கோதையும் கீதையும் - கே.ஹேமமாலினி

மார்கழி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது ஆண்டாளின் திருப்பாவைதான். அனைத்து வைணவ ஆலயங்களிலும் மார்கழி முப்பது நாட்களும் திருப்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. 

பகவத்கீதையின் மொத்த சாராம்சத்தையும் திருப்பாவை முப்பது பாடல்களில் கொடுத்துள்ளார் ஆண்டாள் நாச்சியார்.

'கீதோபநிஷத்' எனப்படும் பகவத்கீதையின் கடினமான விஷயங்களை கோதை நாச்சியார் எளிய தமிழில் அழகாக எழுதியுள்ளார். உதாரணத்துக்குச் சில:


'வீத ராக பயக்ரோத: மனமயா மாமு பாச்ரித:

பகவத்கீதை (4:10) எனும் சுலோகத்தில், 'எவன் என் அவதாரத்தின் உண்மையை அறிகிறானோ, அவனுக்கு பாவங்கள் ஒழிகிறது. ராகத்வேஷம் (ஆசை) காம குரோதம் அழிகிறது. சம்சார விஷயத்தில் வைராக்கியம் உண்டாகிறது. என்னிடம் மனதை ஊன்றிய அவன், என் நாமங்கள் சிலவற்றைப் பெற்று மோக்ஷம் அடைகிறான்' என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். 

இதையே ஆண்டாளின் ஐந்தாவது பாடல்: 'வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய்பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' இறைவனைப் பாடி, மனத்தால் சிந்தித்தால் பாவங்கள் எல்லாம் பொசுங்கிவிடும் என்கிறது. 

பகவத்கீதை அத்தியாயம் (7-16)வது சுலோகம்:

'சதுர்வித: பஜந்தே மாம் ஜநா:ஸுக்ருதிஹோ அர்ஜுன'

 'அர்ஜுனா, புண்ணியம் செய்து என்னைப் பின்பற்றுபவர்கள் நான்கு வகைப்படுவர். புதிதாய்ச் செல்வத்தைப் பெற, இழந்த செல்வத்தைப் பெற, தியான யோகம் செய்பவன், என்னையே அடைய விரும்பும் ஞானி' (இதில் ஞானி முதல்தரமான பக்தன். அடுத்து, தன் ஆத்மாவையே நினைத்திருக்கும் தியான யோகி. மூன்றாவதாகப் புதிதாகச் செல்வம் பெற, இழந்த செல்வத்தைப் பெற என மூன்று வித பக்தர்கள்) ஆகியோர்.

ஆண்டாள் தனது 27வது பாடலில் விளக்குகிறாள். 

'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா …….

சூடகமே தோள்வளையே தோடேசெவிப்பூவே 
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணியோம் 
ஆடையுடுப்போம். அதன்பின்னே பாற்சோறு 
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் 
கூடியிருந்து குளிர்ந்தலோ ரெம்பாவாய்' 

என்கிறார். ஆண்டாளின் கடைசிப் பாடலில், 'சங்கத் தமிழ் மாலை முப்பதும்.... செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலு'க்கே சமர்ப்பிக்கிறாள்.

எங்கும், எப்போதும் பகவான் திருவருளைப் பெறுவது, முக்தனாகிய ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - தீபம் பிப்ரவரி 2018
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை