ஞாயிறு, 16 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 49

மூன்றாவது ஸ்கந்தம் - ஆறாம் அத்தியாயம்

மைத்ரேயரிடம் விதுரர் வினவுதல்

பகவான் உலகத்தைப் படைத்தான் என்று மைத்ரேயர், விதுரருக்குக் கூறினார். நாம் ஏற்கெனவே பார்த்தபடிக்கு மொத்தம் ஜடப்பொருட்கள் இருபத்தி நான்கு. மூல ப்ருக்ருதியிலிருந்து தொடங்கித்தான் அனைத்தையும் பகவான் படைக்கிறார். க்ரியா சக்தியுடன், அந்த விராட் புருஷனாகிய பகவான் அனைத்தையும் உருவாக்குகிறார். தன்னுடைய நாபிக் கமலத்தில் நான்முகனைப் படைக்கிறார். பின் ஒவ்வொரு அவயவத்திலிருந்தும், ஒவ்வொரு தேவர்களாகத் தோன்றுகின்றனர். 

ஜீவர்களுடைய பூர்வ குணங்களின் அடிப்படையில் தன்னுடைய முகத்திலிருந்து அந்தணர்களையும், தோள்களிலிருந்து க்ஷத்திரியர்களையும் இப்படியே ஒவ்வொருவராக அனைவரையும் பகவான் படைக்கிறார். இவ்வளவு பெருமைகள் கொண்ட அவன், தன் பெருமைகளைத் தானே அறியாதவன் போல் அடியார்களிடம் தாழ நின்று பழகுகிறான். அதனால் ‘தனக்கும் தன் தன்மை அறியான்’ - என்கிறார் ஆழ்வார். நாம் அவனுடைய பெருமைகளை உண்மையாகத் தெரிந்து கொள்ள முற்பட்டால், இந்தப் பிறவி என்னும் சுழலுக்குள் மறுபடியும் சிக்கி தவிக்க வேண்டாம். இப்படி படைப்பின் ரகசியத்தைச் சொல்லி வந்த மைத்ரேயரிடத்தில், விதுரர் மேலும் சில சந்தேகங்களை எழுப்புகிறார். 

“பகவான் உலகைப் படைப்பதாகச் சொன்னீர். அவருக்கும் கூட கர்மங்கள் உண்டா என்ன? அவர் ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய உலகியல் குணங்கள் உடையவரா என்ன? இக்குணங்கள் மாறுதல்களை அடைந்தால்தானே, நாம் செயல்களில் ஈடுபடுவோம். அவர்தான் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவராயிற்றே! பின் ஏன் அப்படி செயல்படுகிறார்? அடுத்து அவர் விளையாட்டாக உலகத்தைப் படைக்கிறார் என்றீர். எது அவருக்கு விளையாட்டு? ஒரு குழந்தை பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுகிறது என்றால், அதற்கு அதனால் திருப்தி ஏற்படுகிறது. விளையாட்டுக்கு முன் திருப்தி இல்லை. விளையாடிய பின் திருப்தி ஏற்படுகிறது. அதே போல் பகவானுக்கும் படைப்புக்கு முன் திருப்தி இல்லாமல், படைப்புக்குப் பின் திருப்தி அடைகிறாரா? 


அடுத்து, குழந்தை விளையாடும்போது, மேலும் பல குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு விளையாடும். அதைப்போல் கடவுள் வேறு யாரையேனும் கூட்டிக் கொண்டு விளையாட உலகத்தைப் படைக்கிறாரா? இப்படியெல்லாம் கேள்விப்பட்டதில்லையே? பகவான் மூல ப்ருக்ருதியை வைத்து, அதில் ஜீவனை கர்ப்பமாகச் செலுத்தி, உலகைப் படைக்கிறார். ப்ருக்ருதியும் ஜீவனும், ஆதியோ, அந்தமோ அற்றவர்கள். இதில் பயன்தரும் செயல்கள், பயன், அந்தச் செயல்களைச் செய்யக் கூடிய கருவிகள் – இவற்றுக்கெல்லாம் ப்ருக்ருதியே காரணமாகிறது என்றும், அந்தச் செயல்களால் ஏற்படும் இன்ப – துன்பங்களை அனுபவிப்பதற்கு ஜீவனே காரணமாகிறான் என்றும் பகவத் கீதை கூறுகிறது. 

ஒரு ஜீவன், ப்ருக்ருதியைக் காரணமாகக் கொண்ட உடலில் புகுந்து பிறவி எடுக்கிறது. முக்குணங்களில் இருக்கும் பற்றுதலால் ஜீவன் இன்பத்தையும், அதன் தொடர்ச்சியான துன்பத்தையும் அனுபவிக்கிறான். இப்படி ஒரு பிறவியை, வாழ்க்கையை, பகவான் அவனுக்கு எதற்காகக் கொடுக்கிறார்? இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது. 

உலகம் படைக்கப்பட்டிருக்கிறது. நாமும் படைக்கப்பட்டிருக்கிறோம். என்றாவது ஒரு நாள் தனிமையில் அமர்ந்தோ, அல்லது நம்மோடு ஒத்த எண்ணம் உடையவர்களின் நடுவில் இருந்தோ, நம் பிறவியின் பயனைப் பற்றி ஆராய்ந்து இருப்போமா? அதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். ஒரு பொருள் எதற்காகப் படைக்கப்பட்டதோ, அதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். அது மாறுமானால், அந்தப் பொருள் சிறக்காது. 

நம்முடைய குரல் பாடுவதற்கும், பேசுவதற்கும் உள்ளது. ஆனால் வெகு நேரம் ஒரு கரடியைப் போலவோ, ஒரு நாயைப் போலவோ, கத்திக் கொண்டோ குரைத்துக் கொண்டோ இருந்தால், அந்தக் குரல் வளமாக இருக்குமா? சீக்கிரத்தில் தொண்டை கட்டிப் போகும். அதே போல, நாம் படைக்கப்பட்டது எதற்காகவோ, அதற்கே உபயோகப்பட வேண்டும். ஆனால், அதை விடுத்து மற்ற பயன்களுக்காக நாம் மிகவும் பாடுபடுகிறோம். 

ஆழ்வார் ஓரிடத்தில், ‘என் நினைந்து போக்குவர் இப்போது?’ - என்று கேட்கிறார். நமக்குப் பொழுது நிரம்ப உள்ளது. அந்நேரத்தில் நாம் நினைப்பதற்கு இனிமையாக பெருமானிடத்திலே அழகிய திருமேனியும், அற்புதமான குணங்களும், உள்ளத்தை உருக்கும் திருவிளையாடல்களும் மேலும் நிரம்ப உள்ளன. 

ஆனால், அதைப் பற்றியே நினைத்து ஆனந்தப்படாமல், நாம் அதற்கு நேர்மாறான இவ்வுலக வாழ்க்கையையே நினைத்துக் கொண்டு, சுக துக்கச் சுழியில் சுழன்று காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தோமானால், சடக்கென ஒருநாள் காலதேவன் நம்மை வந்து பறித்துக் கொண்டு போவான். பின்னால் பரிதவித்துப் பயனில்லை. ஆகவே, சீக்கிரத்தில் நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம், நமது பிறவியின் பயனை நாமும் பலிக்கும்படி செய்வதெப்படி? என்பதை யோசிப்போம். அதற்குத்தான் மைத்ரேயர் நமக்கு வழி காட்ட இருக்கிறார். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக