கோவிந்தா, தாமோதரா, மாதவா - ஸ்ரீ R. நரஸிம்ஹன், திருச்சி

எம்பெருமானுடைய ஸௌலப்ய, ஸௌசீல்ய, ஆச்ரித ஸம்ரக்ஷணாதி திவ்யாத்ம குணங்கள் ப்ரகாசித்தது ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தில்தான். அவன் குறை ஒன்றில்லாத கோவிந்தன். கன்றுமேய்த்து இனிதுகந்த காளை. வத்ஸ மத்யகத பாலன். அர்ச்சையிலும் கோவிந்த நாமாவளியை ப்ரகடனம் செய்து திருவேங்கடமுடையானாக ஸேவை ஸாதித்தருளுகிறான். தேவர்கள் புடை சூழ நித்ய சூரிகளின் (இமையோர் தலைவன்) நாதன், ஆய்ப்பாடியில் கோவர்த்தனோத்தாரியாக கோவிந்த பட்டாபிஷேகம் செய்து கொள்ளுகிறான். ஸந்த்யாவந்தனாதி நித்ய கர்மாக்களிலும் கோவிந்த நாமாவளி இடம் பெறுகிறது. அச்யுதா, அநந்தா, கோவிந்தா என்று உச்சரித்தால் எல்லா வ்யாதிகளும் பறந்தோடி விடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
ஆய்ப்பாடி கோபர்கள் ஒன்று கூடி கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்ய முற்பட்டபோது ஸ்ரீ கண்ணனோ, நந்தகோபருக்கு ஆலோசனை சொல்லி, யுக்தி மூலம் ஒப்புக்கொள்ளச் செய்து அன்ன கூட உத்ஸவம் செய்வித்தான். மலையுருவத்தில் தானே உட்கொண்டு எல்லாரையும் மகிழ்வித்தான். ஸ்ரீ கண்ணனது உண்மை சொருபத்தை மறந்த அவனது ஸேவகனான இந்திரன், கோபங்கொண்டு, மதிமயங்கி ஏழு நாட்களுக்கு கல்மழை பெய்வித்து கேடு விளைவித்தான். பக்தவத்ஸலனான ஸ்ரீ கண்ணனோ, கோவர்த்த மலையையே தனத இடது கை சிறு தளிர் விரல்களால் தாங்கி, ஆய்ப்பாடி ஜனங்களைக் காத்தருளினான். தனது தவறை உணர ஏழு நாட்களாயின இந்திரனுக்கு. தவறை உணர்ந்து, தெய்விகப் பசுவான ஸ்ரீ காமதேனுவின் பாலைக் கொண்டு ஸ்ரீ கண்ணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து “கோவிந்தன்’' என்கிற திருநாமத்தையும் வெளியிட்டு அபராத க்ஷமாபணம் செய்து கொண்டான். அன்று முதல் இந்நாளவும் இத்திருநாமம் மஹிமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. திருவாய்பாடியில் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்தி தயிர் கடையும் போது அவர்கள் எழுப்பும் கோவிந்த, தாமோதர, மாதவ சப்தமானது எல்லாதிக்குகளிலும் உள்ள அமங்களத்தைப் போக்கியது. வீதியில் பால், தயிர், மோர், வெண்ணெய் விற்கும் ஆய்ச்சியர், அன்பினால் தன் தொழிலையும் மறந்து, கோவிந்தா, தாமாதரா, மாதவா என்றே கூவிக் கொண்டே செல்வது வழக்கம். பசுக்களை மேய்ப்பவன், நம்மாலும் அடையத் தகந்தவன், ஸர்வ சுலபனென்பதை இந்த நாமாக்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஸ்ரீ கண்ணனின் குறும்பத்தனம் நாளாக நாளாக அதிகரிக்க இதர பெண்பிள்ளைகள் யசோதையிடம் முறைபாட, அவளும் அவனை (எந்த கட்டுக்கும் உட்படாதவனை) தாம்பினால் கட்ட நினைத்தாள், முயற்சித்தாள். முடியவில்லை. கயிறு 4 அங்குலம் குறைவாகவே இருந்தது. தாயின் பரிச்ரமத்தைக் கண்ணனும் கண்டு இரங்கி கட்டுண்ண இசைந்தான். வயிற்றினில் தாய் கட்டிய தாம்பின் தழும்பு அவனை தாமோதரனாக்கியது. அதனைப் போற்றி இத்தழும்பு இன்றளவும் இருப்பதாகக் கூறுவர். ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய மாயன்’ அவன். பக்தபாராதீனன். குபேர புத்ரர்களான நளகூபன், மணிக்ரீவர்களுக்குச் சாபவிமோசனம். நமக்கு அவனது தாமோதர நாமம் கிடைத்தது.
“வங்கக் கடல் கடைந்த மாதவன்'' என்று ஸ்ரீநாச்சியார் அருளிச் செய்தவாறு அவன் லோகமாதாவான ஸ்ரீமஹாலக்ஷ்மியை ஸ்வீகரித்து 
வக்ஷ:பீடம் மதுவிஜயின: பூஷயந்தீம்
என்ற அளவில், தனது விசாலமான வக்ஷஸ்தலத்தில் அமர்த்திக் கொண்டு ஸ்ரீ மாதவன் ஆனான். விண்ணவர் அமுதுண, அவன் பெண்ணமுதுண்ட பிரான் ஆனான். இரவில் தூங்கும் போது ஸ்ரீ மாதவனை எண்ணுமாறு பெரியோர் பணிப்பர். மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று நாமம் பலவும் நவில வேண்டுமென ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த பிரகாரம், காடுகளுடு போய் கன்றுகள் மேய்த்து பூச்சூடி வருகின்ற தாமோதரன் கோவிந்தனான மாதவன். அவன் பேடை மயிற்சாயல் பின்னை மணாளன். பாவை நோன்பைத் தலைக்கட்டி முடியும் தருணம் குறை ஒன்றுமில்லாத கோவிந்தன்.
திருமலை - திருப்பதிக்கு வரும் பக்தர்கள், கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்த ராஜனையும், தில்லை நகர் திருச்சித்திரகூடத்தில் அருள்பாலிக்கும் கோவிந்த ராஜனையும் ஸேவிப்பது நாம் அறிந்ததே.
இவ்விதம் ஸ்ரீ கோவிந்த, தாமோதர, மாதவன் என்கிற திருநாம வைபவத்தை ஓரளவு சிந்தித்தோம். மற்றவை ஸ்ரீ ஆழ்வார்களது ஸ்ரீசூக்திகளிலும், ஸ்ரீ ஆசார்ய க்ருதிகளிலும் காணலாம். 
“வாச்யாய ஸர்வசப்தாநாம் ஸர்வவேதமயாய ச |
ப்ரபந்நார்த்திஹராய ஸ்ரீ கோவிந்தாயாஸ்து மங்களம் ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:
நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா புரட்டாசி 2014


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை