உயர் பாவை - 2 - சதாரா மாலதி

போதுவீர் போதுமின்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர் 
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணீ  யசோதை இளஞ் சிங்கம்
கார்  மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் 
நாராயணனே நமக்கே பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் 


எந்தக் காரியத்தைச் செய்யவும் ஆசை இருக்க வேண்டும். அதனால் தான் ஒளவையார் 'அறம் செய்ய விரும்பு' என்றார். அறம் செய் என்று சொல்லவில்லை. அப்படிச்சொல்லிவிட்டால் எது எத்தனை எப்படி எப்போது யார்யார் என்று பல கேள்விகள் வந்து விடும். விருப்பம் வந்து விட்டால் செய்கை தானாக வந்துவிடும். திருப்பாவை முதல்பாட்டும் விரும்புபவரின் விருப்பத்தை, ஆசையை, ஆவலை முதலீடாக வைத்து கண்ணன் என்கிற அவதார ரூபத்தின் பரம்பொருளை, நல்ல தன்மைகளின் முழு உருவை அடைந்து அவனில் திளைக்கும் பேரானந்தத்துக்கு வழி சொல்கிறது.


அற்ப செல்வமான கால வரையறைப்பட்ட சுவர்க்கானுபவத்துக்கு [தேவர்களும் சுவர்க்க வாசிகளும் tenure க்கு உட்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது] கூச்மாண்டண ஹோமம் முதலிய அரிய கர்மங்களைச் செய்தாக வேண்டும். மீட்சியின்றி பரம் பொருள் உடன் உறைய வெறும் இச்சை மாத்திரம் போதும். அவன் தான் வேண்டும் என்று மனசு வைத்தாலே போதும். இதையே போதுவீர் போதுமின் என்ற பதம் உணர்த்துகிறது.


நீராடப் போதுவீர் போதுமின் என்றால் நீர்க்கட்டத்துக்கு விரும்புகிறவர்களெல்லாம் வாருங்கள் என்று அர்த்தம். சிறுமியின் பாஷை இதில் தெரிகிறது. வருகிறவர்கள் வாருங்கள் என்று சொல்லாமல் போகிறவர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்துகொள்ளுங்கள் என்கிறாள். சிறுவர்கள் பேசும்போது நிகழ், எதிர் காலங்களும் ஒருமை பன்மையும் தன்னிலை படர்க்கை சொல்லாடலும் குழம்பும். அது பல இடங்களில் திருப்பாவையில் நேரும். ஒரு அசலான வெளிப்பாடாக திருப்பாவை அமைந்ததற்கு இதுவும் காரணம்.


நீராட்டம் என்பது பரிபாஷை. நீர்ஆடுவோம் என்பார்கள் திரும்பத்திரும்ப. முப்பது பாடல்களில் ஒரு இடத்திலாவது ஒரு நதிக்கரையையோ ஒரு குளக்கரையையோ ஒட்டி நடந்ததாகக் கூடக்குறிப்பில்லை. நீராட்டம் ஒரு பூடகம். வேறு ஏதோ ஒன்றைத் தங்கள் குழுவினர் மட்டும் புரிந்து கொள்ளும்படி அயலார் அறியாமலிருக்கும்படி குறியிட்டுச் சொல்கிறார்கள் நீராடல், புனலாடல் என்ற சொல்லாடல்கள் சங்க காலம் தொட்டுத் தமிழ் மரபில் 'கலவி' யைப் பூடகமாகச் சொல்பவை. அத்தோடு பக்தியிலக்கியங்களில் பரம்பொருளை நீராகவும் மனிதப்பிறவியை நீர்நிரப்பிப் பயனடையும் நிறைகுடமாகவும் உருவகிப்பது மரபு. 'தாரே பிந்திகையா, கோவிந்தவென்போ குணவுள்ள நீருகெ தாரே பிந்திகையா' என்ற புரந்தர தாசரின் கன்னடக் கீர்த்தன வரிகள் ஒப்பு நோக்கத்தக்கவை. அப்படி தாக விடாய் தீர்க்கும் நீர்நிலையாகக் கண்ணனை பாவித்து அவனில் அமிழ்ந்து போகும் சுகானுபவம் பெறுவதை நீராட்டம் என்று அடிக்கடி குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.


முதல் பாட்டில் முதல்வரி மார்கழி மாதத்தையும் அதில் ஆரம்பிக்கும் நிலவுநாட்களையும் கொண்டாடுகிறது. இந்தியா உஷ்ணப்பிரதேசமானதால் இந்திய இலக்கியங்கள் குளிர்ச்சியையும் நிலவையும் சுகமென்பன. மேலை இலக்கியங்களோ தமக்குச்சுகமான எல்லாவற்றையும் வெதுவெதுப்பு என்று வர்ணிக்கும். சூரியனைக் கொண்டாடி அதன் கீழ்ப் படுவன அவை. அந்த கலாச்சாரத்தைப் பின்பற்றியே கீதாசாரியன் 'மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்' என்றார். [தேவலோகத்தில் பிரும்மமுஹூர்த்தம் என்கிற கணக்கு வேறு விஷயம். ஒஸோன் படலத்தின் நல்ல பலன் கிடைக்கும் நேரம் என்று மார்கழி அதிகாலையை நாம் கண்டுகொண்டது பிறிதொரு விஷயம்] திருப்பாவையில் சிறப்பாக குளிர் மாதத்தைக் கொண்டாடக் காரணம் குளிருக்குப் பயந்து பெரியவர்கள் சிறுமிகளைப் பின் தொடர மாட்டார்கள் என்பதே.


பாடலை நாம் இப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும். 


சீர்மல்கும் ஆய்ப்பாடிச்செல்வச்சிறுமீர்காள்!நேரிழையீர்!
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
எரார்ந்தகண்ணி யசோதை இள சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனேநமக்கே பறை தருவான் ஆல்
பாரோர் புகழப் படிந்து நீராடப் போதுவீர் போதுமின் 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச்செல்வச்சிறுமீர்காள்! நேரிழையீர்!


ஆய்ப்பாடிக்குச் சீராவது பால்வளம். 'நாழிப்பால் நாழிநெய்' தரும் என்று பேசப்பட்ட பால்வளம். பின் அங்கிருந்த கொழுகொழுத்த இளமை மாறாத பசுக்கள், எருமைகள், மரம்செடி கொடி, கனி, கிண்கிணி சதங்கை, மயிற்பீலி, பீதாம்பரம், கானம், புல்லாங்குழல் எல்லாம் சேர்ந்த அழகியல், அழகிய பெண்கள், இடையில்லாத குதூகலம். இவை தவிர பெரிய சீர் ஊருக்குண்டு. அது அயோத்தி போலில்லை. [இங்கு எங்கே அயோத்தி வந்தது என்று கேட்கக்கூடாது. கண்ணனை ராமனோடு தான் ஒப்புமை செய்ய வேண்டும். ஆய்ப்பாடியை திருஅயோத்தியோடும்] அயோத்தி ஒரு ஊரா? பரதன் பேச்சுக்கு இராமன் உடன்படாதானாய் இராமன் பேச்சுக்கு பரதன் உடன்படாதானாய் சகோதர ஒற்றுமை இல்லாத ஊர். இத்தனைக்கும் சகோதரர்கள் யோக்கியர்கள். ஆய்ப்பாடியிலோ பலராமன் வழி கண்ணனும் கண்ணன் வழி பலராமனும் ஒருமித்தாய் ஒத்துப் போவார்கள். இத்தனைக்கும் இருவரும் செய்வதெல்லாம் அக்கிரமம். நான் சொல்லவில்லை. பூர்வாசிரியரே சொல்கிறார் பாருங்கள், தீம்பர்களின் தலைவன் என்று கண்ணனை. யோக்கியனை உகப்பதில் என்ன பெரிய செய்தியிருக்கிறது? அயோக்கியனை உகந்து அவன் மேல் காதற்படும் சீர் மல்குவது ஆய்ப்பாடியில். இந்திரனுக்கு இடும் சோற்றை மலைக்கு இடச் சொன்னால் 'ஆமாம்' போடும் ஊர் சீர் மல்கும் ஆய்ப்பாடி. 


சிறுமிகள் என்று யாருக்கும் இன்னும் சொந்தமாகிவிடாத குமரிகளைக்குறிக்கிறாள் ஆண்டாள். ஏன் செல்வச்சிறுமீர்காள் என்கிறாள்? கிருஷ்ண அணுக்கத்தைச் சம்பத்தாகப் படைத்துக் கொடுத்து வைத்தவர்களானார்கள் அந்தக் குமரிகள். மரவுரி அணிந்து காட்டுக்குப் புறப்பட்ட இலக்குவனைப் பார்த்து 'தோ, பார் சீமான்' [லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பன்னஹ] என்றார் வால்மீகி. மாளிகையும் செல்வமும் உற்றார் உறவினரும் விட்டு வெறும் கையோடு சரணாகதிக்கு வந்த விபீஷணனைப் பார்த்து 'அந்தரிக்ஷகத ஸ்ரீமான்' என்றார் கவி. சத்தியத்துக்கு அருகில் இருப்பவன் பாக்கியசாலி. நல்லவையும் அருமையானவையும் ஆன விஷயங்களின் ஒட்டு மொத்த உருவகம் கடவுள். பகவத் சம்பந்தம் தான் ஒருவனுக்குக் கிடைக்க முடியாத செல்வம். கிருஷ்ணானுபவத்துக்குத் தக்கவர்களாக அவன் காலத்தில் அவன் இடத்தில் வசிக்க நேர்ந்த கோபிகளை செல்வச்சிறுமீர்காள் என்றாள் ஆண்டாள்.


கோபிகைகள் எந்த நேரத்திலும் கண்ணன் தம்மைச் சந்திக்கவரலாம் என்ற எதிர்பார்ப்பில் தேர்ந்த ஆபரணங்களை மிகப் பொருத்தமான வகையில் சூடியிருந்தார்கள். எனவே நேரிழையீர் என்று அழைக்கப் படுகிறார்கள். தத்துவார்த்தப்படி அந்த ஆபரணங்கள் ஞானமும் பக்தியுமே.

திருப்பாவையில் ஆண்டாள் கண்ணனை வரிக்கிறாள். ஒரு தலைவனாயிற்று ஒரு தலைவியாயிற்று. இதற்கு ஏன் ஒரு குழுவே இங்கு இயங்கவேண்டும்? பஞ்சலட்சம் குடி கோபிகைகளும் கூட எதற்கு? என்று கேட்கலாம். இது மொத்தமும் நாடகம். வெளியார் பார்த்து இயல்பாக எடுத்துக் கொள்ளவேண்டும். களவுக்காதலின் குட்டு வெளிவரக்கூடாது என்பது ஒரு புறம். இன்னொருபுறம் தலைவனுடனான உறவு சொல்லிக்கொள்ளும்படியில்லை [பூர்வாசிரியர் பாஷையில் 'சீறுபாறு' என்றிருந்தது] காதல் ஒருதலையாயிருக்குமோ என்று அஞ்சும்படிக்கு அவ்விடமிருந்து ஒன்றும் சமிக்ஞையில்லை. இத்தலையில் உறுதி இருக்கிறது, [மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்] எப்படித் தொடர்வதென்றும் தெரியவில்லை. பரிச்சயமிருக்கிறது. ஆனால் அவ்விடத்தைய எதிர்வினைக்கான உத்தரவாதமில்லை. எனவே தான் இப்படி பொய் நோன்பு கற்பனை நாடகம் அதில் ஒளிவு மறைவு எல்லாமே! 


இன்னொருவகையில் பார்த்தோமானால் 'ராசக்ரீடை' தத்துவப்படி ஒவ்வொரு கோபிகைக்கும் தனிக் கிருஷ்ணன். ஆண்டாளும் குழுவில் ஒருத்தி. இப்போது குழு சரிதானே? 


மதி நிறைந்த நன்னாள் 


நல்ல விஷயங்களை ஆரம்பிக்க வளர்பிறை நாட்கள் உத்தமமானவை. அப்படிப்பட்ட நிலவு இரவுகள் தன்னடைவாகத் தங்களுக்கு வாய்த்ததைக் கொண்டாடுகிறாள் ஆண்டாள். 'நந்தகோபன் கடைத்தலைக்கே என்னை நள்ளிருட்கண் உய்த்திடுமின்' என்று பேசிப் புலம்பினவளாயிற்றே! மறந்து விட முடியுமா? கிருஷ்ணனைப் பிரிந்திருந்த துயரம் தீர அவனைச் சந்தித்து வரும்படி ஊரே கூடி நியமித்து அவர்கள் பாவை நோன்பு செய்யும்படிக்கும் அதற்கான உபகரணங்களை [பறை முதலியன] வாங்கிக்கொள்ளும்படிக்கும் பணித்தது எவ்வளவு பெரிய வாய்ப்பு? பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலாயிற்றே! எனவே தான் இது நன்னாள் பொன்னாள் என்று ரமித்துச் சொல்கிறாள்.


கூர்வேல்.... முகத்தான்


நந்தகோபர், யசோதை தம்பதியரின் மகன் கண்ணன். நந்தகோபரிருக்கிறாரே, அவர் பசும்புல் சாவ மிதியாத பரமசாது. எம்பிரானே அவருக்கு மகனாக வளரவும் அந்தக் கண்ணன் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் அசுரர்கள் ஆய்ப்பாடியை வளைக்கவும் அவர் கூர் வேல் தாங்க வேண்டியதாயிற்று. எழும்பூண்டெல்லாம் அசுரமயமாயிருக்கத் தம் பிள்ளைகள் மேல்
ஆதுரத்தினால் தொட்டிலைச்சுற்றி சிற்றெரும்பு ஊர்ந்தால் கூட நந்தகோபர் பாய்ந்து கூர்வேலால் சிற்றெறும்பைத் தாக்குகிற கொடுந்தொழிலன் ஆகிப் போனார். அத்தகைய தந்தையின் பணிவான மகன் கண்ணன். யசோதை இருக்கிறாளே, அவள் கண்ணனைக் கண்டு உகக்கிறவள். எப்போதும் அழகனைப் பார்த்துப் பார்த்து அவளுடைய கண்களிலே அழகு ஏறிவிட்டது ஏரார்ந்தகண்ணி யசோதையானாள். [கண்ணன் குறும்புகளைக் கண்டுகந்து 'தொல்லை யின்பத்து இறுதி' யடைந்தவளாயிற்றே யசோதை!] இந்தக் கண்ணன் நந்தகோபர் கண்டிக்கும் வகையில் அவர் முன் வினயமானவன். தாயின் முன்னிலையிலோ செருக்கும் கம்பீரமும் மேணாணிப்பும் கொண்டு திமிறும் சிங்கக்குட்டி.


கண்ணன் நம் தாக தாபம் எல்லாம் ஆற்றவல்ல மேகவண்ணன். நம் மீது பரிவுபொங்கும் சிவந்த கண்களை உடையவன். [முன் சந்தித்த சந்தர்ப்பங்களில் கண்ணன் காட்டிய ஈர்ப்பை வைத்து யூகித்ததாகக் காதல் கதையில் போட்டுக் கொள்ளலாம்] ஆபரணம் அணிபவர் ஆபரணத்தை எப்போதும் நினைத்திருப்பார். அப்படி பிரிந்திருக்கிற நம்மை விரஹத்தில் சதா நினைத்துக் கண்கள் சிவந்திருப்பதால் அவன் செங்கண்ணன். ஒரே நேரத்தில் வெப்பமும் குளுமையும் செய்பவன் கதிர்மதியம் போல் முகத்தான். அதாவது அனுகூலர்களுக்கு அன்பாகவும் பிரதி கூலர்களுக்கு கடுமையாகவும் இருக்கக்கூடியவன். அல்லது ஒளிக்குக் கதிரவனையும் குளுமைக்கு மதியத்தையும் ஒருங்கே வைத்திருப்பவன் முகத்தில்.


[இவன்தான் கடவுள் என்று வரையறுத்து அடையாளம் காட்டித்தரும் ஆசார்யனுக்கு [குருவுக்கு] எப்படிக் கடவுள் வினயமானவனோ அப்படிக் கண்டிப்புள்ள தகப்பனுக்குப் பிள்ளை பணிவானவன். கடவுள் தன்மையைத் தன் ஒலியிலும் அட்சரத்திலும் அழுத்திக் கட்டி இறுக்கிக் கொண்டு தன் கர்ப்பத்தில் தாங்கி அவ்வப்போது அதைப் பிரசவித்து அற்புதத்தை வெளிக் கொணரும் திருமந்திரம் தாய் அம்சம். அந்தத் திருமந்திரத்துக்கு பகவான் கட்டுப்படாமல் திமிறி வழிந்து கொண்டேயிருப்பான். இதைக் குறிப்பால் உணர்த்தவே நந்தகோபன்குமரன், யசோதை இளஞ்சிங்கம் என்ற வரி]


நாராயணனே நமக்கே பறை தருவான் ஆல் 


எல்லாம் சரி. இங்கு ஏன் நாராயண சம்பந்தத்தைக் கண்ணனுக்கு ஒட்ட வைக்கிறாள் ஆண்டாள்? என்னதான் ஊரிசைந்து கண்ணனிடம் நோன்புக்கருவிகளை வாங்கிவரப் பணித்திருந்தாலும் 'கண்ணன் புகழை' இப்படியா விவரிப்பது? 'கண்ணன் தூர்த்தன்', 'குழலால் சொக்குப்பொடி போட்டு மயக்குபவன்', 'பெண்கள் மேல் கண் வைத்தவன்' என்று நேற்றுவரை ஊரார் கண்டித்திருந்ததையும், நிலவறைகளில் இவர்களை அடைத்துக் காவல் வைத்திருந்ததையும், பஞ்சம் பெருத்து மழையின்றி போனதும் கன்னிப் பெண்களைக் காத்தியாயனி விரதத்துக்கு இன்று முதல் உட்படுத்தியிருப்பதையும் மறந்து இப்போது வெளிப்படையாக இவர்கள் 'கண்ணா, கண்ணா' என்று சொல்லி அலைந்தால் என்னாவது! 


பெரியவர்கள் எச்சரிக்கையாகி, 'போதும் போதும் நீங்கள் நோற்றது! பேட்டை பொறுக்கிப் பையனின் பேரை சதா சொல்வது! உள்ளே வந்து அடையுங்கள் பழையபடி! வீட்டிலிருக்கும் கிழவிகளை அனுப்பி விரதம் செய்விக்கிறோம். சிறுமிகளைக் கண்டால் தானே கண்ணனுக்குக் கொண்டாட்டம்!' என்று ஆரம்பித்து விடுவார்களோ என்று பயம் வந்தது. அப்படியே குப்புறப் போட்டார்கள் கண்ணன் பேச்சை. இன்னார் இன்னார்மகன் கண்ணன். அவனே நாராயணன். அவனே பறை தருவான், அதையும் நமக்கே தருவான். என்று கண்ணன் பெயரை மறைத்து அந்த அவதாரத்தின் அடிக்கிழங்கான 'நாராயணன்' பெயரைச் சொன்னார்கள். வீட்டில் படுத்திருந்த கோபர்கள் உரத்துச் சொல்லப்பட்ட நாராயணன் பேரைக் கேட்டார்கள். 'ஆகா! பெண்கள் வெகு துடிப்பு!' 


நாரங்களுக்கெல்லாம் அயன், அதாவது எதெல்லாம் நித்தியமானவையோ அவற்றுக்கெல்லாம் அடைக்கலமாகி அவற்றின் ஒரே புகலிடம் நாராயணன். ‘அந்தப் பரம்பொருளின் பேரைச் சொல்கிறார்கள்' என்று நிம்மதியோடு திரும்பிப் படுத்துத் தூங்கினார்கள். 


[நாரங்களாவன எவை? விஞ்ஞான உலகில் மெய்ஞ்ஞான அகராதிப் படி எதெல்லாம் Constants என்று Academic Interestக்காகப் பார்த்துக் கொள்வோம்.
  1. ஞான, ஆனந்த அமலத்வாதிகள்
  2. ஸெளசீல்யாதிகள்
  3. திருமேனி, காந்தி, ஸெளகுகுமார்யாதிகள்
  4. திவ்யாயுதங்கள், திவ்யபூஷணங்கள்
  5. பிராட்டிமார்கள்
  6. நித்யசூரிகள்
  7. சத்ரசாமராதிகள், வாசல் காப்பார்
  8. கணாதிபர், முக்தர்
  9. பரமாகாசம்
  10. பிரக்ருதி
  11. ஆத்மாக்கள்
  12. காலம்
  13. பருவங்களும் மாற்றங்களும்
  14. அண்டங்களும் அதற்குட்பட்ட தேவாதி பதார்த்தங்களும்


இந்தப் பட்டியலில் முதல் ஏழு இறை குறித்த நம் உருவகம். அது எப்போதும் இருக்கும். எந்தப் பெயரிலாவது இறை இல்லாமல் போகப் போவதில்லை. அது சார்ந்த உருவகங்கள் எல்லாம் நிலையானவை. பின் வரும் ஏழும் நம் கண் முன் இருப்பவை. பிற்பட்ட ஏழின் சாட்சி மட்டுமே முற்பட்ட ஏழைக் கற்பனை செய்யத் தூண்டியது.


மேற்சொன்ன 14 நித்திய வஸ்துக்களின் திரள்கள் நாராயணனின் அதிகாரத்தில் இருப்பவை.]


நமக்குப் பறை தருவான். நமக்கும் தருவான் என்றா சொல்வது? அவனன்றி யாருமில்லை என்று அவன் கையையே பார்த்திருக்கும் 'நமக்கே' தருவான். 


பள்ளமடையோடையல்லவா தண்ணீர்? மேட்டிலிருந்து பள்ளத்துக்கல்லவா விழவேண்டும்?
அவனெல்லாம் நிறைந்தவன். நாம் எதுவுமே இல்லாதவர்கள். அவன் கடல். நாம் வெறும் தாகம். அது போதாதா தகுதி? நமக்கே தருவான். நாராயணனே தருவான். அவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். அவன் யாருக்காவது ஏதாவது தருவதைத் தடுக்க யாருமில்லாதவன். Omnipotent, Omnipresent, Supreme power.


என்ன தருவான்? 


சொல்ல வந்தது கிருஷ்ணரசம். வாயில் வந்தது 'பறை' ஏனென்றால் தூங்கிக் கொண்டிருக்கும் கோபர்கள் நினைவு வந்தது.


கிருஷ்ணனிடம் பெறப் போகும் நோன்புக்கருவியான பறை என்கிற மேளத்தின் பெயரை உரத்துச் சொல்லி திருப்பாவை முழுவதுமே பறை என்ற சொல் ஒரு பூடகமாகி இறுதியில் 29வது பாட்டில் விடுகதையை அவிழ்த்து 'இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா' இந்தப் பறையைக் கேட்டு நாங்கள் வரவில்லை என்று பகிரங்கமாக்கப்பட்டது.


நாராயணனே நமக்கே பறை தருவான் ஆதலால் என்ன கிடைக்கும் யார் கொடுப்பார் என்ற சந்தேகமே இல்லாமல் மிகப்பெரிய சாதனையை அடைந்து காட்ட விருப்பம் வைத்து வாருங்கள் என்பதாகப் போதுவீர் போதுமின் என்ற பதத்தில் விரிந்த பாதையைக் காட்டி கிளைச்சாலையில் நுழைவை அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுவதோடு முதல் திருப்பாவை முடிந்தது.


[விளக்கம் exaustive அல்ல. முடிந்தவரை செய்யப் பட்டது]

நன்றி - திண்ணை டிசம்பர் 2004
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை