ஞாயிறு, 3 நவம்பர், 2019

வினைகளே! என்னை விட்டு விலகுங்கள்! - ஸ்ரீ எஸ்.சுதர்சனம், நங்கைநல்லூர்

"பாபங்களே | என்னைவிட்டு விலகி ஓடுங்கள். என்னை ஒருகாலும் இனிமேல் உங்களால் துன்புறுத்த முடியாது. வினைகளே! வேறு ஒரு இடம் தேடிக் கொள்ளுங்கள். என்னிடமிருந்து பிழைத்து ஓடிப் போய் விடுங்கள்." இப்படி தைர்யமாக ஒரு ஸ்ரீ வைஷ்ணவனால் மட்டுமே எச்சரிக்க முடியும். எங்கிருந்து எப்படி வந்தது இந்த தைர்யம்? 

'ஆழ்வார்கள் வழிவந்த 'ஸ்ரீமந் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார், பகவத் ராமாநுஜர், ஸ்வாமி நிகமாந்த மஹாதேஸிகன் போன்ற ஆசார்ய வள்ளல்களைச் சரணடைந்த ஸ்ரீ வைஷ்ணவன் சொல்லும் வார்த்தைகள்! இவ்வாசார்ய வள்ளல்களைச் சரணடைந்தால் மட்டுமே எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை அடைய முடியும் என்றுணர்ந்த ஸ்ரீ வைஷ்ணவன் சொல்லும் வார்த்தைகள்! இப்பிறவி என்னும் நோய்க்கும் மருந்தாயும், மருத்துவனாயும் - நிற்பவன் மாமணிவண்ணனான ஸ்ரீமந் நாராயணனே என்றுணர்ந்த ஸ்ரீ வைஷ்ணவன் சொல்லும் வார்த்தைகள்! இக்கலியுகத்தில் கர்ம ஞான, பக்தி மார்க்கங்களை பின்பற்ற முடியாதென உணர்ந்து, தேவுமற்றறியேன், ஆசார்யனே நீயே கதி என்று பயமில்லாமல் வாழும் ஸ்ரீ வைஷ்ணவன் சொல்லும் வார்த்தைகள்! வாழ்ந்து கொண்டிருக்கும் போதே, பரம புருஷார்த்தமான மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடையும் நிலை பெற்ற, நித்ய ஆனந்தத்தை அனுபவிக்க வழியமைத்துக்கொண்ட ஸ்ரீ வைஷ்ணவன் சொல்லும் வார்த்தைகள்!

ஸ்ரீ வைஷ்ணவ தத்துவங்களுக்கும் கொள்கைகளுக்கும், மறுமலர்ச்சியையும் புத்துணர்வையும் கொடுத்தவர் ஸ்ரீமத் இராமாநுஜர். ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் ஓங்கி வளர, ஒளியுடன் மிளிர வழி அமைத்துக் கொடுத்தவர் ஸ்ரீமத் இராமாநுஜர். அவர் வழி வந்தவர் ஸ்வாமி நிகமாந்த மஹாதேஸிகன். இம்மஹான்களின் திருவடிகளில் பணிந்து வாழும் ஸ்ரீ வைஷ்ணவன் ஒருவனால் மட்டுமே இப்படி பயமில்லாமல் உறுதியுடன் தைர்யமாகப் பேசமுடியும்.

ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரராயும் அவர் திருவடிகளில் ஸகல ஶாஸ்த்ர அர்த்தங்களையும் அறிந்து, ஸ்வாமி தேஸிகனின் பிரதான சீடனாகத் திகழ்ந்த வரதாசாரியார் என்னும் ஸ்ரீ நைனாசாரியார் "பிள்ளையந்தாதி" என்னும் பிரபந்தத்தில் அருளிச் செய்த வார்த்தைகள். இதோ அந்தப் பாசுரம். (பிள்ளையந்தாதி -7). 

"வினைகாள்! உமக்கு இனி வேறோரிடம் தேட வேண்டும், 
எனைச் சினமேவி முன்போல் சிதைக்கும் வகை இங்கு அரிது கண்டீர்! 
என்? என்? எனில் இராமாநுச முனி இன்னுரை சேரும் தூப்புல் 
புனிதன், என் புந்தி புகுந்து திகழ்ந்து பொருந்தினரே"

நான் பாபங்கள் செய்தவன். எத்தனையோ பிறவிகள். அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாபங்கள். அதற்கேற்ப தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும். இதை நான் நன்கு அறிவேன். பிறவி என்னும் நோய் ஏற்பட்டதே அந்தத் தண்டனை அனுபவிக்கத்தானே. இப்போது நான் ஸ்ரீ பாஷ்யகாரருடைய சீடன். திவ்யமான தெய்விகமான ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தங்களை உலகில் பரப்பி வரும் தூப்புலில் அவதரித்த புனிதன் ஸ்வாமி தேசிகன் என் மனத்தில் புகுந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டார். நான் ஸ்வாமி தேசிகனின் சீடன். ஆகவே, பாபங்களே! நீங்கள் என் மீது கோபம் கொண்டு என்னை துன்புறுத்தாதீர்கள். உங்கள் முயற்சி வீணாகிவிடும். என் தீவினைப் பயன்கள் சிதைந்து விட்டன. ஸ்ரீபாஷ்யகாரரின் சீடன் ஸ்வாமி தேசிகன் என் குருவாய் மனதில் அமர்ந்துள்ளார் என்பதை உடனே உணர்ந்த கொண்டு, பாபங்களே நீங்கள் வசிக்க வேறு ஒரு இடம் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிப் பேசுகிறார் ஸ்ரீ நயினாச்சாரியார்.

ஆசார்யன் திருவடிகளே துணை என்ற அறிவு முதலில் வர வேண்டும். ஆசார்யன் ஆசீர்வாதம் பெற்ற நாம் பகவானின் திருவடிகளில் சேர்ந்து விடுவதால், இரு வல்வினைகளும், பாபங்களும் புண்ணியங்களும் சரிந்து சிதைந்து விடுகின்றன. நம்மை விட்டு அகன்று விடுகின்றன.

புண்ணியங்களையும் பாபங்களையும் அதன் பலன்களையும் அனுபவித்தே தீரவேண்டும். "வேறோரிடம் - தேடு" என்ற ஸ்ரீ நயினாச்சாரியாரின் வார்த்தைகளை கவனிக்க வேண்டும். இப்பாப புண்ணியங்கள் அழிவதில்லை. புண்ணிய பலன் நம்மை வேண்டியவர்களையும், பாப பலன் நம் விரோதிகளையும் அடையும் என்று வேதம் சொல்கிறதும் (தஸ்ய புத்ரா : தாயம் உபயந்தி, ஸுஹ்ருத: புண்ய க்ருத்யாம், த்விஷந்த: பாப க்ருத்யாம் ). இதனால் தான் யாருடைய விரோதத்தையும் சம்பாதிக்கக் கூடாது என்று ஆசார்யர்கள் நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.

பாபங்களும் நரக வேதனையும் வேண்டாம். உண்மையில் வெறுக்கத்தக்கவை. ஆனால் புண்ணியங்களையும் சுவர்க்க அனுபவத்தையும் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்? புண்ணியமும் சுவர்க்கமும் இன்பம் பயப்பனவே. இவைகளை ஏன் விட வேண்டும்? ஏனென்றால், சுவர்க்கத்திலும் நிரந்தரமாகத் தங்க முடியாது. புண்ய பலன் முடிந்தவுடனே சுவர்க்கத்திலிருந்து வெளியே தள்ளப்படுவோம். பிறகு பிறப்பு இறப்பு என்னும் சக்கரச் சுழலில் விழுந்து தவிப்போம். பிறவாப் பேறுதான் மோக்ஷம் - வீடு பேறு பெறலாம். அங்கு எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கு ஒழிவில் காலமெல்லாம் வழுவிலா அடிமை செய்து வாழலாம்.

சரணடைந்த நம்மை ஆசார்யன் பகவான் திருவடிகளில் சேர்க்கிறார். “வினையேன் வினைதீர் மருந்து” ஆகிறான் பகவான். உடனே “சார்ந்த இரு வல்வினைகளும் சரிந்து” விடுகின்றன. ஆகவே, ஆசார்யனின் திருவடிகளே நமக்குப் புகலிடம்.

"ஆளவந்தார் அடியோம்"- ஆளவந்தாருக்கு நாம் அடிமையாக வேண்டும். “நாதமுனி கழலே நாளும் தொழதெழுவோம்”. ஸ்ரீமன் நாதமுனிகளின் திருவடிகளில் சரணடைவோம். அதிகார ஸங்க்ரஹம் என்னும் பிரபந்தத்தில் இவை ஸ்வாமி தேஸிகனின் உபதேசங்கள்.

திருவரங்கத்தமுதனார் என்னும் மஹான், ஸ்ரீ கூரத்தாழ்வானின் சிஷ்யர். திருவரங்கத்தமுதனார் இயற்றியது "இராமாநுஜ நூற்றந்தாதி". ஆசார்யன் பெருமை பேசும் 108 பாசுரங்கள். ஒவ்வொரு பாசுரத்திலும் இராமாநுஜனின் திருநாமம் ஒலிக்கின்றது. 108 முறை இராமாநுஜனின் திருநாம ஸங்கீர்த்தனம். ஆசார்யன் திருவடி பணிந்தால் “மருள் சுரந்த முன்னைப் பழவினை வேரறுத்துப் போகும்” என்கிறார். அநாதிகாலமாக நம்மை அறியாது நம் அஜ்ஞானத்தால் நம்மை வருத்தும் கர்ம வினைகள் வேரோடு வாசனை கூட இல்லாமல் அறுந்து விழும் என்கிறார்.

இராமாநுஜ நாம சங்கீர்த்தனத்தின் உயர்ந்த பெருமை என்ன? “இறந்தது வெங்கலி”. கொடுமையான கலியின் துன்பங்களிலிருந்து விடுதலை. ஆசார்யனே உறுதுணை, ஆசார்யனே என் தன் மாநிதி! ஆசார்யனே என் தன் சேமவைப்பு! ஆசார்யனே எனக்காரமுது என்றுணர்ந்து வாழ்வோம். வாருங்கள்.

நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா புரட்டாசி 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக