திங்கள், 28 அக்டோபர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 64

மூன்றாவது ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்
(வராஹ பகவான் ஹிரண்யாக்ஷனை ஸம்ஹாரம் செய்தல்)
மைத்ரேயர் சொல்லுகிறார்:- அந்த ப்ரஹ்மதேவன் மொழிந்த வார்த்தை நிர்த்தோஷமும் அம்ருதம்போல் மிக்க மதுரமுமாயிருந்தது. ஸ்ரீபகவான் அந்த வார்த்தையைக் கேட்டு “ஸர்வ ஸம்ஹாரகனான எனக்கும் சத்ரு பலத்தினின்று பயம் சொல்லுகிறானே” என்று சிரித்து ப்ரீதியை உட்கொண்டதாகிய கடைக் கண்ணோக்கத்தினால் அவ்வசனத்தை அங்கீகரித்தான். ப்ரஹ்மதேவனுடைய க்ராணேந்தயத்தினின்று தோன்றின அவ்வராஹ பகவான், அப்பால் ஒன்றுக்கும் பயப்படாதவனும் எதிரே நின்று ஸஞ்சரிக்கின்றவனுமாகிய அவ்வஸுரன் மேல் கிளம்பி கதையினால் கன்னத்தின் கீழ் ப்ரதேசத்தில் அடித்தான். அவ்வஸுரன் அந்த கதை தன்மேல் வருவதற்கு முன்னமே அதைத் தன் கதையால் அடித்துத் தள்ளினான். அங்ஙனம் அடிக்கப்பெற்ற அந்த கதை பகவானுடைய ஹஸ்தத்தினின்று நழுவிப் பெருங்கோஷத்துடன் கீழே விழுந்தது. விழும்பொழுது அந்த கதை ஜ்வலித்துக்கொண்டு ப்ரகாசித்தது. அந்த கதை பகவானுடைய ஹஸ்தத்தினின்று நழுவி விழுந்தமை அனைவர்க்கும் ஆச்சர்யமாயிருந்தது. அப்பொழுது அவ்வஸுரன் பகவானை அடிக்க அவகாசம் நேரப்பெற்றும் ஆயுதமற்றிருக்கின்ற அந்த பகவானை அடிக்கவில்லை. அதற்குக் காரணமென்னவெனில், அவ்வஸுரன் யுத்தத்தில் ஆயுதமில்லாதவர்களை அடிக்கலாகாதென்னும் தர்மத்தை வெகுமதித்திருந்தான். ஆகையால் அவன் பகவானை அடிக்காமல் வெறுமனே எதிர்பார்த்தான். அது பகவானுக்கு மிகவும் கோபத்திற்கிடமாயிருந்தது. அங்ஙனம் பகவானுடைய கதை அடிபட்டு விழுந்ததைக் கண்டு யுத்தம் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் வருந்தி ஹாஹாகாரம் செய்தார்கள். அப்பொழுது ஸமர்த்தனாகிய பகவான் அவ்வஸுரன் ஆயுதமில்லாதவனை அடிக்கலாகாதென்ற தர்மத்தை எதிர்பார்த்திருந்தமைக்கு அவனை வெகுமானித்தான், உடனே பகவான் தன்னுடைய சக்ராயுதத்தை நினைத்தான். அப்பொழுது அந்தச் சக்ராயுதம் நினைத்த மாத்ரத்தில் ஜ்வலித்துக்கொண்டு மிக்க பரபரப்புடன் பகவானிடம் வந்து சேர்ந்தது. அக்காலம் திதியின் புதல்வனென்று வழங்கப்பெற்றவனும் தன்னுடைய ப்ருத்யர்களில் தலைமையுள்ளவனாய் இருந்தவனுமாகிய அவ்வஸுரன்மேல் உறைந்துகொண்டு பெருவேகத்துடன் பகவானிடம் வருகின்ற ஸ்ரீஸுதர்சன சக்ரத்தைப் பார்த்து அந்த யுத்தப்ரதேசத்தில் ஆகாசத்தில் திரிகின்ற ப்ராணிகள் அதன் ப்ரபாவத்தை அறிந்தவராகையால் “இவ்வஸுரனை வதிப்பாயாக. உனக்கு க்ஷேமம் உண்டாகுக” என்றவை முதலிய பலவகையான வசனங்களை மொழிந்தார்கள். அவ்வஸுரன், தாமரை இதழ் போன்ற கண்களுடையவனும் சக்ராயுதம் தரித்திருப்பவனுமாகிய பகவான் எதிரே நிற்பதைக் கண்டு கோபத்தினால் இந்த்ரியங்களெல்லாம் கலங்கப்பெற்று ரோஷத்தினால் பெருமூச்செறிந்துகொண்டு தன் உதட்டைக் கடித்துக்கொண்டான். பயங்கரமான கோரைப் பற்களையுடைய அவ்வஸுரன் கண்களால் தஹிப்பவன் போல் பார்த்துக்கொண்டு எதிர்த்தோடி வந்து பகவானைக் குறித்து “இப்பொழுது நீ அடியுண்டு மாண்டாய்” என்று மொழிந்து கொண்டே தன் கதையால் பகவானை அடித்தான் யஜ்ஞமூர்த்தியாகிய ஆதிவராஹபகவான் வாயுவோடொத்த வேகமுடைய அந்த கதை வருவதற்கு முன்னமே சத்ருவாகிய அவ்வஸுரன் பார்த்துக்கொண்டிருக்கையில் அதைத் தனது இடக்காலால் அவலீலையாகத் தடுத்தான். அப்பால் அவனைப் பார்த்து “ஆயுதம் எடுத்துக் கொள்வாயாக. முயற்சி செய்வாயாக. நீ அவஸ்யமாய் ஜயிக்கவேண்டுமென்று விரும்புகின்றாயல்லவா? வெறுமனே இருந்தால் எப்படி? கார்யத்தை நடத்துவாயாக” என்று மொழியவும் மொழிந்தான். இங்ஙனம் மொழியப் பெற்ற அவ்வஸுரன் தடைபட்டு விழுந்த கதையை எடுத்துக்கொண்டு அதனால் மீளவும் பகவானை அடித்துப் பெருங்கோஷத்துடன் கர்ஜித்தான். ஸ்ரீபகவான் அங்ஙனம் அஸுரனால் ப்ரயோகிக்கப்பட்டு வருகின்ற கதையைக் கண்டு சிறிதும் பயமின்றி இருந்தபடியே இருந்து கருத்மான் ஸர்ப்பத்தைப் பிடித்துக் கொள்வதுபோல், ஸமீபத்தில் வந்த அக்கதையை அவலீலையாகப் பிடித்துக்கொண்டான். இவ்வாறு தன் பௌருஷம் தடைபட்டிருக்கையில், அவ்வஸுரன் கர்வம் தொலைந்து ஒளி மழுங்கப்பெற்று “இதோ உன் கதையை வாங்கிக்கொள்வாய்” என்று பகவான் கொடுப்பினும் அதை வாங்கிக்கொள்ள விருப்பமுறாதிருந்தான். ஆனால் அவன் என் செய்தானென்னில், மூன்று நுனிகளையுடையதும் ஜ்வலிக்கின்ற அக்னிபோல் தன் கார்யத்தை நிறைவேற்றுவதில் துடிப்பதுமாகிய சூலத்தை யஜ்ஞஸ்வரூபியும் தன் ஸங்கல்பத்தினால் வராஹ உருவம் கொண்டவனுமாகிய பகவான் மேல் ப்ரயோகிக்கும் பொருட்டு எடுத்துக்கொண்டான், அவ்வஸுரன், ப்ரஹ்மவித்தான அந்தணனைக் குறித்து அபிசாரம் செய்வதுபோல் (சூன்யன் வைத்தல் முதலியவை), அந்த பகவானை அச்சூலத்தினால் அடிக்க விரும்பினான். அந்த பகவானோ என்றால், யஜ்ஞஸ்வரூபி; யாகங்களில் கொடுக்கும் ஹவிஸ்ஸுக்களை நேராகவும் இந்த்ராதி தேவதைகள் மூலமாகவும்  தானே புஜிப்பவன்; யாகபலன்களை நிறைவேற்றிக் கொடுப்பவன்; தன் ஸங்கல்பத்தினால் அப்ராக்ருதமான திவ்ய வராஹ உருவங் கொண்டவன், அத்தகைய பகவானிடத்தில் இச்சூலம் என் செய்ய முடியும்? ப்ரஹ்ம ஸ்வரூபத்தை உணர்ந்து ஸர்வ ப்ரகாரத்தாலும் அந்தப் பரமபுருஷனையே தஞ்சமாக நினைத்திருக்கும் ப்ராஹ்மணன் விஷயத்தில் அபிசாரம் முதலியவை எங்ஙனம் பயன்படமாட்டாவோ, அங்ஙனமே இச்சூலம் முதலியவை பகவானிடத்தில் பயன்படமாட்டா. ஆயினும் அம்மூடன் அதை அறியாமல் இதனால் இவனை வதித்து விடலாமென்று நினைத்துப் பேராசையுடன் சூலத்தை எடுத்துக் கொண்டான். அஸுரர்களனைவரிலும் மஹாசூரனாகிய அந்த ஹிரண்யன் ஜ்வாலைகள் மேலெழப்பெற்று ஆகாயத்தினிடையில் ஜ்வலிக்கின்ற அந்த த்ரிசூலத்தை வீர்யம் உள்ளவளவும் சுழற்றி பகவான் மேல் ப்ரயோகித்தான். முன்பு கருடன் ப்ரயோகித்த இறகை இந்த்ரன் வஜ்ராயுதத்தினால் சோதித்தாற்போல், பகவான் கூரிய நுனியுடைய தன் சக்ராயுதத்தினால் அந்த த்ரிசூலத்தைச் சோதித்தான். அவ்வஸுரன் தான் ப்ரயோகித்த சூலமும் பகவானுடைய சக்ராயுதத்தினால் அறுப்புண்டமை கண்டு ரோஷம் வளர்ந்தவனாகி எதிர்த்து வந்து கர்ஜித்துக் கொண்டு ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமாகிய பகவானுடைய மார்பில் மிகவும் உறுதியான தன் முஷ்டியால் அடித்து, உடனே அந்தர்த்தானம் அடைந்தான் (கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தான்). வாராய் விதுரனே! இங்ஙனம் அவ்வஸுரன் முஷ்டியினால் அடிக்கையில், அடியுண்ட ஆதிவராஹ பகவான், பூமாலையால் அடிக்கப்பெற்ற யானை போல் சிறிதும் சலிக்கவில்லை. அவ்வஸுரன் அந்தர்த்தானம் அடைந்தபின்பு யோகமாயைகளுக்கு (ஆச்சர்ய சக்திகளுக்கு) சாதனாகிய ஸ்ரீபகவான்மேல் மாயைகளைப் பலவாறு ப்ரயோகித்தான். அந்த மாயைகளைப் பார்த்து ப்ரஜைகளெல்லோரும் பயந்து ஜகத்திற்கெல்லாம் ப்ரளயம் சேர்ந்ததென்று நினைத்தார்கள். அவ்வஸுரனுடைய மாயையால் பயங்கரமான வேகத்தையுடைய காற்றுகள் வீசத் தொடங்கித் தூட்களைக் கிளப்பிப் பேரிருளை விளைத்தன. க்ஷேபணமென்னும் யந்த்ர விசேஷங்களால் எறியப்பெற்றவைபோல் திசைகளினின்று கற்கள் அபாரமாய் வந்து விழுந்தன. மேகங்கள் மின்னல்களோடும் இடிகளோடும் கூடி துர்க்கந்தமான சீ முதலியவற்றையும் மல மூத்ரங்களையும் மயிர்களையும் எலும்புகளையும் அடிக்கடி வர்ஷித்தன. அம்மேகங்கள் குவியல் குவியலாக ஆகாசம் முழுவதும் நிறைந்தன. அதனால் ஆகாயத்தில் நக்ஷத்ரக் கூட்டங்கள் எவையும் புலப்படவில்லை. பர்வதங்கள் பலவகை ஆயுதங்களைப் பெய்து கொண்டு புலப்பட்டன, அங்ஙனமே ராக்ஷஸ ஸ்த்ரீகளும் அரையில் அம்பரமின்றி அம்மணங்களாகிச் சூலாயுதங்களை ஏந்தித் தலைமயிர்களை விரித்துக்கொண்டு புலப்பட்டன. ஹிம்ஸிக்கும் தன்மையுள்ள யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் காலாட்களும் குதிரைமேல் ஏறிச் சண்டை செய்யும் வீரர்களும் ரதத்திலிருந்து யுத்தஞ் செய்யும் மஹா வீரர்களும் யானைமேல் நின்ற போர்வீரர்களும் தோன்றி “குத்து, வெட்டு, கிழி, கொல்லு” என்பவை முதலிய பயங்கரமான சொற்களைப் பெய்தார்கள். த்ரிபாத்விபூதியென்கிற பரமபதத்திற்கு நாதனாகிய பகவான் அம்மாயைகளைக் கண்டு அவற்றைப் பாழ் செய்யும் பொருட்டுத் தனக்கு மிகவும் ப்ரியமான ஸுதர்சனாஸ்த்ரத்தை ப்ரயோகித்தான். அப்பொழுது திதியானவள் “ஜகத்ரக்ஷகனான பகவான் அவதரித்து உன் பிள்ளைகளை வதிக்கப்போகின்றான்” என்று காச்யபர் மொழிந்த வசனத்தை நினைத்துக் கொண்டாள். என் புதல்வர்களுக்கு என்வருமோவென்று பயப்படுகின்ற அந்த திதியின் மனத்தில் சீக்ரம் நடுக்கம் உண்டாயிற்று. அவளுடைய ஸ்தனத்தினின்று ரத்தம் பெருகிற்று. அப்பொழுது பகவானுடைய ஸுதர்சனாஸ்த்ரத்தினால் அவ்வஸுரனுடைய மாயைகளெல்லாம் பாழாயின. அங்ஙனம் தன் மாயைகளெல்லாம் பாழாகக் கண்ட அவ்வஸுரன் மீளவும் எதிரே வந்து ரோஷத்துடன் கேசவனை அணைக்க முயன்று புஜங்களின் இடையில் அமைத்து நெருக்கி அணைக்கையில், அம்மஹானுபாவன் தன் புஜங்களினிடையினின்று வெளியில் வந்து நிற்கக்கண்டான். தான் செய்த ப்ரயத்னம் வீணானமையால் கோபத்துடன் அவ்வஸுரன் பகவானை முஷ்டிகளால் அடித்தான். ஸ்ரீபகவான் அங்ஙனம் அடித்துக் கொண்டிருக்கின்ற அவ்வஸுரனை, இந்த்ரன் த்வஷ்டாவின் புதல்வனாகிய விஸ்வரூபனை அடித்தாற்போல், காது மூலையில் அடித்தான். அவ்வாறு பகவானால் அவலீலையாக அடிக்கப் பெற்ற அவ்வஸுரன் சரீரம் சுழலப்பெற்றுக் கண்கள் புதுங்கி வெளிவந்து புஜங்களை உதறி விரித்துக் கொண்டு காற்றினால் வேரில் அறுப்புண்ட பெரியவ்ருக்ஷம் போல் கீழே விழுந்தான். அவன் பூமியில் விழுந்தும் அணுகமுடியாத பேரொளியுடையவனாயிருந்தான். பயங்கரமான கோரைப் பற்களுடையவனும் உதட்டைக் கோபத்தினால் கடித்துக் கொண்டிருப்பவனுமாகிய அவ்வஸுரனை அங்கு வந்திருந்த ப்ரஹ்மாதிகள் பார்த்து இங்ஙனம் ப்ரசம்ஸித்தார்கள்.  
ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- ஆ! என்ன ஆச்சர்யம்! இப்படிப்பட்ட மரணம் எவனுக்கு நேரும்? இப்படி பகவான் கையால் எவன் மரணம் பெறுவான்? யோகிகள் அசேதனமான ப்ரக்ருதியின் பரிணாமமாகிய தேஹத்தினின்று விடுபடவேண்டுமென்று விரும்பி (ஸம்ஸார நிவ்ருத்தியின் பொருட்டு) ஸமாதியோகத்தினால் எவனை ஏகாந்தத்தில் தியானிக்கின்றார்களோ, அப்படிப்பட்ட பகவானுடைய பாதத்தினால் அஸுர ஸ்ரேஷ்டனாகிய இந்த ஹிரண்யாக்ஷன் அடியுண்டு அந்த பகவானுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே சரீரத்தைத் துறந்தான். ஆ! இப்படிபட்ட மரணம் மற்றொருவர்க்குக் கிடைக்கத் தக்கதோ? இந்த ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் இந்த பகவானுடைய ப்ருத்யர்களே; சாபத்தினால் அஸுர ஜன்மத்தை ப்ராப்தரானார்கள்; இன்னும் சில ஜன்மங்களில் பகவானுடைய ஸ்தானத்தைப் பெறுவார்கள்” என்று அவ்வஸுரனை ப்ரசம்ஸித்தான். அப்பால் தேவதைகள் பகவானை ஸ்தோத்ரம் செய்தார்கள் . 
தேவதைகள் சொல்லுகிறார்கள்:- ஸமஸ்தயாகங்களும் அழியாமல் நடப்பதற்கு ஹேதுவாயிருக்கின்ற (யாகங்களை நடத்தும் ஸ்வபாவனான) உனக்கு அடிக்கடி நமஸ்காரம், நீ ஜகத்தை ரக்ஷிக்கும் பொருட்டு ரஜஸ் தமஸ்ஸுக்களால் தீண்டப்பெறாமல் சுத்தஸத்வமயமான மூர்த்திகளைக் கேவலம் தன் ஸங்கல்பத்தினால் ஏற்றுக்கொள்கின்றனே. அப்படிப்பட்ட உனக்கு அடிக்கடி நமஸ்காரம். உலகங்களை ஹிம்ஸித்துக்கொண்டிருந்த இவ்வஸுரன் தெய்வாதீனமாய் உன்னால் வதிக்கப்பட்டான். வாராய் ஜகதீசனே! நாங்கள் உனது பாதாரவிந்தங்களில் பக்தி உண்டாகப் பெற்றமையால் ஸந்தோஷம் அடைந்தோம். உன்னிடத்தில் பக்தி உண்டாகுமாயின், அது அவரவர் விரும்புகிற எல்லா நன்மைகளையும் நிறைவேற்றிக்கொடுக்கும். ஆனது பற்றியே நாங்கள் சத்ரு முடியப்பெற்று ஸுகித்தோம். 
மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் அவ் ஆதி வராஹபகவான், பிறர்க்குப் பொறுக்கமுடியாத பராக்ரமமுடைய ஹிரண்யாக்ஷனைக் கொன்று ப்ரஹ்மாதிகளான தேவதைகளால் துதி செய்யப்பெற்று என்றும் உத்ஸவங்கள் மாறப்பெறாமல் நித்யோத்ஸவமாயிருப்பதாகிய தன் வைகுண்ட லோகத்தை அடைந்தான். விதுரனே! இது “ஒருவர்க்கும் செய்ய முடியாத கார்யம். இது பிறர்க்கு எவ்வளவு வருந்தியும் செய்யமுடியாது. இதைப் பகவான் செய்தான்” என்று ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. ஏனென்னில், சொல்லுகிறேன் கேள். வாராய் விதுரனே! வராஹ உருவம்கொண்ட ஸ்ரீஹரியின் சரித்ரத்தை உனக்கு நான் எங்ஙனம் அனாயாஸமாகத் தொடங்கி மொழிந்தேனோ, அங்ஙனமே ஸ்ரீவராஹபகவான் ஆழ்ந்த பராக்ரமமுடைய ஹிரண்யாக்ஷனை யுத்தத்தில் அவலீலையாகவே வதித்தான். அவன் ஹிரண்யாக்ஷனை வதித்தபடியே எனக்கு என்குரு மொழிந்தார். நானும் என் குருவினிடம் கேட்டபடியே சிறிதும் சோராமல் உனக்குமொழிந்தேன்.  
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வாராய் பரீக்ஷித்து மன்னவனே! மஹாபாகவதனாகிய (பகவத் பக்தர்களில் மேன்மையுற்றவனாகிய) ஸ்ரீவிதுரன் இங்ஙனம் மைத்ரேயமுனிவர் மொழிந்த பகவத் கதையை (பகவத்கதை உள்ளடங்கப் பெற்ற ஸ்வாயம்புவ மனுவின் கதையைக்) கேட்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தான். புண்யசீலர்களும் மிகுந்த புகழுடையவர்களுமாகிய மற்றவர்களுடைய கதையைக் கேட்கினும் ஸந்தோஷம் விளையும். ஆயின் ஸ்ரீவத்ஸ லக்ஷ்மாவான (ஸ்ரீவத்ஸமென்கிற அடையாளத்தையுடைய) ஸ்ரீஹரியின் கதையைக் கேட்கின் ஸந்தோஷம் விளையுமென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? முன்பு தன்னினத்தில் தலைமையுள்ள ஓர் யானையானது தன்னைச் சேர்ந்த பெண்யானைகள் வருத்தி வீரிலிடும்படி முதலையென்னும் ஜலஜந்துவால் பிடியுண்டு விடுவித்துக் கொள்ள முடியாமல் வேறுகதியற்று “ஆதிமூலனே!” என்று தன்பாதாரவிந்தங்களை த்யானிக்கையில், இந்த ஸ்ரீபகவான் விரைந்தோடி வந்து அந்த யானையை முதலையினிடம் பிடியுண்டு வருந்துகையாகிற ஆபத்தினின்று விடுவித்தான். அவன் வேறுகதியின்றி மனத்தில் கபடமற்றுத் தன்னைப் பணியும் மனிதர்களால் ஸுகமாக ஆராதிக்கத் தகுந்தவன்; கெடுமனமுடைய மற்றவர்க்கு வருந்தியும் ஆராதிக்க முடியாதவன். அப்படிப்பட்ட பகவானைப் பிறர் செய்த நன்றியை அறியுந்தன்மையுள்ள எவன் தான் பணியமாட்டான்? க்ருதக்னரைத் தவிர ( க்ருதக்னர் பிறர் தனக்குச் செய்த உபகாரத்தை மறக்கிறவர்.) மற்றெல்லோரும் பணிவார்களென்பதில் ஸந்தேஹம் இல்லை. ஜகத்தை ரக்ஷிக்கும் பொருட்டு வராஹ உருவம் கொண்ட பகவான் செய்த இந்த ஹிரண்யாக்ஷவதம் மிகவும் அற்புதமானது. ஆயினும் அந்த பகவானுக்கு இது லீலையேயன்றி ஓர் வருத்தமன்று. இப்படிப்பட்ட இந்த ஹிரண்யாக்ஷ வதத்தை எவன் கேட்கிறானோ, எவன் பிறர்க்குச் சொல்லுகிறானோ, எவன் இதை அபிநந்திக்கிறானோ, அவன் பாபங்களில் “இனி இதுக்கு அவ்வருகில்லை” என்னும்படி மஹாபாபமாகிய ப்ரஹ்ம ஹத்யையினின்றுங்கூட விரைவில் விடுபடுவான். இந்த ஹிரண்யாக்ஷ வதமென்னும் பகவத் சரித்ரமானது மிகுந்த புண்யத்தை விளைவிக்கக்கூடியது; ஆனதுபற்றியே மிகவும் பரிசுத்தமானது; தனத்தையும் “ஸம்பாதித்துக் கொடுக்க வல்லது; புகழையும் விளைவிக்கும்! ஆயுளையும் வளர்க்க வல்லது; அன்றியும், அவரவர் விரும்பும் புருஷார்த்தங்களுக்கெல்லாம் விளை நிலமாயிருக்கும்; யுத்தத்தில் ப்ராணன்களுக்கும் இந்திரியங்களுக்கும் திறமையை வளர்க்கும். வாராய் மன்னவனே! இதைக் கேட்பவர்களுக்கு தேஹாவஸானத்தில் ஸ்ரீமந்நாராயண ப்ராப்தி உண்டாகும். இதுவே இதற்கு முக்யமான பலன். 
பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக