பட்டுக் கூட்டங் கூட்டமாய் வெகுதூரம் ஓடிப்போயின. மிகுந்த பலமுடைய அவ்வஸுரன் அனேக வர்ஷங்கள் வரையிலும் ஸமுத்ரத்தில் உலாவிக் காற்றினால் கிளப்பப்பெற்ற பெருப்பெரிய அலைகளை, இரும்பினால் செய்யப்பட்ட தன் கதையினால் அடிக்கடி அடித்துக்கொண்டிருந்தான். இப்படியிருக்கையில் அவன் ஒருக்கால் அந்த ஸமுத்ரத்திலுள்ள விபாவரியென்கிற வருண பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தான். அந்த விபாவரியென்னும் பட்டணத்தில் அஸுரர்களின் லோகமாகிய பாதாளத்தைப் பாதுகாப்பவனும் ஜல ஜந்துக்களுக்கு அதிபதியுமாகிய வருணனைக் கிட்டிச் சிறிது நகைத்து அவனை வஞ்சிக்கும் பொருட்டு அற்பன் போல் நமஸ்காரஞ் செய்து “வாராய் அதிராஜனே! வருணா! எனக்கு யுத்தம் கொடுப்பாயாக” என்றான். மீளவும் அவன் அவ்வருணனைப் பார்த்து அவனுக்கு யுத்தத்தில் விருப்பத்தை விளைவிப்பவனாகி இங்ஙனம் மொழிந்தான்.
ஹிரண்யாக்ஷன் சொல்லுகிறான்:- நீ லோகபாலர்களில் மேலானவன்; பெரும்புகழுடையவன். வீணாகக் கொழுத்துத் தங்களைத் தாமே பெரிய வீரர்களென்று நினைத்திருக்கும் துஷ்டர்களுடைய வீர்யத்தைப் போக்கடிக்குந் தன்மையன், “நான் இத்தகையனென்று நீ எப்படி நிச்சயித்தாய்” என்கிறாயோ? ப்ரபூ! நீ முன்பு ஸமஸ்த தைத்யர்களையும் தானவர்களையும் ஜயித்து ராஜஸூய யாகத்தினால் தேவனை ஆராதித்தாயல்லவா” என்றான்.
மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த வருணபகவான், மதம் வளரப்பெற்றவனும் தனக்கு த்வேஷியுமாகிய அஸுரன் இங்ஙனம் மொழிந்ததைக் கேட்டு நன்கு வஞ்சிக்கப்பெற்றவனாகிப் பெருங்கோபம் உண்டாகப்பெற்றான். ஆயினும், அவன் அந்தக் கோபத்தைத் தன் புத்தியால் அடக்கிக்கொண்டு அவ்வஸுரனைக் குறித்து இங்ஙனம் மொழிந்தான்.
வருணன் சொல்லுகிறான்:- வாராய் அஸுரனே! நாம் சண்டை செய்யும் விருப்பம் நீங்கப்பெற்றவர். அஸுர ச்ரேஷ்டனே! யுத்தத்தில் ஸமர்த்தனாகிய உன்னை எவன் யுத்தத்தில் ஸந்தோஷிக்கச் செய்வானோ, அப்படிப்பட்டவன் பரமபுருஷனைத் தவிர மற்ற எவனும் எனக்குப் புலப்படவில்லை. நீ யுத்தமார்க்கங்களில் மிகவும் வல்லமையுடையவன், உனக்குத் தகுமாறு யுத்தங்கொடுத்து ஸந்தோஷப்படுத்த வல்லவன் எவனும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பரமபுருஷன் ஒருவன் மாத்திரம் உனக்குத் தகுந்த யுத்தங்கொடுத்து உன் விருப்பத்தை நிறைவேற்றி உன்னை ஸந்தோஷப்படுத்துவான், ஆகையால் அந்தப் பரமபுருஷனிடம் போவாயாக. “அவன் யார்” என்னில், சொல்லுகிறேன் கேட்பாயாக. உன்னைப் போன்ற மனஸ்விகள் எந்தப் புருஷனை ஸ்தோத்ரஞ் செய்கின்றார்களோ, அவனே அந்தப் பரமபுருஷனாவான். அவன் மஹாவீரன். அத்தகையனான அந்தப் பரமபுருஷனைக் கிட்டி கர்வமெல்லாம் தொலைந்து வீரர்கள் மாண்டு சயனிக்கும்படியான யுத்தபூமியில் நாய் நரிகளால் சூழப் பெற்றவனாகிச் சயனிப்பாய். “உன்னைப்போல் அவனும் சண்டைசெய்வதில் விருப்பமற்றிருப்பானாயின், என் செய்யலாம்” என்கிறாயோ? அந்த பகவான் உன்னைப்போன்ற துஷ்டர்களை அழிக்கும்பொருட்டும் ஸத்புருஷர்களை, அனுக்ரஹிக்கும் பொருட்டும் வராஹாதி அவதாரங்களைக் கொள்கின்றான். ஆகையால் அவன் விஷயத்தில் நீ அங்ஙனம் சங்கிக்க இடமில்லை. நீ அவனிடம் சென்று உன் விருப்பம் நிறைவேறப் பெறுவாய்” என்றான்.
பதினேழாவது அத்தியாயம் முற்றிற்று.