திருப்பாவை திவ்ய பிரவாகம் - 3 - கண்ணன் ரங்காச்சாரி

(பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த மூவாயிர / அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆறாயிரப் படிகளை அனுசரித்தது.)


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர் 
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணீ  யசோதை இளஞ் சிங்கம்
கார்  மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் 
நாராயணனே நமக்கே பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் 


மார்கழித் திங்கள் - 'ந அதி சீதா, ந கர்மதா' என்னும் வகையில் அதிகக் குளிரோ, வெம்மையோ இல்லாத சுகமான மாதம். ஒவ்வொரு நாளுக்கும் முகூர்த்த நேரம் இருப்பது போல, வருடத்தின் முகூர்த்த கால மாதம். 


'மாசானாம் மார்கசீர் ஷோஹம்' என்று கண்ணன் கீதையில் உரைக்கும், மாதங்களில் நான் மார்கழி என்னும் உன்னத மாதம்.


 'ஒழிவில் காலமெல்லாம்' என்ற அருளிச் செயல் வாக்கியப்படி, ஒழிவே இல்லாத நம் நித வாழ்க்கையில், பரமனை யோசித்துப் பிரார்த்தனை செய்து நம் மனோ எண்ணங்கள் பலிதம் பெரும் மாதம்.


'புஷ்பிதா கானான' என்பது போல கானகங்களையும், நந்தவனங்களையும் பூக்கள் மலர்ந்து நிறைக்கும் காலம்.   


தமிழ் மாதங்கள் மட்டுமே, இந்தியாவில் சூரியனின் சுற்றைப் பின் பற்றி அமைந்து, மாறிடும்.  ஸ்ரீவில்லிபுத்தூரை வடக்கு மாநிலமான 'ஆய் பாடியாய்'  ஆண்டாள் வரித்ததால் 'மார்கழித் திங்கள் (நிலவு)' மாதமாகக் கொண்டாடப் படுகிறது. 


மற்ற மாதங்களில் மாலனை பக்தன் பிரார்த்திக்க வேண்டியதாய் இருக்க, மார்கழி மாதத்தில் மாலன் பக்தனைத் தானே தேடி வருபவன் என ஐதீகம்.  இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது: உடலுக்கு நலம் பயக்கும் ஓசோன் படிமங்கள் பூமிக்கு அருகில் சஞ்சரிப்பது இம்மாதத்தில் என்று.   


மதி நிறைந்த நன்னாளால்: கோதையின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும், வரிக்கும் சிறப்பு அர்த்தங்கள் உண்டு. ஆய்ப்பாடியில் பின்னிரவில் (அதி காலை 3 - 4 மணிக்கு) நிறைந்த பவுர்ணமி நாளில் மார்கழி மாதம் பிறந்தது. 


இரவு நேரத்தை, நள்ளிரவு, பின்னிரவு என்றல்லாமல், 'நன்னாள்' என்று பிராட்டி விளிப்பது, நிலவொளியால் இரவே பகல் போல ஒளிர்ந்த்தால். கண்ணனையும் கோபியர்களையும் சேர விடாமல் தடுத்த பெற்றோரும் ஊராரும், கண்ணன் வழி நடத்த, கோபியர்களை நோன்பிருக்குமாறு பணித்ததால் 'நன்னாள்' ஆனது.   


'நீராடப் போதுவீர்' - 'நீராட' என்ற சொல் ஆச்சார்யர்களுக்கு 'பாத நீர் ஆராதனைத்தைக்'  குறிக்கிறது. நோன்புக்காக குளித்தல் என்ற பொதுவான சொல்லைக் குறித்தாலும், எல்லையில்லா விரக தாபத்தினால் ஆளுகைப் பட்ட கோபியர்களின் வெம்மையைக் குளிர்ச்சி செய்ய யமுனையில் நீராடச் சொல்வதாய் அறியப் படுகிறது. 


கண்ணனோடு நீராடப் போகும் பக்தைகளுக்கு போதும் என்ற நிறைவு விரைவில் ஏற்படாததால் 'போதுமினோ' (போதுமா?) என்று விளிக்கப் பெறுகிறது.


கண்ணன் எப்போது அணைத்திடுவான் என்ற ஒரே நேர் விருப்பத்தோடு இருக்கும் கண்ணனின் பிரேமை என்ற ஒரே ஆபரணத்தை அணிந்ததனால். 'நேரிழையீர்' என்றழைக்கப் படுகிறார்கள். நேர்த்தியான உயர்ந்த ஆபரணங்களை அணிந்த பெண்கள் என்பது, பொதுவான பொருள். 


கிருஷ்ணனின்  வரவை எண்ணி எப்போதும் அலங்காரத்தோடு இருப்பவர்கள் என்ற வியாக்கியானம் உண்டு.


'சீர்மல்கும் ஆய்பாடி' - கண்ணன் தோன்றிய ஒரே காரணத்தால் எப்போதுமே சிறப்பை அணிந்திருக்கும் ஆய்ப்பாடி என்ற பொருள். 'கோ ஸம்ருத்தி' என்னும் வகையில் பசுக்கள் பேணிக் காக்கப் பெறுவதால் ஐஸ்வர்யம் மிகுந்த ஆய்ப்பாடி ஆனது. 'மாடு' என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் செல்வம்.  


பரம பதம் போலவோ, ஞானம் மிகுந்த ஆச்சார்யாதிகளோ வசிக்காத, இடது வலது கைகளுக்கு வேறுபாடுகள் அறியாத வெகுளிக் கோபர்களும் / கோபியர்களும் வாழுமூர், கோகுலம்.


'செல்வச் சிறுமீர்காள்' - கண்ணன் மேல் பிரேமை என்னும் உயர்ந்த செல்வத்தை  மனத்தில் சுமந்த ஆய்ச்சியர் சிறுமிகள் என்னுமாப்போல, அவர்களுக்கு இகச் செல்வங்கள் தூசி போலவும் கண்ணனின் திவ்ய சேர்க்கை அடைவதே ஒரே செல்வமாய் ஆனபடியாலும் 'செல்வச் சிறுமிகளானார்கள்'. 


பாகவத சம்பந்தம் தான் செல்வம் என்பதற்கு, தனக்குத்தானே ஸ்வதந்திரத்தைக் கட்டுக்குள் வைத்து, ராமன் ஒருவனையே ஸ்வாமியாகக் கொண்ட இளையாழ்வான் (லக்ஷ்மணன்), ஸ்வதந்த்ரம் இல்லாமையால் ராவணனுக்கு அடிமையாய் இருந்தவன் விபீஷணாழ்வான், ஸ்வதந்த்ரம் மிக்கவனாய் இருந்து முதலை காலைப்பற்றிட  ஸ்வந்தரத்தைத் தொலைத்தவன் கஜேந்திராழ்வான்.


இவர்கள் மூவருக்கும் திருமாலின் சம்பந்தம் மனத்தால் பூரணச்  செல்வம் கொடுத்து அவன் திருவடிகளையே எந்நாளும் ஆச்ரயிக்கச் செய்தது.


'கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்' - கால் மிதித்து நடந்தால் பசும்புல் மாயுமோ என்றஞ்சிக் கிடந்தவன், பலராம, க்ருஷ்ணர்கள் பிறப்பினால், அவர்களைக் காக்க வேண்டிய ஒரே காரணத்தால், கூர் வேல் ஏந்திக், கொடுங்கோலன் ஆகினான். தொட்டில் அடியில் எறும்பு ஊர்ந்தால் கூட எங்கே பிள்ளைகளை கடித்து விடுமோ என அஞ்சி வேலைக் கையிலெடுப்பவனாகி விட்டான்.


நந்தகோபனிடம் ஊரார் வந்து முறையிடுவார்கள். கண்ணன் வெண்ணை திருடினான், பெண்களை களவு கொண்டுபோனான், ஊரில் அடிதடிக் குழப்பங்களுக்குக் காரணமானான், என்ற பலவகையில். 


நந்தகோபன் சொல்வானாம். 'என் முன்னால் இப்படிச் செய்கைகள் எதுவும் கண்ணன் செய்தால் கண்டிப்பாய் அவனைத் தண்டிப்பேன்' என்று. ஆனால் தந்தையின் முன்னர், மிகவும் சாந்தனாய், பவ்யத்தோடு இருக்கும் கண்ணனைப் பார்த்து ஊரார், இந்த சத்வமானவனையோ குறை சொன்னோம் என வெட்கிப்பாராம்.  


'ஏரார்ந்த கண்ணீ யசோதை இளஞ்சிங்கம்' - அழுகு நிறைந்த அகன்ற கண்களைக் கொண்ட யசோதையின் இளம் சிங்கம் போன்ற கண்ணன் என்ற பொதுப் பொருளாகிலும், ஒரு நொடி கூட கண்ணயறாது காவல் காப்பவள் என்பதால், அவள் கண்கள் எப்போதும் விரிந்திருக்குமாம். 


சிங்கத்தைக் காவல் காப்பது கடினம். எதிரிகள் யாரும் வந்தால் பாய்ந்து சென்று தாக்கிடும். 'சிங்கக் குருகு' என்று பட்டர் விளிப்பார்.


கார் மேனிச் செங்கண் - நீர் சொரிந்த மேகம் போல் அருள் பொழிய காத்துக் கிடக்கும் கரிய மேனியன். கோபியர்களைச் சேரும் ஆவலாலும், பகைவரைத் தாக்கும் கோபத்தாலும் சிவந்த கண்கள் கொண்டவன்.


கதிர் மதியம் போல் முகத்தான் - சூரியனைப் போல ஒளி மிகுந்த முகம், ஆனால் சந்திரனனின் குளுமையை வாரிக் கொட்டிக் கிடக்கும். இரணியனுக்குக் கடுமையானவனாயும், துருவனுக்கு கருணையானவனாகவும் காட்சி தரும் லாவண்ய முகம்.


நாராயணனே நமக்கே பறை தருவான் - ஆழ்வார்கள் அருளிச்செய்த வண்ணம் 'நன்மை தீமைகள் ஒன்றுமறியேன் நாரணா வென்னும் இத்தனையல்லால்' என்ற அவன் ஒரு நாமமே கோபர்களுக்கும் / கோபியர்க்கும் அடைக்கலமானது, 


அதுவல்லாது எப்போது தம் குலத்தில் தோன்றினானோ 'நமக்கே' நமக்கு மட்டுமே பறை என்னும் வீடு / மோக்ஷம் சுவர்க்கம் அவன் கண்டிப்பாய் அருளுவான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் - நம்முடைய கண்ணனின் சேர்க்கையை எதிர்த்த உலகமே நம்மை கண்ணனோடு சேர்ந்து நோன்பிருக்கப் பணிவதால், எங்களோடு சேர்ந்து பின் படிவாய் பாவையர்களே என்று விளிக்கிறார்கள்.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை