திங்கள், 17 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 172

 எட்டாவது ஸ்கந்தம் – நான்காவது அத்தியாயம்

(முதலை கந்தர்வரூபம் பெறுதலும், கஜேந்த்ரம் பகவானுடைய ஸாயுஜ்யம் (பகவனோடு ஒத்த ஆனந்தம்) பெறுதலும், பகவான் ப்ராணிகளின் (ஜீவராசிகளின்) ஹிதத்தைக் (நன்மையைக்) கூறுதலும்)

ஸ்ரீசுகர்சொல்லுகிறார்:- ப்ரஹ்மதேவன், ருத்ரன் முதலிய தேவதைகளும், ரிஷிகளும், கந்தர்வர்களும் பகவான் செய்த கஜேந்த்ர மோக்ஷமாகிற அந்தச் செயலைப் புகழ்ந்து அவன்மேல் ஓயாமல் பூமழை பொழிந்தார்கள். ஆகாயத்தில் தேவதுந்துபி வாத்யங்கள் முழங்கின. கந்தர்வர்கள் ஆடல், பாடல்களை நடத்தினார்கள். ரிஷிகளும், சாரணர்களும், ஸித்தர்களும் அப்பரமபுருஷனை ஸ்தோத்ரம் செய்தார்கள். கஜேந்த்ரத்தை ஹிம்ஸித்த (துன்புறுத்திய) அம்முதலை உடனே தேவரிஷியின் சாபத்தினின்று விடுபட்டு மிகவும் ஆச்சர்யமான உருவம்பெற்று ஹூஹூவென்னும் கந்தர்வ ச்ரேஷ்டனாய் விளங்கிற்று. அக்கந்தர்வன் சிறந்த புகழுடையவனும், சிறப்புடைய பிரமன் முதலிய தேவர்களால் புகழத் தகுந்தவனும், அழிவற்றவனும், புகழுக்கு ஆதாரனும் (அடிப்படையானவனும்), புகழத்தகுந்த குணங்களும் நற்கதைகளும் அமைந்து விளங்குகின்ற ஸர்வேச்வரனுமாகிய அப்பரமபுருஷனைத் தலையால் வணங்கி அவனைப் பாடினான். 

அந்தப் பாடலைக்கேட்டு ஸந்தோஷம் அடைந்த பகவானால் அக்கந்தர்வன் அருள்புரியப்பெற்று ஜகதீசனை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து ப்ரஹ்ம தேவன் முதலியவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் பாபம் தீரப்பெற்றுத் தன்னுடைய லோகம் போய்ச்சேர்ந்தான். கஜேந்த்ரமோவென்றால் பகவானுடைய கரம் பட்டமையால் கர்ம பந்தத்தினின்றும் விடுபட்டு அரையில் (இடுப்பில்) பீதாம்பரம் தரித்து நான்கு புஜங்கள் விளங்கப்பெற்றுப் பகவானுடைய ஸாரூப்யத்தை (பகவானை ஒத்த ரூபத்தை) அடைந்தது. 

அக்கஜேந்த்ரம் பூர்வஜன்மத்தில் பாண்டிய தேசத்துக்கு ப்ரபுவும் த்ரமிடர்களில் சிறந்தவனுமாகிய இந்த்ரத்யும்னனென்னும் மன்னவனாயிருந்தது. அம்மன்னவன் பகவானைப் பணிகையாகிற வ்ரதத்தை மிக்க மனவூக்கத்துடன் அனுஷ்டிக்கும் தன்மையுடையவன். ஒருகால் அவன் ஜடை தரித்துத் தவத்தில் நிலைநின்று மலயமென்னும் குலபர்வதத்தில் ஆச்ரமத்தை ஏற்படுத்திக் கொண்டு மனவூக்கத்துடன் மௌன வ்ரதத்தை முன்னிட்டுப் பகவானை ஆராதித்துக் கொண்டிருந்தான். 

அப்பொழுது அகஸ்த்ய முனிவர் சிஷ்யக் குழாங்களுடன் அவ்விடம் வந்தார். அப்பொழுது இந்த்ரத்யும்னன் அவர்க்கு அர்க்யம் முதலிய பூஜையொன்றும் செய்யாமல் பேசாதிருக்கையில், அதைக்கண்டு அம்மஹர்ஷி கோபித்துக் கொண்டார். நல்லியற்கையுடைய அம்மன்னவனுக்கும் பெரியோர்களின் நிக்ரஹம் (தண்டனை) நேரிட்டது ஆச்சரியமல்லவா? அம்முனிவர் “இவ்விந்த்ரத்யும்னன் மதி (புத்தி) கெட்டிருக்கிறான். இவன்புத்தி பெரியோர்களிடத்தில் திருத்தப் (நல்வழிப் படுத்தப்) படாமையால் இவ்வாறு மயங்குகின்றது. அதனால்தான் இவன் ப்ராஹ்மணர்களான நம்மை இவ்வாறு அவமதிக்கிறான். இதைப்பற்றியே இவன் அஜ்ஞானத்தை (அறியாமையை) அடைவானாக. இவன் மதித்த (மதம் கொண்ட) யானைபோல மதி (புத்தி) கெட்டு இருக்கிறானாகையால் அந்தயானையாகவே பிறப்பானாக” என்ற இச்சாபத்தை அம்மன்னவனுக்குக் கொடுத்தார்.

ஸ்ரீசுகர்சொல்லுகிறார்:- மன்னவனே! மஹானுபாவரான அகஸ்தய மஹர்ஷி இவ்வாறு சபித்துச் சிஷ்யர்களுடன் போனார். பிறகு ராஜரிஷியாகிய இந்த்ரத்யும்னனும் அந்த அகஸ்த்ய முனிவரின் சாபத்தை அனுபவித்தே ஆகவேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு உடனே பகவானைப் பற்றின நினைவை அழிக்கும்படியான யானைப் பிறவியைப் பெற்றான். ஆயினும் முன்பு பகவானை ஆராதித்த மஹிமையினால் அவனுக்கு அந்த ஜன்மத்தில் பகவானைப் பற்றின நினைவு மாறாதிருந்தது. இவ்வாறு பகவான் கஜேந்த்ரத்தை முதலையினின்றும் விடுவித்துத் தன் பரிஜனங்களில் ஒருவனாக அங்கீகரித்து அவனுடன்கூடிக் கந்தர்வர்களும், ஸித்தர்களும், தேவதைகளும் தன்னுடைய செயலைப் பாடிக்கொண்டுவர கருடன்மேல் ஏறிக்கொண்டு ஆச்சர்யமான தனது லோகம் போய்ச் சேர்ந்தான். 

மஹாராஜனே! இந்தக் கஜேந்த்ரமோக்ஷணமாகிற பகவானுடைய ப்ரபாவத்தை உனக்கு மொழிந்தேன். இது கேட்பவர்களுக்கு ஸ்வர்க்கத்தைக் கொடுக்கும்; புகழை விளைக்கும்; கலிகாலத்தினால் விளையும் பாபங்களைப் போக்கும்.

கௌரவ வம்ச ச்ரேஷ்டனே! மற்றும் இது துர்ஸ்வப்னங்களைப் (கெட்ட கனவுகளைப்) போக்கும். ஆகையால் நன்மையை விரும்புகின்ற ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள் காலையில் எழுந்து ஸ்நானாதி கர்மங்களை முடித்துப் பரிசுத்தர்களாகி, துர்ஸ்வப்னம் (கெட்ட கனவு) முதலிய தோஷங்கள் தீரும்பொருட்டு இந்தக் கஜேந்திர மோக்ஷத்தைப் படிக்கிறார்கள். குருச்ரேஷ்டனே! ஸர்வபூத ஸ்வரூபனும் ஸமர்த்தனுமாகிய பகவான் ஸந்தோஷமடைந்து ஸர்வ பூதங்களும் கேட்டுக்கொண்டிருக்கையில் அந்தக் கஜேந்த்ரத்தைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உன்னையும், என்னையும் இந்தத் தடாகத்தையும் (நீர் நிலையையும்), இப்பர்வதத்தையும் (மலையையும்), பர்வத குஹைகளையும், கானகத்தையும் பாம்பு கீசகமென்னும் மூங்கில், ஸாதாரணமான மூங்கில், இவற்றின் புதர்களையும் மந்தாரம் முதலிய கல்ப வ்ருக்ஷங்களையும், ப்ரஹ்மாவுக்கும், எனக்கும், சிவனுக்கும் வாஸஸ்தானங்களான இந்த த்ரிகூட பர்வதத்தின் மூன்று சிகரங்களையும் க்ஷீர ஸமுத்ரத்தையும் எனக்கு ப்ரியமான வாஸஸ்தானமும் ப்ரகாசித்துக் கொண்டிருப்பதுமாகிய ச்வேத த்வீபத்தையும், என்னுடைய ஸ்ரீவத்ஸத்தையும், கௌஸ்துபத்தையும், வனமாலையையும், கௌமோதகி என்கிற கதையையும், பக்ஷிகளுக்கு ப்ரபுவான கருடனையும் என்னுடைய ஸூக்ஷ்மாம்சமான ஆதிசேஷனையும், என்னைவிட்டுப் பிரியாத ஸ்ரீமஹாலக்ஷ்மியையும், ப்ரஹ்மாவையும், நாரத மஹர்ஷியையும், ருத்ரனையும், ப்ரஹ்லாதனையும், நான் மத்ஸ்ய, கூர்ம, வராஹாதி அவதாரங்களால் செய்த புண்ய சரித்ரங்களையும், ஸூர்யன், சந்திரன், அக்னி இவர்களையும், ப்ரணவத்தையும், ப்ராணிகளுக்கு ஹிதம் (நன்மை) செய்கையாகிற தர்மத்தையும், ப்ரக்ருதியையும், பகவத் பக்தியாகிற அழிவற்ற தர்மத்தையும், தக்ஷருடைய புத்ரிகளையும், தர்மர், ஸோமர், கச்யபர் இவர்கள் பத்னிகளையும், கங்கை, ஸரஸ்வதி, அலக்நந்தை, யமுனை இந்நதிகளையும், ஐராவதமென்கிற யானையையும், த்ருவனையும், ஸப்தரிஷிகளையும் தர்மம்செய்து புகழ்பெற்ற மானிடர்களையும் பின்மாலையில் (விடியற்காலையில்) எழுந்து எவர்கள் மனவூக்கத்துடன் பரிசுத்தர்களாயிருந்து என்னுடைய உருவங்களாகப் பாவித்து நினைக்கின்றார்களோ, அவர்கள் ஸமஸ்த பாபங்களினின்றும் விடுபடுவார்கள். ஓ கஜேந்த்ரனே! விடியற்காலத்தில் எழுந்து இந்த ஸ்தோத்ரத்தினால் என்னைத் துதிக்கிறவர்களுக்கு நான் மரணகாலத்திலும் மாறாத ஆழ்ந்த மதியைக் கொடுக்கிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவான் இவ்வாறு மொழிந்து சங்கராஜமான பாஞ்சஜன்யத்தை ஊதி ப்ரஹ்மா முதலிய தேவர்கூட்டத்தைக் களிக்கச் (இன்புறச்) செய்துகொண்டு கருடன்மேல் ஏறிச்சென்றான். 

நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக