நான், எனது என்ற அகம்பாவத்தை (அறியாமை) நீக்கி, அறிவு பூர்வமாக செய்த பாவங்களுக்கு வருந்தி, மீண்டும் அப்பாவங்களைச் செய்யாமல் பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானை சரணடைவதே, முழுமயான சரணாகதியாகும். (Absolute surrender) இக்கருத்தையே, அதாவது பாபங்களுக்கு ஆட்படாமல், நரக வேதனைக்கு ஆட்படாமல், நல்லொழுக்கத்துடன் எம்பெருமானை சரணமடைய வேண்டும் என்பதை ஆழ்வார்கள் பாசுரங்களின் மூலம் அறிந்து, மகிழ்வோம். மனத் தூயமையுடன் செய்வதே உண்மையான சரணாகதியாகும். மனம் தூய்மை கெடுவதற்குக் காரணம் காமம், கோபம், லோபம், பயம், த்வேஷம், மதம், மாத்ஸர்யம் முதலியவைகளே ஆகும் என்று ஆசார்யர்கள் கூறுகின்றனர். பஞ்சமாபாவங்களால் பரமனை அடைய முடியாது. இதனை திருமங்கையாழ்வார் பாசுரத்தின் மூலம் அறியலாம்.
சூதினை பெருக்கி களவினைத் துணிந்து
சுரிகுழல் மடந்தையர் திறத்துக்
காதலே மிகுத்து, கண்டவா திரிந்த
தொண்டனேன், நமன்தமர் செய்யும்,
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்; வேலை
வெண் திரை அலமரக் கடைந்த
நாதனே ! வந்து, உன் திருவடி அடைந்தேன்
நைமிசாரண்யத்துள் எந்தாய் !
வெண்மையான மிகப் பெரிய அலைகளுடைய பாலாழியைக் கடைந்து அமரர்களைக் காத்த பெருமானே, திருநைமிசாரண்யத்தில் சேவை ஸாதிப்பவனே - என் தந்தையே - சூதாடுவதையே தொழிலாகக் கொண்ட நான், நீண்ட அழகான கூந்தலை உடைய பெண்களிடத்திலே மோகங்கொண்டு அவர்களுக்கு அடிமை செய்தேன். இப்பொழுது வருந்தி, யம படர்கள் அளிக்கப் போகும் துன்பத்தையெண்ணி, நிலை குலைந்து உன் திருவடியை அடைந்தேன். உனக்கே அடைக்கலமானேன்.
இனி ஆழ்வாரின் மற்றோரு பாசுரத்தைக் காண்போம்.
“வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து,
பிறர் பொருள், தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால், நமன்-தமர் பற்றி
எற்றிவைத்து, எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை, பாவீ
தழுவுஎன மொழிவதற்கு அஞ்சி,
நம்பனே - வந்து உன் திருவடி அடைந்தேன்
நைமிசாரண்யத்துள் எந்தாய்.”
நல்ல மணத்தைப் பரப்புகின்ற நீண்ட கூந்தலையுடைய கட்டிய மனைவியை விட்டுப் பிறிந்து, பிறர் பொருள், செல்வம், அவர்களுடைய மனைவியையும் விரும்புபவர்கள் இறந்தால், எமபடர்கள் அவர்களை இழுத்துச் சென்று, கொடிய நரகத்தில், நெருப்பிலே காய்ச்சிய, செம்பினால் செய்யப்பட்ட ஓர் பெண்பாவையைக் காட்டி, மனைவிக்கு துரோகம் செய்த பாவியே, இந்தப் பாவையைத் தழுவுவாயாக, என்று பிடரியைப் பிடித்து தள்ளி தண்டனை கொடுப்பார்கள். இந்த வேதனைக்கும், கொடும் சொற்களுக்கும் அஞ்சிய நான், நைமிசாரண்யத்தில் சேவை சாதிக்கும் எம்பெருமானே, என் தந்தையே, கங்கையைக் கொணர்ந்த உன் திருப்பாதக் கமலங்களை, நம்பிக்கை கொண்டு, சரண் அடைந்தேன்.
இவ்வாறாக ஆழ்வார் ஒழுக்கத்தை வலியுறுத்தி, மனத் தூய்மையுடன் எம்பெருமானிடம் சரணமடைய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.
நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா புரட்டாசி 2014