சனி, 26 அக்டோபர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 63

மூன்றாவது ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்

(ஹிரண்யாக்ஷ ஹிரண்யகசிபுக்களின் உற்பத்தியும், அவர்களில் ஹிரண்யாக்ஷனுடைய ப்ரபாவமும்.) 

மைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் விதுரனே! அனந்தரம் துர்மதனாகிய (கொடிய கொழுப்புடையவனாகிய) அவ்வஸுரன் அங்ஙனம் வருணன் மொழிந்ததைக் கேட்டுத் தனக்கு எதிரே நின்று யுத்தம் செய்யவல்லவன் ஒருவன் உளனென்று தெரிந்தமையால் மனக்களிப்புற்றவனாகி, அந்தப் பரமபுருஷனுடைய பெருமையைப் பொருள் செய்யாமல், நாரதர் மூலமாய் அந்த பகவானுடைய மார்க்கத்தை அறிந்து விரைவுடன் பாதாளத்தில் ப்ரவேசித்தான். அவ்விடத்தில் வராஹ உருவங்கொண்டு பர்வதம்போல் நிகழ்கின்றவனாகிக் கோரையின் நுனியால் பூமியை மேலுக்கெடுக்கின்ற பரமபுருஷனைக் கண்டான். அவன் எவ்விடத்திலும் வெற்றிபெறுந்தன்மையன். தாமரை மலர்போன்று சிவந்த ஒளியுடைய தன் கண்ணோக்கத்தினாலும் தன் தேஹகாந்தியாலும் அம்மஹாபுருஷன் ஹிரண்யாக்ஷனுடைய தேஜஸ்ஸையெல்லாம் பறித்தான். அவ்வஸுரன் அந்த வராஹ பகவானைக் கண்டு “காடுகளில் திரிகின்ற மிருகம் அன்றோ இங்குப் புலப்படுகின்றது” என்று பரிஹாஸம் செய்தான். அப்பால் அந்த பகவானைப் பார்த்து அவ்வஸுரன் இங்கனம் மொழிந்தான்.

ஹிரண்யாக்ஷன் சொல்லுகிறான்:- அறிவில்லாத மூடனே! இப்படி வருவாயாக: பூமியை விடு. பாதாளத்தில் வாஸம் செய்பவராகிய எங்களுக்கு இந்த பூமியை ப்ரஹ்மதேவன் கொடுத்தான். இல்லையாயின், இந்த பூமி பாதாளத்தில் இறங்கிவர நேராதல்லவா ? அடா தேவாதமனே! நான் பார்த்துக் கொண்டிருக்கையில் நீ இந்த பூமியுடன் க்ஷேமமாகத் திரும்பிப்போகமாட்டாய். பன்றியின் உருவம் கொண்டவனே! உன்னைப் பொசுக்கிவிடுவேன், எமது சத்ருக்களாகிய தேவதைகள் உன்னை இங்ஙனம் பாழாகும் பொருட்டே வளர்த்தார்களாயென்? நீ (கண் மறைவில்) பரோக்ஷத்தில் ஜயிப்பவன்; மாயையால் அஸுரர்களை ஹிம்ஸிக்கின்றாய். அட அறிவுகெட்ட மூடனே! நீ மாயையே பலமாகக் கொண்டவன்; பௌருஷம் அற்பமாய் இருக்கப்பெற்றவன். இப்படிப்பட்ட உன்னைக் கொன்று என்னுடைய நண்பர்களின் சோகத்தைப் போக்குகின்றேன். எமது புஜத்தினின்று விடுபட்ட கதையால் நீ தலை சிதறப்பெற்று மாண்டுபோகையில், மூடர்களான எந்த “ரிஷிகளும் எந்த தேவதைகளும் உனக்கு இப்பொழுது பூஜை செய்கின்றார்களோ, அவர்களெல்லோரும் அவலம்பமற்று (வேரறுந்த வ்ருக்ஷங்கள் போல்) தாமே பாழாய் விடுவார்கள்” என்றான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த பகவான் சத்ருவாகிய அந்த அஸுரனுடைய வெசவுகளாகிற ஈட்டிகளால் பீடிக்கப்பட்டவனாயினும் கோரையின் நுனியிலிருக்கின்றவளும் பயப்படுகின்றவளுமாகிய பூமிதேவியைப் பார்த்துச் சத்ருவின் துர்ப்பாஷணைகளால் விளையும் வருத்தத்தைப் பொறுத்துக்கொண்டே, பெண் யானையுடன் கூடின யானையானது மகரமீனால் அடிக்கப்பட்டு வெளிக்கிளம்பிப் போவதுபோல், ஸமுத்ர மத்யத்தினின்று வெளிக்கிளம்பிப் போனான். அங்ஙனம் ஜலத்தினின்று வெளிக்கிளம்புகின்ற பகவானை அவ்வஸுரன், யானையை மகரமீன் துரத்துவதுபோல், பின்தொடர்ந்து துரத்திக்கொண்டு பயங்கரமான தன்கோரைகள் நன்கு வெளியாகும்படி வாயைத் திறந்து அப்பொற்குழலன் இடியின் கோஷம் போன்ற பேரொலியுடன் இங்ஙனம் மொழிந்தான்.

ஹிரண்யாக்ஷன் சொல்லுகிறான்:- வெட்கமில்லாத அஸத்துக்களுக்கு எதுதான் செய்யத்தகாத கார்யம்.? “இதைச் செய்தால் நம்மை ஜனங்கள் பரிஹஸிப்பார்கள் இது நிந்தைக்கிடமான கார்யம். ஆகையால் நாம் இதைச் செய்யலாகாது. செய்தால், நம்மை எல்லோரும் பழிப்பார்கள்” என்று வெட்கப்படுந் தன்மையர்க்கன்றோ சில கார்யம் சிந்தைக்கிடமென்று பரிஹரிக்கத்தக்கதாகும். வெட்கமில்லாதவர்க்குச் செய்யத்தகாத கார்யம் எதுவுமே இல்லை. அவர்கள் நிந்தைக்கிடமான கார்யங்களையும் செய்வார்கள்” என்றான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த பகவான் அவ்வஸுரன் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அவனைப் பொருள் செய்யாமல் ஜலத்தின் மேல் ஸஞ்சாராயோக்யமான இடத்தில் பூமியை வைத்து அந்த பூமியில் தன் பலமாகிய ஆதாரசக்தியை ஸ்தாபித்தான். அப்பொழுது அம்மஹா புருஷனை ப்ரஹ்மதேவன் ஸ்தோத்ரம் பண்ணிக்கொண்டிருந்தான். தேவதைகள் அவன்மேல் புஷ்பங்களை இறைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவ்வஸுரன் அந்த பகவானைப் பின்தொடர்ந்து வந்தான். அவன் ஸ்வர்ணமயமான ஆபரணங்களை அணிந்து பெரிய கதையை ஏந்திக்கொண்டு ஸ்வர்ணமயமான கவசம் தரித்து ஜ்வலித்துக் கொண்டிருந்தான். அவ்வஸுரன் துர்ப்பாஷணைகளால் அடிக்கடி ஸ்ரீவராஹ பகவானுடைய மர்மங்களைப் பீடித்துக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்தான். அக்காலம் அந்த வராஹபகவான் கடுங்கோபமுடையவனாகிச் சிரித்துக்கொண்டு பரிஹாஸத்துடன் பேசினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அஸுரனே! எம்மைக் காட்டில் ஸஞ்சரிக்கின்ற மிருகமென்று யாது மொழிந்தனையோ, அது வாஸ்தவமே. ஆனால் உங்களைப் போன்ற காய்களைத் தேடும் பொருட்டு நாங்கள் மிருக வேஷம் பூண்டோம். ம்ருத்யுவின் பாசங்களால் கட்டுண்டிருக்கின்ற நீ தன்னைத்தானே அமங்களகரமாகப் புகழ்ந்துகொள்வதை வீரர்கள் கொண்டாட மாட்டார்கள். பாதாளவாஸிகளான உங்கள் பூமியை நாங்கள் எடுத்துக்கொண்டுபோக வந்தோமல்லவா? பூமி உங்களுடையதென்பதில் ஸந்தேஹம் உண்டோ? (புத்திகெட்டவனே! இந்த பூமியை எங்களுடையதென்று ஏன் வீணாகப் பிதற்றுகிறாய். பூமிக்கும் உங்களுக்கும் என்ன ஸம்பந்தம்?) நாங்கள் வெட்கமற்று உங்கள் பூமியை எடுத்துக் கொண்டுபோக வந்தோம். நீ எங்களைக் கதையால் அடித்துத் துரத்துகின்றாய். ஆயினும் எந்த ப்ரகாரத்தினாலாவது யுத்தத்தில் எதிர் நிற்கின்றோம். பலிஷ்டனாகிய உன்னுடன் விரோதத்தை ஏறிட்டுக் கொண்ட பின்பு நாங்கள் எங்குப் போவோம். எங்குப் போயினும் உன்னிடத்தினின்று தப்பித்துக்கொள்ள வல்லரல்லோம். (அறிவு கெட்ட மூடனே! நீயன்றோ வெட்கமில்லாமல், பூமி எங்களுடையதென்று பிதற்றுகின்றாய். நங்கள் வெட்கமற்றவரல்லோம். கதையால் எங்களைத் துரத்திவிடுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனை. நீயே எம்மால் துரத்தப்பெற்று ஓடப்போகின்றனை, இதைத் திடமாக நெஞ்சில் நினைத்துக்கொள். யுத்தத்தில் உன்னைக்காட்டிலும் மேலாகவே நாங்கள் முயல விரும்புகின்றோம். விருப்பம் மாத்ரமே அன்று; கார்யத்திலும் பின்வாங்கமாட்டோம். பலிஷ்டர்களாகிய எங்களுடன் விரோதித்துக் கொண்டு நீ எங்குப்போய்த் தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றனை? எங்குப் போயினும் தப்பித்துக்கொள்ள வல்லனல்லை). நீ பதாதிகளின் கூட்டத்தில் தலைமையுள்ள வீரர்களைக்காட்டிலும் மேலானவன், அத்தகைய நீ ஏன் வெறுமனே இருக்கின்றாய்? நீ எம்மைப் பரிபவிக்க வேண்டுமென்று மனத்தில் கருதுகின்றனையல்லவா. உன் விருப்பத்தை ஈடேற்றுவதற்கு ப்ரயத்னிப்பாயாக. நீ சங்கையின்றி எம்மை வதித்து உனது நண்பர்களின் கண்ணீரைத் துடைக்கப் பார்ப்பாயாக. எவன், தான் செய்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றாதிருப்பானோ, அவன் ஸபைக்குத் தகுந்தவனல்லன். அவன் பத்து ஜனங்கள் சேர்ந்த ஸபைக்கு வருவானாயின், “இவன் ப்ரதிஜ்ஞை செய்து அதை நிறைவேற்ற முடியாமல் நின்றான்” என்று நிந்திப்பார்கள். ஆகையால் நீ செய்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றுவாயாக. (நீ வீரர்களில், சேர்ந்தவனேயல்லை. உனக்குச் சிறிதும் வீரமில்லை. நீ வீணாக எம்மைப் பரிபவிக்க வேண்டுமென்று நினைக்கின்றனையன்றி அது உனக்கு ஸாத்யமன்று. என்னைக்கொன்று உன்னுடைய நண்பர்களின் கண்ணீரைத் துடைக்கப் பார்க்கின்றனையல்லவா. பயப்படும் தன்மையுள்ள உனக்கு அது எப்படி கைகூடும்? நீ வீண் ப்ரதிஜ்ஞை செய்து அது நிறைவேற்றுந் திறமையற்றிருக்கின்றமையால் ஸபைக்குத் தகுந்தவனல்லை. இப்பொழுது என் கையில் மாண்டு, செய்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றாமல் நிந்தைக்கிடமாகப் போகின்றனை)” என்றான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் பகவான் அவ்வஸுரனைத் திரஸ்கரித்துக் கோபத்தினால் மிகவும் பரிஹாஸஞ் செய்தான். இதைக் கேட்ட அவ்வஸுரனும் தூண்டப்பெற்ற சிறந்த ஸர்ப்பம்போல் பெருங்கோபத்தை ஏற்றுக் கொண்டான். அங்ஙனம் கோபாவேசமுற்ற ஹிரண்யாக்ஷன் கோபத்தின் மிகுதியால் பெருமூச்செறிந்துகொண்டிருந்தான்; அன்றியும், இந்திரியங்களெல்லாம் கலங்கப்பெற்றான். அத்தகையனாகிய அந்த ஹிரண்யாக்ஷன் ஸமீபத்தில் வந்து பலம் உள்ளவளவும் கதையினால் பகவானை அடித்தான். அந்த ஸ்ரீபகவானும் சத்ருவாகிய அஸுரன் தன்மார்பில் விடுத்த கதையின் வேகத்தைப் பரிஹரித்துக் கொண்டான். அவன் அந்த கதை வேகத்துடன் தன்மேல் விழவரும்பொழுது தான் இருந்த இடத்தினின்று கொஞ்ச தூரம் குறுக்கே சென்று, யோகம் கைபுகுந்த மஹாயோகியானவன் ம்ருத்யுவைத் தடுப்பது போல், அந்த கதையைத் தன் மேல் படவொட்டாமல் தடுத்தான். அவ்வஸுரன் அந்த கதை குறிதவறிக் கீழ்விழுவதற்கு முன்னமே அதை எடுத்துக் கொண்டு மீளவும் அடிக்கடி சுழற்றிக்கொண்டிருந்தான். அதுகண்டு அவ்வஸுரன்மேல் மிகவும் கோபாவேசமுற்ற பகவான் கோப வேகத்தினால் உதட்டைக் கடித்துக்கொண்டு அவனை எதிர்த்து ஓடினான், அனந்தரம் ஸமர்த்தனாகிய பகவான் தன்கதையால் சத்ருவை வலப்பக்கத்தில் அடித்தான். வாராய் கல்லியற்கையுடைய விதுரனே! அவ்வஸுரன் கதாயுத்தத்தில் வல்லமையுடையவன். ஆகையால் தன் வலத்தோளில் பாயும்படி ஸ்ரீஹரி ப்ரயோகித்த கதை தன்மேல் விழுவதற்கு முன்னமே அதைத் தன் கதையால் அடித்தான். இங்ஙனம் ஹிரண்யாக்ஷன் ஸ்ரீஹரி ஆகிய இருவரும் கோபமும் பரபரப்பும் வளரப் பெற்று ஒருவரையொருவர் ஜயிக்க வேண்டுமென்னும் விருப்பத்துடன் பெரிய கதைகளால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். அந்த ஸ்ரீவிஷ்ணுவும் அஸுரனும் ஆகிய இருவரும் ஒருவர்மேல் ஒருவர் பொறாமையுடன் கூரான கதைகளால் அங்கங்களை அடித்துக் கொண்டிருக்கையில், அடிபட்ட இடங்களினின்று ரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. அவர்கள் அந்த ரத்தத்தின் நாற்றத்தை மோந்து மேன்மேலும் கோபம் வளரப்பெற்று பூமியின் நிமித்தமாக ஒருவரையொருவர் ஜயிக்கவேண்டுமேன்னும் விருப்பத்தினால் கதாயுத்தத்தில் ஏற்பட்ட அற்புதமான பலவகை நடைகளில் ஸஞ்சரிப்பவராகி, மதித்த வ்ருஷபங்கள் போல் யுத்தம் செய்தார்கள். அவர்களுடைய யுத்தமானது மிகவும் விளக்கமுற்றிருந்தது. யஜ்ஞமூர்த்தியாகிய பகவான் தன் ஸங்கல்பத்தினால் வராஹ உருவம் கொண்டவன். அம்மஹானுபாவனுக்கு அவ்வஸுரனைக் கொல்வது ஒரு பொருளன்று ஆயினும் “இவன் ஒருக்கால் கொழுப்படங்கி வணங்கி வருவானோ என்னவோ” என்னும் சங்கையினால் பொழுது போக்கிக்கொண்டிருந்தான். அதற்குக் காரணம் அவனிடத்தில் அனுக்ரஹமேயன்றி வேறில்லை. அவ்வஸுரனோன்றால் சிறிதும் வணங்காமல் சண்டை செய்வதிலேயே செருக்குடையவனாயிருந்தான். வாராய் குருகுலாலங்காரனே! ஸ்ரீவிதுரனே! பகவான் யஜ்ஞங்களால் ஆராதிக்கப்படுகின்றவனும் யஜ்ஞங்களை நடத்துகின்றவனும் யஜ்ஞத்திற்குரிய த்ரவ்ய ஸ்வரூபனுமாகையால் யஜ்ஞ ஸ்வரூபனென்றும் யஜ்ஞமூர்த்தி என்றும் கூறப்படுவான். அம்மஹானுபாவனும் ஹிரணயாக்ஷனும் பூமியின் நிமித்தமாக அங்ஙனம் யுத்தம் பண்ணிக்கொண்டிருக்கையில், அந்த யுத்தத்தைப் பார்க்க விரும்பி ப்ரஹ்மதேவன் மரீசி முதலிய ரிஷிகளால் சூழப்பெற்று அவ்விடம் வந்தான். தேவக்கூட்டங்களுக்குத் தலைவனும் ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவனுமாகிய ப்ரஹ்மதேவன் அவ்விடம் வந்து, அவ்வஸுரன் மிகுமதங்கொண்டு பயமற்று எவ்விதத்திலும் ப்ரதிசெய்ய முடியாமல் எதிராளியின் செயல்களையெல்லாம் தடுப்பவனாகிப் பொறுக்க முடியாத பராக்ரமமுடையவனாயிருப்பதையும் கண்டு ஆதிவராஹ ஸ்வரூபியாகிய ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து இங்ஙனம் மொழிந்தான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- வாராய் தேவாதி தேவனே! இந்த திதியின் புதல்வன் உனது பாதமூலத்தைப் பற்றின தேவதைகளுக்கும் ப்ராஹ்மணர்களுக்கும் பசுக்களுக்கும் நிரபராதிகளான மற்றுமுள்ள ப்ராணிகளுக்கும் நிஷ்காரணமாக உபத்ரவம் செய்கின்றான். அந்த தேவாதிகள் இவன் செய்யும் உபத்ரவத்தைத் தடுக்க முயற்சி கொள்வார்களாயின், அவர்களை விரட்டி அவரவர் பொருள்களையும் ப்ராணன்களையும் பறிக்கின்றான். இவன் எம்மிடத்தினின்று வரம்பெற்றான். அந்த வரத்தின் மஹிமையால் தன்னெதிரில் நின்று சண்டை செய்யும் (சத்ரு) ப்ரதிபக்ஷி மற்றெவனும் இல்லாதவனானான். அதனால் கொழுத்தவனாகி இவன் தனக்கு ப்ரதிபக்ஷி எவனேனும் அகப்படுவனாயென்று உலகங்களெல்லாம் திரிகின்றான். விளையாடுந் தன்மையனே! இவன் பெரிய மாயாவி. இருந்தாற்போலிருந்து யானை குதிரை முதலிய சதுரங்க பலங்களையும் தன் மாயையினால் படைக்கவல்லவன். நமக்கு இப்படிப்பட்ட ஆச்சர்ய சக்தி உண்டென்று பெரும் கர்வங்கொண்டவன். மாவெட்டியை உதறித்திரியும் மதித்த யானை போன்றவன்; துர்ப்புத்தியுடையவன்; ஒன்றும் தெரியாத பாலகன் வாலைப் பிடித்து இழுப்பது முதலிய சேஷ்டைகளால், சீறிச்சினந்த ஸர்ப்பத்துடன் விளையாடுவதுபோல், இப்படிப்பட்ட இவ்வஸுரனுடன் விளையாட வேண்டாம். பயங்கரனாகிய இவ்வஸுரன் தனக்கு பலங்கொடுப்பதாகிய ஸந்த்யாகாலம் வரப்பெற்று ஆச்சர்யமான தன் மாயையைக்கொண்டு வளர்ந்து வருவதற்கு முன்னமே இவனை வதிப்பாயாக. நீ ஆஸ்ரிதர்களைக் கைவிடாதவனல்லவா. இப்படி இவனுடன் விளையாடிக் கொண்டிருப்பாயாயின், ஸந்த்யாகாலம் வரின், இவன் ஜயிக்க முடியாதவனாவான். இவ்வஸுரன் இயற்கையில் தானே பெரியமாயாவி. ஸந்த்யாகாலமும் ஸஹாயமாய்க்கூடுமாயின், இவனை எவர்க்கும் ஜயிக்கமுடியாதே. பிறகு இவன் பலம் வளர்ந்து உன் விஷயத்தில் ஏதேனும் பாபம் செய்வானாயின், நாங்கள் என் படக்கடவோம் ? நீ அங்ஙனம் எங்களைக் கைவிடலாகுமா? அச்சுதனே! ஆகையால் நீ இவனுடன் விளையாடிப்பொழுது போக்கிக் கொண்டிருக்கவேண்டாம். ஸந்த்யாகாலம் வருவதற்கு முன்னமே இவனை வதித்து விடுவாயாக. ப்ரபூ! ஸந்த்யாகாலம் உலகங்கட்கெல்லாம் ப்ரதிகூலமாயிருக்கும். இவ்வேளையில் உலகமெல்லாம் மதி மயங்கப்பெறும். இக்காலம் மிகவும் பயங்கரமாயிருப்பது. இப்படிப்பட்ட ஸந்த்யாகாலமானது இதோ ஸமீபித்து வருகின்றது. வாராய் ஸர்வாந்தர்யாமியும் ஸர்வஸ்வரூபனுமான பகவானே! இக்காலம் அஸுரர்களுக்கு ஜயத்தை விளைப்பது. ஆகையால் அந்த ஸந்த்யாகாலம் வருவதற்கு முன்னமே இவ்வஸுரனைக் கொன்று தேவதைகளுக்கு ஜயத்தை விளைவிப்பாயாக. இப்பொழுது அபிஜித்தென்னும் முஹுர்த்தம் வந்திருக்கின்றது. இது மத்யாஹ்ன முஹூர்த்தம். இது தகுந்த காலம். ஆகையால் உனது நண்பர்களாகிய எங்கள் க்ஷேமத்தின் பொருட்டு ஜயிக்க முடியாத இவ்வஸுரனைச் சீக்ரத்தில் வதிப்பாயாக. பகவானே! ஸனத் குமாராதி ரிஷிகளின் சாபத்திற்குப் பின்பு நீ இவர்களை அனுக்ரஹித்து “நானே உங்களை வதிக்கின்றேன்” என்று உன்னையே ம்ருத்யுவாக ஏற்படுத்தினாயல்லவா? தந்தையாகிய கச்யபரும் இவர்களுக்கு உன்னையே ம்ருத்யுவாக ஏற்படுத்தியிருக்கின்றார். இங்ஙனம் தனக்கு ம்ருத்யுவாக ஏற்பட்ட உன்னை இவ்வஸுரன் தெய்வாதீனமாய்த் தானே கிட்டினான். யுத்தத்தில் உன் பராக்ரமத்தைக் காட்டி மாயாவியான இவ்வஸுரனை வதித்து உலகங்களையெல்லாம் ஸுகித்திருக்கச் செய்வாயாக. 

பதினெட்டாவது அத்யாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக