திங்கள், 4 நவம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 65

மூன்றாவது ஸ்கந்தம் – இருபதாவது அத்தியாயம்
(ஸ்வாயம்புவமனுவின் சரித்ரமும், ஸ்ருஷ்டியின் விரிவும்)

சௌனகர் சொல்லுகிறார்:- வாரீர் சோமஹர்ஷணபுத்ரே! ஸ்வாயம்புவமனுவானவர் இங்ஙனம் பூமியை யதாஸ்தானத்தில் நிலைநிறுத்தச் செய்து, தனக்குப் பின்பு ஜன்மித்த ப்ராணிகளுக்கு தர்மம் முதலிய நான்குவகைப்பட்ட புருஷார்த்தங்களை நிறைவேற்றுவதற்கு எந்த உபாயங்களை அனுஷ்டித்தார்? விதுரன் மஹா பாகவதன்; ஸ்ரீக்ருஷ்ணனுக்கு மிகவும் அன்பிற்கிடமான தோழன். விதுரனுக்கு பகவானிடத்தில் ப்ரேமம் அளவற்றிருப்பது. இவ்விதுரன், துர்யோதனன் முதலிய புதல்வர்களோடு கூடின தமையனாகிய த்ருதராஷ்ட்டிரனை “இவன் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் பாவக் கருத்துடையவன்” என்னும் காரணத்தினால் கைவிட்டான். (ஸ்ரீக்ருஷ்ணன்மொழிந்த மந்த்ராலோசனையை அனாதரித்தமையாலும், பகவானிடத்தில் ப்ரீதியுடையவரும் தர்ம மர்யாதையைத் தவறாமல் தொடர்கின்றவருமாகிய பாண்டுபுத்ரரிடத்தில் த்ரோஹம் செய்தமையாலும் திருதராஷ்ட்டிரன் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் அபராதப்பட்டான். அதைப் பொறாமையாலும், தான் ஸ்ரீக்ருஷ்ணனைப் பற்றியும் பாண்டவர்களைப் பற்றியும் எவ்வளவு நன்மை உபதேசித்தும் அதை ஏற்றுக் கொள்ளாமையாலும் விதுரன் த்ருதராஷ்ட்டிரனைத் துறந்தான். இது ஸ்ரீக்ருஷ்ணனிடத்திலுள்ள ப்ரீதியின் சார்யமே). அன்றியும், அவ்விதுரன் மாஹாத்ம்யத்தில் ஸ்ரீவ்யாஸரைக் காட்டிலும் சிறிதும் குறைத்தவனன்று, அவன் ஸ்ரீவேதவ்யாஸ பகவானுடைய அங்கத்தினின்று பிறந்தவனல்லவா? அன்றியும், அவன் ஸர்வப்ரகாரத்தினாலும் ஸ்ரீக்ருஷ்ணனை ஆச்ரயித்தவன். (மாதாவும் பிதாவும் ப்ராதாவும் வாஸஸ்தானமும் ரக்ஷகனும் நண்பனும் கதியும் ஸ்ரீமந்நாராயணனேயென்று நிச்சயித்திருப்பவன்). மற்றும், அவனைப் பணியும் தன்மையுள்ள பாகவதர்களைத் தொடர்ந்து பணியும் ஸ்வபாவமுடையவன். கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களில் ஸ்னானபானாதிகள் செய்து அவற்றைப் பணிந்தமையாலும் ஜ்ஞானாதிகரான ஸத்புருஷர்களின் ஸேவையாலும் அவன் உள்ளும் புறமும் அழுக்கற்று உஜ்ஜ்வலனாயிருப்பவன். அவ்விதுரன் கங்காத்வாரத்திலுள்ள குசாவர்த்தமென்னும் தீர்த்தத்தில் உட்கார்ந்திருப்பவரும் தத்வங்களை உணர்ந்தவர்களில் தலைவருமாகிய ஸ்ரீமைத்ரேய மஹர்ஷியைக் கிட்டி வணங்கி யாது வினாவினான்? வாரீர் ஸூதரே! அந்த விதுரனும் மைத்ரேயரும் ஸம்வாதம் பண்ணிக்கொண்டிருக்கையில், பகவானுடைய பாதாரவிந்தத்தினின்று உண்டானவைகளும் தம்மை ஸ்பர்சித்தவர்களுடைய பாபத்தைப் போக்கடிப்பவைகளுமாகிய கங்கா ஜலங்கள் போல் கேட்பவர்களின் பாபங்களைப்போக்கவல்ல அமலங்களான பகவத்கதைகள் நடந்திருக்கும். கீர்த்தனம் செய்யத்தகுந்த கம்பீரமான சேஷ்டிதங்களையுடைய அந்த ஸ்ரீவிஷ்ணுவின் கதைகளை எமக்குச் சொல்வீராக, உமக்கு மங்களம் உண்டாகுக. “ஏன் அடிக்கடி பகவத்கதையை வினவுகிறாய்” என்கிறீரோ? பகவத்கதையின் ரஸமறிந்தவன் அந்த ஸ்ரீஹரியின் லீலையாகிற அம்ருதத்தைப் பானஞ் செய்ய நேரப்பெறின், இது போதுமென்று எவன் தான் திருப்தி உண்டாகப் பெறுவான். எவனும் எவனைக் கேட்பினும் திருப்தி அடையமாட்டான். ஆகையால் த்ருப்தி உண்டாகப் பெறாமல் வினவுகின்றேன்” என்றார்.

இங்ஙனம் நைமிசாரண்ய வாஸிகளான சௌனகாதி முனிவர்களால் வினவப்பெற்ற ஸுதர் பகவானிடத்தில் நிலைகின்ற மனமுடையவராகி அம்மஹர்ஷிகளைக் குறித்துக் கேளுங்களென்று மொழியத் தொடங்கினார்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தன் ஸங்கல்பத்தினால் வராஹ உருவங்கொண்ட பகவானுடைய லீலையாகிய பூமியை மேலுக்கெடுத்த வ்ருத்தாந்தத்தையும், அவன் அனாயாஸமாகச் செய்த ஹிரண்யாக்ஷ வதத்தையும் கேட்டு விதுரன் ஸந்தோஷம் உண்டாகப்பெற்று ஸ்ரீமைத்ரேயரைப் பார்த்து இங்ஙனம் மொழிந்தான்.

ஸ்ரீவிதுரன் சொல்லுகிறான்:- ப்ரஜாபதிகளான மரீசி முதலியவர்க்குத் தலைவனாகிய ப்ரஹ்மதேவன் ப்ரஜைகளைப் படைப்பதற்காக ப்ரஜாபதிகளைப் படைத்து மேல் என் செய்தான்? அதை எனக்குச் சொல்வீராக, வாரீர்அந்தணரே! நீர் இந்திரியங்களுக்குத் தெரியாத விஷயங்களையும் நெஞ்சென்னும் உட்கண்ணால், அறியும் திறமையுடையவர். ஆகையால் நீர் இவ்விஷயத்தைச் சொல்லவல்லவரே! மரீசி முதலிய அந்தணர்களும் ஸ்வாயம்புவமனுவும் ஆகிய அவர்கள் நான்முகனுடைய ஆஜ்ஞையால் இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்ததாகச் சொன்னீர். அவர்கள் எங்ஙனம் படைத்தார்கள்? அதை விவரித்துச் சொல்வீராக. அவர்கள் பார்யைகளுடன்கூடி ஸ்ருஷ்டித்தார்களா? அல்லது ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களில் பார்யைகளை எதிர்பாராமல் ஸ்வதந்த்ரர்களாயிருந்தார்களா? மரீசி முதலியவர் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஒன்றாயிருந்து இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்தார்களா? அல்லது தனித்தனியே படைத்தார்களா? என்று வினாவினான்.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- சிந்திக்க முடியாத ப்ரபாவமுடைய ஈஸ்வர ஸங்கல்பத்தினாலும் ஈஸ்வர ஸ்வரூபியான காலம் கூடினமையாலும் ப்ரக்ருதி, ஸ்ருஷ்டியாகிற கார்யத்தில் அதிமுக்யமுடையதாகி ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் ஸமமாயிருக்கும் தசை மாறிக் கலக்கமுற்றது. ஸத்வ ரஜஸ் தமோகுணங்கள் அடங்கினதும் அங்ஙனம் கலக்கமுற்றதும் பகவானுக்குச் சரீரமுமாகிய அந்த ப்ரக்ருதியினின்று மஹத்தத்வம் உண்டாயிற்று. பகவானால் தூண்டப்பெற்றதும் ரஜோகுணத்தை முக்யமாக உடையதுமாகிய மஹத்தத்வத்தினின்று பூதாதியென்னும் பேருடைய அஹங்கார தத்வம் உண்டாயிற்று. இது ஐம்பூதங்கள் ஜ்ஞானேந்திரியங்கள் ஆகிய இம்மூன்று உருவமாயிருக்கும். அது ஆகாயம் முதலிய ஐந்து பூதங்களையும் ஐந்து தன்மாத்ரைகளையும் ஐந்து ஜ்ஞானேந்திரியங்களையும் ஐந்து கர்மேந்த்ரியங்களையும் ஸ்ருஷ்டித்தது. அந்த ஆகாயம் முதலிய தத்வங்கள் ஒன்றோடொன்று சேராமல் தனித்தனியேயிருந்து அண்டத்தைப் படைக்கும் வல்லமையற்றிருந்தன. அப்பால் பகவானுடைய அனுப்ரவேசத்தினால் ஒன்றோடொன்று கலந்து ஸ்வர்ணம்போல் பளபளவென்று பேரொளியுடன் ஜ்வலிக்கின்ற அண்டத்தைப் படைத்தன. அவ்வண்டகோசம் அதிஷ்டாதாவான சேதனனில்லாமல் ஜலத்தின் மேல் மிதந்துகொண்டிருந்தது. அவ்வண்டத்தில் ப்ரபுவாகிய அநிருத்தன் ஸம்பூர்ணமாக ஆயிரமாண்டுகள் வஸித்திருந்தான். “அநிருத்தனென்றும், அவ்வண்டத்தில் வஸித்திருந்தானென்றும் சொல்லுகிறீரே. அவர் யாவன்?” என்னில் சொல்லுகிறேன். எந்த பகவானுடைய நாபியினின்று ஆயிரம் ஸூர்யர்கள் உதித்தாற்போல் அளவிறந்த ஒளியுடன் ப்ரகாசிப்பதான தாமரைமலர் உண்டாயிற்றோ, அவனே அநிருத்த பகவான். அவனே அவ்வண்டத்தில் சயனித்திருந்தான். அவனே ஈஸ்வரன், அவனுடைய நாபியிலுண்டான அக்கமலம் தேவாதியான ஸமஸ்த ப்ராணிகளுக்கும் வாஸஸ்தானமாயிருப்பது. அந்தக் கமலத்தினின்றுதான் ப்ரஹமதேவன் உண்டானான். கர்ப்போதகத்தில் (அண்டத்திற்குள் ஜலத்தில்) சயனித்துக்கொண்டிருந்த பகவான் தன் ஸங்கல்பத்தினால் அந்த ப்ரஹ்மதேவனிடத்தில் ப்ரவேசித்தான். அங்ஙனம் பகவானால் ப்ரவேசிக்கப்பெற்ற அந்த ப்ரஹ்மதேவன் முன் கல்பத்திலிருந்தபடியே உலகங்களையெல்லாம் அவ்வவற்றிற்குரிய ஏற்பாட்டில் சிறிதும் மாறுபாடின்றி ஸ்ருஷ்டித்தான். அவன் முதலில் தமோகுணத்தைக் கொண்டு தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், தமஸ்ஸு, மோஹம், மஹா தமஸ்ஸு என்கிற ஐந்து பிரிவுகளையுடைய அவித்யையை ஸ்ருஷ்டித்தான். அந்த அஜ்ஞான ஸ்ருஷ்டிக்கு உபயோகப்பட்ட தன் தேஹத்தை ப்ரஹ்மதேவன் விரும்பாமல் வெறுப்புற்று அதைத் துறந்தான். அதினின்று பல யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் உண்டானார்கள். அந்த யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் பசி தாஹங்களை விளைப்பதாகிய அந்த ப்ரஹ்மசரீரத்தை க்ரஹித்துக் கொண்டார்கள். அந்தச் சரீரமே ராத்ரியாய் மாறிவருகின்றது. ராத்ரிகாலத்தில் யக்ஷ ராக்ஷஸர்களுக்கு ஸஞ்சாரம் அதிகமாயிருக்கின்றது. அவர்கள் அந்தச் சரீரத்தைப் பரிக்ரஹித்தவுடனே அவர்களுக்குப் பசியும், தாஹமும் அபாரமாய் உண்டாயின. அங்ஙனம் பசி தாஹங்களால் பீடிக்கப்பெற்ற யக்ஷ ராக்ஷஸர்கள் அந்தச் சரீரத்தையே பக்ஷிக்க விரும்பி எதிர்த்தோடினார்கள். “நாம் பசியாலும், தாஹத்தாலும் வருத்தமுற்றிருக்கின்றோம் ஆகையால் இந்தச் சரீரத்தை நாம் ரக்ஷிக்கலாகாது” என்று அவர்களில் சிலர் சொன்னார்கள். மற்றவர் “பக்ஷித்துவிடுவோம்” என்றார்கள். அது கண்டு ப்ரஹ்மதேவன் பயந்து அந்த யக்ஷர்களையும் ராக்ஷஸர்களையும் பார்த்து “என் சரீரத்தைப் பக்ஷிக்கவேண்டாம். ரக்ஷிப்பீர்களாக” என்று மொழிந்தான். மீளவும் அவர்களைப் பார்த்து வெறுப்புடன் “ஓ யக்ஷ ராக்ஷஸர்களே! இப்படி அஜ்ஞான ஸ்வபாவர்களாகிய நீங்கள் எனக்குப் புதல்வர்களாகப் பிறந்தீர்களே! சீ! இதுவென்?” என்றான். (அவர்களில் பக்ஷிப்பீர்களென்றவர் யக்ஷரானார்கள். ரக்ஷிக்கவேண்டாமென்றவர் ராக்ஷஸரானார்கள்). அப்பால் ப்ரஹ்மதேவன் தேஜஸ்ஸினால் ப்ரகாசித்துக்கொண்டு கிழக்கு முகமாயிருந்து தேவதைகளைப் படைத்தான். அவர்கள் தேஜஸ்ஸுடன் ப்ரகாசித்தார்கள். ப்ரஹ்மதேவன் ஒளியுடன் விளங்குகின்ற எந்த தேஹத்தினால் தேவதைகளைப் படைத்தானோ அந்த தேஹத்தையும் துறந்தான். அதுவே பகலாய் மாறி வருகின்றது. அதைத் தேவதைகள் பரிக்ரஹித்தார்கள். அப்பால் ப்ரஹ்மதேவன் தன் பின்புறத்தினின்று காமத்தில் மிகவும் விருப்பமுடையவரான அஸுரர்களைப் படைத்தான். அவர்கள் காமலோலுபராயிருந்தமையால் (காமத்தில் மிக்க விருப்பமுடையவராயிருந்தமையால்) மைதுனத்தின் பொருட்டு இந்த ப்ரஹ்மதேவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்பொழுது அந்த ப்ரஹ்மதேவன் சிரித்துக்கொண்டு, வெட்கமற்றிருக்கிற அஸுரர்களால் சூழப்பட்டவனாகக் கோபமும் பயமும் உண்டாகப்பெற்று அப்புறம் ஓடிப்போனான். அந்நான்முகன், பக்தர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு அவரவர் புத்திக்குத் தகுந்தபடி தன்னைக்காட்டுந் தன்மையனும் தன்னைப் பற்றினாருடைய துக்கத்தைப் போக்குந் திறமையுடையவனும் விரும்பின விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் மஹானுபாவனுமாகிய பகவானைச் சரணம் அடைந்து இங்ஙனம் மொழிந்தான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- பரமாத்மனே! என்னைப் பாதுகாப்பாயாக. நான் உன் கட்டளையின்படி ப்ரஜைகளைப் படைத்துக்கொண்டு வந்தேன். அவைகளில் பாலக் கருத்துடைய இந்த அஸுர ப்ரஜைகள் என்னை மைதுனஞ் செய்யத்தொடங்கிச் சுற்றிக்கொள்கின்றன. வாராய் ப்ரபுவே! துக்கித்தவர்களின் துக்கங்களைப் போக்குமவன் நீயொருவனேயல்லவா? உன் பாதாரவிந்தங்களைப் பணியாதவர்களுக்கு நீயே வருத்தங்களை விளைக்கின்றனை.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவனாகையால் பிறர் கருத்தை விசதமாக அறியுந் திறமையுடைய அந்தப் பரமாத்மாவானவன் இந்த ப்ரஹ்மாவின் வருத்தத்தை அறிந்துகொண்டு “காமத்திற்கிடமாகி பயங்கரமாயிருக்கின்ற இந்த உன் தேஹத்தைத் துறப்பாயாக” என்றான். இங்ஙனம் பகவானால் மொழியப்பெற்ற ப்ரஹ்மதேவனும் அந்தச் சரீரத்தை அப்படியே துறந்தான். அங்ஙனம் ப்ரஹ்மதேவனால் துறக்கப்பெற்ற அந்தச் சாரமே ஸாயங்கால ஸந்த்யை ஆயிற்று. (ஆனது பற்றியே அவ்வேளை காமத்திற்கு விளை நிலமாயிருக்கின்றது). அது அழகிய வடிவங்கொண்ட ஓர் பெண்மணியாகப் புலப்பட்டது; அப்பெண்மணியின் பாதங்கள் தாமரைமலர் போன்று இனிதாக ஒலிக்கின்ற சிலம்புத்தண்டைகளால் திகழ்ந்தன. கண்கள் மதத்தினால் தழதழத்திருந்தன. அவளுடைய நிதம்பம் அரை நூல் மாலையென்கிற அலங்காரத்தினால் திகழ்கின்ற வெண்பட்டு வஸ்த்ரத்தினால் மறைக்கப்பெற்று விளங்கிற்று. ஸ்தனங்கள் ஒன்றோடொன்று உறைவதனால் உயர்ந்து இடை வெளியின்றிப் பருத்து அழகாயிருந்தன. மூக்கு (திலபுஷ்பம் - எள்ளுப்பூ) திலபுஷ்பம்போல் திகழ்வுற்றிருந்தது. பற்கள் (குருந்த மரத்தின் மொட்டுகள்) குந்த குட்மலங்கள்போல் அழகாயிருந்தன. அவள் ஸ்னேஹத்தை வெளியிடுகின்ற புன்னகையும் விலாஸங்கள் நிறைந்த கண்ணோக்கமும் அமைத்து லஜ்ஜையினால் தன் தேஹத்தை வஸ்த்ரத்தின் நுனியால் அடிக்கடி இழுத்து மூடி மறைத்துக் கொண்டிருந்தாள். மற்றும், அவள் வண்டுபோல் கறுத்த முன்நெற்றி மயிர்கள் படிபடியாயிருக்கப்பெற்று மிகவும் அழகியளாயிருந்தாள். வாராய் விதுரனே! அத்தகைய அம்மாதரார்மணியைக் கண்டு அஸுரர்கள் எல்லோரும் மதிமயக்கம் கொண்டு “ஆ! என்ன உருவம்! என்ன அழகு! இதென்ன நிலைமை! ஆ! இவளுடைய யௌவனப் பருவத்தின் புதுமையை என்னென்று சொல்லலாம்! நாம் பலரும் காமுற்றிருக்கையில், நம்மிடையில் காமக்கருத்தின்றியவள் போல் போகின்றாளே!” என்று பிதற்றலானார்கள். குத்ஸிதமான புத்தியையுடைய அவ்வஸுரர்கள் அப்பெண்மணியின் அவயவங்களை இத்தகையது அத்தகையதென்று ஊஹித்துக்கொண்டிருந்து, அப்பால் பெண்ணுருவங்கொண்ட அந்த ஸந்த்யாகாலத்தை ப்ரீதியுடன் கௌரவித்து இங்ஙனம் வினவினார்கள்.

அஸுரர்கள் சொல்லுகிறார்கள்:- பெண்மணி! நீ யாவள்? யாருடையவள்? அழகிய இடையின் பின்புறமுடையவளே! நீ தேவதையா? அல்லது மனுஷ்ய ஸ்த்ரீயா? அல்லது மற்றொருத்தியா? வாழைமரம் போன்றதுடைகளுடையவளே! நீ இவ்விடத்தில் என்ன ப்ரயோஜனத்தைக் குறித்து உலாவுகின்றனை? வாராய் கோபஸ்வபாவமுடையவளே! நீ உனது ஸௌந்தர்யமாகிற விலையில்லாத வஸ்துவைக் காட்டி பாக்யமற்றிருக்கிற எங்களை வருத்துகின்றனை. உன் ஜாதி குலங்களைக் கேட்பதினால் என்ன உபயோகம்? நீ எவளாயினும் ஆவாயாக. வாராய் பெண்மணியே! எங்கள் பாக்ய மஹிமையால் உன்னுடைய தர்சனம் கிடைத்தது. (இங்கு அஸ்தமிக்கின்ற ஸுர்யனைப் பந்தாகவும், மேகங்கள் இடையிடையில் ஒடிந்திருப்பதை இடையாகவும், நக்ஷத்ரங்களைக் கண்ணாகவும், இருட்டைத் தலைமயிராகவும் ஊஹித்துக்கொள்க) நீ பந்தடிக்கிற லீலையால், பார்த்துக்கொண்டிருக்கிற எங்கள் மனத்தைப் பறிக்கின்றனை, நீ பந்தடித்து விளையாடுவது மிகவும்அழகாயிருக்கின்றமையால் எங்கள் மனத்தை இழுக்கின்றது. வாராய் ஸுந்தரியே! உயரக்கிளம்பி விழுகின்ற பந்தை அடிக்கடி உள்ளங்கையால் அடித்துக்கொண்டிருக்கின்ற உன்னுடைய தாமரைமலர்போன்ற பாதமானது ஓரிடத்தில் நிலைநிற்காதிருக்கின்றது. அதனால், பருத்துருண்ட கொங்கைகளின் பாரத்தினால் பயந்திருக்கின்ற உனது நுண்ணிடை வருந்துகின்றது. (இயற்கையாகவே உனது இடை நுண்ணியதாயிருக்கின்றது; மேலும், பருத்துருண்ட கொங்கைகளின் பாரத்தைப் பொறுக்கமுடியாமல் இளைத்திருக்கின்றது. பந்தடிக்கிற லீலையால் நின்ற இடத்தில் நிற்காமல் அதை மீளவும் நீ வருத்துகின்றனை). உனது கண்ணோக்கம் இளைப்பினால் மெதுவாய் திகழ்கின்றது. அழகிய உன் தலைச்சொருக்கானது அவிழ்ந்திருக்கின்றது. நிற்மலமான அந்தத் தலைமயிர்களை முடித்துக் கொள்வாயாக.

மந்தபுத்திகளான அவ்வஸுரர்கள் இங்கனம் பெண் மணிபோல்புலப்படுகின்ற அந்த ஸாயங்கால ஸந்த்யையைப் பார்த்து, தங்களை மதி மயங்கச் செய்கின்ற ஓர் பெண்ணாக நினைத்து “இவள் நமக்கு” என்று அங்கீகரித்தார்கள். பிறகு ப்ரஹ்மதேவன் அபிப்ராய விசேஷத்தினால் கம்பீரமாகச் சிரித்துத் தன்னைத் தான் மோந்து ஸௌந்தர்யத்தினால் கூட்டங்கூட்டமாக கந்தர்வர்களையும் அப்ஸரஸ்ஸுக்களையும் ஸ்ருஷ்டித்தான். ஸௌந்தர்யமென்கிற காந்தி நிறைந்ததும் தனக்கு ஸம்மதமாயிருப்பதுமாகிய அந்தச் சரீரத்தையும் ப்ரஹ்மதேவன் துறந்தான். அதுவே விடியற்கால ஸந்த்யையாயிற்று. அதை விச்வாவஸு முதலிய அந்த கந்தர்வர்களே அங்கீகரித்தார்கள். பிறகு ப்ரஹ்மதேவன் தன்னுடைய ஆலஸ்யத்தினால் பூதங்களையும் பிசாசங்களையும் ஸ்ருஷ்டித்து, அவை தலைமயிரை விரித்துக்கொண்டு அரையில் வஸ்த்ரமின்றி அம்மணமாயிருக்கக் கண்டு கண்களை மூடிக்கொண்டான். வாராய் ஸமர்த்தனான விதுரனே! அந்த நான்முகன் சோம்பலுக்கிடமாயிருப்பது பற்றி ஜ்ரும்பணமென்னும் பேருடைய அந்தச் சரீரத்தையும் துறந்தான். இதையே நித்ரையென்று சொல்லுகிறார்கள். இந்நித்ரையால் ப்ராணிகளின் இந்த்ரியங்களுக்கு ஓய்தல் உண்டாகின்றது. இந்தச் சரீரம் உன்மாதத்திற்கும் இடமாயிருக்கும். இந்த உன்மாதத்தினால் ப்ராணிகளுக்கு அசுத்தங்களில் வெறுப்பின்றி அவற்றைப் பரிஹரிக்க வேண்டுமென்கிற எண்ணமில்லாமல் பொறுத்திருக்கும்படியான எண்ணம் உண்டாகின்றது. இங்ஙனம் சோம்பலுக்கிடமான அந்தச் சரீரத்தை பூதங்கள் அங்கீகரித்தன. ஆகையால் அந்த பூதங்களும் நித்ரை ஆலஸ்யம் இவைகளை முக்யமாகக் கொண்டிருக்கின்றன. ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவனும் ஜகத்திற்கெல்லாம் ப்ரபுவுமாகிய அவ்வயன், தன்னை மிகுந்த பலமுடையவனாக நினைத்துக்கொண்டு ஸாத்யரென்னும் தேவக் கூட்டங்களையும் பித்ருதேவதைகளின் கூட்டங்களையும் பரோக்ஷமாகப் படைத்தான். அவன் அந்த தேஹத்தையும் துறந்தான். தங்களுக்கு உத்பத்திஸ்தானமும் பலமுடையதுமாகிய அந்தச் சரீரத்தைப் பித்ருக்களும் ஸாத்யர்களும் அங்கீகரித்தார்கள். ஆகையால் அவர்கள் பலிஷ்டரானார்கள், ஆனதுபற்றியே, வேதோக்தமான கர்மங்களைச் செய்வதில் ஸமர்த்தரான பண்டிதர்கள் பலத்தை விரும்பி ஸாத்யர்களையும் பித்ருக்களையும் ஹவிர்ப்பாகங்களால் ஆராதிக்கின்றார்கள். அக்கமலயோனி பிறர்க்குப் புலப்படாமையாகிற தன் சக்தியினால் ஸித்தர்களையும் வித்யாதரர்களையும் படைத்து அந்தர்த்தான சக்தி அமைத்து அற்புதமாயிருக்கின்ற அந்தச் சரீரத்தை ஸித்தர்களுக்கும் வித்யாதரர்களுக்கும் கொடுத்தான். ஆகையால் அவர்கள் அந்தர்த்தான சக்தி முக்யமாயிருக்கப் பெற்றார்கள். ப்ரபுவாகிய அந்த ப்ரஹ்மதேவன் தன்னுடைய ப்ரதி பிம்பத்தைப் பார்த்துக்கொண்டு, அந்த ப்ரதிபிம்ப ரூபமான சரீரத்தில் வெகுமதியுற்றவனாகி அந்த ப்ரதிபிம்ப சரீரத்தினால் கின்னரர்களையும் கிம்புருஷர்களையும் ஸ்ருஷ்டித்தான். பிறகு அந்த ப்ரதிபிம்ப சரீரத்தையும் துறந்தான். அதை அவர்கள் (ஆணும் பெண்னுமாகச் சேர்த்து) மிதுனங்களாகச் சேர்ந்து பிம்பத்திலும் ப்ரதிபிம்பத்திலும் உண்டாகக்கூடிய அபிமானத்துடன் அந்த ப்ரஹ்ம தேவனையே விடியற்காலத்தில் அவனுடைய சேஷ்டிதங்களைச் சொல்லித் துதித்துக்கொண்டு பாடுகிறார்கள், ஸௌகுமார்யமுடையதும் நீண்டிருப்பதும் பலவகைச் சிந்தைகள் அமைந்ததுமாகிய தேஹத்துடன் சயனித்துக் கொண்டிருக்கிற அந்த ப்ரஹ்மதேவன், இவ்வளவு ஸ்ருஷ்டி செய்தும் தன் விருப்பத்தின்படி ப்ரஜைகள் வ்ருத்தி அடையாமையைக் கண்டு கோபங்கொண்டு அந்தச் சரீரத்தைத் துறந்தான். வாராய் விதுரனே! இந்தச் சரீரத்தினின்று உதிர்ந்த தலைமயிர்களே ஸர்பங்களாகப் பிறந்தன. அப்பொழுது சயனித்துக் கொண்டிருந்த அந்த ப்ரஹ்ம சரீரம் (மென்மை) ஸௌகுமார்யம் நீளம் கோபம் சிந்தை ஆகிய இவைகளுக்கு இடமாயிருந்தமையால் அதினின்றுண்டான ஸர்ப்பங்கள் நீண்டவைகளும் மென்மை அமைந்தவைகளும் பலவகைச் சிந்தையும் பெருங்கோபமும் நிறைந்து க்ரூரங்களுமாயிருக்கின்றன. படுத்திருந்த தேஹத்தினின்று உண்டானவை ஆகையால் நீண்ட கழுத்துடையவைகளுமாய் இருக்கின்றன. போவது தெரியாமல் வெகுவேகத்துடன் செல்லும் தன்மை உடையவையாகையால் இவற்றிற்கு நாகங்களென்னும்பேர் விளைந்தது. ஸ்வயம்புவாகிய அந்த ப்ரஹ்மதேவன் தன்னை க்ருதக்ருத்யனாக (ப்ரயோஜனம் கைகூடப் பெற்றவனாக) நினைத்திருந்த ஸமயத்தில் மரீசி முதலிய ப்ரஜாபதிகளின் உதவியின்றித் தானே நேரில் படைத்த ஸ்ருஷ்டியின் கடைசியில் அப்பொழுதே ப்ரஜைகளைப் படைக்குந் திறமையுடைய மனுக்களை மனத்தினால் ஸ்ருஷ்டித்தான். அப்பொழுது அந்த மனுக்களுக்குப் புருஷாகாரமான அந்தத் தன்சரீரத்தைக் கொடுத்தான். புருஷாகாரமான சரீரத்தினால் ஸ்ருஷ்டிக்கப்பெற்று அந்தச் சரீரத்தை அவனிடத்தில் பெற்றார்களாகையால், அம்மனுக்கள் அந்த ப்ரஹ்மதேவனைப் பார்த்து இங்ஙனம் ப்ரசம்ஸித்தார்கள் (புகழ்ந்தார்கள்).

வாரீர் உலகங்களைப் படைக்கும் ப்ரஜாபதியே! நீர் ஸ்ருஷ்டித்த இந்தப் புருஷாகாரமான சரீரமானது நன்கு இயற்றப் பெற்றிருக்கின்றது, இந்தப் புருஷாகாரமான தேஹத்தில் ஸ்வர்க்க அபவர்க்கங்களுக்கு ஸாதனமான க்ரியைகளெல்லாம் நிலைபெற்றிருக்கின்றன. ஸமஸ்த க்ரியைகளும் புருஷ சரீரத்தினால் ஸாதிக்கத் தகுந்தவைகளே. ஆகையால் இந்தப் பௌருஷ தேஹத்துடன் அன்னமெனப்படுகிற போக்ய வஸ்துக்களையெல்லாம் அனுபவிப்போமாக என்றார்கள்.

தவத்தோடும் வித்யையோடும் கூடி இந்திரியங்களை அடக்கியாள்பவனும் எல்லாம் அறிந்தவனுமாகிய ப்ரஹ்மதேவன் யோகத்தினாலும் (ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவைப்பற்றின் ஜ்ஞான யோகத்தினாலும்) ஸமாதியென்கிற மன ஆக்கத்தினாலும் தனக்கு ஸம்மதமான ரிஷிகளாகிற ப்ரஜைகளைப் படைத்தான். அயோனிஜனாகிய அந்த ப்ரஹ்மதேவன், அந்த ரிஷிகளுக்கு ஸமாதியோகம், அணிமாதி அஷ்டைச்வர்யம் தர்மம் வித்யை வைராக்யம் ஆகிய இவற்றிற்கு விளைநிலமாகிய தன் சரீரத்தில் ஒவ்வொரு அம்சத்தைக் கொடுத்தான்.

இருபதாவது அத்யாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக